புலவர் செ. இராசு, எம்.ஏ., பிஎச்.டி..,
பிற்காலச் சோழர் மரபை ஓரு வலிமை மிக்க பேரரசாக ஆக்கியவன் மாமன்னன் இராசராசன் (கி.பி. 985 _ 1014). சுந்தர சோழன் _ வானவன் மாதேவியின் இளைய மகன். பெற்றோர் இட்ட பெயர் அருமொழி தேவன்.
இராசராசனின் இந்த இயற்பெயருடன் மும்முடி சோழன், சிவபாதசேகரன், நித்த விநோதன் போன்ற பல பட்டப் பெயர்கள் இராசராசன் காலத்திலும் தொடர்ந்து பிற்காலத்திலும் பற்பல இடங்களில் பயின்று வந்துள்ளன. ஆனால், இப்பெயர்களில் “அருமொழி தேவன்” என்ற வழக்கே மிகுதியாக இருந்துள்ளது. கல்வெட்டுகள் மூலம் இது தெரியவருகிறது.
இப்பெயரால் ஈர்க்கப்பட்ட அக்கால மக்கள் பல்வேறு நிலைகளில் “அருமொழி” “அருமொழி தேவன்” என்ற பெயரை வைத்து மகிழ்ந்துள்ளனர். (கிஸிணி என்பது மய்ய அரசு வெளியிட்ட ஆண்டறிக்கை)
வீர ராசேந்திரன் மனைவியருள் ஒருவர் பெயர் அருமொழி நங்கையார் 511-2-58
மேற்கண்டவாறு எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது “அருமொழி” அல்லது “அருமொழி தேவன்” என்ற இராசராசன் பெயரே. ஒரு இடத்தில்கூட “அருள்மொழி” அல்லது “அருண்மொழி” என்று இடம் பெறவில்லை.
இந்த வரலாற்று உண்மையைப் புரிந்துகொண்டு சரியான பெயரை எழுதியவர்கள் மிகச் சிலரே. முதலில் இராசராசன் கல்வெட்டை படி எடுத்த டாக்டர் உல்சு ‘என்பார் அருமொழி’ என்றே கூறுகிறார்.
அவர் உதவியாளர் வி.வெங்கையா, தொல்லியல் முனைவர் எ. சுப்பராயலு போன்றோர் அருமொழி என்றே எழுதியுள்ளனர். பலரும் அருள்மொழிவர்மன் என்று தவறாகக் கொள்கின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி (லெக்சிகன்) “அருமொழி _ முதல் இராசராசன் பெயர்” என்று சரியாகக் கூறுகிறது. இந்தப் பேரகராதி தஞ்சைப் பெருவுடையார் பிரதான விநாயகர் பெயர் “அருமொழி விநாயகர்” என்றும் கூறுகிறது. அரு – அருமை என்று பொருளும் கூறுகிறது.
இதற்குக் காரணம் தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் ஆவார். இதனை ஏற்றுக்கொண்ட கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் ஏனோ “அருமொழி வர்மன்” என்று கூறுகிறார். கல்வெட்டில் எங்கும் வர்மன் என்ற சொல் இல்லை. அச்சொல் பல்லவ மரபிற்கு உரியது (நந்திவர்மன்).
உண்மை அறிய 2000 சோழர் காலக் கல்வெட்டுகள் மீள் ஆய்வு செய்யப்பட்டன. ஒரு கல்வெட்டில் கூட அருள்மொழி இல்லை. எங்கும் அருமொழியே.
கதை, நாடகம், வரலாறு, வரலாற்று நாவல், திரைப்படம், எங்கும் தவறான அருள்மொழியே பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்வெட்டு, நூல் கிடைக்காவிட்டாலும் யாவரும் பயன்படுத்தும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியையாவது பார்த்திருக்கலாமே! இராசராசன் அருமையான மொழி பேசுபவன். ஒரு வரலாற்று நாயகன் பெயரைத் தவறாகக் கூறுவது பெரும் பிழை. இனியாவது சரியாகக் கூறவேண்டியது, பதிய வேண்டியது அனைவரின் கடமை! ♦