– முனைவர் வா.நேரு
உண்மை வாசகர்களுக்குத் தந்தை பெரியாரின் 145-ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு முழுவதும் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்புகளால் டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் நினைவு போற்று வகையில், ஆகஸ்ட் 20ஆம் நாளை அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு நாளாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம், கல்லூரி, பள்ளிகளில் பிரச்சாரம், கருத்தரங்கம், பொதுக்கூட்டம் எனப் பல இடங்களில் பல வடிவங்களில் நடத்தப்பட்டிருக்கிறது.
“எந்த மனிதனாவது தனது லட்சியத்தைப் பிரதானமாய்க் கருதி அதற்கே உழைத்துத் தீர வேண்டுமென்று முடிவு கட்டிக்கொண்டு இருப்பானேயானால் அவன் அதற்காக உயிரை இழக்க நேருவதுதான் அவனது லட்சியத்தில் அவனுக்குள்ள உறுதியையும் அவன் அடைய வேண்டிய வெற்றியையும் காட்டுவதாகும்.
அன்றியும் லட்சியக்காரன் உயிருடன் இருந்து லட்சியத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பதில் எவ்வளவு பயன் ஏற்படுமோ அதைவிட கண்டிப்பாய் பல மடங்கதிகமான பலனும் ஏற்படக்கூடும்.அறிவாளிகளின் வேலையும் அதுவேயாகும். (குடிஅரசு, 30.8.1931) என்று தந்தை பெரியார் எழுதுகிறார். லட்சியத்திற்காக உயிரைக் கொடுப்பது என்பது ஒருவருக்குள்ள உறுதியைக் காட்டுவதாகும் என்று குறிப்பிடுகிறார்.
பல்லாயிரம் ஆண்டுகாலமாக மக்களை ஜாதிகளால் பிரித்து, வர்ணாசிரமக் கோட்பாட்டைத் திணித்து உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் பார்ப்பனியம், வர்ணாசிரமத்தை மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்த கையில் எடுத்த ஆயுதம் அச்சமூட்டுதல் ஆகும். மனுநீதி என்னும் மனித விரோத சட்டப் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, அரசர்களைத் தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, உழைக்கும் மக்களுக்கு அச்சமூட்டி பார்ப்பனியம் ஆடிய _ ஆடுகின்ற ஆட்டமே கடந்த 2000 ஆண்டுகால இந்திய வரலாறு.
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல பார்ப்பனியத்தை எதிர்ப்பதற்கு அடிப்படைத் தேவை அச்சமின்மையே. வஞ்சகத் தந்திரம் கொண்ட பார்ப்பனக் கோட்பாடுகளுக்கு இந்திய வரலாற்றில் முதன்முதலில் அச்சமூட்டியவர் புத்தர். தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், அச்சமில்லாமல் எதிர்த்து அதனை ஓரளவிற்கு வீழ்த்தியவரும் கூட. ஆனால் அவரது மறைவிற்குப் பின்னால் அவரது இயக்கத்திற்குள்ளேயே புகுந்து மகாயானம், ஹீனயானம் என்னும் இரண்டு பிரிவாக்கி பார்ப்பனியம் மீண்டும் இந்தியாவிற்குள் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டது. இந்த 2000 ஆண்டுகால பார்ப்பனிய வரலாற்றில் அதற்கு அச்சமூட்டியவர் புத்தருக்குப் பின் தந்தை பெரியாரே ஆவார்.
ஒரு பக்கம் சட்டத்தின் மூலமும் கடுமையான தண்டனைகள் மூலமும் பயமுறுத்திய பார்ப்பனியம் இன்னொரு பக்கம் பக்தி, சடங்குகள் என்னும் பெயரால் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கைக்குள் புகுந்து பயமுறுத்தியது.பயமுறுத்திய பார்ப்பனியத்தைப் பயமுறுத்தியவர் தந்தை பெரியார் ஆவார். ஏன் சவுண்டிப் பார்ப்பனர் முதல் ஜனாதிபதியாக இருந்த பார்ப்பனர் வரை தந்தை பெரியார் என்ற பெயரைக் கேட்டாலே அச்சப்படுகிறார்கள், அவதூறு பரப்புகிறார்கள் என்றால் அவர்களின் சனாதனக் கோட்பாட்டைச் சாக வைப்பதற்கான தத்துவத்தை, வழிமுறையை, நடைமுறையைச் சொன்னவர் பெரியார். அதனை வீதிதோறும் மக்களின் மனங்கள்தோறும் கொண்டு சென்றவர்கள் கொண்டு செல்பவர்கள் தந்தை பெரியாரின் தொண்டர்கள். ஒருவர் பெரியார் தொண்டர் என்பதற்கு அடையாளமே அச்சமின்மை ஆகும்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இயக்க வரலாறாக எழுதப்பட்டிருக்கும் தன் வரலாற்று நூலான ‘அய்யாவின் அடிச்சுவட்டில் ‘முதல் பாகத்தில் திராவிடர் கழகத்தின் கூட்டங்கள் எவ்வளவு பெரிய எதிர்ப்புகளுக்கிடையே நடைபெற்றன என்பதைப் பல அத்தியாயங்களில் குறிப்பிட்டிருப்பார். அதில் கடலூரில் நடைபெற்ற கூட்டத்தைப் பற்றி எழுதும்போது “1938-இல் கடலூர் முதுநகரில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றி என் மூத்த அண்ணன் கி. கோவிந்தராஜன் அவர்கள் விளக்கியதைக் கேட்டு அதிர்ந்து போன என் பிஞ்சு உள்ளத்திற்கு அதுவே பயிற்சிக் களப்பாடமாகவும் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். அன்று மாலை கடலூர் முதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பன்றிகள் விரட்டி விடப்பட்டனவாம். அய்யா(தந்தை பெரியார்) போகும்போது அவர் எதிரில் ஒரு கலகக் கூட்டம் முட்டை ஓட்டுக்குள் மலத்தை அடைத்து அவர் மீது வீசியெறிய, அது அவரது பொன்னிற மேனியில் பட்டு கெட்ட வாடை வீசிய நிலையில் கூட, அய்யா தனது பேச்சை நிறுத்தாமல் ஆரஞ்சு நிற சால்வையை எடுத்து மேலே போட்டு மூடிக்கொண்டே கடுமையாக வீராவேசமாகப் பேசினாராம். அதைக் கண்டு கேட்ட என் அண்ணன் கோவிந்தராசன் இந்த இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டவரானார். எனவே எதிர்ப்பு, ஏளனம், கண்டனம், கலவரம்,ஆகிய இவையெல்லாம் எனது பொதுவாழ்வின் பால பாடங்களாகவும் பரிசோதனை வகுப்புகளாகவும் கடலூரில் அன்றாட அனுபவமாகப் பெற முடிந்தது; அஞ்சாத நெஞ்சுரத்தையே தந்தது. (பக்கம் 30).
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியிருக்கும் நிகழ்ச்சி 1938இல் நிகழ்ந்தது. ஏறத்தாழ 85 ஆண்டுகள் கழித்து, ‘சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் ‘ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அமர்ந்திருக்க, மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வடநாட்டில் திட்டமிட்டு எதிர்க்கப்படுகிறது. கண்டனம் செய்யப்படுகிறது.ஆனால், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய அவரின் சனாதன ஒழிப்புக் கருத்தை வரவேற்றுக் கொண்டாடப்படுகிறார். தீண்டாமை, அண்டாமை, பாராமையால் இன்றும் பாதிக்கப்படும் பலர் தங்கள் கருத்துகளை தங்களைச் சனாதனம் படுத்தும் பாட்டைத் தங்கள், தங்கள் மொழிகளில் எடுத்துவைக்கிறார்கள். அது உடனுக்குடன் மொழிபெயர்க்கப்படுகிறது.
பல மொழிகளில் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் சொன்ன சனாதன ஒழிப்பு பற்றிய விவாதங்களும், பாராட்டுகளும் தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. ‘நான் சொன்ன சொற்களில் ஒரு சொல்லில் இருந்து கூட பின்வாங்கப் போவதில்லை’ என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். டாக்டர் கலைஞரின், தந்தை பெரியாரின்,தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் துணிச்சலை, பயமற்ற தன்மையை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் காணமுடிகிறது. பாராட்டி மகிழ்கின்றோம் நாம்.
உண்மை எப்போதும் உண்மைதான். அது உலகத்திற்கு உண்மை என்று தெரிவதற்கு வேண்டுமானால் நாளாகலாம், ஆனால் உண்மை எப்போதும் உண்மைதான். கலீலியோ உலகம் உருண்டை என்று சொன்னபொழுது, உலகம் நம்பவில்லை, மதம் அவரைத் தண்டித்தது, விசாரணைக்கு உள்ளாக்கியது.ஆனால் 400 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மதம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டது.அதனைப் போல பகுத்தறிவாளர்கள் சொல்லும் கருத்துகள் என்றைக்கும் வெல்லும் கருத்துகள்.
எதிர்க்கப்படவேண்டியதல்ல, ஒழிக்கப்பட வேண்டும் என்னும் குரல் இந்தியா
முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்திருப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.’
பார்ப்பனர்கள் வாழத் தகுதியானதல்ல தமிழ்நாடு’ என்று இராஜாஜி புலம்பியது போல, ‘பார்ப்பனர்கள் வாழத் தகுதியானதல்ல இந்தியா’ என்னும் புலம்பல்கள் இந்தியா முழுவதும் இருக்கும் பார்ப்பனர்களால் சொல்லப்படும் காலம் விரைவில் வரவேண்டும்.அதற்கு இந்தத் தந்தை பெரியாரின்
145-ஆவது ஆண்டு பிறந்த நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.
தந்தை பெரியாரின் தத்துவத்தை, வாழ்க்கையை நம் வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் உணர்வதற்கு வழிகாட்டும் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காட்டும் வழியில் தொடர்ந்து உழைப்போம். ♦