– தஞ்சை பெ. மருதவாணன்
புத்தர் தனது வாதிடும் முறையைப் பின்பற்றித் தனது படைப்பாகிய தம்மபதம் எனும் அற நூலில் பிராமணன் யார்? என்ற ஒரு வினாவை எழுப்பி அதற்கு விடை, அளிக்கும் வகையில் தனது பிராமண கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். தம்மபதத்தின் 26 ஆவது அத்தியாயமாகிய பிராமண வர்க்கம் (ப்ராஹ¢மண வக்கோ என்பது பாலிமொழி) என்பதில் இடம்பெற்றுள்ள 41 செய்யுள்களில் முதன்மையான சிலவற்றில் உள்ள புத்தரின் கருத்துகளை இங்குக் காண்போம்.
1) மன ஒருமையிலிருந்து, குற்றங்களை நீக்கி அமைதியாக இருந்து, கடமைகளைச் செய்து, காம இன்பங்களைத் துறந்து உயர்நிலை அடைந்தவர் யாரோ அவரையே நான் பிராமணன் என்று அழைக்கிறேன் (386)
2) யாரும் பிராமணனை அடிக்கக் கூடாது. அடிக்கப்பட்டால் பிராமணனும் கோபப்படக் கூடாது. பிராமணனை
அடிக்கிறவன் வெட்கப்பட வேண்டும். தன்னை அடிக்கிறவனைக் கோபிக்கிற பிராமணனும் வெட்கப்பட வேண்டும் (389)
3) மனம், வாக்கு, காயத்தினால் தீய காரியங்களைச் செய்யாமல் இம்மூன்றினையும் அடக்கி ஆள்கிறவர் யாரோ அவரையே நான் பிராமணன் என்றுஅழைக்கிறேன்(391)
4) சடைமுடி (உச்சிக்குடுமி) வைத்திருப்-பதாலோ, பிறவியினாலோ, கோத்திரத்தி
னாலோ ஒருவர் பிராமணர் ஆகமாட்டார். எவரிடத்தில் உண்மையும் நல்லறமும் இருக்கின்றனவோ, எவர் தூயவரோ அவர்தான் பிராமணர் ஆவார். (393)
5) ஓ! தூர்த்தனே! உன்னுடைய சடை முடியால் (அதாவது உச்சிக் குடுமியால்) பயன் என்ன? உன்னுடைய மான் தோலினால் பயன் என்ன? உன்னுடைய மனத்தில் (ஆசையாகிய) காடு இருக்கிறது. புறத்தை மட்டும் (உடம்பை மட்டும்) சுத்தம் செய்கிறாய் (394)
(குறிப்பு: தூர்த்தன் எனும் சொல்லுக்குத் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம் வெளியிட்டுள்ள தமிழ் அகர முதலியில் (பக்கம் 607) கீழ்க்கண்ட மூன்று பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. காமுகன்
2. பரத்தமை கொண்டொழுகு வோன்
3. கொடியோன்)
6) கந்தைகளை ஆடையாக உடுத்து, உடல் மெலிந்து, காட்டில் தன்னந்தனியே தியானம் செய்கிறவர் எவரோ அவரையே நான் பிராமணன் என்று சொல்கிறேன்.(395)
7) (பார்ப்பனத்) தாயின் வயிற்றில் கருவாகக் கிடந்து பிறக்கிறவரை பிராமணன் என்று கூறமாட்டேன். கிஞ்சனம் (செல்வம்) உடையவராக இருப்பதால் அவரை ‘அய்யன்’ என்று அழைக்கலாம். பொருட்பற்றுகளை விட்டவர் யாரோ ஆசையை விட்டவர் யாரோ அவரைப் பிராமணன் என்று அழைக்கிறேன். (396)
8) ஆசைத் தளைகளை எல்லாம் அறுத்து அச்சம் இல்லாமல் இருக்கிறவர் யாரோ எல்லாப் பற்றுகளையும் நீக்கி உலக இச்சைகளை விட்டவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன். (397)
9) (பகை என்கிற) வாரையும் (ஆசை என்கிற) விலங்கையும் (நிந்தனை என்கிற) கயிற்றையும் (அஞ்ஞானம் என்கிற) தடைகளையும் அறுத்த ஞானியானவர் யாரோ அவரையே நான் பிராமணன் என்று அழைக்கிறேன். (398)
10) நிந்தனைகளையும் அடிகளையும் சிறையிடுவதையும் மனத்தாங்கல் இல்லாமல் பொறுத்துக்கொண்டு பொறுமையையே தனது சேனையாகக் கொண்டுள்ளவர் யாரோ அவரையே பிராமணன் என்கிறேன். (399)
11) கோபத்தை விட்டு, தன் கடமையைச் செய்து, ஞானம் உள்ளவராய் ஆசையற்று அடக்கமாக இருந்து இதையே கடைசி உடம்பாகக் கொண்டிருப்பவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன். (400)
12) தாமரை இலையில் தண்ணீர் போலவும் துறப்பணத்தின் நுனியில் (ஒட்டாத) கடுகைப் போலவும் காம சுகங்களில் பற்று விட்டவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன். (401)
13) முழுஞானம் பெற்று அறிஞராகி நன்மையும் தீமையும் ஆன மார்க்கங்களை நன்கறிந்து உயர்நிலையை (அர் ஹந்த நிலையை) அடைந்தவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன். (403)
14) எந்த விலங்கையும் அடித்துத் துன்புறுத்தாமலும், கொல்லாமலும் கொல்லச் செய்யாமலும் இருக்கிறவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன். (405)
15) பொறுமை இல்லாதவரிடத்தில் பொறுமையுடையவராகவும் துன்பப்படுத்துகிறவர் இடத்தில் அன்புள்ளவராகவும், அவா உள்ளவர்கள் இடையே அவா அற்றவராகவும் யார் இருக்கிறாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன். (406)
16) துறப்பணத்தின் நுனியிலிருந்து கடுகு நழுவிப் போவதைப் போன்று சினம், பகை, இறுமாப்பு, பொறாமை ஆகிய தீய குணங்கள் யாரிடத்திலிருந்து போய்விட்டனவோ அவரையே பிராமணன் என்று கூறுகிறேன். (407)
17) உண்மை பேசி இனிய வார்த்தைகளைச் சொல்லி நல்லதைப் போதித்து கடுமொழி கூறாதவர் யாரோ அவரையே பிராமணன் என்று கூறுகிறேன். (408)
18) இவ்வுலகத்தில் நீண்டதாயினும் குட்டையாயினும், பெரியதாயினும் சிறியதாயினும் நல்லதாயினும் கெட்டதாயினும் யாதொரு பொருளையும் களவு செய்யாதவர் யாரோ அவரையே பிராமணன் என்று கூறுகிறேன். (409)
19) முன்பும், பின்பும், இப்போதும் பற்றுகள் இல்லாமல் உலக ஆசைகளை விட்டுப் பற்றற்றவர் யாரோ அவரையே பிராமணன் என்று கூறுகிறேன். (421)
20) உயர்ந்தவரும், தலைவரும், வீரரும், பெரியவரும், வெற்றியுள்ளவரும், ஆசையற்றவரும், தீமைகளைப் போக்கினவரும், ஞானம் பெற்றவரும் ஆக இருப்பவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன். (422)
(பிக்கு சோமானந்தா அவர்களால் பாலி மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு சென்னை எழும்பூர் மகா போதி சொசைடியால் வெளியிடப்பட்ட தம்மபதம் நூல் – 2014) இதுகாறும் எடுத்துக்காட்டப் பெற்ற புத்தரின் தம்மபதத்தில் உள்ள பிராமண வர்க்கம் எனும் இயலில் காணும் கருத்துகளின் உட்பொருள் என்ன? இன்னின்ன குற்றங்கள் இல்லாதவனே பிராமணன் என்று புத்தர் குறிப்பிடுவதன் உட்பொருள் அத்தனைக் குற்றங்களும் பிராமணன் என்று தன்னைச் சொல்லிக்கொள்பவனிடம் உள்ளன என்பதாகும். அது போல் இன்னின்ன நற்குணங்கள் உள்ளவனே பிராமணன் என்பதன் உட்பொருள் அத்தனை நற்குணங்களும் பிராமணன் என்று மார்தட்டிக் கொள்பவனிடம் இல்லை என்பதாகும். மொத்தத்தில் கயமைப் பண்புகளின் கொள்கலமே பிராமணியம் என்பதாகும். ♦