ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை சிங்கள இனவெறி ராஜபக்ஷே அரசு கொன்று குவித்து கடந்த மே பதினெட்டோடு மூன்றாண்டுகள் முடிந்தன. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் தமிழகம் வந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவோமா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
உலக நாடுகள் பலவற்றில் வாழ்பவர்களும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள்.ஆனால், ஈழ மண் சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற தகவல்கள் வருகின்றன.தமிழீழமே தீர்வு என்ற முழக்கமும்,ஈழத்தமிழர்களிடம் இதற்கென வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற குரலும் ஒலிக்கத்தொடங்கிவிட்டன. தமிழகத்தில் மீண்டும் தமிழீழக்குரல்கள் ஒலிக்கின்றன.
ஆனால், ஈழம் சென்றுவந்த இநதிய எதிர்க்கட்சித் தலைவர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் (பிஜேபி) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்ஸிஸ்டின்) மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் ஆகியோர் அங்குள்ள தமிழர்கள் தனி நாட்டை விரும்பவில்லை என்கிறார்கள். சிங்கள அரசினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்களிடம் துன்பத்தில் இருக்கும் அம்மக்களால் மனதில் உள்ள உண்மையைத் துணிந்து கூறமுடியுமா? சுற்றி ராணுவம் இருக்க தமிழீழம் வேண்டும் என்பார்களா? உண்மையை அறிய என்ன செய்யவேண்டும்? அய்.நா. வினால் பன்னாட்டினர் முன்னிலையில் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படட்டும்.அப்போது ஈழத்தமிழர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தெரிந்துவிடுமே.
அண்மையில் வாஷிங்டன் சென்ற சிங்கள அமைச்சர் ஜி.எம்.பெரிஸ், போர்க்குற்றங்கள் குறித்து நாங்களே விசாரித்து வருகிறோம். பன்னாட்டு விசாரணையை ஏற்கமாட்டோம் என்று கூறியிருக்கிறார். வடக்கு,கிழக்குப் பகுதிகளில் உள்ள சிங்கள ராணுவத்தைத் திரும்பப்பெறமாட்டோம் என்று ராஜபக்ஷே கூறுகிறார். இந்த நிலையில் ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்குமா? இந்து தேசியம் பேசும் பா.ஜ.க.வும் சர்வதேசியம் பேசும் மார்க்சிஸ்டுகளும் ராஜபக்ஷேக்களின் குரலையே ஒலிப்பது ஏனோ? நரியின் நாட்டாண்மையில் ஆடுகளுக்கு நீதி கிடைக்குமா?
இந்தியாவில்…
உலகளவில் பிள்ளைப்பேறு கால மரணங்கள் இந்தியாவிலேயே அதிகம். உலகளவில் 20 ஆண்டுகளில் 2 லட்சத்து 87 ஆயிரம் பெண்கள் இறந்துள்ளனர். இவர்களில் இந்தியாவில் மட்டும் 56 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இது உலகளவில் 19 சதவீதமாகும். ஐ.நா. மக்கள் தொகை நிதியம், உலக சுகாதார நிறுவனம், ஐ.நா. சிறுவர்கள் நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை இணைந்து எடுத்த ஆய்வில் இத்தகவல் கிடைத்துள்ளது.