பெற்றோர் ‍ பிள்ளை உறவு

ஜூன் 01-15

தங்களுடைய விருப்பங்களை, எதிர்பார்ப்புகளை பிள்ளைகள் மீது திணிப்பது கூடாது. பிள்ளைகளின் விருப்பத்திற்கும் திறத்திற்கும் ஏற்ற துறையில் அவர்கள் செல்வதுதான் சாதனை படைக்கவும், சலிப்பற்ற மனநிறைவு பெறவும் வழிவகுக்கும்.

– மஞ்சை வசந்தன்

பெற்ற குழந்தையை எப்படிப் பேண வேண்டும்; அதை எவ்வாறு உருவாக்க வேண்டும்; அதன் விருப்பங்களை எவ்வாறு நிறைவு செய்ய வேண்டும் என்பனவற்றையெல்லாம் சிந்திக்காது, பெற்றுப்போட்டோம், கடமை முடிந்தது அதுவாக வளரும் என்று பன்றியும் நாயும் செய்வது போல கடமையை முடித்துக் கொள்கின்ற பெற்றோர் ஒரு வகை.

பிள்ளையை எப்படியாவது படிக்க வைத்து, பெரிய வேலையில் அமர்த்தி பெருந்தொகை சம்பாதித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பிள்ளைகளை பணம் ஈட்டும் கருவியாக உருவாக்க, படி படி என்று அவர்களின் இயல்புணர்வுகளையெல்லாம் முடக்கி, புத்தகப் புழுவாக நெளியச் செய்கின்றவர்கள் இன்னொரு வகை.

வயிற்றுப்பாட்டுப் பிரச்சினைக்கு கணவனும் மனைவியும் காலையிலே வீட்டைவிட்டு வேலைக்குச் சென்று, மாலையில் வீடுவந்து, உழைத்த களைப்போடு உண்டு உறங்கி யெழுவது என்ற வயிறு நிறைக்கும் வாழ்க்கையில் பிள்ளைகளைக் கவனிக்க முடியாமலே காலம் கழிப்போர் மற்றொரு வகை.

அயல்நாடு சென்று அதிகம் ஈட்டலாம் என்பதற்காக மனைவி பிள்ளைகளை விட்டு விலகி ஆண்டுக்கணக்கில் பிரிந்து வாழ்வதால் பிள்ளைகளோடு வாழமுடியாத பெற்றோர் பிரிதொருவகை.

பிறக்கும் பிள்ளையை வளர்க்கும் பொறுப்பு பெற்றோரை மட்டுமே சார்ந்தது, அரசு அதில் அக்கறை செலுத்தாது, அதற்கான அரசமைப்புச் சட்டமும் இல்லையென்பதால், பிள்ளைகளின் வாழ்வு பெற்றோரால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.

எனவே, பிள்ளைகளின் வாழ்வு சிறப்பாகவும் செழுமையாகவும் அமையவேண்டும் என்றால் அது பெற்றோர் பொறுப்பிலேதான் பெரிதும் உள்ளது. பெற்றோரின் குடும்பச் சூழலும், சமுதாய நிலையும் பிள்ளைகளின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் பெருங்காரணிகளாக அமைகின்றன. வசதியான குடும்பத்தில், உயர்சாதியில் பிறக்கும் குழந்தையின் வளர்ப்பும் வாழ்வும் மேம்பட்டதாகவும், வறுமையிலும், கீழ்ச்சாதியிலும் பிறக்கின்ற குழந்தைகளின் வளர்ப்பும், வாழ்வும் வேறு வகையாகவும் அமைகின்றது.

மேலும், இயற்கையின் அமைப்பும் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயதுவரை பெற்றோரைச் சார்ந்தே வாழவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. ஆம். எந்தவொரு பிள்ளையின் வாழ்விலும் இரு கட்டங்கள் உண்டு. ஒன்று பிறந்தது முதல் தன் உணவுக்கும், பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் பெற்றோரைச் சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாய காலகட்டம். அது சற்றேறக்குறைய 18 வயது வரை. மற்றொன்று தனக்கு வேண்டியதைத் தானே உருவாக்கிக் கொள்ளும் காலகட்டம். அது 18 வயதுக்குமேல் இருக்கும்வரை.

எனவே, எந்தவொரு குழந்தையின் வாழ்விற்கும், வளர்ச்சிக்குமான அடிப்படையை இடும் பொறுப்பும், அதை பாதுகாப்புடன் வளர்க்கும் பொறுப்பும் பெற்றோரை மட்டுமே சாரும் என்பதால், பெற்றோர் தம் பெரும் பொறுப்புணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.

தாயின் வயிற்றில் குழந்தை கருவாக உருவாகத் தொடங்கிய நாள்முதலே அதன் வளர்ச்சியில், பாதுகாப்பில் பெற்றோரின் பங்கு தொடங்கி விடுகிறது. சத்தான, அளவான உணவு உண்ணுதல், முறையான மருத்துவச் சோதனை, மகிழ்வான, நிம்மதியான மனநிலை தாய்க்கு உரியவை. இவற்றை உருவாக்கித் தரவேண்டியது தந்தையின் பொறுப்பு.

பிறந்தபின் தாய்ப்பால் ஓராண்டு காலமாவது கட்டாயம் தொடர்ந்து கொடுத்தல் வேண்டும். பிறந்தது முதலே தாயும் தந்தையும் தங்கள் பாசத்தை, பரிவை, கொஞ்சு மொழிகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். தாயோ தந்தையோ மாறிமாறி பிள்ளை பார்வையில் இருக்கவேண்டும்; அடிக்கடி அணைத்து மகிழ வேண்டும்; மகிழ்விக்க வேண்டும்.

அய்ந்து வயதிற்-குள் குழந்தைக்கு எவ்வளவு சமுதாய அறிவைக் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்குக் கொடுக்க வேண்டும், சுற்றுப் புறத்தாரோடு தொடர்பு கொண்டு பழகும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்; அதற்குப் பழக்க வேண்டும். நன்றாக ஓடியாடி, அதையொத்த பிள்ளைகளோடு விளையாட அனுமதிக்க வேண்டும். அய்ந்து வயதுக்கு முன் கல்வி என்பது சரியல்ல என்னும்போது, மூன்று வயதுக்கு முன் கல்விக்கூடத்தில் அடைப்பது என்பது அறிவிற்குகந்த செயல் அல்ல. அய்ந்து வயது வரை விளையாட்டுடன்கூடிய கற்பித்தலே சாலச்சிறந்தது. இதைப் பெற்றோரும் பின்பற்ற வேண்டும். கல்வி நிறுவனங்களும் அரசும் இதைக் கடைபிடிக்க வேண்டும். மூன்று வயது வரை பிள்ளையோடு பெற்றோர் பின்னிப் பிணைந்து வாழவேண்டும், பிள்ளைகளை வளர்க்க வேண்டும். பிள்ளைகளின் உடல் தீண்டலும், அணைப்பும் பெற்றோருக்கும் இன்பம், பிள்ளைக்கும் இன்பம் தரும் என்பதோடு, இருதரப்பு மனவளத்தையும், மகிழ்வையும் வளர்க்கும்.

புளியம்பழம் போன்ற உறவு: பெற்றோர் பிள்ளை உறவு என்பது புளியம்பழம் போன்றது. புளியம்பழம் பிஞ்சாக இருக்கும்போது அதன் ஓடும் உள்ளிருக்கும் சதைப்பகுதியும் ஒன்றோடொன்று ஒட்டி, பின்னிப்பிணைந்து நிற்கும். இரண்டையும் எளிதில் பிரிக்கமுடியாது. அதேபோல் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போது பெற்றோரும் பிள்ளையும் பின்னிப் பிணைந்து பிரிக்கமுடியாதவர்களாய் இருக்கவேண்டும். பெற்றோர் புளியங்காயின் ஓடுபோன்றவர்கள். பிள்ளைகள் உள்ளிருக்கும் சதைப்பகுதியைப் போன்றவர்கள்.

புளியங்காய் முற்ற முற்ற அதன் ஓடு, சதைப்பகுதியை விட்டு மெல்லமெல்ல விலகும். அதேபோல் பிள்ளைகள் வளரவளர பெற்றோர் பிள்ளைகளின் நெருக்கத்தைக் குறைத்து மெல்ல மெல்ல விலகவேண்டும்.

புளியங்காய் நன்றாக முற்றிப் பழமானவுடன் அதன் ஓடு சதைப்பகுதியை விட்டு தனியே விலகி, உள்ளிருக்கும் சுளைப்பகுதியை பாதுகாத்து நிற்கும். அதேபோல், பிள்ளைகள் வாலிப வயதை அடைந்து, வளர்ச்சி பெற்ற முழுமனிதர்களாய் ஆகும் நிலையில், பெற்றோர் பிள்ளைகளிடமிருந்து விலகிநின்று, புளியம்பழ ஓட்டைப் போல, பிள்ளைகளைத் தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

புளியம்பழம் பழுத்து பயன்பாட்டிற்கு வரும்போது, ஓடு சுளையிலிருந்து தனியே பிரிக்கப்பட்டு, புளிச்சுளை பயன்பாட்டிற்குச் செல்லும்போது ஓடு ஒட்டிக்கொண்டே செல்லாது. சுளை விருப்பப்படி பயன்படுத்தப்படும். பயன்படுத்தப்படவும் வேண்டும். அதேபோல் பிள்ளைகள் தங்கள் விருப்பப்படி இலக்குப்படி, தங்கள் வாழ்வைத் தீர்மானிக்க வேண்டும். பிள்ளைகள் விருப்பத்தைப் புறக்கணித்து தங்கள் விருப்பத்தை பெற்றோர்கள் அவர்கள் மீது திணிக்கக்கூடாது. புளியம்பழ ஓட்டிற்கு உள்ள பெருந்தன்மை பெற்றோருக்கும் வேண்டும்.

புளியம்பழம் _ புளிசாதம் கிளற பயன்படும் புளிக்குழம்பு வைக்கப் பயன்படும்; சாம்பார் வைக்கப் பயன்படும், துவையல் செய்யலாம், மீன் குழம்பு வைக்கலாம். இப்படி எத்தனையோ… அதேபோல் பிள்ளையின் ஆற்றல் தேவைக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப, திறமைக்கேற்ப பயன்படுத்தப் படவேண்டும். அப்போதுதான் அது சுவையாகவும் இருக்கும், பயனுள்ளதாகவும் அமையும்.

புளிக்குழம்பு வைப்பதா, மீன்குழம்பு வைப்பதா என்பதை புளியம்பழ ஓடு தீர்மானிக்கக் கூடாது, சுளையை பயன்படுத்துகின்றவர் தீர்மானிக்க வேண்டும். அதேபோல் பிள்ளையின் ஆற்றலுக்கு ஏற்ப அவர்களைப் பயன்படுத்துகின்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் பயன்பட்டு பயன்தருவர். அப்படிப்பட்ட பயன்பாடே அவர்களுக்கும் நன்மை தரும், அவர்களைப் பயன்படுத்துகின்றவர்களுக்கும் பயன்தரும்.

தங்களுடைய விருப்பங்களை, எதிர்பார்ப்புகளை பிள்ளைகள் மீது திணிப்பது கூடாது. பிள்ளைகளின் விருப்பத்திற்கும் திறத்திற்கும் ஏற்ற துறையில் அவர்கள் செல்வதுதான் சாதனை படைக்கவும், சலிப்பற்ற மனநிறைவு பெறவும் வழிவகுக்கும்.

தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற பழமொழிக்கு ஏற்ப, பிள்ளைகள் வாலிப வயதை எட்டியதும் அவர்களிடம் நண்பர்களாய் பழகவேண்டிய கடமை பெற்றோருக்கு உரியது.

செடி சிறிதாக இருக்கும்போது அது நேராக பயனுள்ள வகையில் வளர அதனுடன் ஒரு குச்சியை நட்டுக் கட்டுவர். சுற்றிலும் பாதுகாப்பு வைப்பர். ஆனால், அது மரமாக வளரம்போது அந்தக் குச்சி மற்றும் பாதுகாப்பு அகற்றப்படும். பெற்றோர் பிள்ளைகள்மீது விதிக்கும் கட்டுப்பாடு என்பதும் அப்படித்தான் இருக்க வேண்டும். கடைசிவரை கண்டிப்பு, கட்டுக்குள் வைத்தல் என்பது பிள்ளைகளுக்கு எரிச்சல் ஊட்டும் என்பதோடு, பெற்றோர் சொல்வதற்கு எதிர்நிலையாகவும் செயல்படுவர். எனவே, பிள்ளைகள் வளர்ந்தபின் தோழமை உணர்வுடன் பெற்றோர் பழகவேண்டும். அவ்வாறு வளர்க்கப்படும் பிள்ளைகள் வெற்றிபெற்று சாதிக்கின்றனர். கடைசிவரை பெற்றோரிடம் பிரியமாகவும் வாழ்கின்றனர். மேலும், சமுதாய மாற்றமும் இதையே ஏற்கிறது. பெற்றோர் இவற்றை ஏற்று நடந்தால் பெற்றோர்-_பிள்ளை உறவில் பிரிவும் இருக்காது; பிரச்சனையும் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *