பசுமரத்தாணி போல் என்று சொல்வார்கள். அப்படித்தான் குழந்தைகள் மனது. ஜாதி, மதம், மூடநம்பிக்கைகள் என்ற சமூக அழுக்குகள் அவர்களின் மூளையில் படரவிடாமல், பகுத்தறிவை விதைத்தால், சட்டென்று துளிர் விட்டு பிஞ்சாகி, காயாகி, கனியாக வளர்ந்து, ஒரு ஏற்றத்தாழ்வற்ற, மூடநம்பிக்கைகளற்ற ஒரு அறிவியல் சமுதாயத்தை படைக்கக் கூடிய வாய்ப்புகளை உருவாக்கும்.
அப்படிப்பட்ட ஒரு அரிய இலக்கை கொண்டுதான் 1993ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான பழகு முகாம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டும் பெரியார் பிஞ்சு சார்பில் பழகு முகாம் மே 1 முதல் மே 5 வரையிலும் தஞ்சை வல்லத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
மிகக் குறுகிய கால அவகாசமும், 150 பேர்தான் அனுமதி என்றும் விடுதலையில் கொடுக்கப் பட்டிருந்தது. ஆனாலும் இயக்கத் தோழர்களும், இன உணர்வாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு பதிவு செய்து விட்டனர்.
பழகு முகாமின் முதல் நாள் பெரியார் மணியம்மையார் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் அரங்கத்தில் கோலாகலமாக தொடங்கப்பட்டது. இதில் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களும், பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பள்ளிக்கூட சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழல். தொடக்கமே அமர்க்களமாக இருந்தது. பிஞ்சுகளுக்கு காய், கனி, மிருகம், இயற்கை போன்றவற்றின் உருவங்கள் முகமூடியாக செய்து கொடுக்கப்பட்டிருந்தது. அதை அணிந்துகொண்டு உற்சாக உருவங்களாய் மாறிப் போயினர். இதனால், முகாமின் சூழலுக்கு உடனடியாக பழகிக் கொண்டனர்.
பழகு முகாமின் நோக்கமே, குழந்தைகைள் ஒருவரோடு ஒருவர் நண்பர்களாக பழக வேண்டும் என்பதுதான்.
அதை அவர்களே புரிந்து வைத்திருந்துபோல் வந்த புதிதிலேயே புதிய நண்பர்களை சம்பாதித்தும் கொண்டனர். எட்டு வயதிலிருந்து 12 வயது வரை உள்ள குழந்தைகள்தான் பழகு முகாமக்கு அனுமதி என்று வயது வரையறுக்கப்பட்டிருந்ததால், 8 வயது குழந்தைகள் எப்படி பெற்றோரை மறந்திருப்பர் என்ற அய்யத்தை இந்த முகமூடிகள் போக்கிவிட்டது. மிகவும் கலகலப்பான சூழலை அவர்களுக்கு அது அளித்துவிட்டது.
பழகுமுகாமின் 5 நாட்களிலும் யோகா, கராத்தே, சிலம்பம், கால்பந்து, கேரம், சதுரங்கம், கணினி பயிற்சி, ஓவியப் பயிற்சி, இன்னும் அறிவுக்கு விருந்தாகும் பலப்பல பயிற்சிகள் அத்தோடு குதிரையேற்றம், சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் மாலைநேர நாடகங்கள், சிரிப்பரங்கம், திராவிடர் கழக பொதுச்செயலாளரின் விடுகதைகள், அறிவியல் அறிஞர்கள் பற்றிய வினாக்கள், பெரியாரைப்பற்றிய ஓர் எளிய அறிமுகம், இந்துமதப் பண்டிகைகளின் உண்மை விளக்கம். அது மட்டுமா? நினைத்தாலே பிஞ்சுகளுக்கு குதூகலத்தை ஏற்படுத்தக்கூடிய நீச்சல் பயிற்சி. இன்னும் ஒளி ஒலி காட்சிகள் என்று நேரம் போவதே தெரியவில்லை பிஞ்சுகளுக்கு. இடையிடையே பிஞ்சுகளுக்கு அலிப்பு சலிப்பில்லாமல் வயிற்றுக்கும் ஈயப்பட்டது.
இந்த முகாம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற அழுக்குகளை தூர் வாருகின்ற ஒரு புதிய இளம் சமுதாயத்தை அமைக்க ஏற்படுத்தப் பட்டிருந்தாலும், இயல்பாகவே குழந்தைகளின் மனநிலையை விருப்பு வெறுப்பின்றி அருகிலிருந்து பழகி அறிந்து, அதை பெற்றவர்களிடம் சொல்லி, குழந்தைகளின் அறிவில் மட்டுமல்ல மற்ற வளர்ச்சிகளிலும் இந்தப் பழகு முகாம் நாட்டம் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் வளரணும், அறிவும் வளரணும் _ அதுதானே வளர்ச்சி. இப்படி ஆளையும், அறிவையும் வளர்க்கக்கூடிய இந்தப்பணியை திராவிடர் கழகத்தின் தலைமை நிலைய செயலாளரின் ஒருங்கிணைப்பில், பேராசிரியர் பர்வீன், முனைவர் அதிரடி அன்பழகன், புதுவை. சிவவீரமணி, பிரின்சு என்னாரெசு பெரியார் போன்றவர்கள் இன்னும் ஏராளமானோர் மிகச் சிறப்பாக செய்து முடித்தனர்.
இந்தப் பழகு முகாம் பிஞ்சுகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டியது. தங்களிடம் இருக்கின்ற திறன்களை கூச்சமில்லாமல் மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் பாங்கை கற்றுக்கொடுத்தது. பெரியாரையும் அவர்தம் சிந்தனைகளையும் புகட்டியது.
இந்திய அரசியல் சட்டப்படி [51ஏ(எச்)] அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பவர்களை சிலர் பிரிவினைவாதிகள் என்கின்றனர். உண்மையாகவே பிரிவினையை ஏற்படுத்துகின்றவர்களை தேசியவாதிகள் என்கின்றனர். இந்த மாய்மாலத்தை இந்த சமூகம் நிச்சயமாக எதிர்காலத்தில் புரிந்து கொள்ளத்தான் போகிறது. அதற்கு இதை பழகு முகாமும் _ ஒரு காரணியாக இருக்கப்போகிறது.
– உடுமலை வடிவேல்