– செல்வ மீனாட்சி சுந்தரம்,
மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
கருப்பெலாம் வெறுப்பெ னக்கு!
காதமாய் அதைத்து ரத்து!
கரித்துகள் காற்றில் கூடக்
கலந்திடாத் தடுத்த டக்கு!
விரிந்தவான் கருமே கத்தை
வெளுத்திடு! வண்ணம் பூசு!
கருப்பண சாமி கோயில்
கதவினை இழுத்துப் பூட்டு!
கருநிறக் காக்கை என்முன்
கரைந்திடா நிலையைக் கூட்டு!
கருமணி கண்ணில் கண்டால்
கம்பியால் தோண்டிப் போடு!
கருநிறக் குடைகள் கண்டால்
கடிந்துநீ பறித்துப் போடு!
கருப்பையுள் விளக்கைப் போட்டு
காரிருள் விலக்கி ஓட்டு!
கருமயிர் தலையில் கொண்டால்
கத்தியைக் கழுத்தில் வீசு!
கருத்திலும் கருப்பைக் கொள்ளத்
தடையெனச் சட்டம் போடு!
கருநிறம் நிழலால் தோற்றும்
கதிரினைக் கைது செய்க!
கருப்புடை தரித்தார் கண்டால் கைகளில் விலங்கை மாட்டு!
கருநிறத் தோலைக் கண்டால்
கடுஞ்சினம் வருமெ னக்கு!
மறுநிற உடைகள் பூண்டு
மறைத்திடு உடலை முற்றாய்!
நெருப்பது அணைந்த பின்னர்க்
கரியினில் கருமை கூட்டப்
பொறுத்திடாப் புத்தி மான்நான்
புரிந்துநீ பொறுப்பை ஆற்று!
கறுப்பது வெகுளிக் காட்டாம்
காப்பியன் நூற்பா கூற்று!
மறுப்பினை ஏற்கேன் நானே
மாநிலம் என்காற் கீழே!
கருப்பினைக் கனவில் கூட
கண்டிட விருப்பம் இல்லை!
கருப்பெலாம் வெறுப்பெ னக்கு
காரியக் கிறுக்கெ னக்கு! றீ