பாற்கடலும் பால்வழியும் ஒன்றா?
– பேராசிரியர் ந.வெற்றியழகன்
என் கேள்விக்கு என்ன பதில்?
18.4.2012 நாளிட்ட ஆனந்த விகடன் வார இதழில், ஹாய் மதன் – கேள்வி_பதில் என்ற தலைப்பிட்ட பகுதியில் வாசகர் செக்கானூர் சி.பி.நாராயணன் பின்வரும் கேள்வியைக் கேட்டுள்ளார். அது பின்வருமாறு:
மகாவிஷ்ணுவும், மகாலெட்சுமியும் கடல்நடுவில் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆடைகள் நனையாமலிருக்க வேண்டுமே? அது எப்படீங்க?
இந்தக் கேள்விக்குப் பதில் இதோ!
அது நீங்கள் நினைக்கிற பாற்கடல் இல்லை.
அப்படி இருந்தால், பால்கெட்டுப்போய் விஷ்ணு மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் உட்கார வேண்டிவரும்.கோடானுகோடி நட்சத்திரங்களைக் கொண்ட கேலக்ஸி என்கிற விண்வெளிக் கடலில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அதற்கு இந்தியர்கள் பாற்கடல் என்று பெயர் வைத்துவிட்டனர்.போன நூற்றாண்டில்தான் விஞ்ஞானிகள் அதற்கு ஆச்சரியமாக மில்கி வே என்று பெயர் வைத்தார்கள்.நாம் வசிக்கிற கேலக்சிங்க! இதுதான் மதன் அளித்த பதில்.
ஏன் கெடும்? எப்படிக் கெடும்?
நீங்கள் நினைக்கிறவண்ணம் பால்நிறைந்த கடல் என்று பொருளல்ல. அப்படி இருந்தால் பால் கெட்டுப்போய் மகாவிஷ்ணுவும் மகாலெட்சுமியும் நாற்றம் பொறுக்க முடியாமல் மூக்கைப் பிடித்துக்கொள்வார்களாம்! சொல்கிறார் மதன்!
ஆண்டவன் இருக்கிற பால் எப்படிக் கெட்டுப் போகும்? கெட்டுப் போகலாமா? ஏன் கெடும்? எப்படிக் கெடும்.? ஒருவேளை,விஷ்ணு_லெட்சுமி இருவரும் செய்த சிறுநீர்ப் பாசனத்தால் அதில் உள்ள உப்பின் (Uria) கலப்பால், பால் பிரை ஊற்றியதுபோலத் தயிராகத் திரிந்து, அதன் புளிப்பு வாடை அவர்களின் மூக்கைப் பிடிக்க வைக்கிறதா? மதன் அவர்கள்தான் விளக்க வேண்டும்!
அலைகடல் என்ற அந்தப் பொருள்
பாற்கடல் என்பது அலைமோதும் பாலாலாகிய கடல் என்று பொருளல்லவாம்! அது கேலக்ஸி என்னும் விண்வெளியாகிய கடலாம்.
அதாவது, பால்வெளியாம்!
பாற்கடல் என்றும், திருப்பாற்கடல் என்றும் திருமால் உறையும் இடத்தை அது அலைகடல் என்ற பொருளிலேயே வைணவப் பாவலர்களும் ஆழ்வார்களும் பாடியிருக்கிறார்களே! இதிகாச, புராணங்கள் எல்லாம் இப்படித்தானே இயம்புகின்றன?
பாம்புப்படுக்கை
பாற்கடலுள் பலதலைப் பாம்பாகிய ஆதிசேஷனை அணையாக _ படுக்கையாக கொண்டு பரந்தாமன் பள்ளி கொண்டிருக்கிறான் என்றுதானே பக்தர்களும், ஆழ்வார்களும் பாடியுள்ளார்கள்?
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகிய பெரியாழ்வார் பாடிய பெரிய திருமொழிப் பாடலடிகளைப் பார்ப்போம்.
வெள்ளை வெள்ளத்தன் மேலொரு பாம்பை
மெத்தையாக விரித்ததன்மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற….
(வெள்ளை வெள்ளம் – பாற்கடல்
கள்ள நித்திரை – அறிதுயில்)
மற்றொரு பாடலடிகள் பின்வருமாறு:
அரவத்து அமளியினோடு
அழகிய பாற்கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும்
பரவைத் திரைக்கடல் மோத
பள்ளிகொள் கின்ற பிரான்…
அழகிய பாற்கடலுள், பாம்பின் படுக்கையில் செந்தாமரைச் செல்வியாகிய மகாலெட்சுமியும், மகாவிஷ்ணுவும் பாற்கடலின் அலைகள் (பரவைத்திரை) மொத்திமோத பள்ளிகொள்கின்ற பெருமான் – என்பது பொருள்.
எவ்வளவு விளக்கமாக, பாற்கடலின் அலைகள் மொத்தி மொத்தி மோத பாம்புப்படுக்கையில் திருமகளோடு பரந்தாமன் பள்ளி கொண்டுள்ளான் என்று பெரியாழ்வார் பாடியுள்ளார். அவருக்கு பாற்கடல் என்பது உண்மையான பால் அலைக்கடல் அல்ல, விண்வெளியாகிய கடல் என்று தெரியவில்லையா?
அவ்வளவு அறிவிலியாக ஆழ்வாரை மதன் கருதுகிறாரா? விண்வெளியில் அலைகள் உண்டா? அவை மோதி மோதி வருமா? அமைதியான வான்வெளிப் பரப்புதானே அது?
வழிமொழியும் ஆண்டாள்
பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆண்டாள் பின்வருமாறு பாடியுள்ளார்.
பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வான்
பொங்கிய பாற்கடல் என்றாலே பொங்கி எழும் அலைகள் ததும்பும் பாற்கடல் பள்ளிகொள்வான் திருமால் என்றுதானே ஆண்டாளும் பாடியுள்ளார்.
கம்பன் காட்டும் கடற்காட்சி
தலைசிறந்த திருமால் பக்தரான கம்பரின் பாடல் அடிகளையும் பார்ப்போமா? அரக்கர்களின் கொடுமை தாங்கமுடியவில்லை என்றும் அதனை அழிக்க, திருமால் உதவவேண்டும் என்றும் தேவர்கள் திருமாலை வேண்டுவதைப் பின்வருமாறு கம்பர் பாடியுள்ளார்.
தேவர்கள்,
திரைகெழு பயோததி துயிலும் தெய்வவான்
மரகத மலையினை வழுத்தி…
நின்றார்களாம்.
_(கம்பராமாயணம், திருவவதாரப்படலம்)
அதாவது,
அலைகள் நிரம்பிய பாற்கடலில் துயிலும் உயர்கடவுளாகிய பச்சைமா மலைபோல் மேனிப் பரந்தாமனை வாழ்த்தி… நின்றார்களாம் முப்பத்துமுக்கோடி தேவர் கூட்டங்கள்.
வைணவ அடியார்களும் பாவலர்களும் அலைகள் மோதும் பாற்கடல் என்று தெளிவாகப் பாடியிருக்க, பாற்கடல் என்பது விண்வெளிக்கடல் என்று மதன் அவர்கள் இதற்கு அறிவியலைத் தொடர்புபடுத்த வேண்டுமா?
பொருத்திக்காட்டப் பொருள் இல்லையா?
எல்லாப் பரம பக்தப் பாவலர்களும் ஆழ்வார்களும் புராணக்கதையை ஒட்டி, பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டுள்ளான் திருமால் என்று பாடியுள்ளார்கள். பாம்பணை பற்றி ஏன் மதன் மூச்சுவிடவில்லை?
பாற்கடல் என்பது பால்வெளி எனப்படும் விண்வெளிக் கடல் என்ற இட்டுக்கட்டி பொருத்திக் கூறியவருக்கு ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேஷப் பாம்பு அணை என்பது எது? அது விண்வெளியில் எதனைக் குறிக்கும்? என்று நெஞ்சத் தெளிவோ, வலிவோ இருந்தால் சொல்லியிருக்க வேண்டாமோ? ஏன் சொல்லவில்லை, மதன்?
அதற்கு வாய்ப்பாக _ வசதியாக _ கேலக்சியில் எதனையும் பொருத்திக்காட்ட எப்பொருளும் இல்லையா? கிடைக்கவில்லையா?
ஆதிசேடனை அம்போ என்று தூக்கி எறிந்துவிட்டு, பாவம், மகாவிஷ்ணுவையும் மகாலெட்சுமியையும் மட்டும் விண்வெளிக் கடலில் அமர்ந்திருக்கிறார்கள் என்கிறாரே, ஆனந்த விகடன் மதன்?
இது என்ன நியாயம்?
சொன்னாலும் சொல்வார் இவர்!
ஒருகால் நமது அண்டம் (நிணீறீணீஜ்ஹ்) மதன் சொல்லில் கூறினால், விண்வெளிக்கடலில் பாம்பு என்பது அண்டத்தில் உள்ள சூரியனும் பிற விண்மீன்களும்தான் ஆதிசேஷன் என்று சொன்னாலும் சொல்வார்.
ஏனோ தெரியவில்லை! அவர் அவ்வண்ணம் சொல்லவில்லை!
நாம் தப்பித்தோம்!
அறிவியலும் பிழைத்துக் கொண்டது!!
மிதக்க விடலாமா?
விண்வெளியில் எதன்மீது திருமாலும் திருமகளும் அமர்ந்திருப்பார்கள்?
அமர்வதற்கு இடமில்லாமல் அந்தரத்தில் அவர்களை மிதக்க வைத்து விட்டாரே மதன்?
அங்கே ஈர்ப்பு விசை இல்லையே? அதனால எடையும் கிடையாதே?
உட்காரக்கூட முடியாதே?
குந்தி இருந்தார்கள் என்று கூறவில்லையே?
ஒன்றை இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
பாற்கடலுள் பாம்பணையில் மகாவிஷ்ணுவும் மகாலெட்சுமியும் அமர்ந்திருந்தார்கள் என்று இந்துமதப் புராணமோ, இதிகாசங்களோ இயம்பவில்லையே?
பாம்பணை மீது படுத்திருந்தனர்; பள்ளி கொண்டிருந்தனர் என்றுதானே சொல்லப்பட்டுள்ளது?
மதன் மட்டும் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம் சொல்கிறாரே!
இப்படி எந்த நூல் கூறுகிறது? எவர் கூறியுள்ளார்? மதன் பதில் கூறுவாரா? அறைகூவிக் கேட்கிறோம்!
படுத்திருப்பவரை ஏன் வீணாக, எழுப்பிவிட்டு உட்காரவைக்க வேண்டும் மதன்?
இவருக்கு இந்த வேண்டாத வீண்வேலை தேவைதானா? ஒருகால், அமர்ந்திருத்தல் என்பதும் படுத்திருத்தல் என்பதும் ஒன்றுதான் என்று திரிபான விளக்கம் கூறினாலும் கூறுவார் அவர்!
கேலக்சி என்பது என்ன எனக் கேட்பின்…
கேலக்ஸி என்ற வானியல் சொல்லைப் பயன்படுத்திப் படிப்பவரைப் பயமுறுத்துகிறாரே மதன், அந்தக் கேலக்சி என்பது என்ன என்பதை இப்பொழுது நினைவுபடுத்திக் கொள்வோமா?
கேலக்சி (Galaxy) என்பது விண்மீன் குடும்பம் ஆகும். தமிழில் இதனை அண்டம் என ஒரே சொல்லால் குறிப்பிடுவர். 19ஆம் நூற்றாண்டு வரை நமக்குத் தெரிந்த அண்டம் மிகவும் குறுகியது. 20ஆம் நூற்றாண்டில் நாம் காணும் அண்டம் எல்லை விரிந்தது.
எங்க குடும்பம் பெரிசு!
நமது சூரியன் ஒரு விண்மீன். அறிவோம் நாம்! இதுபோன்று பல்லாயிரக்கணக்கான விண்மீன்களின் தொகுதிதான் அண்டம் எனப்படும விண்மீன் குடும்பம்.
விண்மீன் குடும்பங்கள் (அண்டங்கள்) விண்வெளியில் நிறைய உள்ளன. எல்லா அண்டங்களும் சேர்ந்தது பேரண்டம் (Universe) எனப்படுகிறது. விண்மீன் குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட தோற்றம் உண்டு; அமைப்பு உண்டு! இவற்றின் அடிப்படையில் அவை வேறுபாடுகள் கொண்டதாக உள்ளன. இந்த கேலக்சி என்பதை வைத்துக் கொண்டு மதன் கேள்வி கேட்டவரையும் மக்களையும் என்னமாய்க் குழப்புகிறார்?
நமது அண்டம், அதாவது நம் சூரியகுடும்பம் இடம்பெற்றுள்ள அண்டம் சுருள்வடிவ அண்டமாகும். (Spiral Galaxy).
கவிழ்த்து விடப்பட்ட பால்போன்ற காட்சி!
நமது அண்டத்தை உற்று நோக்கினோமானால் இது, பெரிய ஒளிவெள்ளம் போல வடக்கு _ தெற்காக நீண்டு கிடக்கிறது.
இந்த ஒளிப்பெருவெள்ளம் விண்வெளியில் பாலைக் கவிழ்த்துவிட்டது போலக் காட்சி தரும். எனவே, இதனை பால்வழி (Milky Way) என வானியலார் அழைப்பர்.
நமது பால்வழி அண்டத்தின் மய்யப்பகுதி ஒரு குவிலென்சு போலக் குவிந்திருக்கும். அல்லது,இட்டிலி போல மய்யம் உப்பிக் காணப்படும்.
இதன் விட்டம், 925,680,000,000,000,000 கி.மீ. ஆகும். அப்படியானால், அதன் மொத்தத் தொலைவு, 1,851,360,000,000,000,000 கி.மீ. ஆகும்.
இவற்றையெல்லாம் நம்மால் எளிய முறையில் சொல்லமுடியாது!
எந்த இடம் அந்த இடம்?
நமது சூரிய குடும்பம் (Solar System) பால்வழியின் (அண்டத்தின்) மய்யத்தில் அமைதிருக்கவில்லை.
மய்யத்தைவிட்டு கோடிக்கணக்கான தொலைவு தள்ளி ஓர் ஓரத்தில், ஒரு விளிம்பில் உள்ளது.
இத்துணை தொலைவு உள்ள அண்டம் எனப்படும பால்வழியில், மதன் வார்த்தையில் விண்வெளிக் கடலில் மகாவிஷ்ணுவும் மகலெட்சுமியும் எந்த இடத்தில் மதன் கருத்துப்படி அமர்ந்திருந்தனர்? மதன் சொல்வாரா?
இங்கேதான் மடமைக் கட்டமான மதன்(ன) மாளிகை ஒன்றை தன் கற்பனையால் எழுப்புகிறார் பாருங்கள்.
இந்த மதன மாளிகையில்தான் மகாவிஷ்ணு _ மகாலெட்சுமி தம்பதியர் அமர்ந்திருக்கிறார்கள் என்கிறார் மதன்!
நான் பேச நினைப்பதெல்லாம்…
எவருமே நடமாட்டம் இல்லாத _ ஏன் எந்த உயிரினமும் இல்லாத நமது பால்வழியிலே இந்தத் தம்பதியினர் – ஒதுக்கமான இடமாகப் பார்த்து இருவரும் ஏன் ஒதுங்கினார்கள்?
அங்கே போய் அமர்ந்து கொண்டு, இருவரும் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்!! என்று மாறிமாறிக் காதல் பாட்டுப் பாடிக்கொண்டு உறவாடிக் கொண்டிருப் பார்களோ?
அதற்குக்கூட, இந்தப் பாழாய்ப் போன, பால்வழி, அறிவியல் வரி இல்லாமல் போகிறதே? இவர்கள் இருக்கும் அண்டவெளியில் காற்று என்பதே கிடையாதே?
பாடும் ஒலி காற்றில் அலையாகப் பரவமுடியாதே! ஒருவர் பாடுவது மற்றவர்க்கு கேட்காதே? உறவாடக் கூட முடியாதே? ஈர்ப்பு விசை இல்லை. அதனால் அவர்களுக்கு எடை இல்லை.
அதனால் அவர்கள், ஈருடல் ஓருயிராய் உறவாட முடியாதே. பாவம் மகாவிஷ்ணு! பரிதாபம் மகாலெட்சுமி!!
என்ன அறிவு எத்துணை அறிவு?
போன நூற்றாண்டில்தான் விஞ்ஞானிகள் மில்கி வே என்று பெயர் வைத்தார்களாம்!
ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் பாற்கடல் என்று பெயர் வைத்துவிட்டார்களாம்! புல்லரித்துப் போகிறார் மதன்!
எந்த இந்தியர் பால்வெளியைக் கண்டறிந்தனர்? யார் அவர்கள்? அவர்கள் பெயர் என்ன? கூறுவாரா மதன்?
19-_20ஆம் நூற்றாண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைப் படித்துவிட்டு மதன் இப்படிப் பொருந்தப் புளுகுகிறாரே?
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறாரே?
ஏன்? ஏன்?- ஏன்?
ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தெரிந்த இந்த உண்மை ஆயிரம் ஆண்டுக் காலத்திலும், அதற்குப் பின்பும் வாழ்ந்த அடியார்கள், ஆழ்வார்கள், பாவலர்கள் _ பக்த கோடிகள் இவர்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று? ஏன் அறியாமல் போயிற்று?
மதனுக்கு மட்டும் யார் இந்த உண்மையினைச் சொன்னவர்? கதை அளப்பதற்கும் ஓர் உச்சவரம்பு வேண்டாமா?
அறிவியல் பூச்சுப் பூசும் அபத்தம்
ஆனந்தவிகடன் வாசகர் கேட்ட அய்ய வினாவிற்கு ஒழுங்கான _ நேர்மையான _ சரியான பதிலை மத, புராண ரீதியாக அளிக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு, இன்றைய, வான்_அறிவியல் உண்மைகளோடு பொருத்தி, மத மடமைக்கு, மூடக்கருத்துக்கு, புராணப் புளுகுக்கு, அறிவியல் முலாம் பூசும் அபத்தமான ஏமாற்றும் வேலையை கைவிட்டு, நேர்மையான _ அறிவு நாணயமான பதிலைக் கூற மதன் அவர்கள் முனைய வேண்டும்!
முனைவாரா மதன்?