– ஆர்.டி.மூர்த்தி, திருச்சி
பார்ப்பனர்கள் தமிழர்களை ஏமாற்ற அவர்களால் அன்றாடம் சொல்லப்படும் அத்தனை வார்த்தைகளையும் பட்டினத்தார் தன் ஒரே பாட்டில் உபயோகித்து அவையாவும் வஞ்சம் என்றும் தமிழர்களை ஏமாற்ற அவர்களால் சொல்லப்படுகிறது என்றும் திட்டவட்டமாகக் கூறுகிறார். பாடல் பொது என்ற தலைப்பில் 44ஆவது பாடல்.
நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகமநீதி நெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்த்ர யோகநிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறுபூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூஜைகள் சர்ப்பனையே
சர்ப்பனை என்கிற கடைசி வார்த்தைக்கு வித்வான் நா.தேவநாதன், அரு. ராமநாதன் ஆகியோர் வெளியிட்ட சித்தர் பாடல்கள் என்ற நுலில் வஞ்சகம் என்று பொருள் கூறி உள்ளனர். (பிரேமா பிரசுரம் 13ஆம் பதிப்பு ஆகஸ்ட் 2005 பக்கம் 763)
இப்பாடலில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் பார்ப்பனர்கள் தவறாமல் நித்தம் நித்தம் தமிழர்களிடம் பேசும்பொழுது உபயோகிக்கும் வார்த்தைகள், இவ்வார்த்தைகள் அனைத்தும் தமிழர்களை ஏமாற்றிப் பிழைப்பதற்காக பார்ப்பனர்களால் வஞ்சமாக உபயோகிக்கப்படும் வார்த்தைகள் என்று பட்டினத்தாரே சொல்லிவிட்டார்.
இதே கருத்தை பாம்பாட்டிச் சித்தர் வேறு விதமாகக் கூறுகிறார். பாடல் 98
சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரம் பல
தந்திரம் புராணங்களை சாற்றும் ஆகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடு பாம்பே!
அதாவது பார்ப்பனர்கள், தமிழர்களிடம் புனிதமானது என்று கூறிவரும் வேதம், சாத்திரம், புராணங்கள், ஆகமங்கள் மற்றும் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படும் பழக்க வழக்கங்கள் அனைத்தும் வீணானவையே என்பது பாம்பாட்டி சித்தரின் கருத்து. புதுப்புது பெயர்களால் பூஜைகளை அறிமுகப்படுத்தி காசு பிடுங்கும் பார்ப்பனத் தந்திரத்தை ஆன்மீகவாதிகளாலேயே போற்றப்படும் பட்டினத்தாரும், பாம்பாட்டிச் சித்தரும் தோலுரிக்கின்றனர். பக்தியின் பெயரால் பார்ப்பனரைக் கொழுக்க வைக்கும் ஆன்மீகத் தமிழர்களே… இன்னுமா பணத்தையும் அறிவையும் இழக்கப் போகிறீர்கள்?