கேள்வி : திருமண சந்தையிலே தன்னை விற்றுக் கொள்ளும் மணமகனுக்கும், தேர்தல் திருவிழாவிலே தன்னை விற்றுக்கொள்ளும் வாக்காளனுக்கும் என்ன வேறுபாடு? f- சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில் : அந்த மணமகன் – வாழ்நாள் முழுவதும் அறிவை அடகு வைத்தவர். அந்த வாக்காளர் _5 ஆண்டுகளுக்கு தன் புத்தியை அடகுவைத்து, வாடகைக்கு விட்டவர் (விற்றவர்).
கேள்வி : உலகில் பல்வேறு நாடுகள் காலத்திற்கேற்ப தங்களுடைய அரசியலமைப்புச் சட்டத்தினை மாற்றிக் கொள்ளும்போது, இந்தியா மட்டும் இன்னமும் இந்துத்துவா அடிப்படையிலேயே இயங்கக் காரணம் என்ன? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : அய்ந்தாயிரம் ஆண்டுகால அடிமைத்தனமும் ஊடுருவி நிலைத்த பார்ப்பனீயத்தை வெளியேற்றுவது அவ்வளவு எளிதான பணியல்லவே!
கேள்வி : பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்யும் எளியவர்கள் வறுமையில் வாடும்போது, ஓராண்டிலேயே 1,000 கோடி சொத்து சேர்க்கும் சாமியார்களைக் கண்டு கொள்ளாத அரசாக நம் அரசுகள் இருக்கின்றனவே? இயற்கைதாசன், கொட்டாகுளம்
பதில் : சாமியார்கள் காலில் விழும் ஆட்சிகளும், ஜோசியர்களை நம்பி மதிமோசம் போகும் ஆட்சிகளும் உள்ளவரை இந்நிலைதானே நீடிக்கும். மக்கள் சிந்தித்தால் மாற்றம் வரும்!
கேள்வி : ஒருவர் இறந்தபின்பு அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து விட்டு அவரை வணங்குவது ஏற்புடையதா? – பி.தியாகராசன், சோமரசன்பேட்டை
பதில் : மலர்வைப்பது இறுதி மரியாதை செலுத்தும் உணர்வைக் காட்டவே. வணங்கவேண்டிய அவசியம் இல்லை! இது நம் நாட்டில்தான் – மேலை நாடுகளில் மலர்வளையம் அவ்வளவே.
கேள்வி : அன்று தீவிரமாக திராவிட இயக்க ஒழிப்பு மாநாடு நடத்திய ம.பொ.சி. போன்றவர்களுக்கு இன்று திராவிட மாயை பேசித் திரிவோருக்கும் என்ன வேறுபாடு? – ராஜாராமன், சேலம்
பதில் : பார்ப்பனீயத்தின் புதுப்பிறப்பு – அவ்வளவே! விபீஷணர்கள் நிரந்தரம் என்பதால் சிரஞ்சீவி என்று இராமாயணத்திலேயே கூறப்பட்டது!
கேள்வி : மதுரை இளைய ஆதினமாக ரஞ்சிதா புகழ் நித்யானந்தா தேர்வு செய்யப்பட்டிருப்பது எதனைக் காட்டுகிறது? – சங்கத்தமிழன், செங்கை
பதில் : மதுரை ஆதினம் ஏற்கெனவே ஒருமுறை இந்த இடத்தில் இடறினார். இப்போது மயங்கியே விழுந்துள்ளார். நமது அனுதாபங்கள்!
கேள்வி : சில அரசியல் தலைவர்கள் சில நேரங்களில் தடம் புரள்வதுபற்றி…? – சு.சித்தன், ஊத்தங்கரை
பதில் : தடம் புரண்டால்தான் அவர்களால் அரசியல் நடத்த முடியும்!
கேள்வி : மீண்டும் தொடங்கப்பட்டுள்ள டெசோ அமைப்பால் தமிழீழத்தை அடைய முடியுமா? – கு.உப்பிலியப்பன், சிதம்பரம்
பதில் : முன்பைவிட இப்போதுதான் அதற்குரிய குரல் ஓங்கியாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்!
கேள்வி : மாவோயிஸ்டுகளின் போராட்டம் நியாயமானதா? – துரை.மணிகண்டன், வேட்டவலம்
எனது அறிக்கை (3-5-2012) விடுதலையில் படித்துப் பாருங்கள். (இந்த உண்மையிலும் அது வெளிவந்துள்ளது) காஞ்சி சங்கரராமன் கொலைவழக்கு என்னவாகும்? – எஸ்.உமாசங்கர், சுந்தரபெருமாள்கோயில்
பதில் : நியாயம் நடந்தால் குற்றவாளிகளையும், பிறழ் சாட்சி கூறி விலைபோனவர்களையும் ஜெயிலுக்கு அனுப்பும்!