– மஞ்சை வசந்தன்
தமிழ்நாடு பெரியார் மண்’’ என்று நாம் நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறோம். ஆனால், அத்தகு பெரியார் மண்ணில் நிகழ்கின்ற மூடச்செயல்கள் நம்மை அதிர்ச்சி கொள்ளச் செய்கின்றன.
தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கங்களும் நூறாண்டு காலம் உழைத்தும் மக்கள் இன்னும் மூடநம்பிக்கையில் அறிவிழந்து பலியாவது வேதனை தரும் நிகழ்வுகளாகத் தொடர்கின்றன. இந்தியா அளவிலும் இந்நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன.
எனவே, மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் இதில் தனிக் கவனம் செலுத்தி, தடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்த கீழ்க்கண்ட சில நிகழ்வுகளை எடுத்துக்காட்டியுள்ளோம்.
ஆன்மாக்களுடன் பேசுவதாக ரூ.2 கோடி பறித்த கேரள மந்திரவாதி
ஆன்மாக்களுடன் பேச வைப்பதாகக் கூறி அய்.டி ஊழியரிடம் நூதனமுறையில் ரூ.2 கோடி பறித்ததாக கேரள மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புரசைவாக்கம், ஆண்டர்சன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் சிவசாமி(51). அய்.டி. நிறுவன ஊழியரான இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது:
‘‘2005-ஆம் ஆண்டு நைஜீரியா நாட்டில் உள்ள அய்.டி நிறுவனம் ஒன்றில் பணி செய்தேன். என்னுடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணி (52) என்பவரும் பணி செய்தார்.
அவர், இறந்துபோன என் தாய், அவரது கனவில் வந்து, பணம் வாங்கிக் கொள்ளச் சொன்னதாகக் கூறி என்னிடமிருந்து 2015ஆ-ம் ஆண்டு முதல் 2018 வரையிலான காலத்தில் வங்கி பரிவர்த்தனை மற்றும் ரொக்கமாக என ரூ.2 கோடிக்கு மேல் பணத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதற்கிடையே, அவரது மோசடி வேலைகள் எனக்குத் தெரியவந்து, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டேன். ஆனால், பணத்தைத் திருப்பித்தர மறுத்ததோடு, என்னை மிரட்டவும் செய்தார். எனவே, அவர் மீதுநடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்.’’ இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, துணை ஆணையர் மீனா,உதவி ஆணையர் ஜான் விக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கேரளாவில் தலைமறைவாக இருந்த சுப்ரமணியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை அழைத்து வந்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இரவு நேர பூஜை செய்து பல பெண்களின் வாழ்க்கையைச் சிதைத்த மந்திரவாதி!
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம், மருதூர் வடக்கைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் ’வலம்புரி முத்தாரம்மன் காலசக்கரம்’ என்ற யூடியூப் சேனல் மூலமாக, மந்திர மாயக் கட்டுக் கதைகளை விளம்பரம் மூலம் அள்ளிவிட்டிருக்கிறார். வசிய மை செய்வது தொடங்கி, அனைத்து குடும்பப் பிரச்சனைகளையும் மந்திரத்தால் உடனடியாகத் தீர்ப்பதாக விளம்பரங்களின் மூலம் அவர் தூண்டில் போட, பலரும் அதில் சிக்கி இருக்கிறார்கள். அப்படி தன்னிடம் சிக்கியவர்களிடம் தன் மன்மத வித்தைகளையும் அரங்கேற்றியிருக்கிறார் சந்திரகுமார்.
சேனல் வழியாகத் தொடர்புகொள்ளும் பெண்களிடம் அவர்களின் போட்டோவை அனுப்பச் சொல்வார். அந்தப் பெண்கள் அழகாக இருந்தால் நேரில் சந்தித்தால்தான் முழுப் பிரச்சனையையும் தீர்க்க முடியும் என அவர்களின் வீட்டிற்கே சென்று அவர்களிடம் தந்திரமாகப் பேசி தவறான முறையிலும் நடக்க முயல்வார்.
அவரை நம்பிவிட்டார்கள் என்றால் நள்ளிரவில் நிர்வாண பூசை செய்யணும் என்று படிய வைப்பார். அப்படி பூசை நடக்கும்போது தீர்த்தமாக முதலில் மதுபானத்தைக் கொடுத்து குடிக்க வைப்பார். தானும் குடிப்பார். பிறகு, பெண்களை நிர்வாணமாக இருக்க வைத்து… பூக்களை மேலே தூவி… பூஜை என்ற பெயரில், தான் நினைத்ததைச் சாதித்துக் கொள்வார். அவரது இந்த மன்மத வலையில் சிக்கியவர்களிடம் இருந்து நகைகளையும், பணத்தையும் பறிக்க ஆரம்பித்துவிடுவார். இவரிடம் சிக்கிய பெண்களில் பலர், அவமானத்துக்குப் பயந்து வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்’’ என்று அதிர வைத்தார்.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சுதா என்பவர் கணவனை இழந்தவர். ஒரு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை பார்க்கும் அவர், “தன்னிடம் பஞ்சாயத்துத் தலைவர் எப்போது பார்த்தாலும் கோபமாகவே பேசுகிறார். அதனால் அவரை வசியம் செய்து கோபமின்றிப் பேச வைக்க வேண்டும் என்று இந்த சந்திர குமாரைத் தொடர்புகொண்டிருக்கிறார். சுதாவிடம் அதிக வசதி இருப்பதை அறிந்த சந்திரகுமார். அவரிடம் பேசிப் பேசியே தனக்கு அபரிமிதமான சக்தி இருப்பதாக நம்ப வைத்து ஏமாற்றி அவரிடமிருந்த அனைத்தையும் கறந்துவிட்டாராம்.
அதேபோல கோயம்புத்தூரைச் சேர்ந்த அன்புச்செல்வி என்பவர் குடும்பப் பிரச்சனைக்காக சந்திரகுமாரிடம் வந்துள்ளார். அப்போது மாந்திரீகம் என்ற பெயரில் ஏதேதோ சொல்லி, பணத்தைப் பறித்துள்ளார். பாதியிலேயே சுதாரித்துக்கொண்ட அவர், அந்த போலி மந்திரவாதியிடம் இருந்து தப்பிவிட்டார். அடுத்து, கலப்புத் திருமணம் செய்த தென்காசி மாரியம்மாள் என்பவர் இவரிடம் வந்திருக்கிறார். அவர் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இந்த நிலையில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கான கோட்டாவில் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை காட்டி அவரிடம் இருந்தும் ரூபாய் 6 லட்சம் வரை பணத்தை வாங்கி ஏப்பம் விட்டிருக்கிறார் சந்திரகுமார்.
இதுபோல் நாகப்பட்டினம், திருச்சி, சேலம், மதுரை என அனைத்து இடங்களிலும் அவர் மோசடி செய்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மாந்திரீகத்தின் பெயரால் நகை, பணம் ஆகியவற்றோடு பெண்களையும் வேட்டையாடிய போலி மந்திரவாதி சந்திரகுமாரை காவல்துறை விரைந்து மடக்கவேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக இருக்கிறது.
கொச்சி ஓட்டலில் மனித மாமிச விருந்துநரபலி சாமியார் ஏற்பாடு
கொச்சி ஓட்டலில் மனித மாமிச விருந்துக்கு நரபலி சாமியார் ஏற்பாடு செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
கேரள இரட்டை நரபலி வழக்கில் கைதான சாமியார் முகமம்து ஷபி, மசாஜ் தெரபிஸ்ட் பகவல்சிங் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் சடலங்கள் துண்டு துண்டாகக் கூறுபோடப்பட்டு இருப்பதால் கொல்லப்பட்டவர்கள் அவர்கள்தான் என்பதை உறுதி செய்வதற்கான தடயங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த வழக்கில் சைபர் ஆதாரங்கள் முக்கியமாக இருப்பதாக கொச்சி மாநகர காவல் ஆணையர் நாகராஜ் தெரிவித்து உள்ளார். நரபலி கொடுக்கப்பட்ட ரோஸ்லியின் கைப்பை மற்றும் செல்போன் சிக்கி இருப்பதாகவும், அவற்றை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டி இருப்பதாகவும் காவல் ஆணையர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், நரபலிச் சாமியார் ஷபியின் நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் மர்மமாக இருப்பது காவல் துறை விசாரணையில் தெரியவந்து உள்ளது. இரண்டு பெண்களையும் பண ஆசை காட்டிஅழைத்து வந்து நரபலி கொடுத்துவிட்டு அவர்களின் தங்க நகைகளைக் கழற்றிச் சென்று அடமானம் வைத்து, பணம் பெற்று உள்ளார். அந்த வகையில் பத்மாவின் 39 கிராம் தங்க நகைகயை அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாயை பெற்ற ஷபி, அதில் 40 ஆயிரம் ரூபாயை அவரது மனைவிக்கு வழங்கி இருப்பதை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கண்டுபிடித்து உள்ளனர்.மேலும் ஷபி நடத்திய ஓட்டலிலும் அவர்கள் சோதனை நடத்தி உள்ளனர். இந்த ஓட்டலில் மனித மாமிசத்தைச் சமைத்து விற்கும் திட்டம் குறித்து தங்களிடம் தெரிவித்ததாக பகவல்சிங் அவரது மனைவி லைலா ஆகியோர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர்.
நரபலி கொடுக்கப்பட்ட வீட்டில் பிரிட்ஜில் 10 கிலோ மனித மாமிசத்தைப் பாதுகாத்து வைத்தாகவும், அவற்றை குக்கரில் வேகவைத்துச் சாப்பிட்டதாகவும் கைதானவர்கள் ஏற்கனவே வாக்குமூலம் அளித்து இருந்தனர். அதன் அடிப்படையில் குக்கர் போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், பத்தனம் திட்ட மாவட்டத்தில் சிறுவர்களை மந்திரவாதம் செய்யப் பயன்படுத்திய பெண் சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பத்தனம் திட்ட மாவட்டத்தில் 2 பெண்களை நரபலி நடத்திய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அம்மாநில அரசு இதுபோல மூடநம்பிக்கைகளை மேற்கொள்ள வற்புறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பத்தனம் திட்ட மாவட்டத்தில் மலையாலப்புழா என்ற இடத்தில் சிறுவர்களை மந்திரவாதம் செய்யப் பயன்படுத்திய பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் தேவகியைக் கைது செய்தனர். நரபலியின் நடுக்கம் மாறும் முன்னே மேலும் அதே மாவட்டத்தில் மூட நம்பிக்கைச் செயல்கள் அரங்கேறி உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணம் இரட்டிப்பாக்கித் தருவதாக மோசடி: போலி சாமியார் உட்பட இருவர் கைது?
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் அடுத்துள்ள வெண்டுகாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சூரி என்கிற சுவாமி (32). இவர் தனது 20 வயதில் வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு மடங்களில் தங்கியுள்ளார். பின்னர் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் மோசடியில் ஈடுபடத் தொடங்கினார்.
பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் சிலரின் வீட்டுக்குச் சென்று லட்சுமி பூஜை எனும் பெயரில் சூரி, பூஜைகள் செய்வார். அப்போது அவர்களிடம் பணத்தை வாங்கி பூஜையில் வைத்து வழிபடுவார். பக்தர்கள் ஏமாறும்போது தன்னிடம் உள்ள பணத்தை அந்த பூஜையில் வைத்து பணம் அதிகமாகி உள்ளதாக நம்ப வைப்பார்.
இதனால் பணக்காரர்கள் பலரும் இவரை தங்கள் வீட்டுக்கு பூஜை செய்ய வரும்படி அழைத்தனர். இந்நிலையில் பூஜைக்குப் பிறகு ஊமத்தம்பூ மற்றும் தூக்க மாத்திரைகளைக் கலந்து தயாராக வைத்திருக்கும் மயக்கப் பொடியை பிரசாதத்தில் கலந்து கொடுப்பார் இந்தப் போலிச் சாமியார். வீட்டில் உள்ள அனைவரும் மயங்கி விழுந்த பின், பூஜையில் வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்வது இவரது வழக்கமானது.
திருப்பதி ஆட்டோ நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் யாதவ் என்பவரது வீட்டில் பூஜைகள் செய்து சுமார் ரூ. 63 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார் சூரி. இது குறித்து திருப்பதி அலிபிரி காவல் நிலைய போலீசார் சூரியைத் தேடி வந்தனர். இந்நிலையில் சந்திரகிரி அருகே சூரியைக் கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 16 லட்சத்து 84 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கார், 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் திருப்பதியைச் சேர்ந்த தாமு என்பரையும் இந்த வழக்கில் கைது செய்தனர்.
கடந்த 2007 முதல் பொதுமக்களிடம் இதுவரை ரூ. 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக சூரி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பெங்களூரு, அய்தராபாத் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த பலரிடமும் இவர் மோசடி செய்துள்ளார்.
குழந்தை வரம் தருவதாக மோசடி பெண் சாமியார்
திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ராஜபாளையம் தென்றல் நகர் ஓட்டமடம் முனியாண்டி கோயில் சென்றுள்ளனர். அங்கு கோயில்பட்டியைச் சேர்ந்த பெண் சாமியார் சுகுமாரியிடம், 60, குறைகளை முறையிட்டுள்ளனர். காணிக்கையாக நகை, பணம் இதைக் கேட்ட சுகுமாரி சிறப்பு வழிபாடு செய்து தீர்த்தம் தருவதாகவும், அதை அருந்தினால் குழந்தைப் பேறு உண்டாகும் எனக் கூறி உள்ளார். தீர்த்தத்தை வாங்கிக் குடித்ததும் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு, தான் கர்ப்பம் அடைந்துள்ளதாக சத்தியபாமா கருதினார். இதை பெண் சாமியாரிடம் தெரிவித்த போது, குழந்தை பாக்கியம் ஏற்பட்டுள்ளதாகவும், இதை ஸ்கேனில் பார்க்கக்கூடாது’’ எனத் ,தெரிவித்துள்ளார்.. அடுத்த கட்ட பூஜைக்கு சுவாமி காணிக்கையாக 1 பவுன் தங்கம் மற்றும் 30 ஆயிரம் பணத்தைக் கேட்க,கணவருடன் சேர்ந்து கொடுத்துள்ளார்.
கொலைமிரட்டல்
மாதங்கள் கடக்க, ஸ்கேன் செய்து பார்த்தபோது குழந்தை உருவாகவில்லை.இதை பெண் சாமியார் சுகுமாரியிடம் கேட்டபோது, பேரன் ஆறுமுகத்துடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து ராஜபாளையம் வடக்கு இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்.அய். முத்துக்குமார் ஆகியோர் சென்று இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள், மேலும் பலரிடம் ஆசை வார்த்தை கூறி, நகை, பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
சிவன் அனுப்பினார், ரூ.45,000 கொடு.. நூதன மோசடியில் கொள்ளை…
கடலூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், சிவனடியார்கள் என்று கூறி ரூ.45 ஆயிரம் பறிக்க முயன்ற, போலிச் சாமியார் உபட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடலூரில் வசிக்கும் 30 வயதான பெண் ஜோதிமணி தனது வீட்டில் தனியாக இருந்த போது, காரில் வந்த 5 பேர், தாங்கள் சிவனடியார்கள் என்றும், திருவண்ணாமலையில் இருந்து வருவதாகவும் அவரிடம் கூறி உள்ளனர். அதில், சாமியார் வேடம் அணிந்திருந்தவர், உங்கள் வீட்டிற்கு அருள் கொடுக்க சிவன் தங்களை நேரடியாக அனுப்பியதாகவும், அதற்குக் கைம்மாறாக திருவண்ணாமலையில் உள்ள சிவன் கோயிலில் அன்னதானம் போட 45,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தவறினால் சாமிக் குற்றம் ஆகிவிடும் அருள் கிடைக்காது எனக் கூறி பயமுறுத்தி உள்ளார்.
இதனால், கையில் இருந்த 3000 ரூபாயை மட்டும் ஜோதிமணி கொடுத்துள்ளார். அதைப் பெற்றுக்கொண்ட நபர்கள், மீதிப் பணத்தை சிறிது நேரம் கழித்து வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். அதையடுத்து, சிறிது நேரத்தில் ஜோதிமணியின் 8 வயது மகன் மகேஷ்வரன் வீட்டுக்கு வந்தவுடன், தமது குடும்பத்தைப் பற்றி 5 பேர் விசாரித்ததாக தாயிடம் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த ஜோதிமணி, சாமியார்கள் குறித்து வடலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலிச் சாமியார் சேகர் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.2 லட்சம் மோசடி; சாமியார்கள் நால்வர் கைது
“வீட்டில் மந்திரம் செய்து வைத்துள்ளனர். அதை எடுக்காமல் விட்டு விட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து,’’ என்று கூறி தென்காசியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவரிடம் ரூ.2 லட்சத்தை மோசடி செய்த புகாரின் தொடர்பில், போலிச் சாமியாரின் கூட்டாளிகள் நால்வர் பெரம்பூரில் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான போலிச் சாமியாரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
பண மோசடியில் 5 சாமியார்கள் கைது
வடலூரில் போலிச் சாமியார் உள்பட அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆபத்தானபுரம் முத்துக்கனி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது வீட்டின் கதவை சாமியார் உள்ளிட்ட அய்ந்து பேர் கொண்ட கும்பல் தட்டி அவரை அழைத்து அவர்கள் திருவண்ணாமலையில் இருந்து வந்திருப்பதாகவும் சிவபெருமான் அவரைப் பார்க்கச் சொன்னதாகவும் கூறி அவர்களை அறிமுகம் செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் ஜோதிமணிக்கு தோஷம் இருப்பதாகவும் அதனை நீக்க ஒரு நாள் முழுவதும் அன்னதானம் செய்ய வேண்டும் எனவும் அதற்கு 45 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க ஜோதிமணிக்கு உள்ள பிரச்சனை மற்றும் குடும்ப நபர்கள் குறித்து தெளிவாக அவர்கள் கூறியுள்ளனர்.
அதனை நம்பி ஜோதி மணியும் அவர்களிடம் 3000 ரூபாய் கொடுத்துள்ளார். இருப்பினும் ஜோதிமணிக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே, இது குறித்து வடலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் வடலூர் போலீசார் பண்ருட்டி ரோட்டில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த சேகர், ரகுநாத், திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த முருகன், ஜெகதீசன், போளூரைச் சேர்ந்த சந்திரசேகரன் உள்ளிட்ட அய்ந்து பேரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சாமியார் போல் நடித்து ஜோதிமணியிடம் பணம் பறித்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சேகர் மீது இது போன்ற பல வழக்குகள் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் இருப்பிடம் தகவல் அம்பலமானது.
இதனை அடுத்து போலீசார் அந்தக் கும்பலை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய ஸ்கார்பியோ வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையிடம் மந்திரவாதி கக்கிய உண்மை
ஜோதிடம், மந்திரம் சொல்வதாகக் கூறி பெண்களை மயக்கி காம இச்சைக்கு ஆட் படுத்திக் கொண்ட மந்திரவாதிபற்றி திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் கைதான மந்திரவாதியின் வலை யில் நடிகை உள்பட பெண்கள் மயங்கியது எப்படி? என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவை செல்வபுரம் எல்.அய்.சி. பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் வி.டி.ஈஸ்வரன் (வயது 49). இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஜோதிட, சித்த மருத்துவ, மாந்திரீக வல்லுநர் என்று கூறி ஜோதிடம் பார்த்து வந்தார்.
விசாரணையில் அவர் மந்திரவாதி என்று தெரியவந்தது. அவரது மாந்திரீக நிலையத்தில் இருந்து வசிய லேகியம், மாந்திரீக கற்கள், மை போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட் டன. அவற்றை பரிசோதனை செய்தபோது அந்தப் பொருள்களும் போலியானவை எனத் தெரியவந்தது. கைதான ஈஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய மாந்திரீக நிலையத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.
ஈஸ்வரன் தனது வாக்குமூலத்தில், “எனக்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் குழந்தையின்மைக்கு தீர்வு கேட்டும், பரிகாரம் செய்வதற்காகவும் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் செக்ஸ் ஆசையைத் தூண்டும் வகையில் பேச்சுக் கொடுப்பேன். அதற்கு இடம் கொடுக்கும் பெண்களை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து இருக்கிறேன். அந்தப் பெண்கள் எனக்கு கட்டணமாக ரூ.5 ஆயிரம் வரை பணம் கொடுத்து செல்வதுண்டு. என்னிடம் வந்த பெண்களில் ஒரு நடிகையும் உண்டு. நான் என்னிடம் வரும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையோடு நடந்து கொள்வேன்.’’ யாராவது எனது பேச்சுக்கு இடம் கொடுக்கா விட்டால் அவர்களிடம் எனது வேலையைக் காட்ட மாட்டேன். பல பெண்களிடம் பரிகார பூஜை செய்வதுபோல் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டு இருக்கிறேன்.
நான் செய்ததைப் பற்றி யாரிடமாவது சொன் னால் அவர்கள் ரத்தம் கக்கி இறந்துவிடுவார் கள் என்று கூறி மிரட்டி அனுப்பிவிடுவேன். அதனால் யாரும் என் னைப்பற்றி யாரிடமும் தெரிவிக்கமாட்டார்கள். ஆனால், தற்போது சிக் கிக்கொண்டேன்.’’ கூறியுள்ளார்.
உயிருடன் சொர்க்கம் செல்லும் அறியாமை
அறியாமையின் உச்சமாக இச்செயல் அடிக்கடி நிகழ்கிறது.
உயிருடன் இருக்கும் போதே சொர்க்கத்திற்குச் சென்றுவிடலாம் என்று நம்பி, குடும்ப உறுப்பினர்களும் இதில் நம்பிக்கையுள்ளவர்களும் அறையில் தங்கி, தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அதிர்வூட்டும் மூடச்செயல்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
அரசு சட்டம் இயற்ற வேண்டும்
அறிவியல் வளர்ச்சி உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பது வெட்கப்படவும், வேதனைப்படவும் உரியவையாகும்.
பகுத்தறிவு இயக்கங்கள் தங்கள் பரப்புரையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதோடு, அரசு இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல், தமிழ்நாடு அரசு சட்டம்’ இவற்றைத் தடுக்க வேண்டும்.
ஏற்கெனவே மகாராட்டிர அரசும், கர்நாடக அரசு சட்டம் இயற்றிவிட்டன. ஆனால், தமிழ்நாடுதான் முதலில் சட்டம் இயற்றியிருக்கவேண்டும். எனவே, இனிமேலும் காலம் தாழ்த்தாது சட்டம் இயற்ற வேண்டியதும் உடனடிக் கடமையாகும்.
கலைஞர் நூற்றாண்டில் இச்சட்டம் இயற்றுவது மிகவும் பொருத்தமானது.
மக்களைக் காக்கும் இச்சட்டத்தை இயற்றி திராவிட மாடல் அரசு பெருமை தேடிக்கொள்ள வேண்டும்.