– நேயன்
அரவிந்தன் நீலகண்டன் முன்வைக்கின்ற கருத்துக்கள் எதுவும் வரலாற்று ரீதியிலான உண்மைகளைக் கொண்டவையல்ல. தமிழரின் உறுப்பு வழிபாடு (சிவ வழிபாடு) ஆரியர்களின் ருத்திர வழிபாடாக மாற்றப்பட்டது.
தமிழர்களின் வேள்விமுறை ஆரியர்களின் யக்ஞமாக மாற்றப்பட்டது. வேள்வி என்பது தமிழர்களைப் பொருத்தவரை விருந்தோம்பல்.
வேள்வி என்பது வேள்+வி என்று பிரியும். வேட்டல் விரும்பல் என்பது அதன் பொருள். விருப்பத்தோடு பிறரை உண்பிப்பது தமிழர்களின் வேள்வி.
“தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்’’ என்ற தமிழ்ப்பாடலும்,
“இணைத்துணைத் தென்பதொன்றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்’’ (குறள்: 87)
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 81)
என்ற குறள்களும் வேள்வி என்பது விருந்தோம்பலைக் குறிப்பதை ஆழமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆக, தமிழர் வேள்வி என்பது விருந்து கொடுத்தல், விருந்து அளித்தல் என்பதேயாகும். தமிழரின் இந்தப் பண்பாட்டைப் பின்பற்றி, அதை மாற்றி ஆரியர்களின் வழிபடு தெய்வங்
களுக்கு விருந்து படைப்பதாய் மாற்றினர்.
தமிழர்கள் தன்னையொத்த மனிதர்களுக்கு விருந்து அளிப்பதை வேள்வி என்றனர். வீட்டிற்கு வந்தவர்களை அமரச் செய்து, அவர்கள் உண்ண உணவுகளை அளித்தனர்.
ஆனால், ஆரியர்கள் வருணன், இந்திரன், வாயு போன்ற தங்கள் தெய்வங்களுக்-கு உணவு படைப்பதை வேள்வி (யக்ஞம்) என்றனர். தமிழர்கள் உணவை மனிதர்கள் வயிராற உண்ண அளித்தனர். ஆனால், ஆரியர்கள், உணவை நெருப்பில் போட்டு, புகையாக்கி அதன் வழி கடவுளை அவ்வுணவுச் சென்று சேர்வதாய் யக்ஞம் செய்தனர்.
இதுதான் தமிழர் வேள்விக்கும் ஆரிய யக்ஞத்திற்கும் உள்ள வேறுபாடு. ஆரியர்களுக்-கென்ற சொந்தமானது எதுவும் இல்லை. எல்லாம் தமிழரிடம் திருடி, திரித்து மாற்றியவைதான். வேதங்களும் அப்படித்தான்.
வருணப்பிரிவுகள் கூட தமிழரிடம் இருந்த தொழில்சார் பகுப்பை திரித்தே வருணமாக்கினர்.
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்குப் பிரிவுகள் தொல் தமிழரிடையே இருந்தன. ஆனால் இவை ஜாதிப்பிரிவுகள் அல்ல. காரணம், இதில் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினருடன் மணஉறவு கொண்டனர். வேளாளர் பெண்களை அரசர்கள் மணந்துள்ளனர். அதேபோல் மற்ற பிரிவினரும் இன்னொரு பிரிவினருடன் மணவுறவு கொண்டனர்.
இங்கு அந்தணர் என்போர், மற்ற மூன்று பிரிவிலும் உள்ளவர்கள் பொதுத் தொண்டாற்ற வீட்டைவிட்டுப் புறப்பட்டு ஊர் ஊராய்ச் சென்று மக்கள் தொண்டு செய்தனர்.
இந்த அந்தணப்பிரிவைத்தான் ஆரியர்கள் பிராமணர் என்று மாற்றினர். மக்கள் தொண்டை மாற்றி கடவுள் தொண்டு பிராமணர்க்குரியது என்று ஆக்கினர்.
அரசப்பிரிவை ஷத்திரியர் என்றும், வணிகப் பிரிவை வைசியர் என்றும், வேளாளர்ப் பிரிவை சூத்திரப் பிரிவு என்றும் ஆக்கினர்: இதற்கு பிரம்மன் முகத்திலிருந்து பிராமணரும், தோளிலிருந்து ஷத்திரியரும், இடுப்பிலிருந்து வைசியரும், காலிலிருந்து சூத்திரரும் பிறந்ததாய் கதைப்புனைந்து மக்களை ஏமாற்றி ஏற்கச் செய்தனர். செய்யும் தொழிலால் வந்த பிரிவை பிறப்பால் – கடவுளால் வந்த வருணப்பிரிவாக மாற்றினர். அந்தணர் என்ற தமிழ்ச் சான்றோர், தமிழ்த்தொண்டர் பிரிவை பிராமணர் என்ற பிரிவாகத் திரித்தனர்.
தமிழர்களின் மழைத்திருநாளை, பொங்கல் திருநாளை, போகியென்றும் சங்கராந்தி என்றும் திரித்தனர். அரசமரத்தடி புத்தர் உருவத்தை யானைத் தலையைப் பொருத்தி வினாயகராக்கினர். புலால் உண்ணாமை என்ற சமண, புத்தக் கோட்பாடுகளை தமதாக்கிக்கொண்டனர். புத்தமும் சமணமும் உருவாக்கப்படுவதற்கு முன்புவரை பசுமாட்டை வெட்டி, நெய் சொட்டச் சொட்ட சாப்பிட்ட ஆரியர்கள், புத்தம் செல்வாக்குப் பெறுவதைத் தடுக்க, புலால் உண்ணாமையைத் தங்கள் கொள்கையாக்கிக் கொண்டனர்.
இப்படி மற்றவர்களுடையதை மாற்றியும், திரித்தும் தங்களுடையதாக்கிக்கொண்ட ஆரியர்கள், தமிழர் வேதங்களை மறைத்து, ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற வேதங்களை காலப்போக்கில் உருவாக்கிக்கொண்டனர். அப்படி உருவாக்கப்பட்ட எதுவும் முதலில் எழுத்து வடிவில் இல்லை. எல்லாம் செவி வழியாக வந்தவையே.
ஆரிய வேதங்களை முழுமையும் படித்துப் பார்த்தால், இந்திரன், வருணன், வாயு போன்றவற்றிற்கு நெருப்பில் பொருள்களைப் போட்டு எரித்து, படையல் இட்டு, தங்களுக்கு நல்லதும், தங்கள் எதிரிகளுக்கு கெட்டதும் செய்ய வேண்டுவதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற உண்மைத் தெரியும்.
இப்படிப்பட்ட ஒன்றுக்கும் உதவாத வேதங்களைத்தான் உயர்ந்தவையென்றும், தமிழர் வாழ்விற்கே ஆதாரம் என்றும், தமிழ் இலக்கியங்களோடே அவையும் சேர்ந்தே இருந்தன என்றும் இந்த அண்டப்புளுகர் அரவிந்தன் நீலகண்டன் கூறுகிறார்.
கா.சு. பிள்ளையின் கருத்து தப்பு என்றும், அதை மறுத்து நூல்கள் வந்துள்ளன என்றும் கூறும் இந்த ஆள், அகழ்வாராய்ச்சி, மரபணு ஆராய்ச்சிகள் இனக் கோட்பாட்டை ஆரிய படையெடுப்பு என்பதை நிராகரிக்கின்றது என்று ஓர் அயோக்கியத்தனமான, உண்மைக்கு எதிரான கருத்தையும் கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி எழுதியுள்ளார்.
அகழ்வாராய்ச்சிகளும், அண்மையில் நடந்த மரபணு ஆராய்ச்சிகளும், தெற்காசியப் பகுதி முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்றும்; ஆரியர்கள் வந்தேறிகள் என்றும் உறுதி செய்துள்ளன. ஆனால், இந்த உண்மைகளை மறைத்து ஆரிய வேதமும், தமிழர் வாழ்வும் பின்னிப்பிணைந்தவை என்கிறார். இதற்கு தமிழ் இலக்கியங்களைக் காட்டுகிறார்.
தமிழ் இலக்கியங்கள், குறிப்பாக சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் எல்லாம் காலத்தால் மிகவும் பிற்பட்டவை. ஆரியர் பெருமளவில் ஊடுருவி, தமிழர் வாழ்வில், பழக்கவழக்கங்களில் தங்கள் கலாச்சாரத்தைக் கலந்து, மூட நம்பிக்கைகளைத் திணித்து, புராண நம்பிக்கைகளை மூளையில் ஏற்றியபின் எழுதப்பட்டவை. அதனால் ஆரிய வேதங்களின் தாக்கமும், ஆரிய புராணங்களின் தாக்கமும் தமிழர் இலக்கியங்களில், தமிழர் நம்பிக்கையில் கலந்துவிட்டன என்பதே உண்மை.
ஆனால், தொல்காப்பியத்திற்கு முற்பட்ட காலத்தில் தமிழர் வாழ்வில் எந்த மூடநம்பிக்கையும், புராண, கடவுள் நம்பிக்கையும், வழிபாடுகளும் அறவே இல்லை. இவை அனைத்தும் ஆரியரால் தமிழ்மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டவை.
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களை சூத்திரர்கள் படிக்கக்கூடாது. என்றும், அப்படி மீறி படித்தால் நாக்கைத் துண்டிக்கவேண்டும் என்று கடுமையான நடைமுறை இருந்த நிலையில் இந்த வேதங்கள் எப்படித் தமிழர் வாழ்வோடு பின்னிப் பிணைய முடியும்? சமய அறிஞர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பலரும் சூத்திரர்கள். அவர்கள் வேதம் கற்க முடியாது. அப்படியிருக்க, மேற்கண்ட ஆரிய வேதங்களை அவர்கள் எப்படித் தங்கள் பாடல்களில் குறிப்பிட்டிருக்க முடியும்? எனவே, தமிழ் அறிஞர்கள், சமயப்பெரியவர்கள் குறிப்பிடும் வேதம் ஆரிய வேதங்கள் அல்ல என்பது உறுதி!
வேதம் என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் ஆரிய மொழியில் இல்லை. தமிழில்தான் உள்ளது. வேது + அம். வேது என்றால் சாரம். வாழ்வியல் சாரங்களைப் பிழிந்து தருபவை வேதங்கள். அப்படிப் பார்ப்பின் திருக்குறள் தமிழர் வேதம். திருக்குறளுக்கு முன் நிறைய தமிழ் வேதங்கள் இருந்தன. இவை கடல் கோளாலும் அழிந்தன. ஆரியர்களும் அழிக்கப்பட்டன. தப்பியவைதான் தொல்காப்பியமும் திருக்குறளும்.
ஊர்ப்புறங்களில் வேது பிடித்தல் என்று கூறுவர். அதாவது, தண்ணீரில் மூலிகைகளைப் போட்டு, வெளிவரும் ஆவியை முகத்தில் பிடிப்பர். அதற்கு வேது பிடித்தல் என்று பெயர். மூலிகையின் சாரம் ஆவியாக வருவதால் அது வேது எனப்பட்டது.
ஆரியரின் நான்கு வேதங்களில் எந்த வாழ்வியல் சாரமும் இல்லை. அவை அனைத்தும் வாழ்வியல் சாரம் அல்ல; வெறுப்பின், வக்கிரங்களின் கோரம்! வேதம் என்ற சொல்லே தமிழிலிருந்து ஆரியர்களால் திருடப்பட்டது. வேதத்திற்கு வேர்ச்சொல் ஆரியத்தில் இல்லை. எனவே, ஆரியர்களுடைய நான்கையும் வேதம் என்பதே தப்பு. அவற்றிற்கு அவர்கள் வேறு பெயர் வைத்துக்கொள்ள வேண்டும். ஆரிய கலாச்சாரங்களைத் தமிழர் பண்பாட்டோடு அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் கலக்க முற்படுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; எதிர்க்கத்தக்கது.
(தொடரும்)