பார்த்திபனின் தொல்லை தாங்கமுடியவில்லை, துரோணாச்சாரி
யாரால். “கேவலம் ஒரு வேடன்! அவன் அறிந்திருக்கிறான். தாங்கள் எனக்காக மட்டும் என்று கற்றுக் கொடுத்த அபூர்வமான அஸ்திர வித்தையை, நம்பினேன் – மோசம் போனேன்’’ என்று கோபிக்கிறான். குரு, சீட சம்பந்தமே முறிந்துவிடக் கூடுமோ என்று சந்தேகிக்க வேண்டிய நிலைமை. “வா! போய் அந்த வேடனைக் கண்டு…’’ காலிலே வீழ்ந்து…’’ என்று கேலி பேசலானான் அர்ஜுனன். “ஏகலைவனிடம் இருக்கும் வித்தையைப் போக்கி விடுகிறேன், வா’’ என்று உறுதியுடன் கூறினார். இருவரும் சென்றனர்.
வேடன், நெடுந்தூரத்தில் இருந்தபடியே, துரோணரைக் கண்டுவிட்டான். அர்ஜுனன் பின் தங்கிவிட்டான். குரு மட்டும் வேகமாக முன்னால் சென்றார்_ ஏகலைவன் அவர் அடி தொழுதான்_ குரு மேலும் நடந்தார்_ அவன் பக்தியுடன் பின் தொடர்ந்தான். மவுனமாகச் சென்றார் துரோணர். ஏகலைவன், “குருதேவா! குருதேவா!” என்று அர்ச்சித்தபடி நடந்தான். அர்ஜுனன் கண்களுக்கு இரண்டு நிழல் உருவங்களே தெரிந்தன_ அவ்வளவு தொலைவு சென்றனர் இருவரும்.
மீண்டும் ஒருமுறை ஏகலைவன், துரோணரின் பாதத்தில் வீழ்ந்து எழுந்தான். மோன நிலையிலிருந்து மீண்டவர்போல, துரோணாச்சாரியார், அவனை ஏறிட்டுப் பார்த்தார். இருவருக்குள் உரையாடல் நடந்தது.
“குருதேவா! அடியேன் ஏகலைவன், நமஸ்கரிக்கிறேன்.’’
“எழுந்திரு அப்பா! என்னிடம் நீ, பாடம் கேட்டதில்லையே.’’
“அந்தப் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை. ஸ்வாமி! ஆனால், என் இருதயத்திலே தங்களையே குருதேவராகப் பிரதிஷ்டை செய்துகொண்டு நான் இந்த வில்வித்தை கற்று வந்தேன்.’’
“அபூர்வமான தேர்ச்சியும் அடைந்தி
ருக்கிறாய். அர்ஜுனன்கூட… ஆமாம்… சந்தோஷப்படுவான்…’’
“தங்கள் கிருபாகடாட்சம்’’
“ஏது, சொல்வித்தையிலும் தேர்ச்சி பெற்றவனாக இருக்கிறாய், திறமை தெரிகிறது. இனி உன் குணம் எப்படி என்று பரிட்சித்துப் பார்க்க வேண்டும்.’’
“நான் கிருதார்த்தனாகிறேன் குருதேவா.’’
என்னப்பா இது குரு, குரு, என்று ஓயாமல் சொல்கிறாய். ஒருநாள் கூட நான் உனக்குச் சிட்சை சொல்லிக் கொடுத்ததும் இல்லை – ஒரு ‘சல்லி’ கூட நீயும் குரு காணிக்கை செலுத்தினதில்லை.’’
“குருதேவா! காணிக்கை தரச் சித்தமாக இருக்கிறேன். தங்கள் தரிசனம் கிடைக்கட்டும் என்றே காத்துக் கிடந்தேன். ஏகலைவன் உமது ஏவலன்! என்ன கட்டளை பிறப்பித்தாலும்…’’
“தரச் சித்தமோ! என்ன தைரியமாகப் பேசுகிறாயப்பா! என்னிடம் பாடம் கேட்க வரும் அரசகுமாரர்கள் வெகு பேர் இப்படிக் கூறுவதுண்டு. அரசராகும்போது… நான் நான்தான்_ அவர்கள் ராஜாதான்.’’
அரசகுமாரர்களில் சிலர், நான் கேட்டதைக் கொடுத்திருக்கிறார்கள். சக்தி இருந்தது; தந்தனர். நாடு ஆள்பவர்களுக்குச் செல்வம், சேவடியில் கிடக்கும்; நீ பாபம் காட்டிலே உலவி…’’
“ஆமாம்! காட்டிலே உள்ள ஒரு வேடன்தான், ஆனால், என் குருபக்தி நாடாள்பவருக்கு உள்ளதைவிட மேலானது. அதிலே எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் ஸ்வாமி.’’
ஏகலைவா! உன் பக்தியைக் கண்டு மெச்சினேன்.
சுகமாக இரு. நான் வருகிறேன். எனக்கு என்ன தேவை இருக்கிறது?–_ உன்னைக் கேட்டுப் பெற.
“பாபி, நான், ஒரு காணிக்கையும் செலுத்தாத பதிதனாவதா! அய்யனே! என்னை ஆட்கொள்ள வேண்டும். கேவலம் வேடனால் என்ன தரமுடியும் என்று எண்ண வேண்டாம். நான், வேடனாயினும், வில்லும் அம்பும் பிடித்த வீரன்_ சொல் தவற மாட்டேன்_ நினைத்ததை முடிக்கவும் தவறேன் _ எதைத் தாங்கள் விரும்பினாலும் பெற்றுத் தருவேன்.’’
“உண்மைதான்! உன் வில்வித்தையின் பயனாக…’’
“அப்படியா! பாபம்! பிரபஞ்சம் தெரியாமல் பேசுகிறாய். நீயே, ‘முடியாது’ என்று கூறும்படியான, காணிக்கையைக் கேட்க முடியும் என்னால்.’’
“முடியாது_ என்ற சொல்லை வில்லேந்திய நான் கூறேன்.’’
“என்ன சொன்னாய்? ஏகலைவா! அஸ்திர வித்தை என்று எண்ணிவிடாதே! சத்யசோதனை. மகா கடினமானது. இதிலே தோற்றவர்கள் தொகையே அதிகம். அனைவரும், சொன்ன சொல்லின்படி நடந்துவிட முடியாது. வீணாக, அவசரப்பட்டு, வாக்கை விரயமாக்காதே, நான் வருகிறேன்.’’
“ஸ்வாமி! எனக்கு வாதிடத் தெரியவில்லை. அது முறையுமாகாது. ஆனால், நான் தாங்கள் கேட்கும் காணிக்கை, எத்தகையதாக இருப்பினும். தருவேன்; தவறேன்.’’
“பிடிவாதமே பேசுகிறாய் பித்தா! முடியாது. நீயே மிரள மிரள விழிக்கும்படியாகக் காணிக்கை கேட்க முடியும் என்னால்_ கேட்பது கஷ்டமா _ கொடுப்பது அல்லவா கஷ்டம்.’’
“கேளுங்கள் குருதேவா, கொடுக்கத் தவறினால், என்னிலும் கடையேன்…’’
“ஓஹோ, அப்படி என்ன கேட்டுவிடப் போகிறார், பொற்கட்டி, நவரத்னம், பொன்னாடை… இப்படி ஏதாவது கேட்பார், என்று எண்ணுகிறாய்!’’
“நான், தாங்கள் என்ன கேட்பீர்கள் என்பது பற்றியே சிந்திக்கவில்லை ஸ்வாமி! என் சிந்தனை எல்லாம், ஏகலைவனிடம், குருதேவர் காணிக்கை கேட்டார்; பெற்றார் என்று இருக்க வேண்டும், என்பதுதான்.’’
“கடைசி முறையாக உன்னை எச்சரிக்கிறேன். ஜ்வாலையைக் கிளப்பாதே, நீ, தாங்கமாட்டாய்.’’
“நான் அஞ்சேன் – சத்தியத்தின் வழி நடக்க.’’
“கேட்கிறேன் குரு காணிக்கை, குறை மதியால் குளறிக் கொட்டியவனே, கேள்! மிரளு, புலம்பு, அரண்டு ஓடு! வெட்கத்தால், துக்கத்தால் தாக்கப்பட்டு, காலில் விழுந்து, மன்னிப்புக்கேள்! குரு காணிக்கை தர முடியாத தூர்த்தன் என்று பெயர் பெறு.’’
“இன்னம், காணிக்கை என்னவென்று குறிப்பிடவில்லையே குருதேவா’’
குறிப்பிடவில்லையா! குறிப்பிடுகிறேன். செவியிலே சர்ப்பம் பாயும், கவனி ஏகலைவா! குரு காணிக்கையாக உன் வலது கை கட்டை விரலை அறுத்துக் கொடு…’’
“குருதேவா…’’
“என்ன செய்வேன். அந்தோ, எப்படி அதனைத் தருவேன், ஈரேழுபதினாறு லோகத்தையும் கூடத் தருவேன். கட்டை விரலை எப்படித் தர முடியும் ஸ்வாமி_ ஏன் வேட வீரனே! ஆரம்பி புலம்பலை!’’
“ஸ்வாமி, இதோ அரை விநாடியிலே வந்து விடுகிறேன்…’’
‘எடுக்கிறாயா ஓட்டம்… பேஷ் மகாவீரா…’’
(ஓடுகிறான், சொன்ன வண்ணம் திரும்பி ஓடி வருகிறான்_ கையில் கமண்டலத்துடன்)
“இதென்ன கமண்டலம்.’’
“தங்கள் பாதத்தை அபிஷேகிக்க.’’
“ஏன் அபிஷேகம் செய்த பிறகு அழுகுரலைத் துவக்கவா…’’
(கமண்டலம் நீர் கொண்டு துரோணரின் பாதத்தை அபிஷேகிக்கிறான், ஒரு வினாடியில் கட்டைவிரலை, அறுத்தெடுத்து, காலடியில் வைக்கிறான்.)
“இதோ காணிக்கை! குருதேவா என் வலது கர கட்டை விரல்! ஸ்வாமி! இரத்தக் கறை பட்டுவிட்டது பாதத்தில், கமண்டல நீரால், தங்கள் பாதத்தைச் சுத்தம் செய்துவிடுகிறேன்.’’
“ஆ! குருதேவா! ஏன் நெடுநேரமாக நின்று கொண்டிருந்ததால் களைப்போ? மயக்கமோ!… அய்யோ! குருதேவா! மெள்ள மெள்ள, அப்படியே சாய்ந்து கொள்ளுங்கள் – புல்தரைதான்… அடடா! மயக்க மேலிட்டு விட்டதே’’
(கமண்டல நீர்கொண்டு ஏகலைவன், துரோணாச்சாரியின் முகத்தில் தெளித்து மயக்கத்தைத் தெளியவைக்கிறான்)
குரு பக்தியின் மேன்மையை, ஏகலைவன் விளக்கிவிட்டான்- சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன் என்பதை நிரூபித்துவிட்டான். அன்று முதல் இன்று வரை, ஏகலைவன், காட்டிய தியாக உணர்ச்சியை, பாராட்டிப் புகழாதார் இல்லை. அவனல்லவோ சீடன்? அதுவன்றோ குரு பக்தி! என்று வியந்து பேசுகிறார்கள். சரி, ஆனால், அந்த ரசிகர்கள்- போதகாசிரியர்கள் திவாதிகள் – அதே போது, அதாவது ஏகலைவனின் குருபக்தியைப் பாராட்டும்போது, துரோணாச்சாரியின் கடினசித்தம், கபட நோக்கம், கேவலமான போக்கு, அவரைத் தூண்டிய அர்ஜுனனின் அசூயைக் கணம், அவனுக்குக் கட்டுப்பட்டு, அவனைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற அவருடைய சபலபுத்தி, ஆகியவற்றைப் பற்றியும் கண்டிக்க வேண்டாமோ! சீடனின் சத்ய நெறியைப் பாராட்டியதுபோல, குரு கொண்ட கபட நோக்கத்தையும் கண்டிக்க வேண்டாமோ?
ஏகலைவன் கதை, சீடன் குருவிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்குச் சிலாக்கியமான பாடம் கற்பிப்பது, என்று மட்டுந்தானா! அன்று தொட்டு இன்று வரை, காட்ட உதவ வேண்டும். அந்த நாட்களில் அரசு குடும்பங்களுக்கு ஆசிரியர்களாக அமர்ந்தவர்களின் போக்குக்கு, ஓர் எடுத்துக்காட்டு இது, தங்களிடம் பாடம் கேட்பவர்களுள், யார் செல்வக்குடியினரோ, அவர்களுக்குத் திருப்தி ஏற்படும்படி நடந்துகொள்ளும் நயவஞ்சக குணம் கொண்டவர்கள், இந்தக் குருமார்கள் என்றும் இக்கதை காட்டவில்லையா!
எடுத்துக்காட்டினரா இந்தக் கருத்தை? காட்டுவாரா? காட்டிடும் நம்மையேனும், கயவன், கசடன், என்று கண்டிக்காமலிருப்பாரோ!
ஏகலைவன், கைக் கட்டைவிரலை இழந்தான்- ஒரு குற்றம் செய்யாமலே!
குருகாணிக்கையாக, அதனைக் கேட்டார் துரோணர்- அதுவும், ஏகலைவன் வில்வித்தையில் பெற்ற தேர்ச்சி, அர்ஜுனனுக்குப் பொறாமையை மூட்டிவிட்டது கண்டு, அர்ஜுனனைச் சந்தோஷப்படுத்த.
அரசகுமாரனின் மனம் களிப்படைய வேண்டும் என்பதற்காக அந்த ஆரிய குரு, வேடர்குல வீரனின் விரலை வெட்டித் தரச் செய்தார்.
இது ஏகலைவனின் குரு பக்தியை மட்டுமா- துரோணரின் கல்மனதைக் காட்டவில்லையா!
பன்னெடு நாட்கள் இப்பழங்கதை கொண்டு, குரு பக்தியின் மேன்மையைத்தான் பாடபோதகர்கள், விளக்கி வந்தனர்- இந்நாள் இத்தகு கதைகள், முன்னாளில் முனிவர் வேடமிட்டவர்கள், எவ்வளவு நேர்மையற்ற நெஞ்சிலிரக்கமற்ற காரியத்தையும் கூசாது செய்தனர் என்பதைக் காட்டவே, பயன்படுகின்றன.
இந்தப் புதிய பாடத்தை, மக்கள் பெறாமலிருக்க முடியாது – பெறும்போது, அவர்களுக்கு, மனதிலே, புயல் உண்டாகாமலிருக்காது! அந்தப் புயலைச் சுலபத்திலே அடக்கி விடவும் முடியாது.
ஏகலைவனைப் போல இன்று யாரும் இருக்கச் சம்மதிக்க மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, துரோணர் போலத் துணிந்து, காணிக்கை கேட்கமாட்டார்கள். அது மட்டுமல்ல, நாளாகவாக, இத்தகைய கதைகளை, நீதி போதிக்கும் சம்பவங்களாகக்கூட, பாடத் திட்டத்திலே, சேர்க்கமாட்டார்கள்.
இப்போது, சேர்க்கப்பட்டிருப்பினும், இதனைச் சொல்லித்தரும், ஆசிரியர் நன்கு அறிவார், மாணவர்கள், இத்தகைய கதை கேட்டு என்ன கருதுகின்றனர் என்பதை,ஒருநாள், இதே கதை மற்றோர் கருத்துக்குப் பயன்படும் விதமாகத் தீட்டப்பட்டுத்தானே தீரும்?
துரோணர் என்றோர் வில்வித்தை கற்பிக்கும் குரு இருந்தார். அவர் மிக மிகக் கல்மனம் படைத்தவர். அவருடைய அபாரமான வில்வித்தைத் திறனைக் கண்டு, வியந்த, ஏகலைவன் என்ற வேடனொருவன், அவரைத் தன் குருவாகப் பாவித்தான் – அவர்போல உருவம் அமைத்து வைத்துக் கொண்டு, வழிபட்டும் வந்தான். ஏகலைவன், சிறந்த வில்வித்தைக்காரனானான். இச்சேதி தெரிந்த, துரோணரின் சீடரில் அர்ஜுனன் என்பான், அருவருப்படைந்து, குருவைக் கண்டித்தான். குரு, அவனைச் சந்தோஷப்படுத்த எண்ணி, ஏகலைவனைச் சந்தித்து, சாகசமாகப் பேசி, அவனுடைய வலதுகைக் கட்டை விரலை, குரு காணிக்கையாகப் பெற்றார். அந்தக் காலத்தில், அவ்வளவு வஞ்சமும், கடின சித்தமும் கொண்ட குருமார்கள் இருந்தனர். அவர்கள் இதுபோல, பலப் பல வஞ்சகச் செயல்களால், ஏகலைவன் போன்ற பழங்குடி வீரர்களை அழித்தனர் – என்று கதை எழுதாமலா விடுவர்|
ஏகலைவன், துரோணாசாரியாரைக் குருவாகக் கருதிக் கொண்டதையே, அவன் குலத்தவர் கண்டித்தனர்.
“என்னதான் வில்வித்தைமீது ஆசை பிறந்தால் என்ன, கேவலம், அதற்காக நமது இனத்தின் மானத்தை இழந்துவிடுவதா? நாம், வேடர் குலம்; விலங்கினமும் பறவை இனமும், மனித குலத்தைவிட, அம்புக்குப் தப்பும் திறமையை அபாரமாகப் பெற்றவை. அவைகளையே நமது வித்தையால் சாகடிக்கிறோம் – பரம்பரை பரம்பரையாக வில்வித்தையில் தேர்ந்தவர்கள் நாம் _ சிட்டு முதல் சிங்கம் வரையில், நாம் நமது வில் வித்தையினால் மாய்த்திருக்கிறோம் – அப்படிப்பட்ட இனத்தில் பிறந்த நீ ஒரு ஆரியனிடம் வில்வித்தை கற்றுக்கொள்வதா! அதுவும் நேரிலே அல்லவாம்! உருவம் வைத்தாம்! என்ன காரியமடா செய்தாய் ஏகலைவா! நமது குலத் தொழில் இந்த வில்வித்தை; துரோணரின் குலத் தொழிலோ வெறும் புல்வித்தை. வேட குலத்து உதித்த நீ, எப்படி வெட்கமின்றி, அவரை “என் குரு’’ என்று கூறிக்கொள்கிறாய்!
எவ்வளவு கீர்த்தி நீ பெற்றாலும், உன் வில் வித்தையினால், நீ கண்டவர் வியக்கும் திறமை அடைந்தாலும் என்ன பயன்? ஓர் ஆரியனின் அருள்! அதனாலே வந்த திறமை என்றுதானே பேசுவர்-? வேடர் உலகு உன்னை மதிக்குமா! வேதியக் கூட்டம் உன்னைக் கவுரவிக்குமோ!
ஏகலைவா! உன் ஆற்றலால், புகழ் பெறும் நமது குலம் என்று நம்பினேன், நீ ஓர் ஆரியதாசன் என்ற அழியாத பழி சுமக்க முன்வந்தாய். ஏன் உனக்கிந்த மதி பிறந்தது? எம்மிலே, யாருமில்லையா. உனக்கு இந்த வில்வித்தையைக் கற்பிக்க?’’என்றுகூட, வேடர் தலைவன் ஒருவன் கூறினான். ஏகலைவன் அந்த நன்மொழியைக் கவனிக்கவேண்டும்.
கடைசியில், தன் கைக் கட்டை விரலை, இழந்து விட்டு, வீடு திரும்பியபோது, அந்தத் தலைவனைக் காண நேரிட்டது _ தலையைக் கவிழ்த்துக்கொண்டான்.
“ஏகலைவா! முதலிலேயே எச்சரித்தேன். கேட்கவில்லையே’’ என்று வேடர் தலைவன் விம்மும் குரலிற் கூறினான். வீரன்,
“விசாரப்படாதீர்! நான் இழந்தது, என் கைக் கட்டை விரல்! அவர் இழந்தது. கண்ணியத்தை! இதனை, உலகம், ஓர் நாள் உணரும்’’ என்று கூறினான்.