“சோமநாத் – இந்தியாவிலுள்ள புகழ் பெற்ற இந்த நகரம் கடற்கரையில் அமைந்துள்ளது. அலைகள் அதை தழுவிச் செல்கின்றன. அந்த இடத்திலுள்ள அற்புதங்களில் முக்கியமானது கோயிலில் பிரதிஷ்டை செய்திருந்த சோமநாத் சிலையாகும். கீழிருந்தோ மேலிருந்தோ எவ்விதப் பிடிப்புமில்லாமல் இது கோயிலின் நடுவே அந்தரத்தில் நின்றிருந்தது. இந்த அதிசயத்தின் காரணமாக இந்துக்கள் இதை மிகவும் மதிப்புடன் வணங்கி வந்தனர். காற்றில் மிதந்து நிற்கின்ற இந்தச் சிலையைக் கண்டால் முஸ்லிமோ நாத்திகனோ கூட வியப்படைந்துவிடுவான்-.
சந்திரகிரகணத்தின்போது இந்துக்கள் அங்கே தீர்த்த யாத்திரை சென்றனர். அந்த நேரங்களில் லட்சக்கணக்கானோர் அங்கு குழுமினர். இறந்தவர்களின் ஆத்மாக்கள் அங்கே ஒன்றாகக் கூடுமென்றும், சிலை அதன் விருப்பப்படி பிற உடல்களுக்கு அவற்றை அனுப்புமென்றும் அவர்கள் நம்பினர். இறந்த பின்னருள்ள நிலைமையைப் பற்றிய அவர்களுடைய மத நம்பிக்கையின் படியுள்ள ஒரு சங்கல்பமே அது.
கடல் சீற்றமும் அலையும் கடல் சிலைக்கு அளிக்கின்ற வழிபாடென்று சொல்லப்பட்டது. ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு உள்ள-வற்றில் அதிக விலை மதிப்புள்ளதைக் கோயிலுக்குத் தானம் செய்தனர். 10,000க்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்து கோயிலுக்கு வருமானம் கிடைத்தது. புனிதமானதெனக் கருதப்படுகின்ற ஒரு நதி (கங்கை)யும், அங்கே ஓடியது. சோமநாத்திலிருந்து 200 பர்லாங்கு தொலைவில் அது ஓடியது. அங்கேயிருந்து தினமும் தண்ணீர் கொண்டுவந்து அவர்கள் கோயிலைக் கழுவினர். சிலைக்குப் பூசை செய்யவும் பக்தர்களைக் கவனிக்கவும் 1000 பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 500 நாட்டிய நங்கைகள் கோயிலில் ஆடவும் பாடவும் செய்தனர். இவற்றிற்கெல்லாம் தேவையான வருமானம் கோயில் சொத்துக்களிலிருந்து கிடைத்தன.
ஈயத் தகடுகளால் பொதியப்பட்ட 56 தேக்கு மரத் தூண்களைக் கொண்டு கட்டடத்தை உயர்த்திக் கட்டியிருந்தனர். சிலை இருந்த கட்டடம் கருப்பாக இருந்தாலும், விலை உயர்ந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட பல அடுக்கு விளக்குகளால் ஒளிமயமாக்கப்பட்டிருந்தது. 200 மடங்கு எடையுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு தங்கச் சங்கிலி அதற்கருகில் இருந்தது. இரவின் ஒரு கட்டம் கழியும் பொழுது இந்தச் சங்கிலியைக் கிலுக்கி, அடுத்த பூசை செய்யும் பார்ப்பனர்களுக்கு விவரத்தை அறிவித்தனர்.
இந்தியாவுக்கு எதிராக மதப்போர் நடத்த சுல்தான் சென்ற பொழுது சோமநாத்தைக் கைப்பற்றவும் அழிக்கவும் பெருமுயற்சி நடத்த வேண்டியது வந்தது. இந்துக்கள் முஸ்லிம்களாகி விடுவர் என்ற நம்பிக்கையினால்தான் அவ்வாறு செய்யப்பட்டது. கி.பி. 1025 டிசம்பர் மத்தியில் அவர் அங்கே சென்றடைந்தார். இந்தியர்கள் அதனை எதிர்த்தனர். கோயிலின் உள்ளே சென்று அழுதுவிட்டு, உதவிக்காக யாசித்துவிட்டு வெளியே வந்து அனைவரும் இறப்பது வரை போர் செய்தனர். 50000 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
மன்னர் வியப்புடன் சிலையைப் பார்த்ததற்குப்பின் அதனையும் பிறவற்றையும் கைப்பற்றும்படி கட்டளையிட்டார். அங்கே தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட பல சிலைகளும் ரத்தினங்கள் பதித்த பாத்திரங்களும் இருந்தன. அவற்றையெல்லாம் இந்தியாவிலுள்ள பெரும் புள்ளிகள் கோயிலுக்குத் தானம் செய்தனர். இந்தக் கோயில்களிலிருந்து கிடைத்த பொருள்களுடையவும் சிலைகளுடையவும் மதிப்பு மிக அதிகமாகும்.
எவ்விதப் பிடிப்புமின்றி சிலை காற்றில் எவ்வாறு நிற்கின்றதென மன்னர் அருகிலிருந்தவர்களிடம் வினவினார். மறைமுகமாக ஏதேனும் பிடிப்பு அதற்கு இருக்குமென பலரும் கூறினார்கள். சிலையின் எல்லாப் பக்கங்களிலும் ஓர் ஈட்டியைப் பயன்படுத்தி ஏதேனும் தடை இருக்கிறதா என்று பார்க்கும்படி அவர் சொன்னார். எவ்விதத் தடையுமின்றி ஈட்டி எல்லாப் பக்கங்களிலும் சென்றது. அப்பொழுது கோயில் பணியாளர்களில் ஒருவர், “சிலை இருக்கும் இடத்தில் மேல் பாகம் காந்தத்தால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், சிலை இரும்பால் செய்யப்பட்டிருக்கிறது என்றும், அந்த காந்த சக்தி எந்தவொரு பக்கத்திலும் கூடுதல் ஆகாதவண்ணம் அமைக்கப்பட்டிருப்பதனால் சிலை காற்றில் நிற்கின்றது’’ என்றும் சொன்னார். சிலர் இந்தக் கருத்துடன் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தனர். வேறு சிலர் அப்படி இருக்காது என்று வாதிட்டனர். அது உண்மையா என்பதையறிய மேலேயுள்ள சில கற்களை அகற்றுவதற்கு சுல்தானிடம் அனுமதி வாங்கினார். இரண்டு கற்களை அகற்றியதும் சிலை ஒரு பக்கமாகச் சாய்ந்தது. இன்னும் சில கற்களை எடுத்ததும் அது தரையில் வீழ்ந்தது.’’
தரவு: Al Kazwini- The History of India as told by its Historians – Vol- I, P.97