– குடியாத்தம் ந. தேன்மொழி
ஏய்.. வெளியே போகும் போது ஷால் போட்டுகிட்டு போடி.!
இந்த டிரெஸ் ரொம்ப டைட்டா… பார்க்க ஒருமாதிரியா…
மார்பு பளிச்சுனு தெரியற மாதிரி டிரெஸ்…? போய் மாத்து?
பொண்ணா லட்சணமா டிரஸ் போடு! அப்பதான் எவனும் பின்னாடி வர மாட்டான்.பதின்மூன்று வயது தான் ஆகுது அதுக்குள்ள இவ்வளவு பெரிய… எதையாவது போட்டு மூடி மறைப்போம்ங்ற அறிவு இருக்கா! பாரு.பொம்பளப் புள்ளைக்கு இதெல்லாம் தானே தெரிய வேணாவா?
இப்படி பட்ட அங்கலாய்ப்புகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது, பெண்களுக்கு மார்பகம் வளர்வதே பெரிய குற்றம் என்பது போல…
அதுவும், இப்படி எல்லாம் யார் பேசறாங்கன்னா பெண்கள்தான்! ஆண்களும் தங்கள் பெண் குழந்தைகள் மட்டில் தயங்கித் தயங்கி வெளிப்படுத்தும் கருத்தை பெண்கள் புரட்சி பேசுவதாக நினைத்து பகிரங்கமாகப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பெண்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை ஆலோசனை என்கிற பெயரில் சொல்வதையே, கடமையாக பணியைச் கொண்டு, அப்படிப்பட்ட பெண்கள் சமூகமும் தலைமுறைத் தலைமுறையாக கடத்திக்கொண்டேயிருக்கிறது.
ஒரு பெண்ணின் மார்பகம் என்பது இச்சமூகத்தில் பெண்களிடையே மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. சிறியதாக இருந்தால் அய்யோ இவ்வளவு சிறிய மார்பகமாக இருக்கே என்றும்; பெரியதாக இருந்தால் அய்யோ இவ்வளவு பெரிய மார்பகமா இருக்கே என்றும் கவலைகொள்ளும் அளவில் இன்று பெண்கள். இது எப்படிபட்ட மோசமான மனநிலை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மார்பகம் என்பது ஓர் உறுப்பு. அவள் வளரவளர அதுவும் வளரும். அது இயற்கை.இது குறித்து கவலைப்படவோ விமர்சனங்களை வைக்கவோ எதுவுமில்லை.
தன் உடலில் இருக்கும் ஓர் உறுப்பு குறித்து கூனிக்குறுகி நிற்க வேண்டிய தேவையும் இல்லை. நவீன யுகத்தில் வாழ்கிறோம். ஆடை அணிந்து நம் உடல்களை மறைக்கிறோம். அதற்கு மேல் இதற்கு எந்தப் புனிதமும் தேவையில்லை. எப்பொழுது நம் உடலின் மீதும் குறிப்பாக மார்பகத்தின் மீது புனிதத்துவத்தை நாம் கட்டமைக்
கிறோமோ அப்பொழுதே தவறிழைக்கிறோம்.
இதே உணர்வுதான் பெண்ணின் பிறப்பு உறுப்புக்கும். அது அச்சத்துடன் பாதுகாக்கப்பட வேண்டியதாய் ஆக்கப்பட்டு விட்டது. நம் உடல் உறுப்புகளை பொத்திப் பாதுகாப்பது என்பதை விட ஆரோக்கியமாக நேசித்துப் பராமரிக்கவேண்டும் என்ற மனநிலை தான் பெண்களுக்கு வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு தன் உடல் மீதான பயத்தையும் உடல் உறுப்புகள் மீதான பயத்தையும் ஏற்படுத்துவதை விட, அந்த உறுப்பின் பயன்பாட்டையும் அதன் தேவையையும் கற்றுத் தந்து அவர்கள் தங்கள் உடலை நேசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
தன் உடம்பில் உள்ள உறுப்புகள், உணர்வுகள் இயற்கையாக வளரும் தன்மை கொண்டது என்ற அறிவியல் உணர்வை நாம் சொல்லித் தர வேண்டும். இதில் பெரும் பங்கு பெற்றோருக்கு உள்ளது.
மார்பகத்தை மூடி மறைத்துக்கொள் என்று சொல்வதைவிட, இந்த வயதில் உன் மார்பு வளரும் என்ற உண்மையைச் சொல்லித் தர வேண்டும். இறுக்கமான ஆடை அணிந்து மார்பகத்தின் பரிமாணத்தை வெளிக்காட்டாமல் இரு என்று சொல்வதைவிட, இயல்பான உடை அணிந்து மனதை இறுக்கமின்றி வைத்துச்கொள்ளச் சொல்லிக் கொடுங்கள்.
குனிந்து நட என்று சொல்லி வளர்ந்த மார்பகத்தை குற்ற உணர்ச்சியோடு பார்க்கும் நிலையை ஏற்படுத்த வேண்டாம். நிமிர்ந்து நடக்க; நிமிர்ந்த மார்பகங்களோடு தன்னம்பிக்கையோடு நடக்க சொல்லித் தர வேண்டும்.
இது பெண் பாலினத்திற்கான உடல் அமைப்பு. இப்படித்தான் இருக்கும் என்று இயல்பை குழந்தைகளிலிருந்து கற்றுத் தர வேண்டும். அடங்கி இரு; அனைத்தையும் மூடு என்று சொல்லி வளர்ப்பதைவிட, உன்னுடல் உனது உரிமை, அதை நேசிப்பதும் பாதுகாப்பதும் உன் கடமை என்று சொல்லி வளர்க்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உள்ளது.
இல்லையெனில் நீங்கள் கடமையைச் செய்யத் தவறிய பெற்றோராக ஆவீர்கள். உங்கள் பெண் குழந்தைகள் மனதில் குற்ற உணர்ச்சியையும் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்திய பெற்றோராக நீங்கள் இருக்கக் கூடாது.
பெண் குழந்தையிடத்தில் அதிகாரம் மிக்க அடக்குமுறை கொண்ட பெற்றோராக இருப்பதைவிட, பெண்ணின் ஆளுமைகளை வளர்க்கும் பெற்றோராக இருங்கள். அது இந்த சமூகத்தை மிகுந்த பலத்தோடு எதிர்கொள்ளும் மனவலிமையைப் பெண் குழந்தைகளுக்கு நிச்சயம் கொடுக்கும்.