முனைவர். கடவூர் மணிமாறன்
பாவேந்தர் தமிழுலகம் என்றும் போற்றும்
புகுத்தறிவுப் பாவலராய்த் திகழ்ந்து வந்தார்;
மேவுபுகழ் வளம்யாவும் பெறுதல் வேண்டி
மிடுக்குடனே குயிலென்னும் இதழின் மூலம்
பாவலரை ஒருங்கிணைத்தார்; இனத்தை, நாட்டை,
பைந்தமிழை உயிர்போலக் காக்க வேண்டி
நாவினிக்க அரிமாவாய் முழங்கி வந்தார்;;
நஞ்சினர்தம் முகத்திரையைக் கிழித்தார் வென்றார்;!
பெரியாரின் போர்வாளாய்ச் சுழன்றார்! நாட்டில்
பெருமையெலாம் அணிவகுக்க வீறு கொண்டே
அரியபல படைப்புகளை ஆக்கித் தந்தார்!
அருந்தமிழ்க்குப் பல்லாற்றான் வளங்கள் சேர்த்தார்!
நரியாரின் நாட்டாண்மை வீழச் செய்தார்
நன்மைகளை உண்மைகளை நயமாய்ச் சொன்னார்!
எரிமலையாய்க் கனன்றவரோ புரட்சி நாற்றை
எழுதியதம் பாக்களிலே நடவு செய்தார்!
கொள்கையுரம் வாய்ந்தோராய்த் தமிழர் எல்லாம்
கோலோச்ச உழைப்பாளர் மேன்மை கூறி
வெள்ளமெனப் பாப்பெருக்கை மேவச் செய்தார்
வீழ்ந்தஇனம் நிமிர்;வதற்கு வழிகள் சொன்னார்
விள்ளரிய ஒப்பரவு, சமன்மை தோன்ற
வெம்புலியாய் அரிமாவாய் வெகுண்டு பாடி
உள்ளத்தைப் பண்படுத்தி ஒளிரச் செய்தார்!
உலகறிய உயர்தமிழர் மாண்பைச் சொன்னார்!
முற்போக்கு யாழிசைத்தார்; தமிழர் நாட்டில்
மொழியுணர்வை இளைஞரிடம் பரப்ப லானார்!
பிற்போக்கை, மடமையினைச் சாடி வந்தார்;
பெருமிதமாய் இலக்கியங்கள் படைக்க லானார்;
கற்றவர்கள் மதிக்கின்ற சிறப்பைப் பெற்றார்;
கடையரெலாம் கடைத்தேறும் நோக்கம் கொண்டு
பற்றுடனே சமன்மையினைப் போற்றி வந்தார்;
பாவேந்தர் புரட்சித்தீ என்றும் வேண்டும்!