– கி.வீரமணி
அவதாரம் என்ற வடமொழி _- சமஸ்கிருதச் சொல்லுக்குக் கீழே இறங்கி வருதல் – (அவ்தார்) என்பது பொருளாகும்.
பாகவத புராணம், ஆண்டவனின் அவதாரங்கள் என்பவை கணக்கில் அடங்காதவை என்று குறிப்பிடுகின்றது! (ஆதாரம்: பாகவத புராணத்தைப்பற்றிய ஓர் ஆராய்ச்சி – டி.எஸ். ருக்குமணி (‘‘Rukumani – A Critical Study of the Bhagavatha Purana – Varanasi – 1970 – p.209).
புராணங்களில் 10 அவதாரங்கள் – தச அவதாரங்கள்தான் என்பதில்லை. சில புராணங்களில் 10 அவதாரங்களுக்குப் பதிலாக 22 அவதாரங்கள் உண்டு என்று குறிப்பிடுகின்றன.
அவதாரம் எடுப்பது என்பது வேத கால நூல்களில் காணப்படவில்லை.
இதில் விஷ்ணுதான் அவதாரம் எடுத்த கடவுளே தவிர, சிவன் அப்படிக் கிடையாது!
குடிஅரசு ஏட்டில் தந்தை பெரியார் அவர்கள் சிவன்_-விஷ்ணு ஆகிய இரு கடவுள் பற்றிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார்கள். அதில் மனிதகுலச் சிந்தனை வளர்ச்சியில் காட்டு மிராண்டிப் பிராயச் சிந்தனையைச் சிவன் பிரதிபலிப்பதாகவே உள்ளது என்றும், அதற்கடுத்து வளர்ச்சியடைந்த ஒரு நாகரிக காலம் வந்த பிறகு விஷ்ணு என்ற கடவுள் கற்பனை தோற்று விக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு எழுதி, அதற்கு ஆதாரமாக, சிவனுடன் தொடர்புடையனவாகச் சுடுகாட்டுச் சாம்பல், புலித்தோல், உடுக்கை முதலியன இருப்பதையும், விஷ்ணு உருவத்திற்கு நகைகள் போட்டு மேலும் சற்று நாகரிக மெருகேற்றிக் காட்டியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சிவன் கிரேக்கத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட கடவுள்தான் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது! அது ஒருபுறம் இருக்கட்டும்.
ஏ.கே. கார்மார்க்கர் என்ற ஆராய்ச்சியாளர், 10 அவதாரங்கள் என்ற கற்பனைகூட இதிகாசங்களில் ஒரிஜினலாக துவக்க காலத்தில் இடம் பெறவில்லை என்றும் இடைச் செருகலாகப் பிற்காலத்தில் நுழைக்கப்பட்ட கருத்தே என்றும் கருதுகிறார். (ஆதாரம்: The Cultural History of India vol II – Chapter on “Religion and Philosophy of the Epics – PP 84-85 – Karmarkar A.K.)
பிரம்மசூத்திரம் என்ற நூலில் அவதாரங்கள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பது மேற்காட்டிய வாதத்திற்கு வலிமை சேர்க்கிறது.
எப்படிப் புத்தர் கொள்கை நெறியை விரட்டியடிக்கச் சுங்க வம்ச ஆட்சி, கிருஷ்ண வழிபாட்டினைத் தீவிரமாக்க முயன்றதோ, அப்படித்தான் இந்த அவதாரக் கற்பனைகளும் புகுத்தப்பட்டு அதன் மகாத்மியங்கள் மக்களிடையே பரப்பப்பட்டிருக்க வேண்டும்.
சந்திரகுப்த மவுரியரின் காலத்தில் சமணமும், அசோகர் காலத்தில் பவுத்தமும் தழைத்தோங்கிய பிறகு கி.மு. இரண்டாவது நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் அதாவது மவுரிய வம்சத்தின் கடைசி அரசனான பிரகத்ருதனைப் புஷ்யமித்திர சுங்கன் கொன்று ஆட்சியைக் கைப்பற்றியவுடன் வந்த ஆட்சியில் (கி.மு.184-க்குப் பிறகு) வேகமாகப் புகுத்தப்பட்ட பல மாறுதல்களில் குறிப்பாகப் பண்பாட்டுப் படையெடுப்புகளில்தான் மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரண்டு காவியங்களின் பாடல்களில் தங்களுக்கு ஏற்ற வகையில் அவைகளில் பல கருத்துகளைப் புகுத்தி மக்களிடையே பரப்பியிருக்கக்கூடும் என்று `ஃபர்குஆர் (FarQuhar) என்ற ஆய்வாளர் 1971இல் எழுதிய “The Crown of Hinduism” என்ற நூலில் 243, 359 ஆகிய பக்கங்களில் குறிப்பிடுகிறார். மகாபாரதத்தினை ஆங்கிலத்தில் தொகுத்த அறிஞர்கள் ஹாப்கின்ஸ் என்பவரும் மாக்டொனால்டும் இதே கருத்தை ஏற்கின்றனர்!
அவதாரங்கள் பற்றிய பல ஆன்மிக அறிஞர்கள் என்று சொல்லப்படுவோர் மற்றும் காந்தியார் கருத்தென்ன?
விஷ்ணு எடுத்ததாகச் சொல்லப்படும் 10 அவதாரங்களில்,
1. மச்ச (மீன்) அவதாரம்
2. ஆமை அவதாரம்
3. பன்றி (வராகம்) அவதாரம்
4. மனித சிங்கம் _ நரசிம்மம் அவதாரம்
5. இரண்டு பிராமண முழு மனிதன்
6. வாமனன் (குள்ளன்) பரசுராமன் – பார்ப்பன அவதாரம்
7. மற்றும் மூன்று க்ஷத்திரிய அவதாரம்
8. இராமன்
9. கிருஷ்ணன் சூத்திரர்களுக்கு இதில் இடமே கிடையாது (மிருகங்களை விட மோசமான அடிமைகள்தானே அவர்கள்)
10. கல்கி இனி வெண்குதிரை வடிவில் வரவிருக்கும் அவதாரம்
இதுபற்றி 19 ஆம் நூற்றாண்டில், மகாத்மா என்று மராட்டிய மக்களால் அழைக்கப்பட்ட மகத்தான சமூகப்புரட்சி வீரர் ஜோதிராவ் பூலே (Jothirao Phule) இது ஆரியர்கள், சூத்திரர்களை அடிமை கொண்டதை உருவகப்படுத்திக் காட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டது என்கிறார்.