வை. கலையரசன்
சமூக நீதி வரலாற்றில் சாகா இடம் பெற்ற சரித்திர நாயகர் பி.பி. மண்டல் அவர்களின் நினைவு நாள் ஏப்ரல், 13.
இந்தியச் சமூகச்சூழலில் ஜாதி என்னும் பெரும் சூழ்ச்சியால் மண்ணின் மைந்தர்களை வஞ்சித்துவரும் வந்தேறிப் பார்ப்பனர்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு, அனைத்து பார்ப்பனரல்லாத மக்களையும் ஒடுக்கினர்.
அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதிப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று, சில பகுதிகளில் வகுப்புரிமை ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், விடுதலை பெற்ற இந்தியக் குடியரசில் அவர்களது உரிமைகள் உறுதிப்படுத்தப்படவும் இல்லாத இடங்களில் உருவாக்கப்படவும் வேண்டிய நிலை இருந்து வந்தது. அண்ணல் அம்பேத்கரால் பட்டியலிடப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களாக உள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான உரிமைகள் இந்திய அரசியல் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டன.
ஆனால், பட்டியல் படுத்தப்படாத இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மக்களுக்கு அவர்களது நலன்களை உறுதிப்படுத்த வாய்ப்பில்லாமல் போகவே, ஆராய்ந்து அவர்களை முன்னேற்ற அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 340 மூலம் பிரகடனப் படுத்தப்பட்டது.
இதனையேற்று நேரு தலைமைலான ஒன்றிய அரசு முதல் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவை அமைத்தது. இக் குழுவிற்கு காகா கலேல்கர் என்ற பார்ப்பனர் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அக்குழுவால் அளிக்கப்பட்ட பரிந்துரைகளில் கையொப்பம் போட்டுவிட்டு, தனிப்பட்ட முறையில் தமக்கு உடன்பாடு இல்லை என்று கடிதம் எழுதினார். இதுதான் பார்ப்பனர்களின் யோக்கியதை. எனவே, அந்தப் பரிந்துரைகள் கிணற்றில் தூக்கிப் போடப்பட்ட கல்லாகிவிட்டன.
இந்த நிலையில் மொரார்ஜி தேசாய் அவர்களால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் தான் பி.பி.மண்டல் அவர்கள்.
1979 மார்ச் 21 அன்று இக்குழு தன் பணியினைத் தொடங்கியது.
இரண்டாண்டுகள் 9 திங்கள் இக்குழு சுழன்று கழன்று பணியாற்றியது. இந்தியா முழுமையும் அன்று இருந்த 407 மாவட்டங்களில் 405 மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையினை அளித்தார்கள்.
சென்னை பெரியார் திடலிலே மண்டல் அவர்களுக்கு ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டது (30-.6-.1979). அவ்விழாவிலே அவர் ஆற்றிய உரை – அவரின் உள்ளத்தில் தந்தை பெரியாரின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள உதவியது “நாங்கள் அறிக்கையை அளிக்கலாம். ஆனால், அதிகார வர்க்கம் அதை அமல்படுத்த விடாது. பெரியார் பிறந்த மண்ணிலே தோன்றிய நீங்கள்தான் அதற்காகப் போராடவேண்டும் உரிமைக் கொடியை உயர்த்தத் தயாராகுங்கள்!’ என்றார்.
அது எவ்வளவு பெரிய மகத்தான உண்மை என்பதை இன்றுவரை அனுபவத்தில் அறிகிறோம். அவ்விழாவில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆற்றிய ஆங்கில உரையைக் கேட்டு மகிழ்ந்தார். பாராட்டினார்.
நீங்கள் வட நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மண்டல் குழுவின் முழு அறிக்கை குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்களிடம் அளிக்கப்பட்டது (31.12.1980).
உள்துறை அமைச்சர் கியானி ஜெயில்சிங் அவர்களால் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. (30.4.1982) இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப்பதற்காகக் கூட திராவிடர் கழகம்தான் போராட வேண்டியிருந்தது.
அதற்காகவே சென்னை சைதாப்பேட்டையில் திராவிடர் கழகம் மாநாடு ஒன்றை நடத்தியது கருநாடக மாநில முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் அவர்கள் அம்மாநாட்டில் கலந்து கொண்டு கர்ச்சனை செய்தார் (20.3.1982),
42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தி, சமூக நீதியாளர்களை இந்திய அளவில் ஒருங்கிணைத்து 10 ஆண்டுகள் போராடி வந்திருக்கிறது திராவிடர் கழகம்.
சமூக நீதிக் காவலர் மாண்புமிகு பிரதமர் வி.பி. சிங் அவர்களால் மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது (7.8.1990),
இந்த ஒரு காரணத்துக்காகவே பா.ஜ.க.வால் வி.பி. சிங்கின் ஆட்சியும் கவிழ்க்கப் பட்டது. மண்டல் அவர்களும், வி.பி. சிங் அவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களால் தங்கள் வாழ்வின் அம்சங்களோடு நன்றி மறவாமல் பாதுகாக்கப்படவேண்டிய விலை மதிக்கப்பட முடியாத வைரங்கள் ஆவர்.
வி.பி.சிங் அவர்கள் பரிந்துரையை அறிவித்தபோது, அதை நேரில் கண்டுகளிக்க பி.பி. மண்டல் உயிரோடு இல்லை.
இப்பொழுது – வேலை வாய்ப்பில் மட்டும்
பிற்படுத்தப்பட்டவருக்கு வாய்ப்பு அளிக்கப்-பட்டுள்ளது. அதிலும் இராணுவம், நீதித்துறை, விஞ்ஞானத் துறைகளில் கிடையாது. கல்வியில் இட ஒதுக்கீடு இதுவரை அளிக்கப்படவில்லை. தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு இதுவரை இல்லை.
நிலச் சீர்திருத்தங்கள், பொருளாதார முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகள் பற்றி எல்லாம் மண்டல் அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது. அவர் அளித்த பரிந்துரைகள் இன்னும் ஏராளம் உண்டு. பரிந்துரைக்கப்பட்ட அந்த ஒன்றே ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ளவே இன்னமும் இன்றுவரை போராட வேண்டிய நிலை நமக்கு. ஆனாலும், மண்டல் அளித்த அத்தனை பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தச் செய்யும்வரை நாம் ஓயப் போவதில்லை! மண்டலையும் மறக்கப் போவதில்லை; ஆந்திர மாநிலம் – குண்டூரில் சமூகநீதியின் நாயகர் பி.பி. மண்டல் அவர்களின் சிலை திறப்பு விழா 12.2.2023 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது.
பி.பி. மண்டல் சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவர் உரையாற்றினார்.
வாழ்க பிந்தேஸ்வரி பிரதாப் மண்டல்..!