தொழிலாளர் நிலை

மே 01-15

– ‍ தந்தை பெரியார்

ழைப் பாட்டாளி மக்கள், தொழிலாளி மக்கள் கூலி போதாதென்று பட்டினி கிடந்து, போலிகாரன் குண்டுகளுக்கு இரையாகிச் சொத் பொத்தென்று கீழேவிழுந்து உயிர்விடும் போது, அவன் பெண்டு பிள்ளைகள் கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்கும் போது, பட்டேலுக்கும்? நேருவுக்கும், பிரசாத்துக்கும், ஆசாத்துக்கும், சரோஜினிக்கும்

மாதம் 5000, 6000 வீதம் சம்பளமும், அரசபோக மாடமாளிகை, அரண்மனை வாசமும், நேரு தங்கை விஜயலட்சுமிக்கும், சுற்றத்தாருக்கும் மாதம் 8000 சம்பளமும், அரசபோக வாழ்க்கையும், அடிக்கடி ஆகாயக் கப்பல் போக்குவரத்துப் பிரயாணமும் என்றால் இந்தத் தலைவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளா? நாட்டு மக்களுக்காகப் பாடுபடும் தியாகிகளா? அல்லது டர்பிள்வீப் என்னும் லாட்டரியில் முதல் பிரை அடித்த பாக்கியசாலி லட்சுமி புத்திரர்களா? ஏழைப் பாட்டாளி மக்கள் முதலாளிகளின் கொடுமையால் வேலைவிட்டு, வீடு வாசல் விட்டு, நாடு முழுவதும் பிச்சை எடுக்கத் துணிந்து அலையும்போது முதலாளிகள் நிலைமை எப்படி இருக்கிறது? பணத்தைக் குவிக்கிறார்கள், மாட மாளிகைகளை உயர்த்துகிறார்கள், பஞ்சனையில் கொஞ்சி விளையாடுகிறார்கள், மந்திரிகளோடு சல்லாபமாய் உலவுகிறார்கள். முதலாளிகளும் மந்திரிகளும் காதலர் காதலிகளாய் உல்லாசக் கிரீடைகள் நடத்துகிறார்கள். டீ பார்ட்டி, நாட்டியக் கச்சேரி, இசையரங்கு, சாமி தீபாராதனைபோல் என்ன வேடிக்கை எவ்வளவு கேளிக்கையாய் வாழ்கிறார்கள். சுயராஜ்ய நாட்டில், சமதர்மவாதி – பொது உடமைவாதி – ஏகாதிபத்திய எதிர்ப்புவாதி என்றெல்லாம் தப்பட்டை அடித்து விளம்பரம் செய்யப்பட்டு பேர் பெற்ற பண்டித ஜவஹர்லால் நேருவின் (முதல் மந்திரி) தலைமையில் ஏழை பாட்டாளி மக்கள் கதி இதுதானா? நூற்றுக்கணக்கான நாட்களாக கோவை மில்லுகளில் போராட்டங்கள் நடக்கின்றன. நாட்டில் பல நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் ஏற்பட்டு தொழிலாளிகளும் மக்களும் அல்லல் பட்டு மிருக ஜீவன் போல் படாத பாடுபடுகின்றனர். இவைகளையெல்லாம் பார்த்தும், தங்களால் இவைகளை அடக்க முடியாமல் பரிகாரம் செய்ய முடியாமல் போயும் கூட தொழில் தாபனங்களையெல்லாம் சர்க்கார் ஏன் ஏற்று நடத்தாமல் இருக்கிறார்கள்? இதற்குச் சமாதானம் சர்க்கார் அல்லது மந்திரிகள் முதலாளிகளின் ஆசை வலையில் சிக்கி அழுந்தி விட்டார்கள் என்பதைத் தவிர, அல்லது இந்த மந்திரிகள் நிலையில்லாதவர்கள் ஆனதால் கிடைத்த வரை சுருட்டுவோம் என்கின்ற வேலைத் திட்டத்தைக் கையாளுகிறார்கள் என்பதைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும்? என்று கேட்கின்றேன். இந்நாட்டுத் தொழிலாளிகள் இப்படி அல்லல் படுகிறார்கள் என்றால் இந்த ஆட்சி முதலாளிகள் ஆட்சி என்றுதானே ஆகிறது?

( 02.05.1948 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக 19ஆம் மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் உரையிலிருந்து….)

———————–

ம்யூனிஸ்ட் கட்சியார், மில்லிலும் எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர் களையே தொழிலாளர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும் சூத்திரப் பட்டம் தாங்கிய நாலுகோடி மக்களும் தொழிலாளர்களல்லவா? சூத்திரனைக் கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாதிரம் சொல்லுகின்றதே. இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்று தானே கருத்து. இதற்குத்தானே, இப்படிச் சொல்ல வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம். ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு? பார்ப்பனன் வேண்டுமென்றால் தம் சங்கத்தைச் சூத்திரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மைப் பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ள வேண்டும்? நமக்குச் சொந்தப் பெயரில்லையா? நாம் திராவிடர்கள் அல்லவா? பிராமணன் உயர்வானவனென்று யஞ்யவல்யர், நாரதர், பராசரர் சொன்னது இன்று இந்து சட்டமாகக் காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே, சாதிரத்திலே, நடத்தையிலே, பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே. கடவுளாலே கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படும், இந்த சூத்திரப் பட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாகிய திராவிடர்களல்லவா? நாம் எப்பொழுது இந்தச் சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது?

தொழிலாளிகளுக்கு எங்கள் கொள்கை தெரியுமா? கூலிகொடுப்பது, கூலி உயர்வது, போன பெறுவது அல்ல எங்கள் கொள்கை. ஆனால் தொழிலாளிகள் முதலாளிகளிடத்தில் பங்கு பெற வேண்டும். ரயில்வே தொழிலாளர்களென்றால் அவர்கள் அதன் முதலாளிகளிடத்தில் பங்கு பெற வேண்டும். மிஷினுடைய தேவைக்கு எப்படிக் கரியும் எண்ணெயும் உபயோகப்படுத்தப்படுகின்றதோ அதைப்போல தொழிலாளியின் உழைப்புக்குத் தகுந்தபடி செலவுக்குக் கொடுக்கப்படவேண்டும். கரியும் எண்ணெயும் எப்படி மிஷினுக்கு இன்றியமையாதவையோ அதைப்போல தொழிலாளிக்குக் கூலியும் இன்றியமையாதது. முதலாளி கணவனும் தொழிலாளி மனைவியுமாவார்கள். இவர்களுக்குப் பிறக்கின்ற பிள்ளைதான் லாபம். ஆகவே லாபம் என்பது இருவருக்கும் பொது. இதைப் போலவே, நிலத்திலே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒருபடி இரண்டு படி கூலி அதிகம் கிடைப்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைந்து விட மாட்டோம். வேலைக்குத் தகுந்த கூலி கிடைப்பதுடன் விளைவிலேயும், தொழிலாளர்களுக்கு மில்லில் பூமியில் பங்கு வேண்டும். எங்கள் திட்டம் நிறைவேறினால் யந்திரச் சாலை தொழிலாளர்களுக்கு வந்துவிடும். இதுதான் நியாயமான நீதியான ஆட்சிமுறை. இதில் யாரும் எந்தப் பஞ்சாயத்தும் செய்யத் தேவையில்லை. நாங்கள் பதவியேற்று மந்திரிகளாக வந்தால் வயது வந்த எல்லா மக்களுக்கும் ஓட்டுரிமை அளிப்போம்; கட்டாயக் கல்வியைக் கண்டிப்பாக அமலுக்குக் கொண்டு வருவோம்; சொத்துக்களில் லாபத்தில் யாவருக்கும் சமஉரிமை அளிப்போம்.

காங்கிரஸ் தோழர்களே, கம்யூனிஸ்ட் தோழர்களே! எங்களை ஏன் குறை சொல்லுகிறீர்கள். பிறவியிலே, மதத்திலே, கடவுளிலே இருக்கின்ற முதலாளித் துவத்தை ஒழிக்க நாங்கள் பாடுபடுகின்றோம். தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று கம்யூனிட் தோழர்கள் சொல்லுகின்றார்கள். உற்பத்தியைக் கொடுக்கின்ற உலகத்தை ஏன் அழிக்க வேண்டும்? இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக இவ்வுலகு இயற்றியான் என்று எங்கள் பொதுவுடைமைத் தலைவர் வள்ளுவர் பொன்னெழுத்துக்களால் பொறித்திருக்கின்றாரே, உணவில்லாத ஒருவனையும் படைத்து, உற்பத்தியைத் தருகின்ற உலகத்தையும் படைத்த அந்தக் கடவுளையல்லவோ அவர் ஒழிக்கச் சொல்லுகின்றார். கடவுள் வேண்டுமானால் நல்ல கடவுளாக இருக்கட்டுமே. எனதருமை வாலிபத் தோழர்களே! எங்கள் கொள்கைகளை உணருங்கள். இனி ஒரு கலகம்கூட வரக்கூடாது. வேண்டுமானால் பார்ப்பனர்களுக்குத் துணிவிருந்தால் எங்களை உதைக்கட்டும். கம்யூனிட் திராவிடத் தோழர்களே நீங்கள் ஒதுங்கி நில்லுங்கள். ஆதிதிராவிடர்கள் முலிம்கள் போராட்டம் ஆரம்பிக்கப் போகின்றார்கள். அந்தப் போராட்டத்திற்கு நீங்கள் உதவி புரியுங்கள். பூணூலும் உச்சிக்குடுமியும் போய்விடுமென்று பார்ப்பான் பயப்படுவான். பிறகு சண்டையே இருக்காது. உண்மையான நாட்டுப்பற்று சுயமரியாதைப் பற்றுடன் நான் சொல்லுகின்றேன். சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டுமென்றால் கருப்புச் சட்டையை அணியுங்கள். கருப்புச் சட்டையின் மூலம்தான் நமது இழிவை ஒழிக்க முடியும். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். சிந்தியுங்கள், கம்யூனிட் தோழர்களே எங்களை நம்புங்கள்.

(18.08.1946 அன்று கும்பகோணத்தில் மாலை பார்க்கில், தோழர் கே.கே.நீலமேகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து…) குடிஅரசு -19.10.1946

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *