திரைப்பட நடிகர் மயில்சாமி அவர்கள் அண்மையில திடீரென மறைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மிகத் துயரமான செய்தி. நல்ல மனிதர். பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
அவரது மறைவு குறித்து ரஜினிகாந்த் அவர்கள்…
“மயில்சாமி சிவராத்திரியில் இறந்தது தற்செயலான செயல் அல்ல. அது சிவன் போட்ட கணக்கு. தனது தீவிர பக்தரை தனக்கு உகந்த நாளில் சிவன் எடுத்துக்கொண்டார்!” என்று கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டதும் எனக்கு குத்தூசி குருசாமி அவர்களின் கட்டுரை ஒன்று நினைவில் வந்தது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் பக்தி போதை புதிய புதிய ‘அவ’தாரங்களை நாடி படையெடுக்க வைக்கும். அப்படித்தான் இப்போது ஈஷா! 50களில் சாயிபாபா!
‘சாயிபாபா கிறுக்கு!’ என்று குத்தூசி குருசாமி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருப்பார் .
“அரவிந்தர், ரமணமகரிஷி, மெய்வழி ஆண்டகை, பண்டாரசந்நிதி, தயானந்த சரஸ்வதி என கிளைக்கு கிளை தாவுகின்ற மனக்குரங்கு இப்போது சில ஆண்டுகளாக ஒரு புதிய கிளையில் தாவியிருக்கிறது. அதுதான் சாயிபாபா!
இவர்களெல்லாம் அதிவிரைவில் மோட்சத்திற்குப் போவதற்காக சாயிபாபாவைத் தேடிப் பிடித்திருக்கிறார்களோ? என்று சிலர் அய்யப்படலாம். அல்லவே அல்ல. மோட்சத்திற்குப் போவதற்கு எவருமே இங்கு தயாராயில்லை.
‘பக்தர்களே! உங்கள் பக்தியை மெச்சினேன்! புறப்படுங்கள் மேல் லோகத்திற்கு!!’ என்று சாயிபாபா சார்பில் திடீரென்று அழைப்பு வந்தால், ஒரு பக்தர் கூட அந்த இடத்தில் நிற்க மாட்டார். ஒரே ஓட்டமாக அவரவர் வீட்டை நோக்கி ஓடிப்போய் விடுவார்கள்!
பூஜை நடக்கிற வீட்டுக்காரர்கள் கூட வீட்டைப் பூட்டாமலே ஓட்டமெடுத்து விடுவார்கள்!” என்று எழுதியிருப்பார்.
ரஜினி கூறியதையும், குத்தூசி கூறியதையும் நினைத்தேன். சிரிப்பை அடக்க முடியவில்லை!
ரஜினியும் ஓடுவது மனக்கண்ணில் தெரிகிறது!
– கி. தளபதிராஜ்