பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்
பெரியாரை அறிந்து கொள்ள பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க வேண்டும் . பெரியாரியத்தை அறிந்து கொள்ள பெரியாரின் போராட்டங்களின் வரலாற்றைப் படிக்க வேண்டும்!
ஆனால் பெரியாரையும், பெரியாரியத்தையும் ஒரு சேர அறிந்து கொள்ள பேராசிரியர்
இரா. சுப்பிரமணி எழுதியுள்ள இந்த அருமையான நூலை கட்டாயம் படிக்க வேண்டும் !
பேராசிரியர் இரா. சுப்பிரமணி, சேலம் பெரியார் பல்கலைக்கழக தகவல் தொடர்புத் துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து, பணியாற்றி வருகின்றார்.பெரியாரின் எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதன் மய்யப் புள்ளி – ஜாதி ஆதிக்க ஒழிப்பு! அதனை நோக்கியே – இன இழிவு நீக்கம் என்ற பெரியாரின் முழக்கம்!
ஜாதி ஆதிக்க ஒழிப்பின் தொடர்ச்சி தான் அவரது தொடர் போர்க்களங்கள்… பார்ப்பனிய எதிர்ப்பு, வருணாசிரம எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, புராணங்கள் எதிர்ப்பு, சடங்குகள் எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு… இவை எல்லாம் !
பெரியார், போராட்டங்களால் அடையும் சிறைத் தண்டனையை – தண்டனை என்று பார்க்காமல், அதுவும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் மற்றொரு உத்தி என்று கருதினார்!
ஓய்வு, சலிப்பு இரண்டும் தற்கொலைக்குச் சமம், உயிருள்ள கடைசி நாள் வரையில் இச்சமூகத்தின் மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என்று வாழ்ந்த, பெரியாரின் போர்க்களங்கள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றவை!
போராட்டங்களின் கோரிக்கைகள், அதற்கான நியாயங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்ட முறைகள், போராட்ட கால அனுபவங்கள், அதன் வினைப் பயன்கள், அதன் வரலாற்றுச் சிறப்புகள் இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய நூலாக இதைத் தந்துள்ளார்!
பெரியாரின் போர்க்களங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் பெரியாரின் போர்க்குணங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகின்றது!
கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் தனது தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களையும் வெட்டிச் சாய்த்தார், காந்தியின் தீவிர சீடராக இருந்த – பெரியார் !
சேரன்மாதேவியில் வ.வே.சு. அய்யர் குருகுலத்தில் பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு தனிப் பந்தி நடத்தி வந்த அநியாயத்திற்கு எதிராகப் போராடியவர், அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் காரியதரிசி – பெரியார்!
வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையிலிருந்த பெரியாரைச் சந்தித்த பின், அவர் பற்றி ராஜாஜியின் மடல் “சுதேசமித்திரனில்’’ வந்தது (28.08.1924)
அதில் ஒரு பகுதி:
“பெரியார் சிறை உடைகளை அணிகிறார். காலில் இரும்பு வளையம் போட்டிருக்கின்றார்கள். மற்ற கைதிகளிடமிருந்து பிரித்து தொலைவில் ஒரு தனி அறையில் அடைத்திருக்கின்றார்கள். ஆயினும் ஸ்ரீமான் நாயக்கர் உற்சாகத்துடனிருந்து வருகிறார். திருவனந்தபுரம் சிறையிலிருக்கும் தீரரை தமிழ் நாடு பாராட்டுகிறது!’’ _ என மனம் திறந்து ராஜாஜி பாராட்டியிருக்கிறார்!
“இந்தியால் தேச மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன? புது அறிவு உண்டாகுமா? ஆராய்ச்சிக்குப் பயன்படுமா? முற்போக்குக் காரியத்துக்குப் பயன்படுமா ? சீர்திருத்தத்திற்கு ஏற்றதா? என்றெல்லாம் பார்க்க வேண்டாமா?’’ என்று முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெரியார் எழுப்பிய இந்த கேள்விகளுக்கு இன்றளவும் எவராலும் பதில் சொல்ல முடியவில்லை!
இரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்திப் பெயர்களை அழிக்கும் போராட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி 1952ஆம் ஆண்டு நடைபெற வேண்டுமென பெரியார் அறிவித்தார்.
அந்தப் போராட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் அறிவித்திருந்தார்.அந்தப் கட்டுப்பாடுகளில் சில:
1) பிளாட்பாரம் டிக்கெட் அல்லது பக்கத்து ஸ்டேசனுக்கு டிக்கெட் கட்டாயம் கையிலிருக்க வேண்டும்!
2) ரயில்வே சொத்துக்கள் எதற்கும் சிறிது சேதாரம் கூட உண்டாக்க கூடாது !
3) போலீசார் தடியடி பிரயோகம் செய்தால் அமைதியாக அடியை வாங்கிக் கொள்ள வேண்டும் !
4) ரயில் நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்பு ஆங்காங்கே சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு எழுத்து மூலம் தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும் !
5) நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டால், அபராதத் தொகையைக் கட்டாமல் எல்லோரும் சிறைபுக வேண்டும்!
6) சிறைக்குள்ளே மற்ற கைதிகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்!
7) சிறைக்குள்ளே எல்லோரும் ஒரு குடும்பம் போல ஒற்றுமையாக இருக்க வேண்டும்!
8) போராட்டத்தில் கழகத் தோழர்கள் யாவரும் கருஞ்சட்டை அணிந்து செல்ல வேண்டும்!
இப்படிப்பட்ட கட்டுப்பாட்டை எந்தத் தலைவராவது அறிவித்ததாக வரலாறு உண்டா?
பெரியாரின் போர்க்களங்களிலிருந்து கற்றதும் பெற்றதும் எவை? என்ற கேள்விக்கு அவர் தந்த பதிலையே இந்த நூல் அறிமுகவுரையின் முடிவுரையாக நான் தர விரும்புகிறேன்!
“ஆயுதம் தாங்காமல், ஆட்சியைக் கைப்பற்றாமல், பொதுச் சொத்துகளுக்கு சேதாரம் இல்லாமல், காவலர்கள் மீதோ கொள்கை எதிரிகள் மீதோ தாக்குதல் நடத்தாமல், சிறைகளைக் கண்டு அஞ்சி நடுங்காமல், உடல் உபாதைக்களுக்காக ஓய்வு எடுக்காமல், தாமும் தமது தொண்டர்களும் அடிபட்டு, சிறைப்பட்டு, பலர் மரணப்பட்டு, மாற்றங்களைச் கொண்டு வந்த மாபெரும் வரலாறு படைத்தவர் தந்தை பெரியார்!’’
இதுபோன்ற அரிய தகவல்களையும், விவரங்களையும், சேகரித்து, அவற்றை ஆண்டுவாரியாகப் பிரித்து, படிப்போருக்குப் பேருதவியாக எழுதித் தந்த பேராசிரியர்,
இரா. சுப்பிரமணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் மலையளவு பாராட்டுகளும்!