Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மனிதர்களைத் தொடாமல் மாட்டை கட்டிப்பிடிப்பது எந்த தர்மம்?

நமது நாடு மதச்சார்பற்ற நாடு (Secular State) அரசுகள் (ஒன்றிய, மாநில அரசுகள் எந்த ஒரு மதத்தினையும் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தக்கூடாது.
நடத்தினால் அது அரசியல் விரோத நடவடிக்கையாகவே கொள்ளப்படும்.
ஆனால், 2014இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பா.ஜ.க. பிரிவான – எப்படியோ ‘வளர்ச்சி’ முகமூடியைப் போட்டு – ஆட்சியைப் பிடித்து, அடுத்த தேர்தலிலும் அதே வித்தைகளை வேறு விதமாகக் கையாண்டு பெருத்த (ரோடுரோலர் மெஜாரிட்டி) இடங்களைப் பெற்றதால், பகிரங்கமாகவே ‘ஹிந்து ராஷ்டிர ஆட்சியாகவே நடத்தி வரத் துணிந்துவிட்டது. பட்டாங்கமாய் அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே உடைத்து நொறுக்கி வருகிறது.
இதோ, ஓர் எடுத்துக்காட்டு:
காதலர்கள் தினம் என்று பிப்ரவரி 14ஆம் தேதியை உலகம் முழுவதும் காதலர்கள் கொண்டாடுகிறார்கள் – வாழ்த்துகள் பறிமாறிக் கொள்ளப்படுகின்றன.
இதனை ஆர்.எஸ்.எஸ். சனாதன அடிப்படையில் எதிர்க்கின்றது.
அகமும், புறமும் வாழ்க்கையின் இரு கூறுகள் என்பது திராவிடர் பண்பாடு.
புறநானூறு போல் அகநானூறு உண்டு. ‘குறுந்தொகை’ சங்க இலக்கியத்தில் இரண்டு காதலர்கள் பாடுவதாக ஒரு பாட்டை அடிக்கடி பலரும் குறிப்பிடுவதுண்டு.
‘‘ஞாயு ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்.’’
என்ற பாட்டு -இருவர் உள்ளமும் ஒரு உள்ளம்தான் என்கிறது.
இது தமிழர் – திராவிடர் பண்பாடு. இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உண்டு.
ஆரியர் கலாச்சாரத்தில் – வேதக் கலாச்சாரத்தில் பெண்களை அவர்கள் பூப்படையும் முன்பே, 7, 8 வயது குழந்தைகளாக இருக்கும்போதே ‘விவாகம்’ முடிக்கவேண்டும். (பால்ய விவாகம்)
இருவேறு கலாச்சாரப் பண்பாடுகள். குழந்தைத் திருமணங்கள் சட்ட விரோதமாகும்.
காதல், கலப்பு  (ஜாதி மறுப்பு)  மத மறுப்புத் திருமணங்கள் சட்ட சம்மதம் பெற்றவை.
காவிகள் காதலர் தினத்தைக் கண்டிப்பதில் என்ன அர்த்தம் உள்ளது?
முருகனைக் கடவுளாகக் கொண்டாடும் பக்தர்கள் வள்ளி என்ற குறவர் பெண்ணைக் காதலித்துத் திருமணம் (வற்புறுத்தித் திருமண நாடகம்  பலரும் அறிந்தது) செய்துகொண்டது உண்டே!
பின் எப்படி இவர்கள் எதிர்க்கிறார்கள். காதலர் தினத்தைக் கொச்சைப்படுத்திட கழுதைகளைப் பிடித்து புரோகிதர் அதனை நடத்தி வைத்து பரிகாரம் செய்வதாகக் காட்டிட இவர்களுக்கு என்ன தார்மீக உரிமை?
அதை ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி காவிக் கட்சியினர் காதலர்களைத் தாக்குவது என்ற வன்முறை வெறியாட்டம் வடம்  வடபுலத்தில்  இந்தக் காவித்தனக் காலித்தனம் அதிகம்.இந்த ஆண்டு ஒன்றிய அரசே மதச்சார்
பின்மைக்கு எதிராக, 14ஆம் தேதியன்று வேத முறைப்படி பசுவைக் கட்டித் தழுவி அரவணையுங்கள் என்று பிராணிகள் நல வாரியம் சுற்றறிக்கை விடுகிறது. இதைவிட அப்பட்டதுமான அரசியல் சட்ட விரோதச் செயல் வேறு உண்டா?
தமிழ்நாடு அரசும் கால்நடைத்துறையும் அல்லது வேறு துறைகளும் இந்த மாதிரி மதச்சார்பின்மை தன்மையைக் காற்றில் பறக்கவிடும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. நிச்சயம் அப்படி நடக்காது.
சகமனிதர்களை தொடக்கூடாதவர்கள், பார்க்கக் கூடாதவர்கள், தெருவில் நடக்கக்கூடாத
வர்கள் என்று ஜாதி பிரித்துக் காட்டும் – வர்ண தர்மத்தைத் தாங்கிப் பிடிக்கும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மனிதர்களை விட மாடுகள் அரவணைப்புக்கு உகந்தவர்கள்.
அதில்கூட பேதம் – எருமைகள், பால் அதிகமாகத் தந்தாலும்கூட, உழவுக்குக் காளை மாடுகள் அதிகம் பயன்பட்டாலும்கூட அவைகளைக் கட்டித் தழுவமாட்டார்களாம்!
‘பிராணிகள் நலவாரியம்’ என்பது அதன் பெயர் என்றால், அதில் கோமாதா, வேதக் கலாச்சாரம் என்று பசுவுக்கு மட்டும் ‘பிராமணத் தன்மை’ கற்பித்து, அதனைக் கட்டிப்பிடித்துத் தழுவுதல்.
ஆனால், இந்த சனாதன ஆரிய கலாச்சாரத்தை எதிர்ப்பதுதான் ஏறு தழுவுதல் _ சல்லிக்கட்டு என்ற வீரந்செறிந்த விளையாட்டுப் போட்டி!
இப்போது நடக்கவேண்டியது வேதக் கலாச்சாரம் – என்றால் ப விமானமோ 5ஜியும் வரலாமா?
பாதுகாப்புக்கு ரபேல் விமானங்களை வெளிநாட்டிலிருந்து (பிரான்ஸ்) இறக்குமதி செய்யலாமா?
மனிதநேயத்தைக் குழிதோண்டிப் புதைத்து மாட்டுக் காதல் மூலம் காதலர்களைக் சொச்சைப்படுதல் மனிதநேயத்திற்கு மற்ற பிராணிகளில் கூட பேதம் பிளவா?
இதனை திராவிடக் கழகம் கடுமையாகக் கண்டிப்பதுடன், வருகிற மார்ச் 20ஆம் தேதி ஜாதியற்ற சமூகம் உருவாக்க திராவிட மாடல் ஆட்சியின் சாதனையான, ஜாதி – தீண்டாமை ஒழிப்பு அடையாளங்களான ‘பெரியார் நினைவு சமத்துவப் புரங்’களுக்குச் சென்று அங்கு வாழும் அனைத்து ஜாதியினருடன் கலந்து உரையாடி, புத்தகங்களைப் பரிசு கொடுத்து திரும்பிவர முடிவு செய்வோம்.
அன்று (மார்ச்-20) சுயமரியாதைச்
சுடரொளி அஞ்சா நெஞ்சன் ‘‘பட்டுக்கோட்டை அழகிரி அவர்களது பிறந்தநாளாகும்.’’
தஞ்சை மாவட்டம் நெய்வாசல் பெரியார் நினைவு சமத்துவபுர வாழ் மக்களை நான்
பல தோழர்களுடன் சென்று சந்திப்பது பல ஊர்களிலும் தொடரட்டும்!

– கி.வீரமணி
ஆசிரியர்