– பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன்
அறிவுலகம் போற்றுகிற அறிஞர் அண்ணா
அய்யாவின் பெருந்தொண்டர்; இனத்தை நாட்டை
நெறிசார்ந்த பாதையிலே அழைத்துச் செல்லும்
நேர்மைக்கோர் இலக்கணமாய்த் திகழ்ந்த ஏந்தல்!
செறிவார்ந்த சிந்தனையால் தமிழர் நெஞ்சைச்
செதுக்கியவர், புதுக்கியவர் மறுப்பா ருண்டோ?
வெறிகொண்ட ஆரியத்தின் செருக்கை வீழ்த்த
வீறுடனே களம்காணும் விழிப்பைத் தந்தார்!
தென்னாட்டுப் பெர்னாட்சா, காந்தி என்பர்!
திராவிடப்பே ரியக்கத்தின் தோன்றல் அய்யா
மன்னுபுகழ்ப் பெரியாரின் தலைமை ஏற்றார்;
மதிப்புமிகு கலைஞர்க்குத் தலைவர் ஆனார்;
கண்ணியத்தைக் கடமையினைக் கட்டுப் பாட்டைக்
காலமெல்லாம் தொண்டர்க்கே உணர்த்தி வந்தார்;
பன்னரிய கேடிழைத்த மடமைத் தீங்கைப்
பகர்ந்திட்டார், பைந்தமிழர் நலன்கள் காத்தார்!
தமிழ்நாடு பெயர்சூட்டி மகிழச் செய்தார்;
தன்மதிப்புத் திருமணங்கள் செல்லும் என்றே
தமிழ்நாட்டுச் சட்டமன்றில் பதிவு செய்தார்;
தகுதியிலா இந்திக்கோ இடமிங் கில்லை;
தமிழ்நாட்டில் ஆங்கிலமும் தமிழும் கற்கும்
தகுவாய்ப்பால் இருமொழிகள் போதும் என்றார்;
நிமிர்ந்தெழவே தமிழர்க்கு வழிகள் காட்டி
நிறைகுடமாய் விளங்கியவர் தலைவர் அண்ணா!
இலக்கியங்கள் படைத்திட்டார்; காஞ்சி என்னும்
இதழோடு திராவிடநா டிதழும் நல்கி
நலம்சேர்த்தார் நாட்டுக்கும் மொழிக்கும்! மேடை
நாடகத்தில் திரைப்படத்தில் எழுத்தால் பேச்சால்
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர் நெஞ்சில்
உறைவிடத்தைக் கொண்டுள்ள தலைவர் ஆனார்!
மலர்போலும் மணக்கின்றார் நமது நெஞ்சில்
மாண்பார்ந்த தலைவர்வழிச் செல்வோம் நாமே!