தமிழ்நாட்டில் பிஜே.பி. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து அறநிலையத் துறையை நீக்கி ஆணையிடுவதாய் இருக்கும் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அப்போது பேசலாம் அண்ணாமலை!
இப்போது நீங்கள் கருநாடகாவிலும், புதுச்சேரியிலும் ஆட்சியில் இருக்கிறீர்கள்! அங்கே அறநிலையத் துறையை முதலில் நீக்கி ஆணையிடத் தயாரா?
ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலே செய்ய முடியாததை, ஆட்சிக்கே வரமுடியாத மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் செய்வேன் என்பது கேலிக்குரியது அல்லவா?
அது சரி. அறநிலையத் துறையை நீக்கிவிட்டு, அந்த நிருவாகத்தை யாரிடம் ஒப்படைப்பீர்கள்! கோயில் குருக்களிடமா? அல்லது அந்த ஊர்ப் பணக்காரரிடமா?
அறநிலையத் துறையைக் கொண்டுவந்தவர் நாத்திகர் அல்ல; பழுத்த ஆத்திகரான ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார். கோயில் நிருவாகச் சீர்கேடு, கொள்ளை, ஊழல் இவற்றை தடுக்கவே அறநிலையத் துறை கொண்டுவரப்பட்டது.
கோயில் சொத்துக்களை தனியாரிடம் கொடுத்தவர்கள் ஆத்திகர்கள்தான்! பழைய ஆவணங்களைப் பார்த்தால் இந்த உண்மை தெரியும். இதைக் களையவே இந்து அறநிலையத் துறையைக் கொண்டு வந்தார்கள்.
கோயில் நிலங்களை மீட்க அரசால்தான் முடியும்; தனிநபர்களால் முடியாது. எனவே, அறநிலையத் துறை கட்டாயம்.
பெரிய கோயில்களில் விழாக்கள் நடக்கும்போது பல லட்சம் பேர் கூடுகிறார்கள். இக்கூட்டத்தை ஒழுங்குபடுத்த, பாதுகாப்புத் தர, உரிய வசதிகளைத் தர தனியாரால் முடியுமா? அரசாங்கத்தால் தான் முடியும்?
எனவே, அரசியல் ஆதாயத்திற்காக அபத்தமான கருத்துகளைக் கூறக்கூடாது. அறநிலையத் துறையில் குறைகள் இருந்தால் அது களையப்பட வேண்டும். மாறாக, அதை நீக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. மக்கள் நலத்திற்கும் எதிரானது.