மஞ்சை வசந்தன்
‘சேது சமுத்திரத் திட்டம்’ என்பது 150 ஆண்டு கனவு. இதன் நோக்கம் மன்னார் வளைகுடாவையும் வங்காள விரிகுடாவையும் இணைத்து, ஆதம் பாலம் வழியாக இந்தியக் கடற்பரப்பில் ஒரு கடல் வழிப் பாதையை உருவாக்குவதே ஆகும். இதனால், இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கரைகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியத் தீபகற்ப எல்லைக்குள் கிழக்கு மற்றும் மேற்குக் கரைகளை இணைக்கும் கடல் வழிப்பாதை இல்லாததால், உருவாக்கப்பட்டதே சேது சமுத்திரத் திட்டமாகும்.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, இந்திய விடுதலைக்கு முன்பு, 1860இல் தொடங்கி பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. அதேபோல், இந்திய விடுதலைக்குப் பிறகும் அன்றைய மத்திய அரசுகளால் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பரிந்துரைகள் பெறப்பட்டன.
ஓய்வுபெற்ற துறைமுக வளர்ச்சி முதன்மை ஆலோசகர் சி.வி. வெங்கடேசுவரன், திட்டத்தை ஆய்வு செய்யும் தலைமைப் பொறியாளராக அன்றைய மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். இவர், 1968இல் தயாரித்த திட்ட அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டத்திற்காக முன்வைக்கப்பட்ட அனைத்து செயற்குறிப்புகளும் விரிவாக இடம் பெற்றிருந்தன.
சேது சமுத்திரத் திட்டத்தின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) நடத்திய பல்வேறு ஆய்வுகள் மூலம் இத்திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கோ, மீனவர் நலனுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற கோரி திராவிடர் கழகம் தொடர்ந்து போராடி வந்தது. மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடத்தி வந்தது. இதற்காகவே தனி மாநாடுகள் நடத்தப்பட்டன. நிதிப் பற்றாக்குறை உள்பட, பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட முடியாமல் இருந்து வந்தது.
2004இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் திருமதி. சோனியா காந்தியின் வழிகாட்டுதலோடு டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தபோது, தமிழர்களின் 150 ஆண்டுகால கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலம் கனிந்தது. ஜனநாயக முற்போக்குக் கூட்டணித் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக இத்திட்டம் செயலுக்கு வந்தது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற 2,427 கோடி ரூபாய் மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கான துவக்க விழா ஜூலை 2, 2005இல் மதுரையில் நடைபெற்றது. இவ்விழாவில், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் திட்டத்தைத் துவக்கி வைத்தார். இதில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள், தி.மு.கழகத் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர்.
சேது சமுத்திரத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு, திட்டம் துவக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து 60 சதவிகித பணிகள் முடிகிற தறுவாயில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தடையாணை பெற முடியாத நிலையில், 31.08.2007 அன்று உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் மூலமாக தடையாணை பெறப்பட்டது.
‘17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ராமர் பாலம் கட்டப்பட்டதாகவும், அதைத் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்’ என்கிற வாதத்திற்கு எந்த ஆதாரத்தையும் வழக்குத் தொடுத்தவர்கள் சமர்ப்பிக்கவில்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடையாணையைப் பெற்று, சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தி வைப்பதில் மதவாத சக்திகள் தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளன.
‘அன்று பாபர் மசூதியை இடித்தவர்கள், இன்றைக்கு ராமர் பாலத்தை இடிக்காதே’ என்று கூறுகிறார்கள். பாபர் மசூதிப் பிரச்சினையை வைத்து, மத்தியில் ஆட்சியைப் பிடித்து, ஆறாண்டு காலம் பதவி வகித்தவர்கள், மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு, ராமர் பாலம் பிரச்சினையைக் கையிலெடுத்தார்கள்.
ஆனால் இந்தத் திட்டம் குறித்த பி.ஜே.பி.யின் செயல்பாடுகளைப் பாரீர்.
மதிமுக நடத்திய அண்ணா பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் வாஜ்பாய் பேசியதைத் தருகிறோம்.
“இன்றைக்கு நம்முடைய வைகோ அவர்கள். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அந்தத் திட்டம் நிறைவேற்றப் படவேண்டும் என்பதில் நானும் அக்கறைகொண்டு இருக்கிறேன். ஆனால், தொடர்ந்து பதவியில் இருந்த அரசுகள் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முன்வராத காரணத்தால் இப்போது அந்தத் திட்டத்தின் செலவு அதிகமாக உயர்ந்து இருக்கின்றது.
சிறப்பான இந்த வேளையில் _ அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவில் _ இந்த மாபெரும் மக்கள் கடலுக்கு முன்னால் நான் அறிவிக்கிறேன் _ சேது சமுத்திரத் திட்டத்தை இந்த அரசு விரைவில் நிறைவேற்றும்.’’ (பலத்த கைதட்டல்)
6ஆவது கடல் வழிப்பாதையைத் தேர்வு செய்ததற்கான கோப்புகளில் பாரதி ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் எந்தெந்தத் தேதிகளில் கையொப்பமிட்டு ஒப்புதல் வழங்கியுள்ளனர் என்பது கீழே தரப்பட்டுள்ளது:
-09.03.2001 அருண் ஜெட்லி
29.10.2002 வி.பி. கோயல்
25.10.2002 சு. திருநாவுக்கரசர்
23.10.2003 சத்ருக்கன் சின்ஹா
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுவதைத் தடுக்கும் வகையில் இன்றைக்கு சர்ச்சையாக்கப்பட்டுள்ள 6-ஆவது கடல் வழிப்பாதையை அன்று தேர்வு செய்துவிட்டு, இப்போது அதற்கு நேர் எதிராக ‘அந்தப் பகுதியில் ‘ராமர் பாலம்’ இருக்கிறது. அதை இடிக்கக் கூடாது’ என்று 31.08.2007இல் சுப்பிரமணிய சுவாமியைத் தூண்டிவிட்டு வழக்குத் தொடுப்பது அரசியல் ஆதாயம் தேடுகிற சந்தர்ப்பவாதச் செயலாகும்.
தொழில் வகை வளர்ச்சி பயன்கள்:
அ) இந்தியக் கடல் எல்லைக்குள் ஒரு கடல்வழி நெடுஞ்சாலை அமையும்.
ஆ) இந்தியக் கிழக்குக் கடற்கரை துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிச் சரக்குகளின் போக்குவரத்துச் செலவு குறையும். எனவே, உலகச் சந்தையில் நம் ஏற்றுமதிப் பொருள்கள் போட்டி போட முடியும். இறக்குமதியாகும் கச்சாப் பொருள்களின் விலை குறையும் என்பதால், உற்பத்தியாகும் பொருள்களின விலையும் குறையும்.
இ) இந்தியாவின் கடலோர வணிகம் மேம்பாடு அடையும். அதனால், எல்லாத் துறைமுகங்களிலும் வேலை வாய்ப்பும், அதைச் சார்ந்த பகுதிகளில் தொழில் உற்பத்தியும் பெருகும்.
ஈ) தமிழ்நாட்டில் கடலோர வணிகமும், பன்னாட்டு வணிகமும் சிறக்கும். இதனால் புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இப்போது இருக்கும் சிறு துறைமுகங்கள் பெருமளவில் வளர்ச்சி அடையும். இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு புதிய சிறு துறைமுகம் அமையும்.
உ) மீனவர்களுக்கு நேரடியாகப் பயன்படும் வகையில் தூத்துக்குடிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் மீன்பிடித் துறைமுகங்கள் தேவைக்கேற்ப உண்டாகும்.
ஊ) தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் தொழில் வளர்ச்சி பெருகும். இதனால் பொருளாதார வளர்ச்சி அடையும். புது மீன்பிடித் துறைமுகங்களால், மீனவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.
எ) மன்னார் வளைகுடாவிலிருந்து, பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இக்கால்வாய் வசதியளிக்கும்.
ஏ) தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பெருகும்.
மீனவச் சமுதாயம் அடையும் நன்மைகள்:
சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவச் சமுதாயம் உள்ளிட்ட திட்டப்பகுதி மக்கள் அடையவிருக்கும் நன்மைகள்:
ஆதம்பாலம் வழியாக மன்னார் வளைகுடாவிற்கும் பாக் விரிகுடாவிற்கும் இடையில் மீன்பிடிப் படகுகள் தடையின்றிச் செல்ல முடியும்.
திட்டப் பகுதியில் இராமநாதபுரம் மாவட்டம் _ தொண்டி, தஞ்சாவூர் மாவட்டம் _ சேதுபாவாசத்திரம், நாகப்பட்டினம் மாவட்டம் -_ மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் மீன்களை இறக்கவும், சேகரிக்கவும் வசதி கொண்ட மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய சிறு துறைமுகங்கள் துரித வளர்ச்சி பெறும்.
மீன் பதப்படுத்தப்படும் நிலையங்கள், குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாகும்.
கடற்கரையோர மக்களின் வருவாயைப் பெருக்கும் விதமாக ‘கடல்சார் தொழிற் பயிற்சிகள்’ நடத்தப்படும்.
சேது சமுத்திரத் திட்டம் மற்றும் அதைச் சார்ந்த திட்டங்கள் மூலம் நேரடி மற்றும் துறைமுக வேலை வாய்ப்புகள் பெருகும்.
சேது கால்வாய் இந்திய _ இலங்கை கடல் எல்லையைச் சார்ந்து அமையப் போவதால், மீனவர்கள் எல்லை தெரியாமல் இலங்கை கடல் பகுதியில் சென்று அதனால் அவதிக்குள்ளாகும் நிலை நீங்கும்.
மேற்கண்டவற்றால், கடலோர மக்களின் _ குறிப்பாக மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெருகும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.
ராமர் பாலம் குறித்து இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிக்கை என்ன கூறுகிறது?
குருக்ஷேத்திரப் பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் ஆய்வியல் பேராசிரியராகப் பணியாற்றியவர் சூரஜ் பன். இவர் மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையைச் சேர்ந்த (Archaeological Survey of Inida – ASI) மத்திய தொல்பொருள் ஆய்வியல் ஆலோசனை வாரியத்தில் உறுப்பினராக உள்ளார். இவர், இந்திய வரலாற்றுக் காங்கிரஸின் தொல்பொருள் ஆய்வியல் பிரிவிற்கான தலைவரும் ஆவார். இவர் ‘ஃபிரண்ட் லைன்’ ஆங்கில இதழுக்கு (அக்.2007) அளித்த பேட்டியின் தமிழாக்கம்:
“இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மனிதனால் கட்டப்பட்ட பாலம் ஒன்று இருந்தது என்ற கூற்றுக்கு ஆதரவு நல்கக் கூடிய தொல்பொருள் ஆய்வு அல்லது மண்ணியல் ஆய்வு தொடர்பான சாட்சியங்கள் ஏதும் இல்லை. அமெரிக்க நாட்டின் ‘நாசா நிறுவன’ செயற்கைக் கோள்களும் நமது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்கைக் கோள்களும் எடுத்துள்ள படங்களிலிருந்து தெரிவது, கடலுக்கடியில் திடர்கள் அல்லது திட்டுகள் காணப்படுகின்றன என்பது மட்டுமே. மிகப் பழங்காலத்தில், புவியியல் வரலாற்றின் தொடக்கத்தில், இலங்கையும் இந்தியாவும் கடலால் பிரிக்கப்படாமல் தொடர்ச்சியாக அமைந்திருந்தன. பெரும்பாலும் கண்டத் திட்டுகளின் நகர்வின் விளைவால் (Continental Drift) இந்த இரண்டு நிலப்பரப்புகளும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் சென்று இடையே கடல் நீர் புகும் நிலை ஏற்பட்டது.
இவை சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம். இவ்வாறு பிரிந்த-பொழுது, இந்த இரண்டு நிலப்பரப்புகளுக்கும் இடையில் புகுந்த நீர்ப்பரப்பு ஒரு கால்வாயைப் போன்று தோன்றி, நிலத் தொடர்பு அறவே துண்டிக்கப்பட்டது. கடல் அலை செயற்பாடுகளின் விளைவால், மணற் திடர்கள் அல்லது திட்டுகளின் உச்சி நிரப்பப்பட்டு, சமநிலம் போலவும் அங்கே ஒரு சாலை அமைந்திருப்பது போலவும் தெரிகின்றது. இந்தியப் பெருநாட்டிற்கும் இலங்கைத் தீவிற்கும் இடையில் ஒரு பாலம் அமைக்கப்பட்டது என்று கூறுவதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் இல்லை.நீதிமன்றத் தடை ஆணையை நீக்க வேண்டும்!
தமிழர் தலைவர் வலியுறுத்தல்
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும், எதிர்காலத்தில் வரவிருக்கக் கூடிய ஓர் இக்கட்டான பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து இளைஞர்களை மீட்பதற்கும் _ ஏற்கெனவே கரோனா தோற்றால் இரண்டு ஆண்டுகள் பொது முடக்கத்தால் வேலை வாய்ப்புகள், பொருளாதார நிலைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கெல்லாம் ஒரு சரியான மாற்று வழியாக இன்றைக்கு இத்திட்டம் இருக்கிறது.
ஒன்றே ஒன்றைத்தான் அதற்குக் காரணமாக சொல்கிறார்கள். நீதிமன்றத் தடையானை இருக்கிறது என்று. தடையாணைக்கு இடமில்லை.
நீதிமன்றங்கள் என்னென்ன சொல்கின்-றனவோ அவை சரியாக இல்லை என்பதற்கு
நாடாளுமன்றத்தில் அவர்களே சொல்லியிருக்-கிறார்கள்.கொலிஜியத்தில் சொன்னபடி எங்களுக்கு வரவில்லை என்று அந்தப் பிரச்சினைக்கெல்லாம் இப்பொழுது போக வேண்டிய அவசியமில்லை.
தடை ஆணையை நீக்கவேண்டும்.
ஏனென்றால் இந்த வழக்கில் இதுவரை ஒன்றிய அரசு பதில் சொல்லவில்லை என்பதனால்தான் அந்த வழக்கைத் தள்ளி வைத்திருக்கிறார்கள்.
நாசாவிலிருந்து படம் பிடித்து வந்தது என்றார்கள். அங்கெங்கே ஆளைப் பிடித்தார்கள்.
ஆகவே, மிக முக்கியமாகக் கவனிக்க-வேண்டிய செய்தி நண்பர்களே. இன்றைய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வணிகர்
களுடைய வாய்ப்பு, தமிழ்நாட்டினுடைய செழுமை _ இவை அத்தனையையும் கருதினாலும், மூடநம்பிக்கையினால் அந்தத் திட்டம் முடக்கப்பட்டு இருக்கிறது என்று தமிழர் தலைவர் கூறியுள்ளார். எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு
ஒன்றிய அரசு உடனே சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.