முனைவர் வா.நேரு
கண்பார்வையோடு இருந்த சிறுவன், 3 வயதில் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொண்ட விபத்தால் கண்ணை இழந்தான். கண்ணை இழந்து வளர்ந்த அவன், எழுத்தறிவைக் கற்கவேண்டும் என விரும்பினான். 10 வயதில் பிரான்ஸில் கண்பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தான். அவர்தான் லூயிஸ் பிரெய்லி.
ஆசிரியர் சொல்லச் சொல்ல திருப்பிச் சொன்ன பிரெய்லியால் எழுதிக் காட்ட முடியவில்லை.தான் செவிவழியாகக் கற்ற எழுத்துகளை எழுத்து வடிவில் எழுத பிரெய்லி விரும்பினார்.செவி வழியாகக் கற்றுக்கொள்வதைப் போலவே தொட்டு உணர்ந்து எழுத்துகளை அறிய வேண்டும் என விரும்பினார். கண் பார்வை உள்ளவர்கள் எழுத்துகளைக் கண்களால் காண இயலும். அதனை உணர்ந்து எழுத்து வடிவை எழுத முடியும். கண்பார்வையற்ற தன்னைப் போன்றவர்கள் எழுத்து வடிவை உணர்வது எப்படி,எழுதுவது எப்படி எனச் சிந்தித்தார்.தொடர் முயற்சியின் விளைவாகத் தன்னுடைய 20-ஆம் வயதில், 1824இ-ல் பிரெய்லி எழுத்துகளை,பார்வையற்றவர்கள் கற்றுக்கொள்ளும் விதமாக உருவாக்கினார்.
பின்னர் அதில் பல்வேறு மாற்றங்கள் செய்து 1829-ஆம் ஆண்டு பிரெய்லி முறையின் முதல் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த நூலின் தொடர்ச்சியாக 1837-ஆம் ஆண்டு பிரெய்லி பணியாற்றிய பள்ளி நிருவாகம் ‘பிரான்ஸின் வரலாறு’ என்னும் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அறிவியல், கணிதம் தொடர்பான பிரெய்லி எழுத்து முறை புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
“ஒருவன் வாழ்வதென்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமைய வேண்டும்.” என்றார் தந்தை பெரியார். தனது வாழ்க்கையால் பல கோடி பேர் கற்றவர்களாக மாறுவதற்கான களத்தை, கருவியை அமைத்துக் கொடுத்ததால் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் லூயிஸ் பிரெய்லி. அவருடைய
பிறந்த தினம் ஜனவரி 4. 2018இ-ல் அய்க்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை பிரெய்லி பிறந்த ஜனவரி 4ஆம் நாளை உலக பிரெய்லி தினம் என்று அறிவித்தது. 2019- முதல் ஜனவரி 4 என்பது உலக பிரெய்லி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது; கொண்டாடப்படுகிறது.
உலக அளவில் ஏறத்தாழ 39 மில்லியன் மக்கள் முழுமையாகப் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.284 மில்லியன் மக்கள் பார்வைக் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என உலக சுகாதார மய்யத்தின் புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. சதவிகித அளவில் உலகத்திலேயே மிக அதிக அளவு பார்வையற்றவர்கள் இருக்கும் நாடு இத்தாலி. பார்வைக் கோளாறுக்கு கண்ணாடி அணிபவர்கள் மிக அதிகம் இருக்கும் நாடு பெல்ஜியம் என ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.பார்வையற்றவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு மருத்துவத்தின் மூலம் கண்பார்வை கிடைக்கச் செய்யலாம் எனக் குறிப்பிடுகிறார்கள்.
பார்வையற்றவர்கள் பார்வை பெற கண்கள் தேவை. பெரியாரியலைப் பின்பற்றும் தோழர்கள் உடல் கொடை, விழிக்கொடை இரண்டையும் இறந்த பின்பு செய்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிக நீண்டகாலமாக இருக்கும் நடைமுறை விழிக்கொடையாகும்.இந்திய நாத்திகக் கூட்டமைப்பில் இருக்கும், இந்திய ஒன்றியத்தின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் 76 அமைப்புகளைச் சார்ந்தவர்களும் விழிக்கொடை செய்கிறார்கள்.அதனை முன்னரே பதிவு செய்து, இறந்தவுடன் முறையாக அளிக்கிறார்கள்.இறப்பவர்களின் கண்கள் எல்லாம் தானம் செய்யப்பட்டால் சில மாதங்களில் உலகில் இருக்கும் பெரும்பாலான பார்வையற்றவர்கள் பார்வை பெற்று விடுவார்கள். சில மதங்களைச் சார்ந்தவர்கள், தங்கள் மத நம்பிக்கையால் கண்களைத் தானம் செய்ய முன் வருவதில்லை.அதனை அவர்கள் மதம் அங்கீகரிப்பதில்லை.கண்தானம் செய்தால், தாங்கள் சொர்க்கத்திற்குப் போகமுடியாது என்னும் நம்பிக்கை சிலரிடம் இருக்கிறது. இப்படிப்பட்ட,அறிவியலுக்கு ஒவ்வாத நம்பிக்கைகளும் பார்வையற்றோரின் சதவிகிதம் உலகில் குறையாமல் பார்த்துக்கொள்ளும் கொடுமையைச் செய்கின்றன. இதைப் போக்க பெரியாரியல் வழியில் அமையும் உண்மைப் பிரச்சாரமே தீர்வு.
பெரியார் இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள், தோழியர்கள் ஜனவரி- 4 பிரெய்லி தினத்தை ,நாம் விழிக்கொடை விழிப்புணர்வு நாளாக எடுத்துக்கொண்டு பிரச்சாரம் செய்யவேண்டும்.
கண்பார்வைக் குறைபாடுகளை நீக்க ஒரு பக்கம் அறிவியலும், மருத்துவமும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் தங்கள் அறியாமையால் கண்பார்வையை இழக்கும் நிகழ்வுகளும் நிகழ்கின்றன.
சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,உடலைக் கவனிக்காமல் இருக்கும் நிலையில் தங்கள் கண்பார்வையை இழக்கிறார்கள்.உலகம் முழுவதும் 17 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பாதி பேருக்கு கண்பார்வைக் குறைபாடோ, பார்வை இழப்போ ஏற்படும் அபாயமோ இருக்கிறது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எந்தவிதமான முன் அறிகுறிகளும் இல்லாமல், நீண்ட நாள் நீரிழிவு நோயாளிகளின் கண்பார்வை போவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று மருத்துவம் கூறுகிறது. முறையான மருந்து ,மாத்திரைகள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, அடிக்கடி உடலில் சர்க்கரை நோயின் அளவைத் தெரிந்து கொண்டு கட்டுப்படுத்துதல் போன்றவை மூலமாக நோயைக் கட்டுப்படுத்தலாம்.அதன் மூலம் பார்வைக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நேரத்தில் நான் படித்த ‘இன்ஸ்பயரிங் இளங்கோ ‘ என்னும் புத்தகம் நினைவுக்கு வருகிறது. ஆங்கிலத்தில் Ph.D, பல விருதுகள், பல பேருக்குவேலை கொடுக்கும் இளங்கோ, பல ஆயிரக்கணக்கானோர் மத்தியில் சிறப்புரை ஆற்றும் இளங்கோ என அவரின் சாதனைகள் பிரமிக்க வைப்பதை, எனக்கு sight இல்லாமல் இருக்கலாம். அதற்காக நான் வருத்தப்படவில்லை, உட்கார்ந்து அழுது கொண்டிருக்கவில்லை. எனக்கு இருக்கும் vision-மூலம் இந்த உலகத்தை வியப்படைய வைக்கிறேன் என்று வியப்படைய வைத்திருக்கும் இளங்கோ பற்றிய அந்தப் புத்தகம் மிகச் சிறந்த புத்தகம். பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, படிக்கும் அனைவருக்கும் மிகச் சிறந்த தன்னம்பிக்கை அளிக்கும் அந்தப் புத்தகம் நினைவுக்கு வந்தது.
ஜனவரி 4 உலகப் பிரெய்லி நாள் என்பது நம்மைப் போன்றவர்களுக்கு லூயிஸ் பிரெய்லி அவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கு, பார்வை மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வதற்கு, அவர்களின் வாழ்க்கை உயர்வுக்கு இருக்கும் வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கு,தமிழ் நாடு,ஒன்றிய அரசின் பார்வை மாற்றுத் திறனாளிகள் உயர்வுக்கான திட்டங்கள் பற்றித் தெரிந்து கொள்வதற்கு, விழிக்கொடை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு,நாம் விழிக்கொடைக்கு முறையாகப் பதிவு செய்துவிட்டோமா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, கண் பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து கொள்வதற்கு, -அதனைப் பற்றிய விழிப்புணர்வை நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கு ஏற்படுத்துவதற்கு எனப் பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு அடிப்படையான நாளாக ஜனவரி 4ஆம் நாளை அமைத்துக்கொள்வோம்.