நெசந்தானுங்க

ஏப்ரல் 01-15

இடஒதுக்கீடு தப்புன்னு அசிம் பிரேம்ஜியே சொல்லிட்டாரா?

– பவானந்தி

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து என்றால் எந்த மூலையில் யார் சொல்லியிருந்தாலும் தேடிப் பிடித்துப் பரப்பி, அப்படி சொன்னதற்காகவே சொன்னவரைப் புகழ்ந்து செய்திகள் வெளியிடுவதில் பார்ப்பன, முதலாளித்துவப் பத்திரிகைகளுக்கு தனிப் பிரியம்! இணைய தளங்களில் சொல்லவே வேண்டாம்.

கொஞ்சம் ஒயிட் காலர் வேலைகளுக்குப் போய்விட்ட பார்ப்பனரல்லாதார்களும் இட ஒதுக்கீடு தான் இந்தியாவைக் கெடுக்கிறது என்ற கருத்தை மூளைக்குள் ஏற்றிக் கொண்டு அதை பெருமையாகப் பேசவும் செய்வார்கள். அப்படி ஒரு கருத்து கிடைத்தால், அதைப் பரப்பு பரப்பு என்று பரப்பிவிடுவார்கள். அதுவே அசிம் பிரேம்ஜி சொன்னதாய் இருந்தால்…, சும்மா விட்டுவிடுவார்களா? அவர் என்ன சொன்னார் தெரியுமோ? கேளுங்கோ…!

எல்லா வேலைகளுக்கும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதை ஆதரிக்கும் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளையும் நான் ஆதரிக்கிறேன்.

நமது கிரிக்கெட் அணியில் இருந்து இதனைத் தொடங்குவோம். 10 விழுக்காடு முஸ்லிம்களுக்குத் தந்துவிட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்/ பழங்குடியினர் ஆகியோருக்கு 30 விழுக்காடு வழங்கிவிட வேண்டும்.

இதற்கேற்ற வகையில் கிரிக்கெட் விதிகளையும் மாற்றி அமைக்கவேண்டும். எஸ்.சி/எஸ்.டி ஆட்கள் விளையாடுபோது எல்லையை சுருக்கிவிடவேண்டும்.  எஸ்.சி/எஸ்.டி / ஓ.பி.சி ஆட்கள் 4 அடித்தால் 6 ஓட்டங்கள் என்றும், 6 அடித்தால் 8 ஓட்டங்கள் என்றும் கணக்கிடவேண்டும். அவர்கள் 60 ஓட்டங்கள் எடுத்துவிட்டாலே அதை 100 அடித்துவிட்டதாக அறிவித்துவிட வேண்டும்.

கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தி, அக்தர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள், இவர்களுக்கு வீசும்போது வேகமாகப் பந்து வீசக்கூடாது என்று சொல்லிவிடவேண்டும். அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் தான் வீசவேண்டும். அதற்கு மேல் வேகம் இருந்தால் அதை சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதவேண்டும்.

ஒலிம்பிக்கிலும் இதேபோல், 100 மீட்டர் ஓட்டத்தில்  எஸ்.சி/எஸ்.டி / ஓ.பி.சி ஆட்கள் 80 மீட்டர் ஓடினாலே தங்கப்பதக்கம் வழங்கப்படவேண்டும். இட ஒதுக்கீடு மூலம் வருபவர்களையே அமைச்சர்கள், அரசியல்வாதிகள் செல்லும் விமானங்களுக்கு பைலட்டுகளாகப் போடவேண்டும். (இதன் மூலம் நாட்டைக் காப்பாற்றலாம்). இடஒதுக்கீட்டில் படித்த மருத்துவர்களைத்தான் அமைச்சர்கள், அரசியல்வாதிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய வைக்க வேண்டும். (இது நாட்டைக் காக்கும் இன்னொரு வழி)

இவ்வாறு நடந்துகொண்டால் இந்தியா வெகுவேகமாக முன்னேறிவிடும். நாமும் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.
இப்படி கிண்டலத்திருக்கிறார் அசிம்பிரேம்ஜி!

யார் இந்த அசிம் பிரேம்ஜி? கங்கை அமரனின் மகன் ஒருத்தன் படத்தில எல்லாம் நடிக்கிறானே அந்தப் பையனா?

ச்சேச்சே… இவர் யாரு தெரியுமோ? சாட்சாத் இந்தியாவின் முதல் பெரும் பணக்காரராக இருந்தவர்; இப்போதும் முதல் நிலை பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர்; விப்ரோ கணினித் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர்; மென்பொருள் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்துக்குக் காரணமானவர்களில் ஒருவர். அவரே இட ஒதுக்கீட்டைக் கடுமையா விமர்ஜனம் பண்றாருன்னா… சும்மாவா ஷொல்லுவார்! நாட்டைக் கெடுக்கிறதே அதுதாங்காணும்! என்று கிராப்புக்குள் ஒளிந்து கிடக்கும் சிண்டைச் நீவிவிட்டபடி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் இன்றைய பார்ப்பனர்கள். அப்படியா அசிம் பிரேம்ஜியே சொல்லிட்டாரா? அப்போ சரியாத் தான் இருக்கும் என்கிற ரீதியில் நம்மாட்களுக்ம் நம்பி ஏற்றுக்கொண்டுவிடுவார்கள்.

ஒருவன் சம்பாதித்த சொத்தும் கூட அவனுடைய குடும்பத்தாருக்கு சென்று சேராமல் சமூகத்திற்கு செல்லவேண்டும் என்ற கருத்துப்பட பேசியவராயிற்றே விப்ரோ பிரேம்ஜி. அவரா ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இவ்வளவு வெறுப்புடன் கருத்து சொல்லியிருக்கிறார்? என்ற அய்யம் எழுவது இயற்கை. அவர் எப்போது இந்தக் கருத்தை சொன்னார். அதற்கான செய்தி மூலம் என்ன என்ற தகவல்கள் எல்லாம் வழக்கமான ஃபார்வர்டு மெயில்களில் இருக்காது. எனவே அது குறித்துத் தேடியபோது தெரிந்தது – இது அசிம் பிரேம்ஜியின் கருத்து அல்ல என்ற உண்மை.

வழக்கம்போல பன்னெடுங்காலமாக இணையதளங்களில் யாராலோ எழுதப்பட்ட கருத்து, அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று மாறி மாறி இப்போது அசிம் பிரேம்ஜி சொன்னார் என்று பரப்பப்படுகிறது. சொல்ல முடியாது… இன்னும் சில நாட்களில் இதேபோன்ற ஒரு கருத்தை அம்பேத்கர் சொன்னார் என்று கிளப்பிவிட்டாலும் விடுவார்கள். கடந்த ஆறு ஆண்டு களுக்கும் மேலாக விவாதக்களங்களில் வேறு புதிய கருத்துகள் இல்லா மல் இதே விசயத்தை காப்பி & பேஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள் தகுதி, திறமை வாய்ந்த உயர்ஜாதிக் கூட்டத்தினர். 2007-இல் இந்தக் கட்டுரை யை ஷைலேந்திர குப்தா என்பவர் தன்னுடைய கட்டுரையாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுவின் இணையதளத்தில் வலைப்பூ பிரிவில் எழுதி யிருக்கிறார். ஆனால் அதற்கும் முன்னதாகவே இந்தக் கருத்து இணையதளங்களில் வெளிவந்திருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவரும், இந்துத்துவவாதியுமான முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி வி.சுந்தரம் என்பவருடைய கட்டுரை. விடுதலை, சமமின்மை, அரசின் பகை எண்ணம் – வழங்குவது கோட்டாராஜ் என்ற கட்டுரையில் மேற்கண்ட வாசகங்களை கனடிய, இந்தியக் குடிமகனான அர்பான் பட்டேல் என்பவர் கூறியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். இதுதான் அதிகபட்ச மூலம்! எனில், அசிம்பிரேம்ஜி சொல்லாத இந்தக் கருத்தை அவரின் மீது ஏற்றிச் சொல்வதேன்? இதே கருத்துடையவர் தானே பார்ப்பனரான இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, அவர் சொன்னதாகப் போடலாமே! நாராயணமூர்த்தி எதற்கு திட்டு வாங்க வேண்டும்? பார்ப்பனரல்லாத ஒருவர் சொன்னால் தானே இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து வலுப்படும். தங்களுடைய கருத்து, விளம்பரமாக வேறு யாரோ ஓராளை இழுத்துவந்து பலிகடா ஆக்குவது தானே எப்போதும் ஆதிக்கவாதிகளின் இயல்பு! இப்படிப்பட்ட, குறைந்தபட்ச அறிவு நாணயம் கூட இல்லாதவர்கள் தான் இத்தகைய கருத்துகளைப் பரப்புவோர் என்பது விளங்கவில்லையா?

சரி, போகட்டும்.. இது அசிம் பிரேம்ஜி சொன்னதோ? அர்பான் பட்டேல் சொன்னதோ? இந்த வாசகங்களில் இருக்கும் வன்மம் நிறைந்த கருத்துகள் உண்மையானவையா?

கிரிக்கெட்டிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. இல்லையென்றால் 11 பேர் விளையாடு விளையாட்டில் 7 பேர் பார்ப்பனர்கள் என்ற அளவில் தான் கடந்த பல ஆண்டுகளாக இவர்களின் ஆதிக்கம் இருந்தது. அதிலும் குறிப்பிட்ட மாநிலத்துக்காரர்கள் ஆதிக்கம் செலுத்திய காலம் எல்லாம் உண்டே. சரியான பிரதிநிதித்துவம் இல்லாத இடங்களில் இட ஒதுக்கீட்டை அவசியம் கொண்டுவந்து தானே ஆக வேண்டும்.

மற்றபடி இவர்கள் சொல்வதில் உள்ள கிரிக்கெட் ஓட்டங்கள் என்பதை மாற்றிவிட்டு மதிப்பெண்கள் என்று போட்டுப் பாருங்கள். அதைத்தானே இவர்கள் சொல்ல வருகிறார்கள். அப்படி வைத்துக் கொண்டால் இந்தக் குற்றச்சாட்டுகளெல்லாம் உண்மையா?

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் என்று பார்த்து விடைத்தாள்கள் திருத்தப்படு கின்றனவா? அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதில் சலுகை காட்டப்படுகிறதா? அவர்களுக்கு மட்டும் தனி வினாத்தாள்கள் வழங்கி எளிமையான கேள்விகள் கேட்கப்படுகின்றனவா? தேர்ச்சி மதிப்பெண் மற்றவர்களை விடக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? மேற்படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களில் மற்றவர்களுக்கு 90 என்றும், இவர்களுக்கு 50 என்றுமா நிர்ணயிக்கப்படுகிறது? உயர்கல்வி நிறுவனங்கள் என்பவற்றிலேயே மற்றவர்களுக்கு தகுதி மதிப்பெண்கள் 80 என்றால், அதில் 10 சதவிகிதம் குறைத்து 72 என்று வைத்துக் கொள்ளலாம் என்பதுதானே அதிகபட்ச வாய்ப்பு. ஆனால் அதிக மதிப்பெண் எடுத்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் எல்லாம் பொதுப்போட்டிக்கு செல்ல முடியா வண்ணம் தடைகளை ஏற்படுத்தி, அவர்களை இடஒதுக்கீட்டு அளவுக்குள் வரையறை செய்வதற்கு எத்தனை தகிடு தித்தங்கள் செய்யப்படுகின்றன. அதன்மூலம் அறிவிக்கபபடாத இடஒதுக்கீட்டை அனுபவிக்க எவ்வளவு சூழ்ச்சிகளை அரங்கேற்றுகிறது பார்ப்பன உயர்ஜாதிக் கூட்டம் என்பது அவர்கள் செயல்பாடுகளில் வெளிப்பட்டு சந்தி சிரிக்கிறதே!

ஆனால்  ஏதோ தேர்வில் தோற்றவர்களுக் கெல்லாம் மருத்துவப் படிப்புக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதுபோல கார்ட்டூன் போட்டு கேலி செய்த போலிக் கூட்டம் அல்லவா இது? அப்படித்தான் பொய்க் கருத்துகளைப் பிரச்சாரம் செய்யும். அதற்கு உண்மைகளை எடுத்துச்சொல்லி உரிய மறுப்புகளை நாம் கொடுத்துத் தான் ஆக வேண்டும். இல்லையென்றால், இன்று அசிம் பிரேம்ஜிக்கு ஏற்பட்ட நிலை – நாளை அம்பேத்கருக்கோ, பெரியாருக்கோ நிகழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *