ஆய்வுக் கட்டுரை: புத்தம் – பெரியாரியம் – இந்துத்துவம்

2023 கட்டுரைகள் ஜனவரி 1-15, 2023

தஞ்சை பெ. மருதவாணன்

7. “சில வகுப்பாருக்கு (பிராமணர்களுக்கு) உரியதையும் புறக்கணித்துச் சர்க்காரே பிற்பட்ட வகுப்பினர்க்கு அதிகப்படி சலுகை காட்டுவதால் தான் இந்த விஷயத்தில் கொஞ்சம் கம்யூனல் பேச வேண்டியிருக்கிறது’’ “(விடுதலை’’ 22.11.2021 பக்கம் 2) என்று சமூக நீதிக்கு எதிராக “லோககுரு’’ என்று அவர்களால் அழைக்கப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் கூறியிருப்பது இவரை “லோக்கல் குருவாக’’ அல்லவோ காட்டுகிறது?
8. “சத்திரியர்களைச் சத்திரியர்கள் என்று அழைத்தால் யாருக்கும் வலிப்பதில்லை. பிராமணர்களைப் பிராமணர்கள் என்று அழைத்தால் யாருக்கும் தவறாகப் படுவதில்லை. வைஸ்யர்களை வைஸ்யர்கள் என்றால் எவரும் அமைதி காக்கின்றனர். சூத்திரர்களைச் சூத்திரர்கள் என்று சாஸ்திரப்படி அழைத்தால் மட்டும் பலருக்கும் ஏன் கோபம் வருகிறது? அசிங்கத்தை மிதித்ததுபோல் பார்க்கிறார்களே ஏன்? ஏனென்றால் சூத்திரர்கள் சாஸ்திரங்களைப் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர். அவர்களுக்குப் புரிதல் இல்லை.’’
(அதாவது முட்டாள்கள்) என்று பா.ஜ.க.வின் போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யாசிங் தாக்கூர், மத்தியப்பிரதேசம் சேகூர் என்னும் இடத்தில் 13.2.2020இல் ஆணவத்துடன் கூறியிருப்பது எதைக் குறிக்கிறது? இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் உயர்ஜாதி ஆணவம் இந்துத்துவ ஆரியத்தின் தலைக்கேறி வழிகிறது என்பதேயன்றி வேறு என்ன?
(விடுதலை 16.9.2022)
9. சித்பவன் பார்ப்பன உயர்வகுப்பைச் சேர்ந்த பாலகங்கார திலகரின் தீவிர வருணப் பற்றுக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு இது. அண்ணல் அம்பேத்கர் தொடங்கிய “மூக்நாயக்” (ஊமையர்களின் தலைவன்) என்ற இதழுக்கான விளம்
பரத்தை அதற்குரிய கட்ட
ணத்தைச் செலுத்தி திலகரின் “கேசரி” இதழில் வெளியிட மறுத்தார். (சமூகநீதி எனும் தங்கள் நூலில் (பக்கம் 186) பேரா.க. நெடுஞ்செழியன், சக்குபாய் ஆகியோர் தனஞ்செய்கீர் எழுதிய அம்பேத்கர் வரலாறு நூலில் (பக்கம் 41) காணும் இச்செய்தியை எடுத்துக்காட்டுகின்றனர்.)

மகளிர் உரிமையை நசுக்கும் மனுவாதிகள்

“பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்பது திருக்குறள் (எண் 54) வழங்கும் திராவிடக் கலாச்சாரம்! ஒரு வேளை “பெண்ணின் இழிதக்க யாவுள?’’ என்பது இந்துத்துவ ஆரியக் கலாச்சாரம் போலும்! அதனை மெய்ப்பிக்கும் ஒப்புதல் வாக்குமூலங்கள் அவர்தம் பேச்சுகள் எழுத்துகளில் வெளிப்படுகின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை இங்குக் காண்போம்.
1. பெண்களோ, வைஸ்யர்களோ சூத்திரர்-
களோ, நீசகுலத்தில் பிறந்தவர்களோ எவராயினும் என்னைப் பணிந்தால் பரகதி அடைவர்.’’ (பகவத் கீதை அத் 9.சு.32) பெண்கள் உள்ளிட்ட மேற்கண்ட அனைவரும் கீழானவர்கள் என்றல்லவோ இங்கு சுட்டப்படுகிறது?
2. பெண்ணடிமைக் கருத்துக் குவியல் நிறைந்த குப்பைக் கூடமாக நாற்றம் வீசும் மனு(அ) தர்மப் பிரிவுகளில் ஒருசிலவே
இவை:
அ) பாலியத்தில் தகப்பன் ஆஞ்சையிலும் யௌவனத்தில் கணவன் ஆஞ்சையிலும் கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆஞ்சையிலும் இருக்க வேண்டியதேயல்லாது ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக்கூடாது. (அத்.5.சு.148)
ஆ) “கணவன் துர்ராச்சாரமுள்ளவனாக விருந்தாலும் அந்நிய ஸ்திரீலோவனா யிருந்தாலும் நற்குணமில்லா தவனாயிருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது’’ (அத்.5.சு.154)
இ) “படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.’’ (அத்.9. சு.17)
ஈ) மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங்களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கு திருஷ்டாந்திரமாக அந்த விபசாரத்திற்கு சுருதியில் சொல்லிய பிராயச்சித்தத்தைக் கேளுங்கள் (அத்.9. சு.19)
3. “பெண்கள் உடன்கட்டை ஏறுவதை ஆதரிக்கும் துவாரகா சங்கராச்சாரியார் உடன்கட்டை ஏறினால் அந்தப்பெண்கள் சேலை எரியாது என்றும் அது புனிதமானது என்றும் அதை எடுத்து பூஜை பண்ணுவார்கள்’’ என்றும் கூறுகிறார் (“விடுதலை’’ 12.4.2016)
4. சதிக்கு எதிராக அரசு சட்டம் கொண்டு வந்ததை எதிர்த்த பூரி சங்கராச்சாரியார் தாமே விரும்பிப் பெண்கள் உடன்கட்டை ஏறுவதை ஆதரிப்பதாகக் கூறுகிறார். (தி வீக் இதழ்) அக்டோபர் 11 மற்றும் 17, 1987. ‘விடுதலை’ ஞாயிறு மலர் 19.4.2015)
5. சதிக்கு ஆதரவாகக் காஞ்சி சங்கராச்சாரியார் ‘சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கூற்று இது: “அநேக பதிவிரதைகளுக்கு அவர்களுடைய பதிபக்தியினாலேயே சிதாக்கினி சந்தனமாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமலேயே இருக்குமாம். அதை எடுத்து பூஜை செய்வது உண்டு. (தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி பக்கங்கள் 967_968. ‘விடுதலை’ 31.10.2020)
6. உடன்கட்டை ஏறுவதில் பார்ப்பனர்களுக்கு மட்டும் (அதாவது பார்ப்பனப் பெண்களுக்கு மட்டும்) விதிவிலக்கு உண்டு என்பது 18 ஆம் நூற்றாண்டில் வெளிவந்த டிரையம்பா காவ்ய ஜீவன் எனும் நூல் கூறுகிறது. (‘விடுதலை’ 13.5.2018, பக்கம் 4)
7. “கணவனைவிட மனைவி அதிகமாகக் கல்வி பெற்றிருப்பதும் கணவனைவிட உயர்பதவியில் அமர்ந்திருப்பதாலும் ஈகோ தோன்றி விவாகரத்தில் முடிகிறது என்றும், கணவன் தேவைகளை நிறைவேற்றாமலும் வீட்டு வேலைகளைக் கவனிக்காமலும் அவனுக்கு இன்பம் தரும் கடமையை நிறைவேற்றாமலும் இருக்கும் மனைவி தேவையில்லை. அவளுக்கான ஒப்பந்தம் முடிந்து-விட்டது என்று பொருள். அவளை விலக்கிவிட வேண்டும். (“ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 14.11.2014 இல் இந்தூரில் பேச்சு. ‘விடுதலை’ ஞாயிறு மலர் 19.4.2015)
8. பெண்கள் வேதம் ஓத உரிமை இல்லை என்பதால் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணை வேதத்தைக் கூற-விடாமல் மேடையிலிருந்து கீழே இறங்கச் செய்தார் பூரி சங்கராச்சாரியார்.
(‘விடுதலை’ 31.10.2020)
9. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக்-கூடாது என்பது காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதியின் கருத்து. (‘தி பயனீர்’ இதழ் 17.3.1977. ‘விடுதலை’ 31.10.2020)
10. விதவைப் பெண்களை இழிவு செய்யும் வகையில் அவர்களைத் தரிசு நிலத்துக்குச் சமமானவர்கள் என்று கூறியதோடு யாதொரு வேலைக்குப் போகும் பெண்களால் ஒழுக்கக் கேட்டுக்கு வழியேற்படும் என்றும் கூறியவர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி
(‘விடுதலை’ 31.10.2020) பக்கம்.4)
11. பாரதி காட்டும் புதுமைப்பெண் என்று பார்ப்பனியம் தம்பட்டம் அடிக்கும் நிலையில் பாரதி கட்டுரைத் தொகுப்பு என்ற நூலில் மகாகவி பாரதியார் கூறுவதாவது: ராஜ்ய விவகாரங்களில் பெண்கள் தலையிடக்கூடாது. அதாவது சட்டசபைக்கோ நாடாளு மன்றத்
துக்கோ பெண்கள் போகவேண்டிய அவசியம் இல்லை. (விடுதலை 13.3.2021 பக்கம் 4)
12. ‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை’ எனும் பாலகங்காதர திலகரின் முழக்கத்திற்குள் ஒளிந்திருக்கும் பொருள் என்னவென்றால் “பிராமணிய ஆட்சியே எனது பிறப்புரிமை’ என்பதாகும். பெண்ணுரிமையை நசுக்கும் இவரது பிற்போக்குக் குரல் இது.
1. சதுர்வர்ணம் என்ற ஜாதிய முறை பிரிட்டிஷ் ஆட்சியில் சிதைந்துவிட்டது.
2. பெண்களின் பெண்மைக் குணங்களை ஆங்கிலக் கல்வி நீக்குவதாக உள்ளது.
3. பெண்களுக்குப் பிராந்தியக் கல்வி, நன்னெறிகள், ஊசி வேலைப்பாடுகள் மட்டுமே கற்பிக்க வேண்டும்.
4. பெண்கள் வீட்டு வேலையைக் கவனிக்க வேண்டியிருப்பதால் (அதிக நேரம் கல்வி கற்பிக்காமல்) தினம் மூன்று மணி நேரம் மட்டுமே அவர்களுக்குக் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
5. பெண்களுக்கான பாடத் திட்டத்தைச் சரி செய்யாவிட்டால் கணவனை மதிக்காத பெண்கள் உருவானால் ஆச்சரியப் படுவதற்
கில்லை.
6. 1915இல் டி.கே. கார்வே என்பவர் புனேயின் பெண்கள் பல்கலைக்கழகத்தைத் தொடங்கிய போது அதைத் திலகர் எதிர்த்தார்.
7. பெண்கள் கணவன் வீட்டில் வேலை செய்வதும் ஒரு சிறந்த மருமகளாக இருப்பதும் போதுமானது. பெண்களுக்கு இலவச மற்றும் கட்டாயக்கல்வி அளிக்கும் திட்டத்தைத் திலகரின் “தி மகாராட்டா” (The Maharatha) எனும் இதழ் எதிர்த்தது. (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் பரிமளா ராவ் எழுதிய “திலகர் பெண்களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் கல்வி கற்பிப்பதை எதிர்த்தாரா?” என்ற கட்டுரை. பி.பி.சி. தமிழ் இணையதளத்தில் 11.8.2020 அன்று வெளியிடப்பட்டதன் சுருக்கம். தொகுப்பு. கோ. கருணாநிதி)
13. (அ) திராவிடப் பெண்மணியை இழிவு செய்த ஆரியத்தின் வக்கிரத்தை விளக்கும் காட்சி இது. “நாக்கட்டையா” என்ற பெயரில் தெருக்கூத்தாக வாரணாசியில் ஆண்டுதோறும் நடைபெறும் இராம்லீலா திருவிழாவின் ஓர் அங்கமாக தென்னிலங்கை வேந்தன், திராவிட வீரன் இராவணனின் தங்கையாகிய சூர்ப்பனகை என்னும் பெண்மணியின் நாசியை ஆரிய இராமனின் தம்பி இலட்சுமணன் அறுத்தெறியும் வக்கிரக் காட்சியைத் தெருத்தெருவாக நடித்துக் காட்டுகிறார்கள். (சோ. சிவபாதசுந்திரம் எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்ட கௌதம புத்தர் அடிச்சுவட்டில் என்னும் நூல் பக்கம் 150)
ஆ) ஒருமுறை சிறீவில்லிப்புத்தூர் சென்ற தந்தை பெரியார் அங்குள்ள ஆண்டாள் கோயில் சந்நிதியில் இடம் பெற்றுள்ள தூண்களில் இலட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கு, கொங்கை ஆகியவற்றைத் துண்டிக்கும் காட்சி சிலையாக வடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு வெட்கமும் வேதனையும் அடைந்ததாகக் கூறினார். (‘விடுதலை’ 7.7.1959 மற்றும் ‘விடுதலை’ ஞாயிறு மலர் 17.10.2021)
(தொடரும்)