ஆறு. கலைச்செல்வன்
குமரனும் சுதாவும் காதல் திருமணம் செய்துகொண்டு ஓராண்டு முடிந்துவிட்டது. இருவருமே அறிவியல் படித்தவர்கள். தங்கள் ஆய்வுக்காக ஓர் ஆய்வகத்தையே வீட்டின் ஒரு அறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். புதிய ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு அதற்காக நேரத்தைச் செலவிட்டனர்.
ஓராண்டாகியும் இருவரும் ஒரு குழந்தை பெற்றுத் தரவில்லையே என்கிற கவலை _ குமரன் வீட்டில் உள்ளவர்
களுக்கும் சுதா வீட்டில் உள்ளவர்களுக்கும் இருந்து வந்தது.
நேரம் கிடைத்த போதெல்லாம் இதுபற்றி அவர்கள் காதில் விழும்படி பேசினார்கள். மற்றவர்களை விட்டும் பேசச் சொன்னார்கள். ஆனால் குமரனும் சுதாவும் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஆய்வகத்தில் மும்முரமாகப் பணி செய்து வந்தனர்.
இதனால் மிகவும் கோபமடைந்த குமரனின் தாய் மரகதமணி, பக்கத்து வீட்டு அஞ்சலை அம்மாவிடம் சொல்லி பேசச் சொன்னார்.
“ஏம்மா, டாக்டர்கிட்ட போய் காட்டிட்டு வரலாமா?” என்று அஞ்சலையம்மாள் ஒரு நாள் சுதாவிடம் கேட்டார்.
“ஏன்? நான் நல்லாத்தானே இருக்கேன். எதுக்கு டாக்டர்கிட்ட போகணும்?” என்று கேட்டாள் சுதா.
“அதில்லையம்மா, உனக்குக் கல்யாண-மாகி ஒரு வருஷத்துக்கு மேலாயிடுச்சு. இன்னும் ஒரு குழந்தைக்கு வழியில்லாம இருக்கே, அதனால்தான் கேட்டேன்.’’
“அம்மா, கல்யாணம் செய்துக்கிட்டா உடனே குழந்தை பெத்துக்கணும் என்பது கட்டாயமில்லை. எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்யனும். நீங்க விரும்புறீங்க என்பதற்காக நாங்கள் எங்களோட சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க முடியாது. நாங்க இப்ப முக்கியமான ஓர் ஆராய்ச்சியில் இறங்கி இருக்கோம். அது முடிந்த பிறகு முடிவு செய்வோம். போயிட்டு வாங்க,” என்று தெளிவாகச் சொல்லிவிட்டாள் சுதா.
அய்ந்தாண்டுகள் கடந்தன. இதற்குப் பிறகும் குமரனின் தாயார் மரகதமணிக்கு பொறுமையைக் கடைப்பிடிக்க முடியவில்லை. தீயாகக் கொதித்தார்.
“குமரா, இனிமேலும் எங்களால பொறுத்துக்க முடியாது. உடனே போய் டாக்டரைப் பாருங்க. சுதாவால் குழந்தை பெத்துக்க முடியுமா? முடியாதா? உடனே எனக்கு தெரிஞ்சாகணும்.’’
குமரனால் எதுவும் பேச முடியவில்லை. அம்மாவையும் கோபித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், அம்மா சும்மா இருக்கவில்லை. உறவினர்களையெல்லாம் ஒரு நாள் வீட்டுக்கு வரச்சொல்லிவிட்டார். சுதாவின் பெற்றோரையும் வரச்செய்தார். எல்லோரிடமும் சுதா குழந்தை பெற்றுத் தரவில்லை என்கிற செய்தியைச் சொல்லி அதற்கு என்ன செய்யலாம் என்ற வினாவைத் தொடுத்தார்.
பலரும் பலவிதமான கருத்துகளைச் சொன்னார்கள்.
“குமரனும் சுதாவும் ஒற்றுமையாகத்-தானே இருக்காங்க? குழந்தை இல்லை என்கிறதை அவங்க ஒரு குறையாவே நினைக்கலையே’’ என்றார் உறவினர் ஒருத்தர்.
“டாக்டர்கிட்ட போய்க் கேட்கலாம், என்ன குறைன்னு தெரிஞ்சுடும்.’’
“இன்னும் சில காலம் பொறுத்துப் பார்க்கலாம். எங்க ஊரில் கூட ஒரு தம்பதிக்கு கல்யாணமாயி எட்டு வருஷம் கழிச்சுத்தான் குழந்தை பிறந்தது.’’
“குழந்தை இல்லாட்டி என்ன? ஏதாவது ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கலாமே!’’
“குறை யாருகிட்ட இருக்குன்னு சொல்லமுடியாது. சுதாகிட்டேயும் இருக்கலாம்; குமரன் கிட்டேயும் இருக்கலாம்.’’
இப்படியாக பலவிதமான கருத்துகளை உறவினர்கள் எடுத்துவைத்தார்கள்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே வந்தார் மரகதமணி. ஆனா, ஒருவர் சொன்ன கருத்து மட்டும் அவரை மிகவும் கோபமடையச் செய்துவிட்டது.
அதாவது, “குமரன்கிட்டேயும் குறை இருக்கலாம்’’ என்று ஒருவர் சொன்னரே, அதுதான்! பொங்கி எழுந்துவிட்டார்.
“கண்டிப்பாக அவன்கிட்ட குறை ஏதும் இருக்காது. எங்க பரம்பரையிலேயே குழந்தை இல்லாதவங்க யாருமே இல்லை. சுதாகிட்டேதான் குறை இருக்கணும்’’ என்றார்.
குமரனின் அப்பா நீதிராசனுக்கு இது எதுவுமே பிடிக்கவில்லை. மரகதமணி வீண்வேலையில் ஈடுபட்டு வருகிறார் என்பதை உணர்ந்தார். ஆனால், மரகதமணியை எதிர்த்து அவரால் எதுவும் பேச முடியவில்லை. சுதாவின் பெற்றோருக்கும் மிகவும் தர்மசங்கடமாகப் போய்விட்டது.
“சரிம்மா, நீங்க என்னதான் செய்வதாக உத்தேசம்?” என்று வினவினார் உறவினர் ஒருவர்.
“குமரனுக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணி வைக்கணும்’’, என்று சட்டெனப் பதில் சொன்னார் மரகதமணி.
அவர் கூறியதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சுதாவின் பெற்றோர் கண்களில் கண்ணீர் அரும்பியது. நீதிராசன் தலையைச் சாய்த்துக்கொண்டார்.
“அப்படின்னா சுதாவை விவாக ரத்து பண்ணச் சொல்றீங்களா?”, என்று கேட்டார் ஒருவர்.
“நான் அப்படியெல்லாம் சொல்ல-வில்லையே! சுதா சம்மதத்தோடு குமரன் ரெண்டாவது கல்யாணம் செய்ஞ்சுக்கணும். எனக்குத் தேவை பேரன், பேத்திகள். அது சுதாவால் முடியலேன்னா வேறொரு பெண்ணால் செய்ஞ்சிக்க வேண்டியதுதானே,’’ என்றார் மரகதமணி.
அப்போது குமரன் அங்கு வந்தான். சுதா ஆய்வகத்தில் இருந்தாள்.
“அம்மா, நீங்க இப்படியெல்லாம் பேசறது சரியில்லையம்மா. சுதாவை நீங்க ரொம்பவும் அவமானப் படுத்துறீங்க. அவள் வெறும் பிள்ளை பெறும் கருவி இல்லை. நானும் சுதாவும் முக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக்கிட்டு இருக்கோம். இதன் முடிவு மனித குலத்திற்கு உபயோகமா இருக்கும். நம் நாட்டோட பெருமையும் உயரும். எங்களைப் பணி செய்ய விடுங்க,’’ என்று பேசி முடித்து கூட்டத்தையும் கலைத்தான் குமரன்.’
சில நாள்கள் கடந்தன. மரகதமணி ஏதும் பேசவில்லை. ஆனாலும் அவரால் பேசாமலும் இருக்க முடியவில்லை. ஒரு நாள் மீண்டும் குமரனிடம் குழந்தை பற்றிப் பேச ஆரம்பித்தார். அப்போது நீதிராசனும் உடன் இருந்தார்.
“என்னதான் முடிவு செய்ஞ்சிருக்கீங்க?” என்று கேட்டார் மரகதமணி.
“அம்மா, குழந்தைக்கு நாங்க ஏற்பாடு
பண்ணிட்டோம். இன்னும் சில மாதங்
களில் நீ பேரனையோ, பேத்தியையோ பார்க்கலாம்’’, என்றான் குமரன்.
இதைக் கேட்டுத் திடுக்கிட்டனர் இருவரும்.
“நீ ஏதாவது குழந்தையை தத்தெடுக்கப் போறீயா?’’ என்று கேட்டார் நீதிராசன்.
‘’இல்லப்பா, வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற ஏற்பாடு செய்துவிட்டேன்.’’
“என்னது! வாடகைத்தாயா என்னடா தம்பி சொல்றே? ஒண்ணுமே புரியலையே! ஏண்டா இப்படியெல்லாம் பேசுறே-? உனக்கு என்னடா ஆச்சு?” என்று கேட்டு மரகதமணியும் நீதிராசனும் பதறினர்.
“ஆமாம் அம்மா. சுதாவுக்கு குழந்தை பெற்றுத் தரும்படியான சூழ்நிலை இல்லை. அதனால் வேறொரு பெண் மூலம் எங்கள் குழந்தையைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துவிட்டேன்,’’ என்று அமைதியாகப் பதில் சொன்னான் குமரன்.
“கொஞ்சம் விளக்கமா சொல்லுடா தம்பி’’, என்றார் நீதிராசன்.
“சுதாவின் கருப்பை கருவைத் தாங்கும் சக்தியின்றி பலவீனமா இருக்கிறதா டாக்டர் சொல்லி-விட்டார். அதனால் அவளால் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியாது. நிலைமை இப்படி இருக்கிறதாலே சுதாவின் கருமுட்டையையும், என்னோட உயிரணுவையும் எடுத்துச் சேர்த்து கருவை உண்டு பண்ணி அதை நான் ஏற்பாடு பண்ணியிருக்கிற பெண்ணின் கருப்பையில் வைச்சுடுவாங்க. அங்கு குழந்தை வளர்ச்சியடைந்த பின்பு பெற்று நம்மிடம் அந்தப் பெண் கொடுத்துவிடுவார். குழந்தை எங்கள் உயிரணுக்களில் உருவான குழந்தைதான். அது வளரும் வயிறுதான் வேறு. என்று விளக்கமாகச் சொன்னான் குமரன்.
“இதெல்லாம் சாத்தியமாடா தம்பி?’’
“அம்மா, 1944இல் வெளிவந்த ‘இனி வரும் உலகம்’ என்னும் புத்தகத்தில் தந்தை பெரியார் அப்போதே சொல்லி
வைச்சுட்டாரு. அது இப்படி உண்மை
யாகிடுச்சி. உலகம் முழுவதும் இந்த முறை வந்துடுச்சி! இப்ப சொல்லும்மா, சுதா குழந்தை பெத்துக்கிட்டு சாக வேண்டுமா, இல்லே நான் சொன்ன முறையில் குழந்தை பெற்றுக்கொண்டு வாழ வேண்டுமா?’’ எனக் கேட்டான் குமரன்.
“உன் விருப்பப்படியே செய் தம்பி.
எங்களுக்குத் தேவை பேரன், பேத்திகள்
தான். சுதாவும் நீயும் நூறு வருஷம் நல்லாயிருக்கணும்.’’
“நிச்சயம் நாம எல்லோரும் நீண்ட காலம் நல்லா இருப்போம்.
தற்போதைய உலகில் அது சாத்தியம்!” என்றான் குமரன்!’’
பெற்றோர் முகம் மலர்ந்தது.