கவிதை – மனமில்லை

ஏப்ரல் 01-15

– சுண்ணாம்பு கொளத்தூர் சா.கிள்ளிவளவன்

தத்துவங்கள் மிதக்கின்றன
முல்லைப் பெரியாறு
அணையில்

துருவங்கள் இணைந்தன
கேரளக் கட்சிக் கொடிகள்
ஒரே மரத்தில்!

தமிழகத்தில் மட்டும்
இன்னும்
உதிர்ப் பூக்களாய்

எந்தக் கட்சியும்
உற்பத்தி செய்யவில்லை
நதி நீர்
இயற்கையின் கொடை
எங்கோ தோன்றி
எங்கோ முடிகிறது

கட்டிய கோலம் வேறு _
ஆளும் வேறு
பட்டா போட
போட்டா போட்டி

நீர் மட்டத்தை
உயர்த்தச் சொன்னால்
அணையை
உடைக்கச் சட்டம்

கடலில் வீணாகக் கலக்கட்டும்
வாடும் பயிர்
வாடட்டும்
புதிய தத்துவம்

நீதிமன்றம் சொன்னதை
கேட்கவும் இல்லை
வல்லுநர் குழுவை
ஏற்கவும் இல்லை

அணை உடைந்தால்
ஆபத்தாம
பெரும் புரளி

மொழி மூலம்
இனம் மூலம் மறந்தவர்கள்
நதி மூலம்
ரிஷி மூலம் பார்க்கிறார்கள்

தீராத தேசிய இனப் பிரச்சினை
முடியாத
நதி நீர்ப் பிரச்சினை

உலகத் தொழிலாளர்களை
ஒன்று சேரச் சொல்லி
பக்கத்து வீட்டுக்கு
குடிநீர் தர மறுப்பு

மலை முகட்டில்
பிறக்கும்
காட்டாற்று வெள்ளம்
சமவெளியில் மணமுடித்து
கடலில் சங்கமம்

கேரளம் மலை
தமிழகம் சமவெளி

ஏற்றமும் இறக்கமும
வெள்ளமும் வறட்சியும்
பாலையும் சோலையும்
குடிசையும் கோபுரமும்
இந்தியாவின் இரண்டு முகங்கள்

மத்தியிலும்
மாநிலங்களிலும்
கண்டும் காணாமல்
அரசுகள்

வறுமை ஒழிப்பு
வேலை வாய்ப்பு
பசுமைப் புரட்சி
நதி நிர் இணைப்பு
வாய்ச்சவுடால்
வறட்டுத் தத்துவம்

நதிகளை
காயவிட்டு
லஞ்ச ஊழல் தேசியமயம்!

எல்லோருக்கும் இது அணைகட்டும் காலம்
பிரம்மபுத்திராவில் _ சீனா
கிருஷ்ணாவில் _ ஆந்திரா
காவிரியில் _ கர்நாடகா
முல்லைப் பெரியாறில் _ கேரளா

வந்தாரை
வாழ வைக்கத்தான்
தமிழகமோ?

எல்லோரும்
முகமூடியுடன்
அலைகிறார்கள்

சுரங்கங்களை
சூறையாட
மாநிலம் விட்டு மாநிலம்
அரசியல்வாதிகள்
ரகசிய ஒப்பந்தம்

எல்லா மாநிலத்திலும்
நிலத்தை வாங்கி
குவிக்க அனுமதி
அடுத்த மாநிலத்திற்கு
தண்ணீர் தர தடை

சட்டத்தின் முன்
அனைவரும் சமமாம்!
ஒரு இந்தியன்
இன்னொரு இந்தியனிடம்
குடிநீருக்காக
கையேந்துகிறான்

எண்ணெய்க்காக
எல்லை தாண்டி
போர்
தண்ணீரின்றி
பக்கத்து மாநிலம்
பாழ்

தார்பாலைவனம்
போதாதா?
தமிழகமும்
பாலைவனம் ஆவதா?
அணைக்காக
கிடுக்கிப்பிடி போடும்
இடுக்கியை இணைப்போம் தமிழகத்தோடு

வேற்றுமையில் ஒற்றுமை
இந்திய உயிர்நா
வெவ்வேறு மாநிலங்கள்
ஒற்றுமையில் வேற்றுமை
ஏட்டளவில்
இந்திய ஒருமைப்பாடு

அந்த நீதிபதியே
வழுக்கி விழுந்தார்!
மன்சிலாயி
சர்வதேசியம் பேசும்
கம்யூனிஸ்டுகள்
அணை உடைப்பில்
சுத்தியல் அரிவாளோடு

இந்திய தேசியம் பேசும்
காங்கிரஸ் தாராளமாய்
கை கொடுக்கிறது
விதேசி மோகத்தில்

எல்லாக் கட்சிகளும்
சுயநலத்தோடு
நாடகமாடுகின்றன

கப்பங் கிழங்கும்
மத்தி மீனும்
கொளாப்புட்டும்
குத்தாட்டம் போடுது
கொலை வெறியில்

வண்டி வண்டியாய்
மாடுகள்
கறி சமைக்க

லாரி லாரியாய்
அரிசி மூட்டைகள்
கஞ்சி குடிக்க

பால் காய்கறி
முண்டு பட்டு
எல்லாம் அவர்களுக்கு

தண்ணீர் தர
மறுப்பதற்கு!

அணையை உடைக்க
கேரளப் போலீஸ்
தடுக்கப் போகும்
தமிழனை அடிக்க
தமிழகப் போலீஸ்

தமிழருக்கு எதிராக
தமிழக அரசு
உலகின் எட்டாவது
அதிசயம்!
உத்திரப் பிரதேசத்தில்
மலையாள நர்ஸ் மீது
வன்கொடுமை
கேரளம் கண்ணீர் வடித்தது

இலங்கைக் கழுகுகள்
தமிழச்சியை
கொத்திய போது
தமிழகத்தில் பட்டிமன்றம்

உணர்வுகள் வேறு
புவியியல்
உரிமைகள் வேறா?
அன்று அந்நியன்
இன்று நம்மவன்
கொள்ளை போகிறது
இந்தியா!

கங்கை காவிரியை
இணைக்க பணமில்லை
இல்லை _ இல்லை
மனமில்லை!

உலகமெங்கும்
அணைகளை
தொழிற்சாலைகளை
கட்டிய காலத்தில்
கோயில்களாய் கட்டினார்கள்
இந்தியாவில்.

சுவிஸ் வங்கியில்
கறுப்புப் பணம்
கோயில்களில்
தங்க நகைகள்
பக்குவமாய் பதுக்கல்

கறுப்புப் பணத்தை
மீட்போம்
தங்கத்தை
ரிசர்வ் வங்கியில்
குவிப்போம்

கங்கையும் காவிரியும்
இணைந்து விடும்
உலக அரங்கில்
இந்தியா வல்லரசாக

முடிவெடுக்க வேண்டிய
மத்திய அரசு
வழக்கம்போல்
கும்பகர்ணனாய்

தண்ணீருக்கு
வழி விடு _ வாழவிடு

நதிகளை
தேசியமாக்காமல்
தேசியம்
பேச வேண்டாம்

மனிதநேயம்
இல்லாதவனை
மனிதென்று
அழைக்க வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *