செவ்வாயில் செந்தமிழ்

ஏப்ரல் 01-15

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

அப்பரும் ஆண்டாளும்
செவ்வாய் – என்று சொன்னதுமே சிவனடியார்களுக்கு, குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமரன் சிரிப்பும்

என்கிற அப்பர் தேவாரப் பாடலில் வரும் செவ்வாயும், அதில் அரும்பும் புன்னகையும் நினைவுக்கு வரும்.

திருமாலடியார்களுக்கோ,

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ?

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ? என்கிற, ஆண்டாள் எனப்படும் கோதையின் நாலாயிர திவ்வியப் பிரபந்த நாச்சியார் திருமொழிப் பாடல் நினைவுக்கு வரும்.

திருமாலின் சிவந்த வாய் (உதடுகள்) தித்தித்திருக்குமோ? எனக் கேட்பது ஒருவேளை அனுபவமாயிருக்குமோ?

யார் கண்டது? இருக்கலாம்!

அளப்புக்கு அளவே இல்லையா?

ஆனால், நமக்கோ, செவ்வாய் என்றால் சூரியனைச் சுற்றி உலாவரும் செவ்வாய் (மார்ஸ்) என்னும் கோள்தான் நினைவுக்கு வரும்; வரவேண்டும்.

ஜோதிடக்காரர்களுக்கு செவ்வாயின் வடமொழிப் பெயரான அங்காரகன் நினைவுக்கு வருவான்.

அங்காரகன் கோள் ஆனாலும், அவன் ஓர் ஆள் ஆவான்.

அவன் ஜோதிட சாத்திரத்தின்படி நால்வர்ண ஜாதியில் சத்திரியன் ஆவானாம்!

ஜோதிடர்களின் அளப்புக்கு அளவே இல்லையா?

செவ்வாய் பற்றிய சில வானியல் செய்திகள்

வானிலே ஞாயிற்று மண்டிலத்தில் சூரியனுக்கு 22 கோடியே 85 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள கோள் செவ்வாய்.

நமது புவிக்கோளுக்கும், செவ்வாய்க்கும் இடையேயுள்ள தொலைவு 7 கோடியே 64 இலட்சம் கி.மீ.

செவ்வாய், புவிக்கோளுக்கு மிக அண்மையில் இருக்கும்போது இதன் தொலைவு 5 கோடியே 60 இலட்சம் கி.மீ.

இதன் எடை, புவியின் எடையில் பத்தில் ஒரு பங்கு (1/10)

செவ்வாயில், ஒரு நாள் என்பது, அதாவது அது தன்னைத்தானே தனது அச்சில் சுழலும் காலம் 24 மணி 36 மணித்துளிகள்.

இது, சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாள்கள் பிடிக்கின்றன.

அதாவது, செவ்வாயில் ஓர் ஆண்டுக்கு 687 நாள்கள்.

உரோமானியரின் போர்க் கடவுளின் பெயரால் ஆங்கிலத்தில் மார்ஸ் (Mars) என அழைக்கப்படுகிறது.

செவ்வாய்ச் செலவு (பயணம்)

தொலைநோக்கிகளைக் கொண்டும், வேறு பல ஆய்வுகளைக் கொண்டும் செவ்வாய்க் கோள்பற்றிய பல செய்திகளை அறிவியலார் திரட்டித் தந்துள்ளனர்.

ஆனால், புவியில் அதாவது நம் நிலவுலகில் இருந்தவாறே கோடிக்கணக்கான தொலைவுள்ள செவ்வாயை ஆய்ந்து அறிந்த செய்திகளை உறுதிப்படுத்தவோ, உதறித்தள்ளவோ இதுவரை வாய்ப்பில்லாமல் இருந்தது.

இன்றைக்கு, மாந்தன் விண்ணில் நிலாவில் தன் காலடித் தடத்தை வெற்றியுடன் பதித்து வெற்றிக்கொடி கட்டு என்றபடி கொடியைப் பறக்கவிட்டு வீறோடு திரும்பி வந்துவிட்டான்.

அறிவியலாரின் அடுத்தகுறி செவ்வாய் ஆக இருந்தது.

ஏனெனில், நுண்ணுயிர்களோ அல்லது அவற்றை உருவாக்கும் அடிப்படை மூலக்கூறுகளோ இருக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.

ஆகவே, இந்தப் பரந்து விரிந்த பேரண்ட வெளிப்பரப்பில் நிலவுலகத்தைத் தவிர வேறு எங்கேனும் உயிர்கள் உளவா? என்பதை அறிய மாந்தனுடைய அறிவார்வம் துடிக்கும்போது அந்த ஆர்வம் முதலில் செவ்வாயை நோக்கிப் பாய்ந்தது.

செவ்வாய்ச் செலவின் சில சிக்கல்கள்:

விண்வெளிக் கலங்களை நிலாவுக்குச் செலுத்துவதைவிட, செவ்வாய்க்குச் செலுத்துவது சிக்கலானது.

நிலாவைச் சுற்றி காற்று (வளி) மண்டலம் (Atmosphere) இல்லை.

அதனால், அதனை நோக்கி இறங்கும் கலம் உராய்வினால் எரிந்துவிடும். தீங்கு (Danger)  இல்லை.

கலம், நிலாவை நெருங்க நெருங்க, அணுக, அணுக எதிர் ஏவுகணைமூலம் அதன் வேகத்தை மட்டுப்படுத்தி, கட்டுப்படுத்தி, நிலாத்தரையில்அதை மெதுவாக இறங்கச் செய்யலாம்.

ஆனால், செவ்வாய்க் கோளைச் சுற்றிலும் மென்மையான காற்று மண்டலம் உள்ளது. இதனுள் விரைவாகப் புகும் கலங்கள் உராய்வு வெப்பத்தால் உருகிவிடக் கூடிய அவல நிலை உள்ளது.

ஆகவே, மிகச் சிறப்பான தொழில் நுணுக்கமுறை கொண்டுதான் மிதவைக் குடை வழியாகக் கலங்களைச் செவ்வாய்த் தரையில் இறங்கச் செய்ய முடியும்.

செவ்வாயில் சில வேதியியல் பொருள்கள்

இவ்வகையில், சோவியத் விண்கலம் மார்ஸ்-2 1971 நவம்பர் 27 இல் செவ்வாயின் தரையைத் தொட்டது.

1976 செப்டம்பர் 7 இல் அமெரிக்க விண்வெளிக்கலம் வைக்கிங் (Viking) செவ்வாயின் பொன் சமவெளி என்னும் பகுதியில் இறங்கியது.

புதிர்க்கதிர் (எக்ஸ்_ரே) மாலை மூலம் இரும்புடன்,

சிலிகன், கால்சியம், பாஸ்பரஸ், அலுமினியம், பொட்டாசியம், ரூபிடியம் போன்ற எரிகார மூலகங்களும் ஓரளவு அடங்கி இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

விண்கலங்கள் வெளிப்படுத்திய செய்திகள்

செவ்வாய்க் கோள் என்பது செம்மண் படர்ந்த பாலை நிலம்.

செவ்வாய்த் தரையில் இறங்கி வானத்தைப் பார்த்தால், அங்கே முழு வானமும் சிவப்பாகவே தோற்றமளிக்கும்.

இதை நமது திரையுலகக் காதலன், சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேனே! என்று பாடுவானே!

செவ்வாயில், வழுவழுப்பான பாறையில் வெற்றிலை போட்டுத் துப்பியதுபோல சிவப்புக் கறைகள் கப்பிக் கிடக்கும்.

செவ்வாயின் சிவந்த மண்!

இவை, பெரும்பாலும் இரும்பு ஆக்சைடு ஆகும்.

சுருங்கக் கூறின், துருப்பிடித்த இரும்பைச் சுரண்டித் தூளாக்கித் தூவினால் எப்படி இருக்குமோ அதுவே அந்த செம்மண் நிலம் சிவந்த மண்!

பாத் ஃபைண்டரின் பணிகள் (Path Fainter)

26 கோடி அமெரிக்க டாலர் செலவில் உருவாகி 1997 இல் செவ்வாயில் தரையிறங்கிய பாத் ஃபைண்டர் விண்கலத்திலிருந்து தெளிவான தகவல்கள் வரத் தொடங்கின.

இதில் இடம்பெற்ற சோஜர்னர் எனும் தானியங்கிப் பொறி செவ்வாய்த் தரையில் அங்குமிங்கும் ஓடி பல வண்ண ஒளிப்படங்களைப் புவியினுக்கு அனுப்பின.

மலைகள், குன்றுகள், பாறைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள் போன்ற பல்வேறு தோற்றங்களை அந்தப் படங்கள் காட்டுகின்றன.

செவ்வாயில் நீர் இருக்கும் வாய்ப்பு உள்ளதால், அங்கு உயிர்களும் இருந்திருக்கலாம் என நாசா நிலையத்தார் கருதுகின்றனர்.

கால் பதித்த கதிரவன் கடிகாரம்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய்க்கோளில் போய் ஆய்வு செய்ய, மார்ஸ் சர்வேயர் (Mars Surveyor) என்ற விண்வெளி ஓடத்தை அனுப்பியிருக்கிறது.

இந்த விண்வெளி ஓடம் அங்கு தரையிறங்கி 2005 மார்ச் மாதத்தில் ஒரு சூரியக் கடிகை(Sun Dial) யைச் செவ்வாய்க் கோள் மண்ணில் பதித்துள்ளது.

3 அங்குல கனசதுர வடிவில் இருக்கும் இந்தச் சூரியக் கடிகையின் பயன் வேறுபாடானது.

விண்வெளி ஓடத்தின் வேலை

செவ்வாய்க்கோளில் ஓர் ஆண்டு என்பது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குச் சமம் ஆனது.

அங்கு, பருவ நிலை, சூரியன் போக்கில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றை ஆராய இந்தச் சூரியக் கடிகை உதவும்.

உலோகத்தால் உருவான இந்தச் சிறிய சதுரத்தில் ஏற்படும் வெளிச்ச மாற்றங்களை விண்வெளி ஓடம் பதிவு செய்கிறது.

பதிவு செய்யப்பட்ட பல மொழிகள்

இதன்மீது, புவி, செவ்வாய் இரு வேறு உலகம். ஆனால், ஒரே சூரியன்! என்று எழுதப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பழைமையான 26 மொழிகளில் இது எழுதப்பட்டுள்ளது.

பழங்கால சுமேரிய நாகரிக மக்கள் பேசிய மொழிகூட இடம்பிடித்திருக்கிறது.

ஒருவேளை செவ்வாய்க் கோளில் எவராவது மாந்தர்கள் இருந்து அவர்கள் வந்து இதைப் பார்த்தால் புவி பற்றித் தெரிந்துகொள்ள சில குறிப்புகளும் உள்ளன.

இனிய தமிழ் இடம்பெறவில்லையே?

இதில் இடம்பெற்றுள்ள இந்திய மொழிகள் இந்தியும், வங்காளியும்தாம்!

தொன்மை, முன்மை, இளமை – வளமை, இனிமை, தனிமை முதலான இயல்புகள் கொண்ட நம்முடைய இனிய தமிழ் மொழி அதில் இடம்பெறவில்லை!

வங்க மொழியும், இந்தி மொழியும் இடம்பெற்றமைக்கு என்ன காரணம் தெரியுமா?
நாசாவின் ஆய்வுத் திட்டப் பணிகளின் பொறுப்பு மேற்கொள்பவர், டாக்டர் அமிதவ் கோஷ் என்கிற அமெரிக்காவில் குடியேறிய வங்காள அறிவியலார்.

இந்தியாவின் ஆட்சி மொழி என்பதால் இந்தியையும், தமது தாய்மொழி என்பதால் வங்காளியையும் அதில் சேர்த்துவிட்டார்.

அநீதி -அநியாயம்!

இது தமிழுக்கு இழைக்கப்பட்ட கொடுமையல்லவா? அநீதியல்லவா?

செம்மொழித் தகுதிக்குச் செய்யப்பட்ட அநியாயமல்லவா?

இந்தியாவில் செம்மொழித் தகுதி பெற்ற பழைமையான தமிழுக்கும் இடம் கிடைத்திருக்கும் இதில்!

எப்பொழுது? தமிழர் ஒருவர் அந்தப் பணிப் பொறுப்பில் இருந்திருந்தால்?

செவ்வாய்க் கோளில் செந்தமிழ்ப் பெயர்

இந்த நிலை வெகுகாலம் நீடிக்கவில்லை.

இப்பொழுது செம்மொழித் தமிழும் செவ்வாய்க் கோளில் இடம்பிடித்துவிட்டது.

இப்பொழுது, செவ்வாய்க் கோளில் இருக்கும் பல பெரிய பாறைகளுக்குப் பெயர் சூட்டும் படலம் தொடங்கியிருக்கிறது.

இந்தப் பெயர்ப் பட்டியலில் இந்தியப் பெயர்கள் மூன்று இடம்பெற்றுள்ளன.

ஒன்று, பண்டைய இந்தியப் பல்கலைக்கழகம் இருந்த நாளந்தா.

இரண்டாவது, மொகலாய மன்னர்களின் மணிமுடியை அணி செய்த வய்ரம் கோகினூர்.

மூன்றாவது, தமிழர்களின் தேசியப் பண்டிகையான பொங்கல்.

நாசா இந்தப் பெயர்களுக்கு ஒப்புறுதி அளித்துவிட்டது (தகவல்: நூல்: அச்சரேகை – தீர்வு ரேகை)

செவ்வாய்க் கோளில் செம்மொழித் தமிழ்ப் பெயர் சிறப்போடு இடம்பெற்றுவிட்டது!
தமிழர்களாகிய நமக்குத் தரப்பட்ட பெருமையன்றோ இது!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *