– கி.வீரமணி
புராணங்கள் என்பவை எவை? அவைகள் எப்படி உருவாயின.
1. வேதங்களை – சூத்திரர்களோ, பெண்களோ படிக்கக் கூடாது என்ற தடை உண்டு.
ஏன் சமஸ்கிருத பாஷையே தேவ பாஷை – அவை சூத்திரர் அறியக் கூடாது.
வேதங்கள் ஓதுவதை காதால் கேட்கும் சூத்திரனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவேண்டும்; நாக்கை அறுக்கவேண்டும்.
ஆரியர்கள் – பிராமணர்கள் தங்களுடைய ஆதிக்கத்தைப் பரப்ப வழிவேண்டுமே!
இதோ அதற்காக நவாலியூர் நடராஜன் கூறுகிறார்:
வேதங்களோடு ஒத்த பெருமையுடைய புராண இதிகாசங்கள், சூத்திரரும், பெண்டிரும் படிப்பதற்கே ஏற்பட்டவை என்றார்.
இவை பாபங்களைப் போக்குமாம்!
வேதம் – வேதியர் – கீழ்ஜாதி
புராணம் – புரோகிதர் – மற்றவை
வேதங்களுக்கு அடுத்தபடியாகப் புராணங்கள் அய்ந்தாவது வேதமாகக் கொண்டாடப்படுகிறது. மகாபாரதத்தைப் போலவே புராணங்களும் சமய இலுக்கியமாகக் கருதப்பட்டு வந்துள்ளன. வேதங்களைப் போலவே அமையும் பழைமையுடைனவென்பது ஆன்றோர் கருத்து. உருவத்திலும், பொருளிலும் அவை இதிகாசங்களோடும், ஸ்மிருதிகளோடும் ஒப்பிடத்தக்கன. இந்திய தரிசனங்களின் வரலாற்றையும், விரதானுட்டானங்களையும் அறிவதற்குப் புராணங்கள் மிகப் பயனுடையன. இந்திய நாகரிகத்தின் கருவூலம் புராணங்களே எனலாம். புராதனமாக இருந்து வருவது புராணம் எனப்படுகிறது. புராணம் செவி வாயிலாக வந்த புராதனச் செய்திகளெனவும் கூறலாம். வேத காலந்தொட்டு வந்த கதைகளும், வரலாறுகளும் மக்களிடையே பிரபலம் பெற்றுப் புராணமாக வடிவெடுத்தன. இவை சூதர் என்ற பாடகர்களால் ஆதியிற் பாடப்பட்டு வந்தன. அதனாலேதான் புராணங்கள் சூதபவுராணிகராற் கூறப்பட்டன என வழங்கும். புராணங்கள் மக்களிடையே பிரபலமடைந்து வந்ததால், புரோகிதர்கள் புராணங்களைப் பயன்படுத்திச் சமய போதனை செய்யவும், விரதானுட்டானங்களைப் பற்றிப் பிரசாரஞ் செய்யவும் முயன்றனர்.
பிரமாணங்களிற் புராணம் பற்றிய செய்தி
புராணம் என்ற சொல் பிராமணங்களிலும், உபநிடதங்களிலும் காணப்படுகின்றது. பண்டைக் கதைகள், உலக வரலாறுகள் என்ற பொருளிலேயே அங்கு இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. வேத சுருதிகளுக்கு முன்னரே இத்தகைய புராணக் கதைகள் இருந்திருக்கலாம். ஆனால், இன்று உள்ளதுபோலத் தனிப்பட்டதோர் இலக்கியமாகப் புராணங்கள் இருக்கவில்லை. அதர்வ வேதத்திலே புராணத்தைப்பற்றி, றூச: சாமானி சந்தாம்னி புராணம் எனத் தனிப்பட்டுக் கூறப்பட்டபோதிலும், அவை புராண இலக்கியங்களே எனக் கூறிக் கொள்ள முடியாது. சாந்தோக்கிய உபநிடதம் சதுர்த்த கிதிஹாச புராணம் பஞ்சமம் வேதானாம் வேத மிதி எனக் குறிப்பிடுகிறது. இதிகாசம் புராணம் என்பன பழைய சரித்திரக் கதைகளையும், ஆக்கியானங்களையும் குறிப்பிட்டன. பின்னர், சூத்திர இலக்கியங்களிலே புராணம் திட்டமாக ஒரு தனி இலக்கியமாய்க் குறிப்பிடப்படுகின்றது. மகாபாரதத்திலே இருடிகளின் பாரம்பரியம் தேவர்களின் விருத்தாந்தம் முதலியவற்றைக் குறிப்பிடப் புராணமென்ற சொல் வழங்குவதாயிற்று. வேதங்களை விளக்குவதற்கு (உப பிராமணம்) புராணங்கள் பயன்படுவதாக ஸ்மிருதிகள் குறிப்பிடுகின்றன. இருக்கு வேத சூக்தங்களிலே பரிச்சயமான புரூரவன், ஊர்வசி, சரண்யூ, முட்கலன் போன்ற கதைகள் புராணங்களிலே காணப்படுகின்றன. அரசன் வேதத்தையும், தர்ம சூத்திரங்களையும், வேதாங்கங்களையும் பிரமாணமாகக் கொள்வது போலவே, புராணங்களையும் நீதி பரிபாலனத்துக்குப் பிரமாணமாகக் கொள்ளவேண்டும். ஒழுக்கம், வழக்கு, தண்டம் எனப் பரிமேலழகர் திருக்குறள் உரையிற் கூறிய நீதி பரிபாலனத்துக்கு இப்புராணங்களும் பிரமாண நூல்களாய்க் கருதப்பட்டு வந்தன என அறிந்துகொள்ளலாம்.
சூத்திர இலக்கியத்திற் புராண மேற்கோள்கள்
ஆபஸ்தம்ப தரும சூத்திரத்திலே புராணங்களிலிருந்தும் பவிஷ்ய புராணத்திலிருந்தும் மேற்கோள்கள் காட்டப்படுகின்றன. இத்தரும சூத்திரங்கள் கி.மு. 4 ஆம் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. கௌடிலிய அர்த்த சாத்திரத்திலே, அரசர்க்குக் கல்வி புகட்டுவதற்குப் புராணக் கதைகளைப் பயன்படுத்தலாமெனக் கூறப்படுகின்றது. இது கி.பி. 3 ஆம் 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்.
மகாபாரதம், ஒரு புராணமாகவே தன்னை வருணித்துக் கொள்கின்றது. அத்துடன் புராணங்கள் கதையை ஆரம்பிப்பது போலவே, புராணங்களிற் புலமை பெற்றவரும் லோமஹர்ஷணர் மகனுமான சூதர் சொன்னார் எனப் பாரதம் ஆரம்பிக்கின்றது. இவற்றிலிருந்து மகாபாரதம் இப்போதைய உருவத்தைப் பெறுவதற்கு முன்னரே புராணங்கள் தனி இலக்கியமாக இருந்தன என்று சொல்லலாம். புராணங்களும், மகாபாரதமும் போலவே பல ஆசிரியராற் காலத்துக்குக் காலம் விரித்தும் புதுக்கியும் செய்யப்பட்டன. எனவே, புராணங்களிற்கூட முந்திய பகுதி, பிந்திய இடைச் செருகல் என்றெல்லாமுண்டு. மகாபாரதக் கதைகளுக்கும், புராணக் கதைகளுக்கும் ஒற்றுமை காணப்பட்டால், அது ஒருகால் இரண்டுக்கும் பொதுவானதொரு கதைக் களஞ்சியத்திலிருந்து வந்திருக்க வேண்டுமென்று கருதவேண்டும். அல்லது ஒன்றை மற்றொன்று பின்பற்றியதென்று கொள்ளவேண்டும்.
கதைமூலம்
பொதுவான கதையூற்று கேள்வியாக வந்திருக்கலாம். அதிலே, வேத காலத்திலிருந்து வாய்மொழியாக வந்து பிராமணத்திற் கலந்த கதைகளிலிருக்கலாம். அரசர் அவைக் களங்களிலே சூதர் என்ற பாணர் வகையினராற் பாடப்பட்ட கதைகளிருக்கலாம். சில திட்டமான புராண உருவில் இருந்திருக்கலாம். விஷ்ணு புராணத்திலே ஆதியில் நான்கு புராணங்களே இருந்தனவெனக் கூறப்படுகின்றது. இந்தப் புராணங்களில் மூல சங்கிதையைச் சூதலோமஹர்ஷணரும் அவருடைய மாணாக்கர் மூவரும் கூறினர். சில ஆசிரியர்கள் எல்லாப் புராணங்களும் ஆதியானதாம் புராணமொன்றிலிருந்தே கிளைத்திருக்க வேண்டுமெனப் பலர் கூறுகின்றனர். அஃது அத்துணைப் பொருத்தமுடைய கருத்தன்று. பழைய கிரந்தங்களிலே புராணம் என்று குறிக்கப்பட்டால், அது பழைய மரபு என்றே கொள்ளவேண்டும். வேதம், மிருதி, சுருதி என்பவற்றிற்குச் சாதாரணமாக என்ன பொருளுண்டோ அதே பொருளையே புராணத்துக்கும் கொடுக்கவேண்டும். ஆதியிலே புராணம் என வழங்கப்பட்டவற்றுக்கும் இக்காலத்திற் புராணமென நாம் கொள்ளும் நூல்களுக்கும் பல பேதங்களுண்டு.
புராண இலக்கணம்
புராணங்களுக்கு இலக்கணம் வகுத்த பிற்காலத்தவர் அய்ந்து இலக்கணத்தைக் குறிப்பிடுவர். அவை சர்க்கம் (சிருட்டி), பிரதி சர்க்கம் (அழித்து மறுமடி உண்டாக்குவது), வம்சம் (தெய்வபரம்பரை), மன்வந்தரம் (மனுக்களின் காலம்), வம்சியானு சரிதம் (அரச வமிசங்களின் வரலாறு) என்பனவாகும்.
இன்று நிலவும் புராணம் எதிலும் இந்த இலக்கணங்களை முற்றாய்க் காண முடியாது. சில புராணங்களிலே இவற்றைவிட வேறுபல விஷயங்களும் காணப்படுகின்றன. வேறு சில இந்த இலக்கணங்கள் சிறிதுமின்றி வேறு விஷயங்களைக் குறிப்பிடுகின்றன. இன்றுள்ள புராணங்களிலே பல தானம், விரதம், தீர்த்தம், மூர்த்தி, தலம், சிராத்தம் முதலியவற்றைக் குறிப்பிடுகின்றன.
பிற்காலத்திற் புராணத்துக்கு இலக்கணம் வகுத்தவர்கள் பஞ்சலக்கணம் உபபுராணங்களுக்கே யுரியனவென்றும், மகாபுராணங்கள் தசலக்கணம் பெற்றிருக்க வேண்டுமென்றும் விதித்தனர். இவை விருத்தி (தொழில்), ரக்ஷா (தெய்வங்களின் அவதாரம்), முத்தி (வீடு), ஹேது (அவ்யக்தமான உயிர்), அபாச்ரய (பிரமம்) என்பனவாகும்.
இவற்றைவிட, பிரமா, விட்டுணு, சூரியன், உருத்திரன் என்ற தெய்வங்களின் பராக்கிரமத்தைக் கூறுவனவாயும், உலகின் சிருட்டி, திதி, சங்காரம் என்பனவற்றையும், அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றையும் கூறுகின்றனவாயுமிருக்கின்றன. இது கூடப் பூரணமான இலக்கணம் எனச் சொல்ல முடியாது. புராணங்கள் வாழ்வின் எல்லா அம்சங்களையும் அடக்கியுள்ளன என்று ஹரிப்பிரசாத சாஸ்திரி என்னும் அறிஞர் கூறுகிறார்.
பதினெண் புராணங்கள்
பரம்பரையாகக் கூறப்பட்டு வந்த புராணங்கள் 18. இவை மகாபுராணங்கள். பின்வருமாறு:
பிரமம், பதுமம், விஷ்ணு, வாயு, பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், அக்கினி, பவிஷ்யம், பிரம்மவைவர்த்தம், வராகம், லிங்கம், ஸ்காந்தம், வாமனம், கூர்மம், மத்ஸ்யம், கருடம், பிரமாண்டம் என்பன.
வாயு புராணத்துக்குப் பதிலாகச் சிவபுராணமும், பாகவதத்துக்குப் பதிலாக தேவீபாகவதமும் பேசப்படுகின்றன.
– தொடரும்