இதயம் இதமாய் இயங்க…(5)

ஏப்ரல் 01-15

மன உளைச்சலைப் போக்கி மன மகிழ்ச்சியைக் கூட்டி…

– பேராசிரியர். மருத்துவர் வெ.குழந்தைவேலு
MD.PhD.. D Litt.. DHSc-Echocardio.., FCCP
கங்கை மருத்துவத் தொழில்நுட்பக் கல்வி நிலையம், நெய்வேலி.

இதயத்தைச் சீர்கேடடையச் செய்யும் மதுவினை வெறுத்தொதுக்க வேண்டும்

  • மேலை நாட்டு நூல்களில், குறைந்த அளவிலான மதுவின் நன்மைகள்(!) பற்றிப் பெரிய அளவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இருப்பினும், குறைந்த அளவிலான மதுவினால் கூட, உடற்கேடும் இதயப் பாதிப்பும் ஏற்படக்கூடும் என்கிற நிலையினைச் சீர்தூக்கிப் பார்த்திடும்போது, மதுவின் தீமைகள் வெளிப்படும்.
  • அண்மைக்கால ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகளை – கேடுகளை தெள்ளத் தெளிவாக தெரிவிப்பனவாகவே உள்ளன.
  • மது, பல்வேறு உறுப்புகளையும் திசுக்களையும் பாதிக்கவல்ல தென்றாலும், இதயத்தசையைப் பாதிப்பதென்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
  • குறிப்பாக, மதுவானது, இதயத்தசைச் செல்களைப் பாதித்து வலுவிழக்கச் செய்து இதயத்தை விரிவடையச் செய்கிறது; அதன் காரணமாக இதயச்செயல் திறனிலும் குறைபாடு ஏற்படுகிறது.
  • இதயத்துடிப்பைத் தாறுமாறாக்கவல்லது.
  • மது தொடர்புடைய இதயத்தசைப் பாதிப்பு (alcoholic cardio myopathy) என்பது அறுதியிட்ட நோயாகும்.
  • மது இதயத்தசை இயக்கும் தன்மையைக் குறைத்துவிடுகிறது; உடல் நலத்துடன் இருப்பவர்களின் இதயம், குறைந்த அளவு மதுவினால் ஏற்படும் விளைவுகளை ஓரளவிற்குத் தாங்கிக் கொண்டாலும் ஏற்கெனவே பாதிப்பிற்குள்ளான, நோயுற்ற இதயம், விளைவுகளிருந்து தப்ப முடிவதில்லை.
  • ஆகவே, மது, மாரடைப்பு ஏற்படுவதற்குத் தூண்டுதலாக இருக்கிறது.
  • இரத்த நாள உட்சுவர்களில் கொழுப்புத் திவலைகள் படிவதற்கும் ஏதுவாக இருக்கிறது.
  • மது உங்களுடைய உயிரை மட்டும் குடிப்பதில்லை; உங்களுடைய குடும்பத்தையும் சீர்குலைய வைக்கிறது.
  • நிலைமை இவ்வாறு இருக்க மது தேவைதானா?
  • விலை கொடுத்தா வினையை வாங்கிக் கொள்வது?

    மாரடைப்பினைத் தூண்டும் நோய்கள் மீதும் பிற நோய்கள் மீதும் கவனம் தேவை
  • பருமனான உடம்பு, எப்பொழுதுமே இதயத்திற்குப் பாரமாகும்.
  • ஒல்லியாக இருப்பதாலேயே ஒருவருக்கு இரத்தத்தில் கொழுப்புச் சத்து குறைவாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை.
  • ஒல்லியானவர்களும் மாரடைப்பினால் பாதிக்கப்படலாம்.
  • உடலைச் சீரமைத்துக் கொள்வதற்காகச் சிகிச்சை அளித்திடும் மருத்துவரிடமிருந்தே உரிய ஆலோசனைகளைப் பெற்றிடல் வேண்டும்.
  • இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நீரிழிவு, இரத்தத்தில் கொழுப்புச் சத்து மிகைப்படுதல், பருமனான உடல், தைராய்டு சுரப்பி தொடர்புடைய நோய், சிறுநீரக நோய், இரத்த சோகை போன்ற நோய்களெல்லாம் மாரடைப்பு ஏற்படுவதற்குக் காரண நோய்களாக அமைவதோடு, மாரடைப்பினை மிகைப் படுத்துவனவாகவும் அமையும்.

முக்கிய நோய்களுக்கு மருந்து எடுத்து வரும்போது மருத்துவரின் ஆலோசனைகளின்றி மருந்தினைத் திடீரென நிறுத்திவிடவோ மாற்றி அமைத்துக் கொள்வதோ கூடாது

  • இதய நோய், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நீரிழிவு, இரத்தத்தில் கொழுப்புச் சத்து மிகுதல், சிறுநீரகக் கோளாறு நோய்களுக்கு மருந்து உட்கொண்டுவரின் மருத்துவரின் ஆலோசனைகளின்றி நீங்களாகவே மருந்தை நிறுத்திவிடவோ வேறு மருந்தை எடுத்துக் கொள்ளவோ செய்யாதீர்கள்; மருந்தினை மாற்றி அமைத்துக் கொள்ளவோ செய்யாதீர்கள்.
  • மருந்தை உட்கொண்டு வரும்போது உடம்பில் ஏதாவது விரும்பத்தகாத மாற்றங்கள் தோன்றினால் உடனடியாகச் சிகிச்சை அளித்திடும் மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.
  • மருந்து உட்கொண்டுவரும் காலங்களில் நோய்க்கான அறிகுறிகள் இல்லாமல் இருப்பதாலேயே, ஒருவர் முழுவதும் குணம் அடைந்து விட்டதாகக் கருதிடக் கூடாது.
  • அப்படிச் சீராக இருப்பதுகூட, உட்கொள்கின்ற மருந்து, வாழ்க்கை நடைமுறைகளில் கடைப்பிடிக்கும் புதிய அணுகுமுறைகள் ஆகிய இரண்டையும் அனுசரிப்பதாலேயே கூட அமையலாம்.
  • இரத்தம், சிறுநீர் ஆகியவைகளில் சர்க்கரை அளவுகள், இரத்த அழுத்த அளவு ஆகியவற்றின் மீது தொடர்ச்சியான கண்காணிப்புகள் இருந்திடல் வேண்டுமென்பது மிகவும் அவசியமாகும்.

உடற்பயிற்சிகள் விரும்பத்தக்கவையே!

ஏற்புடைய உடற்பயிற்சிகள்

  • பல்லாண்டு காலம் இதயம் தொடர்ந்து துடித்துக்கொண்டே இருக்கவேண்டியும், உடல் நலத்தோடு வாழ்வதற்காகவும், இளமை முதற்கொண்டே உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்துவருதல் வேண்டும்.
  • நடுத்தர வயதிலும் முதுமையிலும் நடைப் பயிற்சியையே உடற்பயிற்சியாக தொடர்ந்து மேற்கொண்டு வரலாம்.
  • உடற்பயிற்சியை மேற்கொள்ளாமல் காலங்கடத்தியிருந்தாலும், எஞ்சிய காலத்திற்கு உடற்பயிற்சி, தேவையானதே.
  • ஆனாலும், மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலையிருப்பின் களைப்படையச் செய்யவல்லதும் கடுமையானதுமான உடற்பயிற்சிகளை விலக்கிடல் வேண்டும்.
  • நடத்தல், நீந்துதல் போன்றவை சிறந்தவை. ஆனால், பளு தூக்குதல், அழுத்தம் செலுத்தல் போன்றவைகளல்ல.
  • மாரடைப்பிற்கு ஆட்பட்ட ஒருவர், எதிர்காலத்தில் தொடர்ந்து மேற்கொள்ளக்கூடிய உடற்பயிற்சிகளில் மாற்றங்கள் தேவை.
  • உங்களுடைய உடல்நிலைக்கேற்ப உடற்பயிற்சிகளுக்கான ஆலோசனைகளை உங்களது மருத்துவர் அளிக்கக்கூடும்.

பாலுணர்வினை வெறுத்தொதுக்க முடியாது!

  • மாரடைப்பிற்குப் பிறகு பாலுணர்வை அறவே ஒதுக்க வேண்டுமென்கிற அறிவுரை, இதுகாறும் பாலுணர்வில் அதிக ஈடுபாடுள்ள ஒருவருக்கு, மேலும் உளைச்சலை ஏற்படுத்துவதோடு மனச்சோர்விற்கும் காரணமாகிவிடும்.
  • இருப்பினும், மாரடைப்பையடுத்து உடனடியாகப் பாலுணர்வில் ஈடுபடக்கூடாதுதான்.
  • விரும்பத்தகா முறையில் மாற்றாரோடு தொடர்பு கொள்வதை அறவே நீக்குதல் வேண்டும்.
  • அணுகுமுறைகளில் மாற்றங்கள் தேவை.
  • உடலுறவின்போது நெஞ்சுவலி ஏற்படின், நைட்ரோகிளிசரின் (nitroglycerin) எனும் இதயவலி போக்கும் மாத்திரையை நாக்கிற்கு அடியில் வைத்துக்கொள்ள வேண்டும்; முன்னெச்சரிக்கையாகவும் மாத்திரையை உட்கொள்ளலாம்.
  • மாரடைப்பையடுத்து எப்பொழுது உடலுறவினை மீண்டும் மேற்கொள்ளலாம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடக் கூடியதாகும். அது மாரடைப்பின் தன்மைக்கேற்ப மாறுபடும்.
  • கடுமையான மாரடைப்பிலிருந்து மீள்பவர்கள், திங்கள் பல கழித்து, முழு அளவிற்கு உடல் நலம் பெற்ற பிறகே. உடலுறவில் ஈடுபாடு கொள்ளலாம்.
  • இடைப்பட்ட கால கட்டங்களில், மனநிறைவோடு மகிழ்ச்சியான அன்பும் அரவணைப்பும் பரிவும் பெரிதும் துணை நிற்கும்.
  • மேலும், உங்களுடைய மருத்துவரிடம் இருந்தே உரிய – போதிய ஆலோசனைகளைப் பெறுங்கள்.
  • உளைச்சல் நிறைந்த சூழ்நிலைகளை மாற்றி மகிழ்ச்சியான சூழ்நிலைகளை உருவாக்கி அமைதி பெறவேண்டும்
  • கடுமையான மன அழுத்தத்தைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய மன உளைச்சல்கள், உடல் நலத்தினைப் பெரிதும் பாதித்துவிடுவதுண்டு, உயிருக்குயிராக நேசித்து வந்தவர், இயற்கை எய்திடுவதைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய மன (உள்ள) பாதிப்புகளையும், அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகளான உடல் பாதிப்புகளையும் எளிதில் விவரிக்க முடியாது. ஏனெனில், பாதிப்புகள் பலவாறாக இருந்துவிடுவதே காரணங்களாகும்.
  • காதல் தோல்வி, பொருளிழப்பு, வேலை இழப்பு, பதவி இழப்பு, தேர்தல் தோல்வி, கட்டாய ஓய்வு, பதவிநீக்கம், எதிர்பார்ப்பிற்கு மாறான நீதிமன்றத் தீர்ப்புகள், எதிர்பாரா விபத்துகள், அறுவைச் சிகிச்சைகள் போன்ற நிகழ்வுகளெல்லாம் மன உளச்சலை ஏற்படுத்திவிடும்.
  • இயற்கையின் கட்டளைக்கு உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிரும் ஆட்பட்டே ஆகவேண்டும் என்கிற நிலை இருப்பதால், அவற்றை ஏற்றுக்கொள்கிற பக்குவத்தினை, துயருக்குள்ளாகும் அனைவரும் பெற்று எதிர்கால வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்வதற்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • உடல் மற்றும் உள்ள உளைச்சல்களை ஏற்படுத்திவிடும் சூழல்களில் இருப்பவர்கள், உளைச்சலைப் போக்கவல்ல நடவடிக்கைகளில் கவனம் செலுத்திடல் வேண்டும்.

    எடுத்துக்காட்டாக,

  • கவலையைப் போக்க, தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • கலகலப்பாகப் பேசி _ சிரித்து மகிழ்பவர்களோடு கூடிப்பழகிடல் வேண்டும்.
  • மனநிறைவையும், மகிழ்ச்சியையும் தரவல்ல கேளிக்கை நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்டு _- பார்த்து ரசித்து வரவேண்டும். அவைகளுக்கு, வானொலி நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பெரிதும் உதவிடும். தேவைப்படின், விரும்பிய பாடல்களை ஒலிப்பேழைகளில் பதிவுசெய்து கேட்டு மகிழலாம்.
  • நகைச்சுவை நிறைந்ததும், கேளிக்கைகள் நிறைந்ததுமான எளிமையான நூல்களை விரும்பிப் படித்து வருதல் வேண்டும்.
  • அவ்வப்போது இயற்கை காட்சிகளைக் கண்டு பரவசமடைய வேண்டும். சுற்றுலா சென்றுதான் இயற்கை காட்சிகளைக் கண்டுகளிக்க வேண்டுமென்பதில்லை; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேகூட இயற்கைக் காட்சிகள் நிறைவாகவே இடம் பெறுகின்றன; அவையெல்லாம் எளிய -அரிய வாய்ப்புகளாகும்.
  • உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள் இல்லாமலில்லை என்பதை உணர வேண்டும்.
  • எப்போதாவது உணர்ச்சி வயப்படுதலும், அதிக அளவிலான உடலியக்கத்திற்கும் ஆட்படுவதென்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன.
  • இப்படிப்பட்ட நிலைகளில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, உடல் உளைச்சலுக்கும் உள்ள(மன) உளைச்சலுக்கும் தொடர்ச்சியாக பெரிதும் ஆட்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • இதற்காக மனத்தினையும் அணுகுமுறைகளையும் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.
  • பொறுமையை இழப்பதன்மூலம் உங்களது உடலை, – உள்ளத்தைப் பலவீனப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
  • பொறாமைப்படுதல், பேராசைப்படுதல், உணர்ச்சி வயப்படுதல், வெகுண்டெழுதல், சினந்தெழுதல், கடுஞ்சொல்லுரைத்தல், அதிக அளவில் எதிர்பார்த்தல், நச்சரித்தல், கவலைப்படுதல், சஞ்சலப்படுதல், பயப்படுதல், மிதமிஞ்சிய செயல்பாடு ஆகியவற்றை அறவே வெறுத்து ஒதுக்குங்கள்.

    பிறரிடம் அன்போடும் கனிவோடும் பழகுங்கள்; பரிவு காட்டுங்கள்; உதவி செய்யுங்கள்; ஒட்டி ஒழுகுங்கள்; மகிழ்ச்சியோடு இருங்கள்; சுறுசுறுப்போடு இருங்கள்; அமைதியையும் எளிமையையும் மேற்கொள்ளுங்கள்.

    சவாசனம், தியானங்கள் போன்றவற்றை மேற்கொண்டு அமைதி அடையுங்கள்.
    இதயம் இதமாய் இயங்க… வேறு வழிதான் என்ன?சிந்திப்போமா… செயலில் இறங்குவோமா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *