-முனைவர் கடவூர் மணிமாறன்
அறிவார்ந்த சிந்தனையர்! அய்யா அண்ணா
அடிச்சுவட்டில் பிறழாமல் வாணாள் எல்லாம்
அறியாமை இருள்கிழிக்க முழங்கி வந்த
அன்பழகப் பேராசான்; எந்த நாளும்
நெறிதவறா இலக்கணமாய்த் தமிழர் நெஞ்சில்
நிலையாக இடம்பிடித்த நேர்மைக் குன்றம்!
குறிக்கோளின் தடம்பற்றிக் கொள்கை காக்கும்
குறளனைய இலக்கியமாய்த் திகழ்ந்து வந்தார்!
மடைதிறந்த வெள்ளமெனப் பொழியும் கொண்டல்!
மாற்றாரும் மதிக்கின்ற பொதிகைத் தென்றல்!
தடைகளுக்கு முடங்காமல் உழைத்து வந்த
தன்மான இனமான அறிவுத் தேனீ!
படைமறவர் போலிருந்து கழகம் காத்த
பண்பாட்டுக் கருவூலம்; தமிழர் நாட்டின்
முடைநாற்றப் பழமைகளின் முதுகெ லும்பை
முறிக்கின்ற பகுத்தறிவுச் சுடராய் வாழ்ந்தார்!
அய்யாவின் பாசறையில் பயிற்சி பெற்றார்
அண்ணாவின் இயக்கத்தில் வைரம் ஆனார்!
பொய், புரட்டை எந்நாளும் அறியார்! ஏற்ற
பொதுச்செயலர் பொறுப்புக்கே புகழைச் சேர்த்தார்!
ஒய்யார அரசியலை வெறுத்தார்! தீய
உமிகளையும் பதர்களையும் ஒதுக்கக் கற்றார்!
மெய்யாகக் கலைஞர்தம் தோழர் ஆனார்
மேன்மைமிகு பொதுத்தொண்டில் நிமிர்ந்து நின்றார்!
வெட்டொன்று தூண்டிரண்டாய் விளம்ப வல்ல
வெற்றிலைவாய் மணக்கின்ற தமிழின் யாழாம்!
முட்டவரும் மாடுகளை எதிர்த்து மோதி
மொய்ம்புதனைக் காட்டவல்ல புரட்சி வேழம்!
சட்டமன்றில் மக்கள்மா மன்றில் சங்கத்
தமிழாலே திராவிடத்தின் பெருமை காத்து
மட்டில்லாப் புகழின்பே ராசான் போற்றும்
மாத்தமிழாய் மறத்தமிழர் நெஞ்சில் வாழ்வார்!