பானகல் அரசர்

2022 டிசம்பர் 16-31 2022 மற்றவர்கள்

பானகல் அரசர் பெரும் பணக்காரர் குடும்பத்தில் 9.7.1866இல் காளாஸ்திரியில் பிறந்தார். இவருடைய பெயர் பி. இராமராய நிங்கார் என்பதாகும். தெலுங்கு, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆக மூன்று மொழிகளிலும் புலமை பெற்றவர். 1912இல் இந்தியாவின் மத்திய
நாடாளுமன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் ஜமீன்தார்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1915 வரை பிரதிநிதியாக இருந்தார். 1914இல் நடேசனாரின் திராவிடர் சங்கத்தில் இணைந்தார். நீதிக்கட்சி தொடக்கக் காலம் முதல் அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். நீதிகட்சியின் முதல் மாகாண மாநாடு கோயம்புத்தூரில் 20.8.1917 அன்று நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு பானகல் அரசர் இராமராய நிங்கார் தலைமை வகித்தார்.

நீதிக் கட்சியின் முதல் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1921ஆம் ஆண்டு முதலமைச்சர் சுப்பராயலு உடல்நலக் குறைவு காரணமாகப் பதவி விலகியபின் இவர் முதலமைச்சர் ஆனார். முதல் சமூக நீதி உத்தரவான எல்லாச் சமூகத்தினர்க்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற உத்தரவை 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் பிறப்பித்தார். கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் இவர் ஆட்சிக் காலத்தில்
தான் அமைக்கப்பட்டன. பஞ்சமர், பறையர் என்ற பெயர்கள் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என அழைக்கப்பட சட்டமியற்றப்பட்டது. 1923 நவம்பர் 20இல் நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை அமைக்கப்பட்ட போது பானகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் காலத்தில் கல்வி, சமூகநலத்துறை, மருத்துவத் துறைகளில் ஒடுக்கப்பட்டோருக்கு உதவிகரமாகப் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. இவர் காலத்தில்தான் “இந்து சமய அறநிலையச் சட்டம்” (HINDU RELIGIOUS ENDOWMENT ACT 1923. PUBLICATION Ordered AS ACTNo.1 of 1925) இயற்றப்பட்டது.
இச்சீர்திருத்தங்களுக்குக் காரணமான பானகல் அரசர் அவர்கள் 16.12.1928 அன்று இயற்கையெய்தினார்.