செய்திக் கீற்று

ஏப்ரல் 01-15

சைரன் டேக்

திருப்பதி ஏழுமலையான் மீது அக்கோவில் நிர்வாகத்திற்கு வரவர நம்பிக்கை போய்வருகிறது. அவர்கள் ஏழுமலையானை நம்பாமல் சைரன் டேக் என்ற கருவியை நம்பத் தொடங்கி விட்டனர். ஏழுமலையானுக்கு ப(க்)தர்கள்தரும் தங்க, வைர நகைகளைப் பாதுகாக்க சைரன் டேக் என்ற கருவியைப் பொருத்தப் போகிறார்களாம். ஏழுமலையான் பொம்மையில் அணிவிக்கப்பட்டுள்ள நகைகள் உள்பட அனைத்து நகைகளிலும் இந்தக் கருவி பொருத்தப்படுகிறது. யாராவது நகையைக் கழற்றினால் ஏழுமலையான் மௌனமாகத்தான் இருப்பார்.அவர் எப்போது பேசியிருக்கிறார்? ஆனால், இந்த சைரன் டேக் ஒலி எழுப்பிவிடுமாம்கடவுளையே(?)காப்பாற்றுகிறது இந்தக் கருவி..

நடுநிலை?

கடந்த மார்ச் 18இல் சங்கரன் கோவிலில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ள வில்லை. ஆணையர் பிரவீன்குமார் வாயே திறக்கவில்லை. நக்கீரன், தினகரன் பத்திரிகைகளைத் தவிர, பிற பேனா வீரர்களான ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், தினமலர், தினமணி, துக்ளக், கல்கி ஆகியவர்களின் பேனாவில் மை இல்லாததால் ஒரு வரிகூட எழுதவில்லை. நடுநிலைகள் நாறிப்போய்க் கொண்டிருக்கின்றன என்கிறார் ஒரு சங்கரன் கோவில் வாக்காளர்.

மின்வெட்டு

தமிழகத்தில் தொடரும் வரலாறு காணாத மின்வெட்டால் அனைத்துத் தொழில்களும் முடங்கிவிட்டன. உற்பத்தி பாதிப்பு, வேலைஇழப்பு, ஏற்றுமதி குறைவு போன்றநிலை மட்டுமல்லாமல் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு விலைவாசியும் உயர்ந்து வருகிறது. ஜெனரேட்டர் மூலம் சிறுசிறு தொழில்கள் நடைபெற்றாலும் அந்த உற்பத்திப் பொருளின் விலை இரு மடங்காக உள்ளதாம். உணவுப் பொருள், ஜெராக்ஸ் நகல் ஆகியவை கூட விலை உயர்ந்துவிட்டது.

மெய் – பொய்

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குப் படிக்க வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்ச் 16 அன்று மட்டும் அதிகபட்சமாக 2,300 பேர் வருகை தந்துள்ளனர். ஆனால், இது தொடர்பான வழக்கில் பார்வையாளர்கள் வருகை குறைவு என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அரசே அப்படிக் கூறலாமா என்று கேட்கிறார் அண்ணா நூலகத்தில் படித்துவிட்டு வந்த ஒருவர்.

உ.பி.யில் பா.ஜ.க.

உ.பி.யில் நடந்து முடிந்த தேர்தலை பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசியக்கட்சிகள் மூன்றாம், நான்காம் இடங்களுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. பா.ஜ.க.தான் பெரும்  தோல்வியைத் தழுவியது. சென்ற முறை 51 இடங்களில் வென்ற பா.ஜ.க. இம்முறை 47 இடங்களைப் பெற்றது. அது எழுப்பிய ராமர் கோவில் அஸ்திரம் எடுபடவில்லை. அயோத்தியிலேயே தோற்றுவிட்டது. ஆனால், காங்கிரசோ 22 இடங்களில் இருந்து 29 ஆகியுள்ளது. வாக்கு சதவீதமும் 8லிருந்து 14 ஆகியுள்ளது. ஆனாலும், ராகுல் காந்தியை உ.பி.மக்கள் விரும்பவில்லை. உள்ளூர் தலைவர்களையே எதிர்பார்க்கிறார்களாம்.

சபாஷ் அகிலேஷ்

உ.பி. சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

முலாயம் சிங் மகன் அகிலேஷ் சிங் முதலமைச்சர் ஆகியிருக்கிறார். 38 வயதில் முதலமைச்சர் என்ற பெருமையுடன் இன்னொரு நல்ல பழக்கமும் இவரிடம் உண்டு. அது கட்சிக்காரர்கள் தன் காலில் விழுவதை அனுமதிப்பதில்லை என்பதுதான். எதற்கெடுத்தாலும் காலில் விழும் கலாச்சாரம் கொண்ட வட மாநிலத்தில் இப்படி ஒரு முதலமைச்சர். அவருக்கு ஒரு சபாஷ் போடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *