திராவிட இயக்க எழுத்தாளர் டி.கே. சீனிவாசன்
மணி அடித்தது.
கூச்சலும் குழப்பமும் ஒருவாறு அடங்கி அமைதி நிலவ ஆரம்பித்தது.
ஆசிரியர் உள்ளே நுழைந்தார். கதாநாயகனை எதிர்பார்த்து கதாநாயகி “எப்போ வருவாரோ?” எனக் காத்திருப்பதுபோல யாருடைய வரவுக்காகவோ எல்லோரும் காத்திருந்தனர். நோட்டுப் புத்தகங்களை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் அந்தப் பெண்கள். இடத்தில் போய் உட்காரும் வரையில் பார்வையைத் துணைக்கனுப்பி உட்கார்ந்தவுடன் இழுத்துக் கொண்டனர் அத்தனை ஆடவர்களும்.
பாடம் ஆரம்பித்தது..
நான் அன்றுதான் புதிதாக அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். நான் படித்த பள்ளிக்கூடங்களெல்லாம் ரயில் வண்டி, சினிமாக்-கொட்டகை, பிரசவ ஆஸ்பத்திரி மாதிரி பெண்களுக்குப் பள்ளிக்கூடங்களும் தனியாகவே இருக்க வேண்டும் என்ற திட்டமான கொள்கை-யைக் கொண்டவை. எதிர்பாராத விதமாக உள்ளே நுழைந்து வரிசையாக அமர்ந்திருந்த அந்த ‘கொலுப் பொம்மைகள்’ என் மனதில் இன்பத்துடிப்பை உண்டாக்கின. ஆசை அடிக்கடி என் கண்களை அந்தப் பக்கம் திருப்பியது.
வெட்கம் அதைக் கொஞ்சம் மட்டுப்படுத்தியது பயம் அறவே வேண்டாம் எனத் தடுத்தது. அறிமுகமே ஆகாத அந்த மாணவர்கள் மத்தியில் இந்த மூன்றுவித உணர்ச்சிகளோடு உறவாடிக் கொண்டிருந்தேன்.தமிழ்ப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர். கேலிகள், விளையாட்டுகள், இடையிடையே ஆசிரியரின் அதட்டல்கள்… எங்கேயும் வழக்கமாக நடப்பது போலத்தான் நடந்தது.
“கற்பென்பது மாதர்க்கணிகலம்“ என்று ஆசிரியர் படித்தார்.
“அப்படியென்றால் என்ன அர்த்தம்?” என்று ஒரு மாணவன் எழுந்து கேட்டான்.
“கற்பு என்பது மாதர்க்கு ஒரு சிறந்த ஆபரணம் போன்றது” என்று விளக்க உரை கொடுத்துவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தார் ஆசிரியர்.
முதலில் கேட்டவன் எழுந்து நின்றான். அவன் கண்களில் குறும்பு நிறைந்திருந்தது.
புத்தகத்திலிருந்த பார்வையை அவன் மேல் செலுத்தினார் ஆசிரியர்.
“எல்லாப் பெண்களுக்குமா?” என்றான்.
அத்தனைப் பையன்களும் அந்தப் பக்கம் பார்த்துச் சிரித்தார்கள். மற்ற பெண்கள் அவளைக¢ கர்வமாகப் பார்த்து புன்னகை புரிந்தனர். அவள் தலை குனிந்திருந்தது. இதயத்தில் வரப்பு கட்டி, வேலி போட்டு அடக்கி வைத்திருந்த வேதனை, கட்டுகளையும் மீறி கண்ணீராக வெளிப்பட்டு விரித்து வைக்கப்பட்டிருந்த புத்தகத்தில் விழுந்தது.
“”உன் கண்ணில் நீர் வழிந்தால். என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’”’ என்ற பாடலின் அடிகள் என் முன்னே உருவெடுத்து நின்றன.
என் மனம் பாடத்தில் செல்லவில்லை. அவளையே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது. முத்துப் பல், மோகனமான முகம், பச்சைப் பட்டுச்சேலை, பளபளப்பான உடல், பார்த்து ரசிக்கக் கூடிய உருவம்! அவள் உதடுகளில் ஒரு புன்னகை மட்டும் பூத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தேன். சிரிப்பும் கூச்சலும் என்னைச் சுற்றிக் குடியேற ஆரம்பித்தவுடன்தான் வகுப்பு முடிந்துவிட்டது எனத் தெரிந்து கொண்டேன். அந்த இடத்தைப் பார்த்தேன். ‘கண்காட்சி சாலை’ காலியாக இருந்தது.
எழுந்து வெளியே வந்தேன். மாணவிகள் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களோடு அவள் இல்லை.
சுற்றிலும் திரும்பிப் பார்த்தேன். அப்போது தான் ஆசிரியர்கள் அறையிலிருந்து வந்து கொண்டிருந்தாள் அவள். குனிந்த தலையும், கலங்கிய கண்களும் என்னை ஏதேதோ செய்தன. நான் நிற்கும் பக்கமாகத்தான் அவள் வரவேண்டும். கலக்கம் நிறைந்த மனதிற்கு ஆறுதலான வார்த்தைகள் நல்ல மருந்தாக உதவும் என்று எனக்குத் தெரியும்.
என்னை அவள் நெருங்க நெருங்க, என் மனதிலே இருந்த இரக்கம் “பேசு” எனக் கேட்டுக் கொண்டது.
“வேண்டாம்“ எனக் கட்டளையிட்டது மனம்.
“பேசினால் என்ன?” என்று எதிர்த்துக் கேட்டது அறிவு.
“நாலுபேர் கேலி செய்வார்கள்.’ என்று பதில் சொன்னது மனம்.
இதற்குள் அவள் என்னைத் தாண்டிப் போய் விட்டாள்
ஏதோ சாப்பிட்டுவிட்டு எழுந்து பள்ளிக்-கூடத்திற்கு ஓடோடி வந்தேன். எவரும் வரவில்லை. இடத்திலேயே உட்காரவிடாமல் மனந்துடித்துக் கொண்டிருந்தது. எழுந்து வெளியே வந்து நின்றேன். சில பையன்கள் வந்து கொண்டிருந்தனர். உலாவப் போகிறவர்கள் போல மெள்ள மெள்ள நடந்து வந்தனர். அவர்கள் பின்னால் பரிகாசம் செய்தவனும் இன்னும் இரண்டு பேரும் பேசிக் கொண்டு வந்தனர். சிரிப்பும் கூத்துமாய் அவர்கள் வந்தது எனக்குப் பிடிக்கவேயில்லை. என்னை அறியாது அவன்மேல் ஒரு வெறுப்பு தோன்றியது. அவனும் எனக்கருகில் வந்து விட்டான். நான் என் கண்களைத் திருப்பிக் கொண்டேன்.
“இவர் தான் இன்று புதுசாச் சேர்ந்தவர்” என்று மற்றவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினான்.
“உங்கள் பெயர் என்ன?” என்று என்னைக் கேட்டான். சொன்னேன்.
அவனோ “என் பெயர் டி.துரைராஜு” என்று கையெழுத்துப் போடுவது போலச்
சொல்லித் தன்னைத் தானாகவே அறிமுகப்-படுத்திக் கொண்டான். கொஞ்சங் கூட கலக்கமோ கவலையோ அவன் முகத்தில் காணப்படவேயில்லை,
சிறுசிறு விஷயங்களுக் கெல்லாம் மனதைத் தொந்தரவு படுத்திக் கொள்ளும் எனக்கு இது ஆச்சரியமாகப் பட்டது. குறும்பு நிறைந்த அவன் கண்கள் என் வெறுப்பை எங்கேயோ விரட்டி ஓட்டின. ‘’போகலாமா” என்று என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு நடந்தான். நானும் அவனோடு நடந்தேன். எல்லோரும் போய் வகுப்பில் உட்கார்ந்தோம். மணி அடித்தது. மறுபடியும் காலை நிகழ்ச்சிகள். மணி ஒலி, நிம்மதி, ஆசிரியர் நுழைதல், எதிர்பார்த்தல், காட்சி அளித்தல்.- அவள் மட்டும் வரவில்லை.
மாலையில் என் மாமா “பள்ளிக்கூடம் எப்படி” என்று கேட்டபோது என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
“பிடிக்கிறதா?” என்று மறுபடியும் கேட்டார்.
“மனந்துடிக்கிறது” என்று வாய்வரையில் வந்த வார்த்தைகளை வெட்கமும் பயமும் கயிறுகட்டி உள்ளே இழுத்துக் கொண்டன. ஏதோ சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
அந்த ஊருக்கு நான் வந்து சில நாள்கள்தான் ஆகியிருந்தன. கால்கள் போனபடி நடந்து கொண்டிருந்தேன். எதிரே நீலநிறமடித்துத் தன்னை தனித்துக் காட்டிக் கொண்டிருந்த வீடுகூட எனக்குப் புதிதாகத் தோன்றவில்லை. ஆனால் அந்த வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்த அவள் என்னைத் திடுக்கிடச் செய்தாள். காலையில் கலங்கியிருந்த அந்தக் கண்கள் மாறியிருந்தன. ரயில் வண்டியில் போகும் போது சிறு பிள்ளைகள் ரயில் ஓடுகிறதா, சுற்றிலுமுள்ள மரங்கள் ஓடுகின்றனவா என்று சண்டை போட்டுக் கொள்வதைப் போல எனக்கும், நான் நடக்கிறேனா அல்லது அந்த வீடு என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறதா என் பது புரியவில்லை. எதிரே மூட்டை தூக்கிக் கொண்டு வந்த கூலியாள் தன்னை மறந்திருந்த என்னைச் சுயநினைவுக்கு வரச்செய்தான்.
தினந்தினம் கட்டாயம் பார்க்க வேண்டிய-வைகளில் அந்த வீடும் ஒன்றாக ஆனது.
சில சமயங்களில் அவள் அங்கேயே இருப்பாள். நான் பார்த்துக் கொண்டே நடப்பேன். எங்கேயும் தன் உருவத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடாமல் என் முன்னேயே வைத்துக் கொண்டிருப்பாள்.
அவளோடு எப்படியாவது பேசவேண்டும் என்ற உறுதியோடு வருவேன். ஆனால் அந்த வீட்டின் மேல் பூசியுள்ள சாயம், தான் ஒரு தனி ரகம் என்று காட்டிக் கொண்டது. என் உறுதியும் இடிந்து மண்ணாகப் போனது.
ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே! துரைராஜுவும் நானும் இணைபிரியாத நண்பர்களாக ஆகிவிட்டோம். அவளைப் பற்றி நான் அவனிடம் பேச ஆரம்பித்தால் என்னைப் பரிகாசம் செய்வான். அவளைக் கேவலமாகப் பேசுவான். அந்த வருஷம் நான் பரிட்சையில் தேறவில்லை. ஊர் சுற்றி உருப்படாமல் போய்விட்டேன். என்று சொல்லி என்னை என் மாமா, அப்பாவிடமே திருப்பி அனுப்பி விட்டார். புறப்படும் போது அடைந்த வேதனை அப்பப்பா சொல்லவே முடியாது!
காலத்தைச் சக்கரம் என்று சொல்லுவார்கள். அது சக்கரமாக இருக்க முடியாது. சக்கரத்தால் ஓடத்தான் முடியுமே தவிர பறக்க முடியாது. தேவன் என்பார்கள், தேவன் என்றால் அழிந்து போகாதவன் என்று தானே அர்த்தம்! அழிந்து போகக் கூடியதை எப்படி இதற்கு உவமையாகச் சொல்ல முடியும்? எதையும் உவமையாகச் சொல்ல வேண்டாம். காலம் என்றே அழைப்போம்.
இப்போது நான் ரயில்வேயில் ஒரு குமாஸ்தா.
குமாஸ்தாவின் உருவத்தைச் சற்று மனதில் எண்ணிப் பாருங்கள். அலுத்து சலித்துப் போன வாழ்வு; விடாப்பிடியாக வாட்டி வதைக்கும் உலகம். கைகட்டி வாய் பொத்தி கவனிக்கும் வேலை. மாதம் பிறந்த முதல் தேதி அவனுக்கு விழா நாள். இரண்டாம் தேதி இழவு நாள், மீதி தேதிகள் அவனுக்கு நலிவு நாள்கள். ஒரு நாள் வளர்பிறையும் மற்ற முப்பது நாள்களும் தேய்பிறையும்தான் அவன் வாழ்வில் மாறி மாறி வரும் அத்தியாயங்கள். ஆண்டவனால் எழுதப்பட்டதாக நம்பப்படும் ‘தலை எழுத்து’!
ஆறரை மணி வரைக்கும் வேலை செய்துவிட்டு அவசர அவசரமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அன்று “”வாழ்வாவது மாயம்‘” என்ற பாட்டு காதில் விழுந்தது. குமாஸ்தா வர்க்கத்துக்கே அடிக்கடி மனதில் தோன்றி பதிந்து போன இந்த உண்மையைக் கேட்டு சத்தம் வந்த திக்கை நோக்கினேன். சினிமாக் கொட்டகை. “”கண்ணகி’” என்ற விளம்பரப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது. முன்னாலேயே ஓடிக் கொண்டிருந்த குதிரை சண்டித்தனம் செய்து வந்தப் பக்கமே திரும்பி ஓடுவது போலானது என் மனமும். கலங்கிய முகம் ஒன்று என் முன்னே தோன்றியது. பைக்குள் கை நுழைந்தது. இருந்த சில்லறைகளை எல்லாம் வெளியில் எடுத்தேன். ஒரு நாலணா, இரண்டு ஓரணாக்கள், மூன்று அரையணாக்கள், இரண்டு காலணாக்கள். டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.
கண்கள் திரையில் இருந்தன. நினைவு எங்கேயோ இருந்தது. நான் கொடுத்த காசு வீணாகிக் கொண்டிருந்தது.
‘அவள் என்ன ஆனாள்?” என்று கேட்டது என் மனம். “என்ன ஆகியிருப்பாள்? தொழில் நடத்திக் கொண்டிருப்பாள்’ என்று அதுவே சமாதானம் சொன்னது.
‘அவளுக்கா இழிந்த வாழ்வு? கடவுளைத் தூக்க வேண்டுமானால் அன்னக் காவடிகளுக்கு காசு கொடுத்து அழைக்க வேண்டும். அவளைத் தூக்க எத்தனை சீமான்கள் அவள் வீட்டு வாயிலில் காத்திருக்கிறார்கள் தெரியுமா?” என்று என்னையே கேலி செய்தது என் குமாஸ்தா மனப்பான்மை. விளக்குகள் எரிய ஆரம்பித்ததும் இருட்டிலேயே இருந்த என் கண்கள் கூச ஆரம்பித்தன. கசக்கிக்கொண்டு சுற்றிலும் பார்த்தேன். எல்லோரும் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். நான் மட்டும் தனியாக, பேச யாருமில்லாமல் கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன்.
‘‘சோடா, சோடா” என்று ஒருவன் விற்றுக் கொண்டு போனான். பைக்குள் என்னை மறந்து கைவிட்டேன். இரண்டு காலணாக்களும் இதோ இருக்கிறோம் என்று அகப்பட்டன. பேசாமல் கையை வெளியிலெடுத்துக் கொண்டேன்.
பின்னாலிருந்து யாரோ என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தேன். முதலில் அடையாளம் தெரியவில்லை. மறுபடியும் கூர்ந்து கவனித்தேன். அவன் தான் துரைராஜு.
தன் பக்கத்தில் வந்து உட்காரும்படி என்னை அழைத்தான். அவனருகில் உட்கார்ந்ததும் எனக்கு அப்போதைய நிலையே மறந்து விட்டது. பக்கத்திலிருந்த துரைராஜு, திரையில் ஓடிய ‘கண்ணகி’ அப்போதுதான் உண்டாகிய-_ தொல்லை கொடுத்த அவள் நினைவு-_ சிறுவயது நினைவுகள் என்னைத் தம் வசமாக்கிக் கொண்டன. மரத்துப்போயிருந்த என் மனம் உணர்ச்சி பெற்று ஓடி ஆடி விளையாடத் தொடங்கியது.
“எங்கே இருக்கே?’’ என்றான்.
“’இங்கேதா”” என்று நான் உட்கார்ந்திருந்த இடத்தைக் காட்டினேன்.
‘’என்ன வேலையிலே?” என்று என் பரிகாசத்தை ரசித்துச் சிரித்துக் கொண்டே மறுபடியும் கேட்டான்.
“ரயில்வே குமாஸ்தாவா”” என்று பரிதாபமாக அடங்கி ஒடுங்கி பதில் சொன்னேன்.
“ரயில்லேயா, ரயில்லேயா?” என்று அவன் கேட்ட போது ஏதோ ‘முதல் மந்திரியா’ என்று கேட்பது போல இருந்தது
நானும் அவனைப் பற்றி விசாரித்தேன். இரண்டு பேரும் பேசிக் கொண்டே இருந்தோம். படம் ஓடிக் கொண்டே போனது. பக்கத்தில் ஒருவர் ‘ஷ்’ என்று படமெடுத்தார்.
சற்று நேரம் மவுனமாகப் படம் பார்த்தோம். மறுபடியும் ஏதோ பேச்சு.
‘’கொஞ்சம் மெள்ளப் பேசுங்கோ சார்” என்று எங்களைக் கேட்டுக் கொண்டார். மவுனம். திரும்பவும் ஆரம்பித்து விட்டோம். அவரும் பேசாமல் எழுந்து எங்கேயோ போய் உட்கார்ந்து விட்டார்.
படம் முடிந்ததும் எழுந்து வெளியே நடந்தோம். இன்பக் கதைகளெல்லாம் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ?” என்று பாரதியார் சிறு குழந்தையைப் பார்த்துக் கேட்டார். நான் சென்று போன நாள்களைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டேன். பேசிக் கொண்டே வந்த துரைராஜு திடீரென்று நின்றான்.
“”இதுதான் என்வீடு” என்றுதன் வீட்டைக் காட்டினான். “அப்ப நான் வரவா?” என்று உத்தரவு கேட்டேன்.
“கொஞ்சம் உள்ளே வந்து போயேன்” என்று அழைத்தான் நானும் ஒத்துக் கொண்டு உள்ளே போனேன். என்னை உட்காரச் சொல்லிவிட்டு அவன் எதற்கோ உள்ளே போனான். வீடு முழுதும் ஒரு முறை கண்ணோட்டம் செலுத்தினேன்.
அந்தப் போட்டோ…? என்னை சினிமாக் கொட்டகைக்குள் வாட்டி வதைத்தவள்; அதே கண்கள்! ஆனால் கலங்கி யிருக்கவில்லை. கவர்ச்சி அளித்தன.
எழுந்து சென்று அருகில் நின்று கூர்ந்து கவனித்தேன்.
“என்ன பார்க்கிறே?” என்று துரைராஜு கேட்டுக் கொண்டே என்னருகே வந்தான்.
“இவள்…?” என் வாய் குழறிற்று.
“என் மனைவி என்று சாதாரணமாகப் பதில் சொன்னான். ஒரே வினாடியில் புயல் கொந்தளிப்பு, நெருங்கியிருக்கும் ஒரு பெரிய பாறை இவற்றிடையே சிக்கிய கப்பல் போலானது என் மனமும்.“”நீயா இவளைக் கல்யாணம் செய்துக்கிட்டே!”” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.
அவன் கையை நீட்டி எதையோ காட்டினான். திரும்பிப் பார்த்தேன். ராமசாமி நாயக்கர் படம்!
“ராமசாமி நாயக்கரா?” என்று ஒன்றும் புரியாமல் தட்டுத் தடுமாறிக் கேட்டேன்,
“பெரியார் என்று சொல்லு” என்றுஎன்னைத் திருத்தினான்.
நான் ஒன்றும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றேன்.
“அவரால்தான் அவள் வாழ்வு பெற்றாள். நான் மட்டும் சுயமரியாதைக்காரனாக மாறாவிட்டால் அவள் பொதுச் சொத்தாக ஆகியிருப்பாள்” என்றான்.
திரும்பி அந்தப் படத்தைப் பார்த்தேன். கண் சிமிட்டாமல் அவர் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனையோ நாள்களாக என் இதயத்திலே இருந்து
எரிந்து புகைந்து கருகிப் போன அந்தச் சாம்பலை ஊதித் தள்ளினேன்.‘”வணக்கம், வாருங்கள்” என்ற குரல் கேட்டது. திரும்பினேன், அவளேதான்.அதே அழகு, அதே உருவம்-. ஆனால் வளர்ச்சியில் தான் மாறுதல்.கையில் காப்பி நிறைந்த டம்ளர். முகத்தில் போட்டோவில் இருந்த கவர்ச்சி.“பெரியார்” என்று என் வாய் முணு
முணுத்தது, மனம் உண்மைதான் என ஒத்துக் கொண்டது.என் இரு கைகளும் ஒன்று சேர்ந்து குவிந்தன_ அவளைப் பார்த்து அல்ல, ‘அந்தக் கிழவர்’’ படத்தை நோக்கி.