– திண்டிவனம் ந.சேதுராமன்
காட்சி 22
நடு மண்டபம்
உறுப்பினர்: கஜகேது, சித்ரபானு, ஆரியர்கள் நால்வர், தளபதி வெற்றிவீரன், பிரகலாதன், இரணியன், காங்கேயன். சூழ்நிலை: மண்டபத்தின் மத்தியில் ஒரு பெரிய தூண். அதைச் சுற்றிலும் சிறு தூண்கள் நான்குடன் அமைந்துள்ளது. கஜகேது தன் ஆரிய மக்கள் நால்வருக்கும் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் சித்ரபானு நிற்கிறாள்.
கஜகே: நம் விஷயத்தை நாம்தான் முடிக்க வேண்டும். சற்று நேரத்தில் இந்த நடுமண்டபத்துக்குப் பிரகலாதனும் தளபதியும் வரக்கூடும். அதனால் உங்கள் கைகளில் ஈட்டி, கத்தி, குத்துவாள் சகிதம் அடுத்துள்ள அறைகளில் பதுங்கி இருங்கள். காங்கேயா, இந்தச் சிங்கத்தின் தோலைப் போர்த்திக் கொண்டு அந்தப் பெரிய தூண் மறைவில் நின்றுகொள். தூண் மறைவிலிருந்து சிங்க உருவுடன் காங்கேயன் வெளிப்பட்டதும் இரணியன் திடுக்கிட்டுத் தயக்கம் காட்டுவான். அப்போது நீங்கள் அனைவரும் பாய்ந்து வந்து இரணியனின் முதுகில் உங்கள் ஆயுதங்களைப் பாய்ச்சிக் கொன்றுபோடுங்கள்.
சித்ர: இந்தக் கலவரத்தில் நீங்கள் சேனாதிபதியையும் குத்திக் கொன்று விடவேண்டும். ஏனென்றால், நமது சூழ்ச்சிகள் யாவும் அவனுக்குத் தெரியும். அது மட்டுமல்ல, நம் ஆரிய மதத்தை முழுவதும் ஏற்றுக்கொள்ளவில்லை. சந்தேகப் படுகிறான். இளவரசரைச் சந்திக்க முடியாததால் ஒரு ஓலை எழுதி அவரது இடுப்பில் சொருகிவிட்டு வந்திருக்கிறேன். அவ்வோலையில் தளபதியை ஒழித்து விடும்படி எழுதி இருக்கிறேன். ஒரு வேளை அவ்வோலையைப் பார்க்கத் தவறினால், அதனால் இக்கலவரத்தில் தளபதியையும் தீர்த்து விடுங்கள். போங்கள். போய் மறைந்துகொள்ளுங்கள். வாங்கப்பா. நாம் அந்த அறையில் பதுங்கிக் கொள்வோம். (ஓடுகின்றனர்)
கஜகே: (வந்து) இன்னும் பிரகலாதனைக் காணோமே! அதோ வருகிறார். ஒளிந்துகொள்வோம். (ஒளிதல்)
பிரக: (வருகிறான். மண்டபத்தின் நடுவில் உள்ள ஆசனம் ஒன்றில் அமர்ந்து) சிறீமந் நாராயணாய
நமஹ: ஓம் நமோ நாராயணாய நமஹ:
இரணி: (கோபத்தோடு) அடேய் பிரகலாதா?
பிரக: (எழுந்து) ஓம் நமோ நாராயணாய நமஹ:
இரணி: நாடு சுற்றிப் பார்க்கப் போன நீ நாசக்காரர்கள் நச்சு வலையில் வீழ்ந்துவிட்டாய். நீ என்னிடமே உன் சித்துவேலைகளைக் காட்டுகிறாய்.
பிரக: கோபப்படாதீர்கள் அப்பா! சிறீமந் நாராயணன் நம்மைக் காக்கும் கடவுள் அப்பா!
இரணி: (கோபத்துடன்) நாராயணன், நாராயணன். எங்கே இருக்கிறான்? அந்த நயவஞ்சக நாராயணன்.
பிரக: அவர் இல்லாத இடம் ஏது அப்பா! சர்வ வியாபியாயிற்றே!
இரணி: குறிப்பிட்டுச் சொல்.
பிரக: நாராயணன். தூணிலுமிருப்பான் துரும்பிலும் இருப்பான்.
இரணி: (பெரிய தூணைக்காட்டி இந்தத் தூணில் இருப்பானா?
பிரக: நிச்சயமாக.
இரணி: அடே நாராயணா! வெளியே வாடா (உதைக்கிறான்)
காங்கே: (சிங்கத்தோலுடன் வெளிப்படுகிறான்) அடே! நான்தான்டா அந்த நாராயணன்.
இரணி: தூணை உதைத்தேன். நீ வந்தாய். உன்னை உதைக்கிறேன். தூண் வருகிறதா பார்ப்போம். (பலமாக உதைக்க, காங்கேயன் அய்யோ, அம்மா என்று அலறியபடி வீழ்ந்து இறக்கிறான். ஆரியர்கள் இரணியனை முதுகில் குத்துகிறார்கள்.)
இரணி: ஆ! கோழைகளே! (தள்ளாடி கீழே சாயும்போது தளபதி வெளிப்படுகிறான்) தளபதி நீயுமா? (கீழே வீழ்ந்து உயிர் துறக்கிறான்)
பிரக: (தளபதியைப் பார்த்து) டேய் தளபதி என் மனைவி சித்ரபானுவிடமா வாலையாட்டத் துணிந்தாய். உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்.
தளபதி: உன் தந்தையைக் கொன்றதுமல்லாமல் என்னையுமா கொல்லப் பார்க்கிறாய். இதோ வாங்கிக் கொள். (தளபதி பிரகலாதனை வெட்டி வீழ்த்துகிறான்.)
தளபதி: இதென்ன இவன் இடுப்பில் ஓலை? (எடுத்துப் படித்தல்)
என் ஆசைக் கணவன் இளவரசரே! நான் தங்களை மணந்த நாளாக என்னை எப்படியாவது அடைய வேண்டுமென்று தங்கள் தளபதி வெற்றிவீரன் முயன்று வருகிறான். தங்களை ஒழித்து இந்நாட்டைக் கைப்பற்ற முயற்சி செய்கிறான். அவனை ஒழித்துவிடவும்.
தங்கள் அன்பு மனைவி சித்ரபானு.
தளபதி: அடி சண்டாளி! துரோகி. எங்கே அவள். (சுற்றுமுற்றும் பார்க்கிறான்)
சித்ர: (காங்கேயன் மேல் விழுந்து அழுது கொண்டிருக்கிறாள்) அண்ணா! அண்ணா! காங்கேயன் அண்ணா! இனி எப்போது காண்பேன்! என் அண்ணா!
வெற்றி: இதோ இருக்கிறாள் சண்டாளி! என்னைக் காதலிப்பதுபோல் நடித்து நயவஞ்சகம் செய்துவிட்டாயே காதகி! (வாளால் அவள் தாலியைத் தூக்கிப் பிடித்து) இதுதான் பிரகலாதன் கட்டிய தாலியா? கௌரி விரதம் இதுக்குத் தானா?
சித்ரா: (அச்சத்துடன்) என்னை ஒன்றும் செய்யாதீர்கள். இந்தத் தாலியை அறுத்துப் போட்டு விடுகிறேன். நீங்கள் வேறு தாலி கட்டுங்கள். அரசரும், இளவரசனும் மாண்டு போனார்கள். நீங்களே இந்நாட்டை ஆண்டு வாருங்கள். அவசரப்படாதீர்கள்.
வெற்றி: என்னடி! எத்தனை புருஷன்டி உனக்கு?
சித்ர: ஆரிய தர்மத்திலே ஒருத்தி எத்தனை கணவனையும் அடையலாம்.
தடையில்லை தளபதியாரே!
தளபதி: தமிழர் இனம் இதை ஏற்காது. இதோ வாங்கிக்கொள். (வாளை அவள் வயிற்றில் செருகுகிறான். வீழ்கிறாள். அதே சமயம்)
கஜகே: டேய் தளபதி! (பின்னால் கட்டாரியால் தளபதியின் முதுகில் குத்துகிறான்)
தளபதி: எல்லாம் அழிந்தது. தமிழகமே! தமிழர் பண்பாடே! ஆரிய மதத்தின் காலடியில் சிக்கி அநியாயமாக அழியத்துணையாக இருந்துவிட்டேனே! ஆரிய சூழ்ச்சியின் பிடியில் சிக்கி ஏமாந்துவிட்டேனே!
மந்திரமில்லை, மாயமில்லை, தேவர்கள் இல்லை, தெய்வமில்லை, மக்களைச் சுரண்டி வாழ ஏற்படுத்திக் கொண்ட சூழ்ச்சி வலைதான் ஆர்ய தர்மம். இதை அறியாமல் போய்விட்டேனே.
அடே! ஆரியப் பதரே! பின்னாலிருந்து தாக்குவது தமிழர் பண்பாடல்லடா. எதிரே நின்று போராடுபவனோடுதான்டா சண்டையிடுவோம். அதிலும் நிராயுதபாணிகளோடு போரிடும் வழக்கமில்லாதவர்கள் தமிழர்களடா – கோழையே!
இரணியன் வரலாற்றை எப்படி எழுதப் போகிறீர்களோ! பாமர மக்களை ஏமாற்ற எப்படிக் கதையளக்கப் போகிறீர்களோ?
நாராயணன் சிங்க உருவில் வந்தான். இரணியனைக் கொன்றான். பிரகலாதனுக்கு மோட்சம் கொடுத்தான். என்றெல்லாம் எழுதி என் தமிழ் மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்.
உங்கள் தந்திரம் அனைத்தையும் அறிந்த என்னையும் கொன்றுவிட்டீர்கள். பொய் வதந்திகளைப் பரப்பி என்னென்ன செய்யப் போகிறீர்களோ?
தமிழகமே! இதோ உன்னை விட்டுப் போகிறேன். பிற்காலத்தில் தோன்றும் தமிழர்கள் ஒரு காலத்தில் உண்மையை உணர்வார்கள். ஆரியர்களின் சூழ்ச்சித் திட்டங்களைத் தவிடுபொடி ஆக்குவார்கள். பொய் நீண்ட காலம் நிலைக்காதுடா, நிலைக்காது. (வீழ்தல்)
– (முற்றும்)