தஞ்சை பெ. மருதவாணன்
4. இந்தியக் குடியரசு நாள் 26.1.1950இல் தொடங்குவதற்கு முதல் நாள் (25.1.1950) அன்று ஆர்.எஸ்.எஸ் ஏடாகிய ஆர்கனைசரில்
(Organizer) சங்கர் சுப்பையா அய்யர் ஓய்வு பெற்ற பார்ப்பன நீதிபதி எழுதிய கட்டுரையில் மனுஸ்மிருதியை இந்த நாட்டின் சட்டமாக்க வேண்டும் என்று எழுதினார்.
(‘விடுதலை’ 29.11.2015)
5. திருச்சியில் 1984-இல் அசோக்சிங்கால் தலைமையில் நடந்த விசுவ ஹிந்து பரிஷத்தின் வழக்குரைஞர் மாநாட்டில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் மனு தர்மத்தை அரசியல் சட்டமாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
(“விடுதலை’’ 22.4.2015 பக்கம் 4)
6. தந்தை பெரியார் அவர்களால் மாபெரும் அழுக்குருண்டை என்று வருணிக்கப்பட்ட முன்னாள் இந்திய ஒன்றிய அரசின் குடியரசுத் தலைவரும், தத்துவமேதை என்று கூறப்படுபவருமான டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய அரசின் கலாச்சாரத் துறையால் இணைய தளத்தில் (1964) வெளியிடப்பட்ட மனுதர்ம நூலுக்கு 10.7.1962 இல் (Law of Manu) வாழ்த்துரை வழங்கிப் பாராட்டி மகிழ்ந்துள்ளார்.
(“விடுதலை’’ 5.11.2020, பக்கம் 4)
7. தலை முதல் கால் வரை மூளையுள்ள மகாபுருஷர் என்று ஆரியம் ஏற்றிப் போற்றும் சி. ராஜகோபாலாச்சாரியார் எனும் ராஜாஜி, மனுதர்மம் அருமையான நீதிகளைக் கொண்டது எனக் கூறியதைத் தோலுரித்துக் காட்டுகிறார் தந்தை பெரியார். “ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரின் சீர்திருத்த யோக்கியதை! மனுதர்ம சாஸ்திரத்திற்கு வக்கீல்!” என்ற தலைப்பில் ‘குடிஅரசு’ (25.3.1928) இதழில் தந்தை பெரியார் எழுதியிருப்பதாவது:
இங்கிலீஷ் ‘சுயராஜ்யா’ பத்திரிகையில் (21.3.1928)இல் மனுதர்மத்துக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு அவர் ஏழு கலங்கள் எழுதியுள்ளார். மனுதர்மத்தை எரிக்க வேண்டும் என்பது தற்கொலைக்கு ஒப்பாகும் என்றும், அது அருமையான நீதிகளைக் கொண்டது என்றும் விசேஷமாய்ப் புகழ்ந்துவிட்டு பார்ப்பனருக்குச் சம்பந்தப்படாததும் கவலையில்லாததுமான விஷயங்களைப்பற்றி மனுதர்மத்திலிருந்து இரண்டொரு வாக்கியங்களை எடுத்துக்காட்டி பொது ஜனங்களை ஏமாற்றப்பார்க்கிறார்.
8. ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற வளாகத்தில 1989ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மனுவின் சிலை சுமார் 32 ஆண்டுகளாக இருந்துவருகிறது. அதை எதிர்த்து ஏ.என். ஜெயின் என்பவர் கடந்த பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். தாழ்த்தப்பட்ட சமூகப்பெண் ஒருவர் மனுவின் சிலையில் ஏறி அதை உடைக்க முயலும் படம் வெளியாகியுள்ளது. கடந்த 32 ஆண்டுகளாகச் சட்டப் போராட்டம் நடத்தியும் இன்றுவரை மனுவின் சிலையை அகற்ற முடியவில்லை. (சன் தொலைக்காட்சியில் 27.06.2020 அதிகாலை 12:15 மணிக்கு இந்தச் செய்தி படத்துடன் ஒளிபரப்பப்பட்டது)
9. சிந்துவெளி திராவிடவியல் ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ் (பணிநிறைவு) அவர்கள் தமிழ்நாடு மாநில உருவாக்கம் எனும் தனது கட்டுரையில் ‘மனு’ என்ற சொல் நமது தமிழ்நூல்களில் இடம் பெற்றுள்ள விவரங்களைத் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“மனு’’ என்னும் சொல் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள், பதினெண் கீழ்க்கணக்கு, அய்ம்பெரும் காப்பியங்கள், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றில் இடம் பெறவில்லை. மனு என்னும் சொல் கம்பராமாயணத்தில் 25 முறையும் பெரிய புராணத்தில் 10 முறையும் திருப்புகழில் 12 முறையும், வில்லிபாரதத்தில் 28 முறையும் இடம் பெற்றுள்ளது.
ஜாதியைப் போற்றும் சனாதனிகள்
மக்களைப் பிளவுபடுத்தும் நால்வருண நச்சுக்கொள்கையும் அது ஈன்ற நாலாயிரம் உள்ஜாதிகளும் இந்துத்துவ ஆரியம் ஏமாற்றிப் பிழைப்பதற்காக அமைத்துக்கொண்ட ஓர் ஏற்பாடாகும். அதனைப் போற்றாமல் அது வேறு எதனைப் போற்றும்?
1. ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தலைவர் கோல்வால்கர் தனது “ஞானகங்கை’’ எனும் நூலில் ஜாதிக்கு ஆதரவாக எழுப்பிய குரல் இது!
அ) சிலர் நீண்ட காலமாக ஜாதி முறையை எதிர்த்து வருகிறார்கள். பழங்காலந்தொட்டு இந்த ஜாதி அமைப்பு முறை நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தது என்று சொல்வதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. உண்மையில் ஜாதி அமைப்பு முறை ஒற்றுமையைக் காப்பதற்கு உதவியுள்ளது.
(“விடுதலை’’ 20.2.2015)
ஆ) நமது சமுதாயத்தில் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வர்ணங்கள் அமைப்பு ஆகும். இன்று அது ஜாதிவாதம் என்று கூறிக் கேலி செய்யப்படுகிறது. வருண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர். அந்த நால் வருண அமைப்பில் உருவாகிய சமூக அமைப்பினைச் சமூக நீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.
(“விடுதலை’’ 4.2.2016)
2. திலகரின் ஜாதிவெறியைத் தோலுரிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தனது “காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்குச் செய்தது என்ன?” எனும் நூலில் குறிப்பிட்டிருப்பதாவது:
1918 வாக்கில் திலகர் பேசுகிறார், ‘‘இப்போது எல்லோரும் சட்டசபைக்குப் போக வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். எதற்காகச் செருப்பு தைக்கிறவனும் எண்ணெய்ச் செக்கு ஆட்டுகிறவனும் வெற்றிலை பாக்குக்கடை வைத்திருக்கிறவனும் சட்டசபைக்குப் போக வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டும் என்று ஒரு வரைமுறை கிடையாதா?’’
(“விடுதலை’’ 16.5.2015)
3. காஞ்சி மாமுனிவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி எனும் “தெய்வத்தின்’’ குரல் இது: “யோசித்துப் பார்த்தால் நம் தேசத்திலும் கூட பழைய வருண தர்மங்களின் பிடிப்பு குறைந்துபோய் எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்பிராயம் வந்த பிற்பாடுதான் இப்படி மதஉணர்ச்சி
யின்றி நாஸ்திகம் அதிமாகியிருக்கிறது தெரிகிறது_ சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது.”
(தெய்வத்தின் குரல் முதல் பாகம், பக்கம் 162. “விடுதலை” 26.1.2019, பக்கம் 2)
4. சமரசம் உலாவும் இடமே என்று மயானத்தில் பாடும் திரை இசைப்பாடலைப் பலரும் கேட்டிருக்கக்கூடும். உண்மை நிலை என்ன? ஜாதிக்கொரு மயானம் என்பதுதானே சனாதனம் நமக்கு அளித்த பரிசு? கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
ஆர். மகாதேவன் 2021 ஆம் ஆண்டு அளித்த பொது மயானம் பற்றிய அருமையான தீர்ப்பின் சில பகுதிகள் இவை:
உலகம் முழுதும் உள்ள தத்துவ ஞானிகள், கவிஞர்கள் அனைவரும் மனிதகுலத்தில் மரணத்தின் போதுதான் சமரசம் உலாவுவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், இறந்த நபர்களின் உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய பொது மயானம் இல்லாத சூழல் இருப்பது வேதனை அளிக்கிறது.
காலம் காலமாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அருந்ததியினருக்கு உடலை அடக்கம் செய்ய போதிய மயானம் இருப்பதில்லை. அவர்கள் இறந்தால் அவர்களின் உடலைக்கூட தங்களது நிலம் வழியாகவோ அல்லது பாதை வழியாகவோ எடுத்துச் செல்லக்கூடாது என்ற ஜாதியக் கொடுமை இன்னும் உள்ளது. ஜாதிக்கு ஒரு மயானம் என்ற நிலை மாறவேண்டும். தமிழ்நாட்டில் மயானங்களில் உள்ள ஜாதிப் பெயர்ப்பலகைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் அனைத்து கிராமங்களில் அனைத்து ஜாதியினருக்கும் பொதுவான பொது மயானங்களை உருவாக்க வேண்டும்.
இந்த உரிமை அனைத்து ஜாதியினருக்கும் உள்ளது. அதை மீறுவோருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும். பொது மயானம் உள்ள கிராமங்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு ஊக்கத்தொகை வழங்கவேண்டும்.
(‘விடுதலை’ 9.12.2021 பக்கம் 1)
மனிதன் மறைந்த பிறகும் மயானத்தில் தொடரும் இந்த வருணபேத நீட்சியைப் பற்றி சனாதன பீடங்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. ஏன், இது அவற்றுக்கு ஒரு பொருட்டே அல்ல. சங்கரராமன் சங்கார வழக்குப்புகழ் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பொது மயானத்தை எதிர்த்துத் திருவாய் மலர்ந்தருளிய இருளுரை இது:
“எல்லா ஜாதியினரும் ஒரே வகையான எரிப்பு முறையைக் கடைப்பிடிக்காததால் ஒரே சுடுகாடு முடியாத காரியம். மின்சார சுடுகாடு இந்து தர்மத்துக்கு எதிரானது” (‘விடுதலை 8.3.1982, பக்கம்.1 விடுதலை தலையங்கம் 28.2.2021)
இங்கு தஞ்சையில் நடந்த ஒரு பழைய நிகழ்ச்சியை நினைவுகூர்தல் பொருத்தமாக அமையும். 1950- களில் ஒரு நாள் தஞ்சையிலுள்ள ராஜா கோரி மயானத்துக்கு அஞ்சா நெஞ்சன் அழகிரி கல்லறைக்கு மரியாதை செலுத்த
தந்தை பெரியார் சென்ற போது அங்கு சூத்திரர்கள் எரிக்கும் இடம், பிராமணர்கள் எரிக்கும் இடம் என்று இருவேறு இடங்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அன்றே தஞ்சை நகராட்சி நிருவாகத்தினர்க்கு,
மயானத்தில் ஜாதி வேறுபாடு காட்டும் அறிவிப்புகளை நீக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். தந்தை பெரியாரின் வேண்டு
கோளுக்கிணங்க அவ்விரு அறிவிப்புகளும் நீக்கப்பட்டன.
5. சிகாகோ பேருரைப் புகழ் வீரத்துறவி விவேகானந்தரின் ஜாதி ஏற்புக் குரல் இது: “இந்தச் ஜாதி முறை என்பதே கடவுள் அருளியது. அதில் நீங்கள் கை வைக்காதீர்கள். அதனை வெறுக்காதீர்கள். ஜாதியைப் பற்றி நீங்கள் கேவலமாகப் பேசியதனால்தான் இந்தியா வீழ்ந்துகிடக்கிறது.’’ (vivekananda Complete works) எனும் தொகுதியில் Advaita Ashrama என்ற தலைப்பில் கூறியது. (விடுதலை 1.12.2021) அறிவார்ந்த உலகம் கண்டிக்கும் ஜாதி விஷயத்தில் இவர் ஏன் பிற்போக்காளராக மாறினார்?
6. பிரம்மசூத்திர உரையில் (1:3:38) “சூத்திரர்கள் வேதங்களைக் கேட்பதற்கும் படிப்பதற்கும் வேத முறைகளை அறிந்துகொள்வதற்கும் மேற்கொள்வதற்கும் ஸ்மிருதி தடை செய்கிற காரணத்தால் சூத்திரர்கள் வேதங்களைப் படிப்பதற்கும் அறிந்துகொள்வதற்கும் தகுதி அற்றவர்கள் ஆகிறார்கள்.
(விடுதலை 10.6.2020) என்று சிறீசங்கர பகவத் பாதர் எனும் ஆதிசங்கரர் ஆஞ்ஞை பிறப்பித்துள்ளார் என்றால் அடுத்து வந்த மீதி சங்கரர்களின் யோக்கியதை என்னவாக இருக்கும் என்பதை நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.