சிறுகதை

ஏப்ரல் 01-15

அகமும் புறமும் – சு.தாமஸ்

நம்ம அய்யரு இந்த அளவுக்கு காலனி தெருவுக்குள்ள இறங்கி வாக்கு சேகரிக்கார்னாப் பரவாயில்லை! மிஞ்சிப் போனா ஒரு இருபத்தெட்டு வயசுதானிருக்கும். நேத்து வரையில நம்ம ஊரு பூசாரி வேலை செஞ்சவர்தான். அந்த ஆச்சாரமெல்லாம் கொஞ்சம்கூட இவர் செயல்பாட்ல தெரியலய… போகிறப் போக்கப் பார்த்தா நம்ம ஊரு தேர்வுநிலை பஞ்சாயத்துல அய்யர்தான் ஜெயிக்கற மாதிரியிருக்கு… தங்கையாவுக்கு உள்ளத்தில மகிழ்ச்சி தாங்க முடியல… முரட்டு சங்கத்துல சொன்னான்.

ஆமா! ஏப்பா, தங்கையா உங்க குடும்பத்து ஓட்டெல்லாம் யாருக்கு போடப்போறீயோ? இப்படித்தான் வார்த்தையை நீட்டி, மடக்கி கேட்டார் தேரடிமுக்குச் சுக்குவென்னீர் கடை உரிமையாளர் சீதாராமன்.

ஏங்க எங்க வார்டுலத்தான் அதிக வாக்குகள் இருக்கு. அய்யரு எங்க தெருவுக்கு வந்து அடிக்கடி வாக்கு சேகரிக்காரு. அவரு பேருகூட எவ்வளவு பொருத்தமாயிருக்குப் பாத்தேளா… வெற்றிவேலவ அய்யர். நானும், அவரும் நம்ம ஊரு ஹிந்து வித்யாலாவில் சேந்து படிச்சோம். எங்க குடும்பத்து வோட்டு பூரா அவருக்குத்தான்… ஆமா உங்க வோட்டு…

ஏன் தங்கையா, நான் கேட்டவுடனேயே சட்டுன்னு பதிலுச் சொல்லிப்புட்டீயே… உங்க காலனி தெருவிலேந்து சுப்பையா மகன் ரத்தினவேலுவும் போட்டி போடுறான்மில்லியா… அவனுக்கு உங்க தெருவில செல்வாக்கு எப்படி?… நானும்கூட இந்த அய்யரு பையனுக்குத்தான் வாக்கு அளிக்கப் போகிறேன்…

ரத்தினவேலு எட்டாப்புக்கூட படிக்கலீயே! அவன் கையில காசு தம்படிகூட கிடையாது. அவன் அப்பன கடன் வாங்கித் தரச் சொல்லி அதை வெச்சி செலவு பண்ணிட்டு அலையுறான்… இவனெல்லாம் பொதுத் தொகுதியிலப் போட்டிக்கு வரக்கூடாது… ஜெயிச்சுப்புட்டா நம்ம தேர்வுலை பஞ்சாயத்த நம்பர் ஒண்ணா ஆக்கிப்புடுறதா புருடா வூட்டுக்கிட்டு அலையுறான்.. பாத்தேளா! இவன் தகுதியென்ன… அய்யரு பையன் தகுதியென்ன… அய்யரு நல்ல படிப்புல்லா…

கல்லூரி முடிச்சிருக்கார்… நான்தான் ஏழாப்புக்கூட பாஸ் பண்ணாம இடையில வுட்டுட்டேன்… என்ன பண்றது எல்லாம் நேரம்.. அங்க பாருங்க நம்ம வேட்பாளர் வெற்றிவேலவ அய்யர் பத்து பதினைந்து பேரோட வாக்கு கேட்டு வாராரு…

பவ்யமாக தலைகுனிந்து, இரு கரங்கள் கூப்பி.. வெற்றிவேலவ அய்யர் பஜார்ல வாக்கு கேட்டுக் கொண்டே வருகிறார்… இதோ! சுக்குவென்னீர் கடைக்கு முன்னாடியே வந்துட்டார்… அவர் கையில் மைக் பிடித்து மூன்று நிமிடங்கள் பேசினார்…

நான் எல்லா வார்டுலேயும் வாக்காளர்களைச் சந்திச்சுண்டு இங்கே உங்க முன்னாடி நின்னுண்டுயிருக்கேன்… எல்லாரும் எனக்கு ஓட்டு போடுறதா சொல்லிண்டுயிருக்கா… எனக்கு என்ன கூடுதல் தகுதின்னு கேட்டேள்னா… நான் சிவன் கோவில் பூஜாரியாக வேலை பார்த்தவன்… கேட்டேளா… என்னை எதிர்த்து நிக்கும் வேட்பாளருக்கு டெபாசிட்கூட கிடைக்காது… வாக்காள பெரும் சமூகத்தாரே, சிவனடியானாகிய நேக்கு அமோக ஆதரவு கொடுத்து என்னை வெற்றி பெற உங்கள் பொன்னான வாக்குகளை என்னுடைய கத்தரிக்கோல் சின்னத்தில் முத்திரையிடுங்கள்… என்று கூறி முடித்தார்.

பாத்தேளா… அய்யரு எவ்வளோ சுருக்கா அளவோடு பேசிட்டாரு… அந்த வேட்பாளரும் இருக்கார… ரொம்பவும் அலுப்பாக கூறினான் தங்கையா…

பஜார்ல மக்கள் கூட்டம் கூட்டமா நின்னு தேர்தல பத்தித்தான் பேசிக்கிட்டு இருக்காங்க… அய்யருதாப்பா வரணும்… அவங்க வந்தாத்தான் ஒரு நீதி, நேர்மை தெரிஞ்சி மக்களுக்கு நல்லது செய்வாங்க… மற்ற பயிலுவோலுக்கு ஒண்ணும் தெரியாது… இப்படியெல்லாம் பஜாரில பேசிக் கொண்டார்கள்.

ஒரு கருத்துக் கணிப்பாக வெற்றிவேலவ அய்யர்தான் ஜெயிப்பார்னு ஒரு பத்திரிகையில் செய்திகூட போட்டாச்சு…

எப்படியோ தேர்தல் முடிஞ்சு போச்சு… வோட்டும் எண்ணியாச்சி…

இது என்னப்பா ஆச்சரியமாயிருக்கு… காலனி ரத்தினவேலுவும் வெற்றிவேலவ அய்யரும் சரிசம வோட்டு வாங்கிட்டாங்களாம்… பரவாயில்லையே ரத்தினவேலு அடிச்சு, எவ்வி வந்திருக்கானே… ஆமா… அடுத்தாப்புல என்னாச்சி… சுக்கு வென்னீர்கடை சீதாராமன் அவசர கோலத்தில கேட்டாரு…

ஆமாங்கய்யா… அக்ரகாரத்து பூத்ல ஒரு வோட்டுக்கூட ரத்தினவேலுக்கு கிடைக்கல… அதைப்போல எங்கக் காலனி பூத்திலேயும் ஒரு வோட்டுக்கூட அவனுக்குக் கிடைக்கல… தங்கையா ஆச்சரியத்தோடு கூறினான்…

தங்கையா நல்ல கேட்டுக்கோ… மத்த ரெண்டு பூத்திலேயும் வெற்றிவேலவ அய்யருக்கு ஒரு வோட்டுக்கூட கிடைக்கல.. அதுதான் இரண்டு பேரும் சம வோட்டு வாங்கியிருக்காங்க…

அந்தா… அந்தா… பஜாரில வேட்டு சத்தம் கேட்குது.. வாய்யா… சீதா ராமன்யா தெக்க பாருங்க… ஒரு பையன் ஓடியாரான்… ஏய் தங்கையா அது என் மூத்த மகன்… ரிசல்ட் தெரிஞ்சுபோச்சு… அதுதான் என்கிட்ட சொல்றதுக்கு ஓடியாரான்…
பையன் வந்துட்டான்… ரொம்ப பெருமூச்சு விடுறான்…

என்னலே ஆச்சி…

அப்பா திருவிளக்கு முன்னால சீட்டு போட்டதுல வெற்றிவேலவ அய்யர் ஜெயிச்சுப்புட்டாராம்…

அடிசக்க… பாத்தேளா… அந்த சிவனே நேரில போயி சீட்டைமாத்தி அய்யர ஜெயிக்க வைச்சிப்புட்டாரு… ஆனந்த கண்ணீர்ல நனைந்தான் தங்கையா… தன் பங்கிற்கு சீதாராமனும் இரண்டு சொட்டு கண்ணீரு விட்டாரு…

என்னாச்சீ.. என் சின்னப் பையன் சிட்டா பறந்து வாரான… என்ன?…

அப்பா உங்களுக்கு விசயம் தெரியுமா?

என்னடா?…

நம்ம வெற்றிவேலவ அய்யரு வேண்டிய ஆளப்பிடிச்சி… சரிக்கட்டி.. திருவிளக்கு முன்னாடி இரண்டு சீட்டிலேயும் அவரு பெயர் வர்ர மாதிரி எழுதிப் போட்டிருக்காங்க…

அதுதான் அவரு பேரு வந்திருச்சி…

ஆனா ரத்தினவேலு விடல, சந்தேகப்பட்டு இரண்டு சீட்டையும் கைப்பற்றி… பிரிச்சிப் பாத்தா இரண்டு சீட்டிலேயும் அய்யரு பேரு…

அப்புறமா என்னல ஆச்சி…

திரும்பவும் திருவிளக்கு முன்னால இரண்டு பேரு பெயரையும் எழுதிப் போட்டாங்க… நம்ம ஸ்டேஸன் இன்ஸ்பெக்டர் முன்னிலையில.. ஒரு சின்னப் பாப்பாவை வெச்சி சீட்டு எடுக்கச் சொன்னாங்க…

அப்புறமா என்னல ஆச்சி…

காலனி ரத்தினவேலு அண்ணன் பேரு சீட்டு வந்துட்டுது… அவருதான் ஜெயிச்சாரு…

எலே… தங்கையா அதிர்ஸ்டத்தைப் பாத்தேளா, சீதாராமன் நமட்டு சிரிப்பு சிரிச்சாரு…

அடபோங்க… நீங்க இந்த வெற்றிவேலவ அய்யரு மேல எவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தேன்… இப்படி ஏமாற்று வேலை செய்வார்னு நினைக்கலியே… ஒரு சிவபக்தன்.. அந்த சிவனு கடவுளும் சேர்ந்துதான இந்த அக்கிரமத்த பண்ணியிருக்காரு… தங்கையா வார்த்தைகளை பொறிந்து தள்ளினான்.

சுக்குவென்னீர் கடை சீதாராமனுக்கு அவர் மூளையில் சுருக்சுருக் என்று முள் குத்தியது போன்ற உணர்வு… எலே! தங்கையா இந்த அய்யரும் சரி.. அந்த சிவனாரும் சரி இவங்க முகத்திலேயே முழிக்கக்கூடாது… இந்தா சுக்குவென்னி குடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *