கேள்வி : ஊழலில் சிக்காத பா.ஜ.க. முதல்வர்கள் உண்டா? நேர்மையான சோ அய்யர்வாள் வெளியிடுவாரா? -கோ.ரமேஷ், சே.பேட்டை
பதில் : சோ அவர்கள் உடனே மோடியைக் கூறுவார்! ஊழல் என்பதற்கு விரிவான பொருள் காவல் துறையைக் கலவரத்தின்போது கண்டு கொள்ளாதீர்கள் என்று முதல்வர் அறிவுறுத்துவதும் ஊழலைச் சார்ந்ததுதான்!
கேள்வி : காங்கிரஸ், ராஜபக்ஷேவுக்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்கிறதா? அப்படி என்னதான் உறவு ராஜபக்ஷேவுக்கும் காங்கிரசுக்கும்?
ஜி. ஷைலஜா, புனே
பதில் : அதற்குக் கழுவாய் தேடும்படலம் தொடங்கியுள்ளது என்பது தெரிகிறது!
கேள்வி : உ.பி.யில் குடிசைகள் தோறும் சப்பாத்தி சாதம் சாப்பிட்டு ஊடகங்களில் ஏழை மக்களின் அரசியல் விருந்தாளியாக வலம் வந்த ராகுல் காந்திக்கு உ.பி. மக்கள் நான்காவது இடம் கொடுத்து நல்ல பாடம் கற்பித்து விட்டார்களே? – இயற்கைதாசன், கொட்டாகுளம்
பதில் : வாணவேடிக்கைகள், ஜாலவித்தைகளை மக்கள் ரசிப்பார்கள்; ஆனால், ஏமாந்துவிட மாட்டார்கள் என்பது புரிகிறது.
கேள்வி : தமிழர்களுக்கு இந்தியா என்னும் பெரிய நாட்டில் இருப்பதால் பாதுகாப்போ, பராமரிப்போ, தன்மானமோ இருப்பதாகத் தெரியவில்லையே?
ஜே.அய்.ஏ.காந்தி,
பதில் : எரும்பி அதை உண்டாக்கத்தானே நமது இயக்கம் -பிரச்சாரம் உள்ளது.
கேள்வி : தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்றும் ஜோதிடம் – ஜாதகம் பார்க்கும் அறியாமை இருள் சூழ்ந்துள்ளதே? – ஜி.சாநதி, பெரம்பலூர்
பதில் : மனித இனத்தின் பலவீனங்களில் ஒன்று பேராசை. குறுக்குவழிகளில் கனவு கண்டு மகிழ்வது! பிறகு ஏமாறுவது என்பது நீண்டகால முறை. பிரச்சாரம் ஒரு எல்லை; எதிர்ப்பிரச்சாரம் ஏராளம்! எனவே எதிர்நீச்சல்மூலம் பிரச்சாரம் செய்து வருகிறோம். திடீரென்று அழித்துவிட முடியாதே!
கேள்வி : திராவிடர் கழகம் தனக்கென தனித் தொலைக்காட்சி தொடங்குவதில் என்ன தயக்கம்?சா. கோவிந்தசாமி, ஆவூர்
பதில் : நடைமுறைச் சிக்கல்கள் ஏராளம்; பொருளாதார தட்டுப்பாட்டில் ஏற்கெனவே துவக்கி நடத்துகிறவர்கள் படும்பாட்டினைப் பார்க்கையில், அஸ்திவாரம் சரியாக அமையாமல் அவசரக்கோலத்தில் அள்ளித் தெளிக்க முடியாது என்ற தயக்கம் தான்!
கேள்வி : மின்வெட்டை அரசியலாக்கலாமா என்கிறாரே ஒரு எம்.எல்.ஏ. நடிகர்(சரத்குமார்). மக்களுக்கு சீரான மின்சாரம் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் வேலை தானே? – இ.பியூலாடாரத்தி, ஆற்காடு
பதில் : அதை அரசியலாக்கித்தானே அவரே எம்.எல்.ஏ. ஆனார். அவர் தாங்கிப் பிடிக்கும் ஆட்சியும் பதவிக்கு வந்தது! இப்போது வசதியாக ஞாபக மறதிபோலும்!
கேள்வி : உ.பி.யில் மாயாவதி தோல்விக்கு உண்மைக் காரணம் என்ன? க.குறளமுதன், வேட்டவலம்
பதில் : படாடோபமும், பார்ப்பன கூட்டுறவும்! தேவையற்ற சுயவிளம்பரமும்!
கேள்வி : உலக மயச்சூழலில் இந்திய தேசியம், தமிழ்த் தேசியம் உள்ளிட்ட தேசியங்கள் சாத்தியமா? – ச.அன்புமலர், சிவகங்கை
பதில் : சர்வதேசியத்தின் முன் வெறும் தேசியம் குறுகிய மனப்பான்மையாக குறுகிவிடுகிறதே! வரலாற்றுரீதியான, இனரீதியான, மொழிரீதியான அடையாளங்கள் அடிப்படையானவை. அதை உலக சூழல் மாற்றிவிட முடியாதே!
கேள்வி : இலங்கை இட்லர் ராஜபக்ஷே மீதான அமெரிக்கத் தீர்மானம் வெற்றியடைந்துவிட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு சுதந்திரம் விடியுமா? சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்களா? சங்கத்தமிழன், காஞ்சி
பதில் : அமெரிக்கத் தீர்மானம் – உலக நாடுகள் பார்வைக்கு இராஜபக்சேக்களின் சிங்கள அட்டூழியத்தைக் கொண்டு சென்றுள்ளது என்பது முதல் திருப்பம். இதற்குமுன் இப்படி ஒரு ஆதரவு – ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் கிட்டாத நிலையில் இது ஒரு நல்ல திறப்பு. மற்றபடி இத்தீர்மானம் ஒரு சர்வரோக நிவாரண சஞ்சீவி என்பதல்ல நம் வாதம் ! அந்த அளவில் வரவேற்கத்தக்க புதிய திருப்பம்.