வரலாற்றுத் தடங்கள்

ஏப்ரல் 01-15

மானேபேந்திர நாத் ராய் என அழைக்கப்படும் புரட்சிகர மனிதநேயர் எம்.என்.ராய் அவர்களின் இயற்பெயர் நரேந்திரநாத் பட்டாச்சார்யா. இந்திய தேசியப் புரட்சியாளராக,பொதுவுடைமைப் போராளியாக வாழ்ந்து இறுதியில் பகுத்தறிவு மனிதநேயராகப் போராடியவர்;தந்தை பெரியாரைத் தன் தலைவர் என்று கூறியவர்.இவரது வாழ்க்கையை உண்மை உலகப் பகுத்தறிவாளர்கள் வரிசையில் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

1887 மார்ச் 21ல் பிரிட்டிஷ் இந்தியாவின், வங்காளத்தில் சங்கிரிபோடா எனும் ஊரில் பிறந்த எம்.என்.ராய், 1954 ஆம் ஆண்டு ஜனவரி 25இல் டேராடூனில் மறைந்தார்.இவரது 125 ஆவது பிறந்த நாளை கடந்த மார்ச் 21ல் பகுத்தறிவாளர் கழகம் சென்னையில் கொண்டாடியது.அதனை யொட்டி அவரது நினைவுகள் இங்கே…

 

எம்.என்.ராய் அவர்களைப் பற்றி தந்தை பெரியார் சொல்லிய செய்தி இது:-

எம்.என்.ராய் என்ற அறிஞர் ரஷ்யாவில் இருந்தவர். சில காரணங்களால் அவர் ரஷ்யாவைவிட்டு வந்துவிட்டார். அவரிடம் நம் தோழர்கள் நான் எழுதிய புத்தகங்களைக்காட்டி இருக்கின்றனர். அவர் அவைகளை பார்த்துவிட்டு என்னைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். நானும் அவரை காண வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஒரு முறை சென்னைக்கு வந்தபோது நான் அவரை சந்திக்கச் சென்றேன். என்னைக் கண்டதும் அவர் என்ன செய்தார் தெரியுமா? எனக்கே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. என் காலில் விழுந்து வணங்கினார். நான் மிகவும் சங்கடப்பட்டு ஒரு பகுத்தறிவாதி இப்படி நடந்து கொள்ளலாமா! என்று கேட்டேன்.

பிறகு சில நாள்கள் நான் அவருடனேயே சேர்ந்து பிரச்சாரம் செய்து வந்தேன். ஒரு முறை அவர் டேராடூனில் ஒரு விருந்து ஏற்பாடு செய்தார்.விருந்துக்கு வந்திருந்தவர்களிடையே நான் எழுதிய புத்தகங்களைப் பற்றி விளக்கம் செய்து என்னை அறிமுகப்படுத்தினார். அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் பல முறை எழுந்து எனக்கு மரியாதை செய்தனர். (விடுதலை 22.4.1965).

எம்.என்.ராய் அவர்களின் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து தனது குடிஅரசு இதழில் தந்தை பெரியார் வெளியிட்டு வந்தார். 31.12.1939 நாளிட்ட குடிஅரசில் மதமும் மூடநம்பிக்கையும் எனும் தலைப்பில்  எம்.என்.ராய் கட்டுரையின் ஒரு பகுதி :-

மூடநம்பிக்கையும், வைதீகக் கொடுமையும் இணைந்து பிறந்த இரட்டை குழந்தைகள். ஆரம்பக் கால மக்கள் ஜடபொருள்களை தங்கள் இறைவனாக ஏற்று வணங்கி வந்தார்கள். உதாரணமாக கல், மரம், (மிருகம்கூட) இவைகளால் நாகரிகமற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்ட பல கிளைகளையும்தான் தெய்வமாகக் கொண்டாடினார்கள். அந்த கொள்கை அடைந்த வளர்ச்சியின் பயன்தான் பல்வேறு கடவுள்களில் நம்பிக்கை உண்டாயிற்று. அதன் வளர்ச்சி அவரவர்கள் கொண்ட மனோ சக்தியின்படி உருவங்களாக உதயமாயிற்று. இவை எப்படி ஒன்றிலிருந்து ஒன்று வளர்ந்தது என்பதை அன்றைய மக்கள் அறியமாட்டார்கள். அவ்வளவு தெளிவாக ஆதி காலத்தில் இந்த கடவுள்கள் மேல் மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கைக்குக் காரணம் அவைதான். மனிதசக்திக்கு மேம்பட்ட சக்தியை உடையன என்று எண்ணிய எண்ணம் இவைகளுக்குள்ள காரணங்கள் ஏராளமாய் உண்டு.

இத்தகைய நம்பிக்கைகளுக்கும் எண்ணங்களுக்கும் ஆணிவேர், அன்று ஏற்பட்ட இடி மின்னல் பூகம்பம் போன்றவையே. இந்த எதிர்பாரா சம்பவங்களால் ஏற்பட்ட இடையூறுகளே காரணம் என்னும் மூடநம்பிக்கையில் முளைத்த பயம் என்ற பழுதுள்ள சொல்தான். இந்த பயத்தைப் போக்க கடவுளைத் தஞ்சம் அடைந்தான் மனிதன். தன்னை தியாகம் செய்தால்தான் கடவுள் கிருபை கிடைக்கும் என எண்ணினான். அந்த எண்ணம் ஆழமாக இடங்கொண்டது. இந்நாட்டின் மக்கள் மனதில், இந்த தியாகத்தில் இறங்கினார்கள் ஏராளமானோர்.

காலப்போக்கில் இந்த மக்களைக் கொண்ட கூட்டம் ஒரு புரோகிதக் கூட்டமாக ஏற்பட்டது. இவர்கள் இறைவனின் ஆசியினைப் பெற்றவர்கள் என்ற எண்ணம் வளர்ந்தது. அதன் பயனாய் கடவுளின் மாற்றமுடியா அபிப்பிராயங்களை அறியும் ஆற்றல் உள்ளவர்களும், அந்த கூட்டம்தான் என்ற அபிப்பிராயமும், ஆதரவும் பெற்றது அதிகமாக. இந்த கடவுளின் ஆசியினைப் பெற்றவர்கள் அநேக மார்க்கங்களை ஆக்கினார்கள். இந்த கூட்டத்தின் புதிய மார்க்கமும், மக்களின் மூடநம்பிக்கையும் சேர்ந்து புரோகித கூட்டத்தை புதியதொரு மேலான ஸ்தானத்தில் வைத்துவிட்டது. அவர்கள்தான் சர்வ சக்தி உள்ளவர்கள் என்ற இடத்தை இந்நாட்டில் அடைந்து விட்டார்கள்.

 

பயனில்லா புராணங்கள்

நம்முடைய பழங்கால புராணம் கட்டுக்கதை, மதம் ஆகியவைகளிலிருந்து நம்மை விடுவித்து மனிதப்பண்பை வளர்க்க வேண்டும். நமக்கு நம் புராணங்களிலும் இதிகாசங் களிலும் ஒருவிதப் பயனும் இல்லை. அவை நம்மை புத்துலகிற்கோ, மனிதப் பண்பை வளர்ப்பதற்கோ பயன்படாது. — எம்.என்.ராய் (விடுதலை, 12.12.1949)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *