நான் பச்சை விளக்குக்காரி!
ஆசிரியர்: வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் வெளியீடு: தெ.சு.கவுதமன்மொத்தப் பக்கங்கள்: 80 விலை: ரூ.50/-
வழிதவறிப் போன பெண்ணின் மனநிலையைப் பிரதிபலித்து தேவதாசி, வேசி, பரத்தை, விபச்சாரி என்று சொல்கிறீர்கள், இன்றுவரை /வந்து செல்லும் / உன்னை / என்னவென்றழைப்பேன்? என ஆண் சமுதாயத்திற்குச் சாட்டையடி கொடுக்கும் கவிதையின் தலைப்பே நூலின் தலைப்பாக்கப்பட்டுள்ளது.
பெயர் மாற்றுதல், அதிர்ஷ்டக்கல் மோதிரம் அணிதல், வாஸ்து மீன் வளர்த்தல் என்ற நம்பிக்கைகளை விளக்கி, முன்னேற்றமின்றி / மீண்டும் ஜோதிடரைப் பார்த்தான் / நீங்க சுகப்பிரசவமா? / வாஸ்துப்படி / வயிற்றுவழி பொறந்திருக்கணும் என்று இடம் பெற்றுள்ள வரிகள் சிந்தனைக்குரியன.
குழந்தைத் தொழிலாளர்களின் நிலை, சமுதாயம் திருநங்கைகளைப் பார்க்கும் விதம், மரபணுவின் அணுவளவே மாற்றத்தால் அணுகுண்டின் தாக்கம் சாகும் வரை, ஒன்பது, அரவாணி, திருநங்கை என்று பெயரளவில் மாற்றம், நாங்கள் மாறிட்டோம் – உலகம் மாறலை என்ற ஆதங்கக் குமுறல்.
மக்கு அம்மா என்ற தலைப்பில் பெண்ணின் மனநிலையை விளக்கி, பாராளுமன்றம் கிடக்கட்டும்… அய்ம்பது சதவிகித இடஒதுக்கீட்டை / அடுப்படியில் கட்டாயமாக்குங்கள் / ஆண்களுக்கு / அதுபோதும் இவர்களுக்கு என்று நடைமுறைப் பிரச்சினைகளை யதார்த்தமாக – எளிமையாக – தெளிவாக விளக்கியிருக்கிறது நான் பச்சை விளக்குக்காரி!
இணையதளம் (www.openreadingroom.com)
தமிழில் ஏராளமான நூல்களை இலவசமாகப் படிக்கும் ஓர். இணையதளம் இது. அரசியல், ஆன்மிகம், இசை, இலக்கணம், இஸ்லாம், உடல் நலம், கவிதை, இலக்கியம், சமூகவியல் என பல பொருள்களில் நூல்கள் இந்த இணைய நூலகத்தில் அடுக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகள் அணிவகுக்கின்றன. தமிழின் முக்கிய நூல்கள் கிட்டத்தட்ட அனைத்தும் இதில் அடக்கம். நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்துகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது சிறப்பு. இனி அவசியம் படிக்கவேண்டிய தமிழ் நூல்களைப் படிக்க நூலகம் செல்லவேண்டாம்; இந்த இணையத்தளத்தைச் சொடுக்கினால் போதும்.
வலைக்காட்சி
http://www.youtube.com watch?v=4ke_IjjQv1w
கனடா நாட்டினர் பண்பாடு
கனடா நாட்டில் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஈழத்தமிழ்ப் பெண்ணான ராதிகா சிற்சபேசன் (வயது 30 ). இவர் கனடா நாடாளுமன்றத்தில் முதன்முதலாக உரையாற்றியதன் ஒளிப்பதிவை அண்மையில் youtube-இல் பார்க்க நேர்ந்தது. இங்கிலீஷில் உரையாற்றத் தொடங்கிய ராதிகா, அவைத்தலைவர் அனுமதியுடன் சிறிது நேரம் தமிழில் உரையாற்றினார். அப்போது தன்னைத் தேர்ந்தெடுத்தது கனடா வாழ் தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்களுக்கும் பெருமை அளிப்பது என்றும், எனது தாய் மொழியில் பேசுவதைப் பெருமையாகவும் எளிதாகவும் உணர்கிறேன் என்றும் கூறினார். அப்போது அவையில் இருந்த பிற கனடா நாட்டு உறுப்பினர்கள் மெல்லிய புன்னகையுடன் ராதிகாவின் உரையை வரவேற்றனர். தொடர்ந்து அவர் தாம் தமிழில் பேசியதை இங்கிலீஷில் சொல்கிறேன் என்று கூறிவிட்டு, தாய்மொழியில் பேசுவதைப் பெருமையாகவும், எளிமையாகவும் உணர்கிறேன் என்பதை இங்கிலீஷில் எடுத்துச் சொன்னபோது மற்ற கனடா நாட்டு உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சி யை வெளிப்படுத்தினர். இதைப் பார்த்தபோது இந்திய நாடாளுமன்றத்தில் இந்தி தெரியாத மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தம் தாய் மொழியில் பேசும்போது வடபுலத்தினரிடம் வெளிப்படும் வெறுப்புணர்வுதான் நினைவுக்கு வந்தது. நமக்குத் தொடர்பே இல்லாத கனடாக்காரன் தாய் மொழிக்கு அளிக்கும் மதிப்பை உணர்கிறான்; ஏற்கிறான். ஆனால், நிலப் பரப்பால் நம்மோடு இணைந்துள்ள இந்தியாவின் வடபுலம் தாய்மொழிப் பற்றை எப்படியெல்லாம் கொச்சைப் படுத்தியது, இன்னும் படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும், பண்பாடும் சகிப்புத் தன்மையும் நிறந்தது பாரதம் என்று இவர்கள் புளுகித் திரிவதும் நினைவுக்கு வராமலா இருக்கும்?
புதுச்சொல்
உண்மை, பிப். 16_-29, 2012 இதழில் sim card என்ற சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் உருவாக்கி எழுதுமாறு கேட்டுள்ளீர்கள். என்னுடைய மொழியாக்கம் இதோ:- எண் குதிர், எண்கள் குதிர், எண் கூடு
– மா.கலியபெருமாள், உரத்தநாடு
ஒலிவட்டு
நினைவுகள் அழிவதில்லை
அறுப்புக்காலம் வந்ததே! – நமது
இருப்புக் காலம் வந்ததா?
வசந்த காலம் வந்ததே! – நாம்
வசந்தம் காண வந்ததா?
மக்களோடு மக்களாக சேர்வது எப்போ?
நீ மாத்தி யோசி, மாத்தி யோசி
எல்லாம் மாறும் அப்போ!
கோடி கோடி கோபம் ஒன்றாகி
ஆழிப்பேரலை ஆனதடா!
வீறுகொண்ட இளைஞர் படை
ஊழிப்படையாய் வருகுதடா!
நாடு நகரம் செய்த நமக்கு
எதனால் இந்த நிலை உருவாச்சு?
என்று கேள்வி மேல் கேள்வி கேட்கும் இந்த வரிகள், நினைவுகள் அழிவதில்லை திரைப்படத்தின் பாடல் வரிகளில் சில. கடந்த மாதம் 17–02-2012 அன்று அன்னை அபிராமி திரையரங்கில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விரைவில் வெள்ளித் திரைக்கு வரவிருக்கிறது. இயக்குநர் பகத்சிங் கண்ணன், பொது உடைமை சிந்தனைக்கு சொந்தக்காரர் என்றாலும் வர்ண பேதத்தை சம்மட்டி கொண்டு அடித்துச் சிதைப்பதிலும் சளைத்தவரல்ல. அதற்கு, இவர் இயக்கிய வர்ணம் குறும்படமே சாட்சி. இந்தக் குறும்படம் பெரியார் திரை – 2010இல் இரண்டாவது பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. நினைவுகள் அழிவதில்லை திரைப்படத்தை அக்னி கலைக்கூடம் தயாரித்திருக்கிறது.
குறும்படம்
பேரன்
என்றைக்குமே தாத்தாக்கள் தங்களது பேரன்களின் கேள்வி களுக்கு பதிலளிக்க Update- ஆக இருப்பதில்லை. காரணம் தலைமுறை இடைவெளிதான். அதுவே, ஏன்? எதற்கு? எப்படி? – என்கின்ற பகுத்தறிவு கேள்விகளுக்கு!! வாய்ப்பு மிகமிகக் குறைவுதான். அப்படி ஒரு தாத்தா தன் சுட்டிப் பேரனிடம் மாட்டிக்கொண்டு திணறுவதுதான் இந்தக் குறும்படத்தின் மய்யக்கரு.
அந்தத் திணறலைத் தான் எழுதும் பகுத்தறிவு தகவல் பலகை மூலம் மாற்றுகிறார் ஒரு பெரியாரின் பெருந்தொண்டர். அந்த பெரியார் பெருந்தொண்டருக்குப்பின் முன்பு திணறிய தாத்தாவின் பேரன் தகவல் பலகையில் எழுதுவதைத் தொடருகிறான்.
இந்தக் குறும்படம் பெரியார் திரை _2011ஆம் ஆண்டு நடந்த குறும்படப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
குறும்படம் : பேரன்
இயக்குநர்: ராஜா சேதுபதி
தொடர்பு எண்: 90255 38838.