இதயம் இதமாய் இயங்க…

மார்ச் 16-31

சிகரெட் புகை இதயத்தின் பகை

பேராசிரியர். மருத்துவர் வெ.குழந்தவேலு
MD.phD.,Dlitt. DHSc-Echocardio., FCCP.,
கங்கை மருத்துவத் தொழில்நுட்பக் கல்வி நிலையம், நெய்வேலி

  • மணிக்கு 3.5 மைல் வேகத்தில் நடக்கும்போது ஒரு நிமிடத்திற்கு 5.2 கலோரி சக்தி வெளியாகிறது. 20 நிமிடம் நடந்தால் 101 கலோரி சக்தி வெளியாகும்.
  • அதுபோலவே, ஒரு நிமிடத்திற்கு சைக்கிள் ஓட்டினால் 8.2 கலோரி சக்தியும், நீந்தும்போது நிமிடத்திற்கு 11.2 கலோரியும், ஓடினால் ஒரு நிமிடத்திற்கு 19.4 கலோரியும் வெளியாகிறது.
  • நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், ஓடுதல் போன்றவற்றை மேற்கொள்ளும்போது எவ்வளவு நேரம் குறிப்பிட்ட பயிற்சியை மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்குக் கலோரி சக்தி வெளியாகிறது; அதன் அடிப்படையிலேயே உணவின் அளவிற்கும், உடற்பயிற்சிக்கும் தொடர்பு இருப்பதை அறியமுடியும்.
  • எந்த உடற்பயிற்சியையும் அல்லது உடலுழைப்பையும் மேற்கொள்ளவில்லையெனில், குறிப்பிட்ட அளவு கலோரி உணவு சக்தி உடலில் தேக்கப்படுகிறது; பருமனாவதற்கும் வழி வகுக்கிறது.
  • ஆகவே உடற்பயிற்சியை – உடலுழைப்பை மேற்கொள்ள முடியாதவர்கள் கலோரி சக்தியைக் கொடுக்கவல்ல மாவு, புரதம் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைப் பலவழிகளிலும் குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கலோரி சக்திகளற்ற அல்லது மிகவும் குறைந்த அளவிலான கலோரி சக்தியுடைய உணவுப் பொருட்களைக் கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • சர்க்கரை நீரிழிவு நோயுடையோர், இனிப்பை விரும்பினால், கலோரி சக்தி நிறைந்த சர்க்கரை அல்லது வெல்லத்திற்கு மாற்றாகக் கலோரி சக்தியற்ற சாக்கரினைவிட ஏற்புடையதாகக் கருதப்படும், ஆஸ்பார்டேம் (Aspartame)’ அல்லது லெவுலோஸ் (Levulose)’ எனப்படும், இனிப்பு மாத்திரைகளையோ மாத்திரைத் துகளினையோ உணவுடனோ பானங்களுடனோ சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஆஸ்பார்டேம், லெவுலோஸ் ஆகியவையும் வேதியல் பொருட்களை உள்ளடக்கி இருப்பதால் அவற்றையும் பெருமளவில் தவிர்க்கலாம் அல்லது குறைந்த அளவிற்கே பயன்படுத்திடலாம் என்பதையும் சீர்தூக்கிப் பார்த்திடல் வேண்டும்.
  • உடல் எடையைக் குறைத்திடுவதற்காகச் சில தொலைக்காட்சிகளிலும், நாளேடுகளிலும், இதழ்களிலும், துண்டுத் தாள்கள் போன்றவற்றிலும் செய்யப்படும் பகட்டான விளம்பரங்களைப் பெரிதும் நம்பி ஏமாந்து போவதோடு, இருக்கும் உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்! எச்சரிக்கை.

புகையே மாரடைப்பிற்கான முழுக் காரணமாகி விடுவதுண்டு

  • நுரையீரல் புற்று நோய்க்கு எவரும் இலக்காகலாம் என்கிற நிலை இருந்தாலும், அதிக அளவில் புகைபிடிப்பவர்களே, பெரும் அளவில் நுரையீரல் புற்று நோய்க்கு இலக்காகின்றனர்.
  • புகை பிடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம், புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும் இருபது மடங்கு அதிகமாகும்.
  • நுரையீரல் புற்றுநோயைக் காட்டிலும் மாரடைப்பினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை, மூன்று மடங்கிற்கு அதிகமாக இருக்கின்றது என்பதால், புகை பிடிப்பதையொட்டி மாரடைப்பினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை இயற்கையாகவே உயர்ந்துவிடும்.
  • தனிப்பட்ட முறையில் புகை மட்டுமே பெருமளவில் மாரடைப்பினை ஏற்படுத்தி விடாது என்கிற நிலையில் இருந்தாலும், பிற தூண்டுதல் காரணங்களிருப்பின், புகையே மாரடைப்பிற்கு மேலும் தூண்டுதலாகிவிடும். சில நேரங்களில் புகை மட்டுமே மாரடைப்பை உண்டாக்கி விடுவதுண்டு.
  • சிகரெட் புகையில் பல்வேறு வாயுக்கள் இருப்பினும், நிகோடின் (nicotin),, ஹைட்ரஜன் சயனைடு (hydrogen cyanide), கார்பன் மோனாக்சைடு (carbonmonoxide), பென்ஸ்பைரின் (benzpyrine), பினால் (phenol) ஆகியவை குறிப்பிடத்தக்க நச்சுப் பொருட்களாகும்.
  • கார்பன் மோனாக்சைடானது, இரத்தத்தில் கலந்திடும்போது, இரத்த சிவப்பு அணுக்களிலுள்ள உயிர்வளியை அகற்றி அந்த இடத்தில் அமர்ந்து கொள்கிறது. அதன் காரணமாகத் திசுக்களுக்கும், இதயத் தசைகளுக்கும் தேவையான உயிர்வளி கிடைக்காத நிலையில் பாதிப்பிற்குள்ளாகின்றன.
  • கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைட், போன்ற தீமையைத் தரும் கொழுப்புப் பொருட்களை, இரத்தத்தில் பெருக்குவதோடு, கொழுப்புத் திவலைகளை இரத்தநாள உட்சுவர்களிலும் தொடர்ச்சியாகப் படியச்செய்வதற்கும், புகையிலுள்ள கார்பன் மோனாக்சைடு தூண்டுதலாக இருக்கின்றது.
  • சிகரெட் புகையிலுள்ள நிகோடின் எனும் நச்சானது, அட்ரினல் சுரப்பியைத் தூண்டி, எபிநெப்ரின் (epinephrin) எனும் ஹார்மோனைச் சுரக்கச் செய்கிறது.
  • எபிநெப்ரின் கல்லீரலிலிருந்து சர்க்கரையை வெளிப்படுத்தி உடனடிச் சோர்வைப் போக்குகிறது என்றாலும், இறுதியில் நரம்பைச் சோர்வடையச் செய்கிறது. எபிநெப்ரின், இதயத் துடிப்பை அதிகமாக்குகிறது; சில நேரங்களில் இதயத் துடிப்பைத் தாறுமாறாக்குகிறது; இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது.
  • சிகரெட் புகை, இதயத்தசைகளுக்கான இரத்த நாளத்தைச் சுருங்கச்செய்து தடை ஏற்படுத்துகிறது.
  • இரத்த தட்டை அணுக்கள் (platelets) ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்வதற்கும், அதன் காரணமாக இரத்தம் உள்ளூர உறைதலுக்கும் தூண்டுதலாக அமைகின்றது.
  • ஆகவே, சிகரெட் புகை, மாரடைப்பு ஏற்படுவதற்குப் பலவழிகளிலும் தூண்டுதலாக அமைகிறது.
  • பில்டர் சிகரெட், பைப்மூலம் புகை பிடித்தல் போன்றவற்றால் புகையின் நச்சுத் தன்மையும், வீரியமும் முழு அளவில் வடிகட்டப்படும் என்பது இயலாத ஒன்றாகும் என்பனவற்றை நினைவில் கொண்டு புகைக்காமலிருக்க முயற்சி செய்து வெற்றி பெறவேண்டும்.

புகை பிடிப்பதைத் தவிர்ப்பதால்,

  • மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைதல்.
  • இரத்தத்தில் கொலஸ்ட்ரால் குறைதல்.
  • நுரையீரல் பாதிப்புகள் குறைதல்.
  • இருமல் கட்டுக்குள் வருதல்.
  • நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் குறைதல்.
  • இரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு நீங்குதல்.
  • உணவின் சுவையினை அறிதல்.
  • பணம் விரயமாவதைத் தடுத்தல்.
  • உடற்பயிற்சியை  –  உடலுழைப்பை மேற்கொள்ள போதிய உடல் நலம் பெறுதல்.
  • வெறுக்கத்தக்க நாற்றத்தைப் போக்கி நாற்றமற்ற மூச்சு (சுவாசம்) நிலைநாட்டல், வெண்மையடையும் பற்கள்;
  • வயிற்றுக் குடல் புண் நீங்குதல்.
  • போன்ற நன்மைகளை எண்ணிப்பாருங்கள்.
  • புகை பிடிப்பவர்கள் பெரும்பாலோர், ஏதோ புத்துணர்வு கிடைப்பதாகவே நினைத்துக் கொண்டு புகை பிடிக்கத் தொடங்குகின்றனர். மற்றவர்களைக் கவர்வதாக நினைத்துக் கொண்டும் இளைஞர்கள் புகைக்க ஆரம்பிக்கின்றனர்.
  • ஒருவரின் குணநலன்களைக் கொண்டுதான், மற்றவர்கள் அவரை விரும்புகிறார்களே அல்லாமல், அவர் சிகரெட் பிடிப்பதாலல்ல என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
  • புகை பிடிப்பவர்கள் பல்வேறு நிலைகளில் இருக்கக் கூடும்.
  • மன உறுதியோடு கடைப்பிடித்தால், புகை பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.
  • தொடர்ச்சியாக இடைவிடாமல் புகை பிடித்தவர்கள்கூட, பல்லாயிரக்கணக்கானவர்கள், புகைப்பழக்கத்தை விட்டொழித்துள்ளார்கள்.
  • ஆகவே, புகைக்கு அடிமையாகிவிட்டோம் – விடவே முடிவதில்லை, என்பதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகும்.
  • ஆரம்பத்தில் சிரமமாகத் தோன்றினாலும், விடா முயற்சியாலும் மன உறுதியாலும் புகை பிடித்தலை உறுதியாக நிறுத்திவிட முடியும்.
  • புகையை நிறுத்த முற்படும் ஆரம்பக் கட்டத்தில், விரும்பிப் பிடிக்கும் சிகரெட்டுகளைத் தவிர்த்து விருப்பமில்லாத சிகரெட்டுகளாகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.
  • சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், நாளில் குறிப்பிட்ட வேளைகளில், குறிப்பாக, அடுத்தடுத்த ஒரு மணி நேர இடைப்பட்ட, கால கட்டங்களில் சிகரெட்டைத் தொடுவதில்லை என்கிற உறுதியோடு கடைப்பிடிக்க வேண்டும், நாளடைவில், இடைப்பட்ட காலத்தைக் கூட்டிக்கொண்டே வரும்போது நாளொன்றிற்கு ஒன்று, இரண்டு சிகரெட் அளவிற்குக் கொண்டுவந்து இறுதியில் முழுமையாக நிறுத்திவிடலாம்.
  • சிகரெட்டுக்கு மாற்றாக, நெல்லிக்காய் வற்றல், சவ்வு மிட்டாய் (chewing gum), தண்ணீர் குடித்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
  • சிகரெட் பிடிக்கும் அன்பர்களோடு பழகுவதைச் சில நாட்களுக்கு விட்டொதுக்கலாம்.
  • புகைபிடிக்கக்கூடாது என்று அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிவுரை வழங்குங்கள்; அறிவுரை வழங்கும் தகுதியை நீங்களே முழுமையாகப் பெற்றுவிடுவீர்கள்.
  • சிகரெட் என்று நினைத்த உடனேயே புகை பிடிக்க முயற்சி செய்யக்கூடாது; காலங்கடத்திட வேண்டும்; மாற்றாகத் தண்ணீர் பருகவேண்டும்.
  • சிகரெட் பிடித்தலைத் தன் இச்சைக்கு உட்பட்ட செயலாகவே இருந்திடுமாறு கவனம் தேவை.
  • சிகரெட்டை முழுமையாகப் புகைக்காமல் பாதியிலேயே முழுமையாக அணைத்துக் குப்பையோடு சேர்த்திடல் வேண்டும்.
  • எப்பொழுதும் பழக்கப்பட்ட விரல்களல்லாமல் மாற்று விரல்கள் கொண்டு புகைபிடித்து, இச்சைக்குள் வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • சிகரெட் பிடிக்கப் போகுமுன், உண்மையிலேயே இப்பொழுது புகை தேவைப்படுகிறதா என்கிற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
  • புகைபிடிக்கும் செயலானது, தன்னுடைய சிதைக்குத் தானே எரியூட்டிக் கொள்வதாகும், என்பது மிகையாகாது.

–    தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *