அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதைவிட தனியார் பள்ளிகளில் சேர்ப்பதைப் பெற்றோர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களில் கல்விகற்பிக்கும் தரமும் ஒன்று. அதற்காகத்தான் ஏராளமாகப் பணம் செலுத்திப் படிக்கவைக்கிறார்கள். ஆனால், அதிலிருந்து வெளிவரும் மாணவர்களின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அண்மையில் ஒரு ஆய்வு தோலுரித்துக் காட்டிவிட்டது.
பிராதம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தனியார் பள்ளிகளின் கற்பிக்கும் திறன் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அதில் 5 ஆம் வகுப்பு மாணவர்களில் 32 விழுக்காட்டினர்க்கு தமிழில் ஒரு சாதாரண கதையைக் கூட படிக்க முடியவில்லை என்பதும், 4 ஆம் வகுப்பு மாணவர்களில் 40.6 விழுக்காட்டினர்க்கு இரட்டை இலக்க எண்களில் கழித்தல் கணக்கைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகள் சிறந்தவை என்ற கருத்து ஒரு மாயை என்பதை இந்த ஆய்வு வெளிக்கொண்டு வந்துள்ளது.