கேள்வி ஞானம்

மார்ச் 16-31

– தி.அனிதா தாரணி

நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் களால் மட்டுமே வணக்கமான சொற்களைப் பேச முடியும் என்கிறார் வள்ளுவர்.

கேள்வி என்பது ஒரு பொருளைப் பற்றியோ அல்லது ஒரு மனிதனைப் பற்றியோ அல்லது ஒரு நிகழ்ச்சியைப் பற்றியோ நாம்  அறிய உதவும் கருவி.

 

‘A question not asked is a door not opened’

கேள்வி கேட்டல் என்பதே அறிவின் திறவுகோல். ஒரு நிகழ்வைப்  பற்றி நாம் அறிய முற்படும் பொழுது கேள்விகள் கேட்காமல் தெரிந்து கொள்ள முடியாது. உற்றுநோக்குவதன் மூலமோ, அல்லது யூகிப்பதன் மூலமோ அந்த நிகழ்வை நாம் அறிந்து கொண்டதாகச் சொல்லலாம். ஆனால், அது சரியானதாகத்தான் இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது அல்லவா!. கேள்வி கேட்டல் ஒன்றே முழுமையான அறிதலை நமக்குக்  கொடுக்கும்.

குழந்தையானது கேள்விகளின் மூலமே இந்த உலக அறிவை வளர்க்கிறது. வளரும் காலத்தில் மட்டுமல்லாமல் பெரியவர்களான பிறகும் கேள்விகள் நம்மைவிட்டுப் பிரிவது இல்லையே! எந்த ஒரு புதிய செய்தியானாலும் சரி, புதிய கண்டுபிடிப்பனாலும் சரி அதைப் பற்றிய நம் கேள்விகள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது?

மாணவப் பருவத்தில் வகுப்புகளில் பாடம்  நடத்தும்போது ஆசிரியர்  உரைநடையாகப் படங்களை நடத்திக் கொண்டு இருந்தால் அந்தக் கருத்து முழுமையாக அனைவரையும் சென்றடைவதில்லை. கவனிக்கும் பொழுது மூன்று நிமிடங்களுக்குமேல் தொடர்ந்து கவனிக்க முடியாது எனவும், கவனச் சிதறல் ஏற்படுகிறது எனவும், மீண்டும் ஓரிரு நிமிடக்களுக்குப் பிறகே கவனிக்க முடிவதாகவும், ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், அந்தப் பாடமே கலந்துரையாடலாக இருந்துவிட்டால் கவனச்சிதறல் குறையுமே. அனைவரின் பங்கேற்பும் இருக்கும்போது கற்றல் சிறப்படையும். ஒரு சிறந்த ஆசிரியர், மாணவனின் கேள்வி கேட்கும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.

“If you raise a questioning
you‘re a foolish for a few minutes”
“If you don`t raise a questioning
you‘re a foolish for ever”
-Albert Einstein

ஏன்? என்று கேள்வி கேட்டதால் மட்டுமே இன்று இவ்வுலகில் உள்ள எல்லா கருவிகள், அறிவியல் சாதனங்கள், போக்குவரத்துக் கருவிகள், தொலைத்தொடர்புக் கருவிகள், போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, அறியாத செய்திகளைக் கேட்டு அறிந்துகொள்வது அவமானமாகாது. நிறையக் கேள்விகளைக் கேட்கும் குழந்தைகளைத் திட்டாமல் அவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்ப்பது எல்லோருடைய கடமையுமாகும்.

கேட்போம் கேள்வி

கேள்வி கேட்டல் என்பது நம் அடிப்படைத் திறன்களில் ஒன்று. அந்தத் திறனைக் கெண்டு நாம் எதையும் சாதிக்க முடியும். எதிரில் இருப்பவர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள கேள்வி கேட்டல் உதவுகிறது. நம்முடைய உரையாடலை ஆழப்படுத்தவும், தெளிவான தகவல்களைப் பெறவும் உதவுகிறது.

தரமான கேள்விகள்

  • ஒரு நிகழ்வைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வத்தை அதிகப்படுத்திட வேண்டும்.
  • உரையாடலை ஆழப்படுத்தவும் வேண்டும்.
  • நம்முடைய புதிய முயற்சிகளைத்  தூண்டும் விதமாகவும், படைப்பாற்றலை ஊக்குவிப் பதாகவும் இருக்க வேண்டும்.
  • கேள்வி கேட்டல் கவனத்தை ஒருமுகப்படுத் துவதாகவும், அறிவு தாகத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
  • நிலையான அறிவை வளர்க்க வேண்டும்.
  • சிந்தனையைத் தூண்டும் விதமாக இருக்க வேண்டும்.
  • முன்னோக்கிச் செல்லும் உத்வேகத்தை அளிக்க வேண்டும். கேட்டலின் வகைகள்: கேள்வி கேட்டலை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. வரையறுக்கப்படாத கேள்விகள்: வரையறுக்கப்படாத கேள்விகள் ஒரு முடிவற்று இருக்கும். இவ்வகைக் கேள்விகளால் உரையாடல் தொடர்ந்தும், அதிக தகவல்களைப் பெறவும் முடியும். நம்முன் உரையாடுபவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் விதமாக அமையும். இவ்வகைக் கேள்விகள் யார், ஏன், எங்கே, எப்படி, எப்பொழுது, யாருடைய போன்றவையாக இருக்கும். அந்தப் புத்தகக் கண்காட்சியில் நீ என்னென்ன பார்த்தாய்?

அரசு நலத்திட்டங்களைப் பற்றி நீ எப்படி உணர்கிறாய்?

நீ எந்தெந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புகிறாய்?

2. வரையறுக்கப்பட்ட கேள்விகள்: இவ்வகைக் கேள்விகள் ஒரு எல்லைக்குட்பட்டுத்தான் இருக்கும். பெரும்பாலும் இவ்வகைக் கேள்விகளுக்கு ஆம், இல்லை அல்லது சிறு வாக்கியமாக பதில் கிடைக்குமாறு இருக்கும். இவ்வகைக் கேள்விகள் நம் உரையாடலை நேர்முகப்படுத்த உதவுகின்றன. இந்த  நிறுவனத்திற்குக் கிளை அலுவலகம் உள்ளதா?

உனக்கு என்னுடன் வர விருப்பம் உள்ளதா? உனக்கு இனிப்பு சாப்பிடப் பிடிக்குமா?
கீழ்வரும் கேள்விகளின் வகைகள்  வரையறுக்கப்பட்ட கேள்விகளிலும் வரும், வரையறுக்கப்படாத கேள்விகளிலும் வரும்.

ஆழ்ந்த கேள்விகள்: இவ்வகைக் கேள்விகள் வரையறுக்கப்படாத   கேள்விகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்குக் கூடுதல் தகவல் பெறுவதாக இருக்கும். இவ்வகைக் கேள்விகள் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டு குறுகலான கேள்விகளாக இருக்கும்.

உனக்கு எந்தத் தலைப்பில் பேசப் பிடிக்கும்?

உனக்குக் கிடைத்த செய்தியின் விவரங்களில் மேலும் சிலவற்றைக் கூற முடியுமா?

சென்னையில் உன்னைக் கவர்ந்த இடம் எது?

எதிரொலிக் கேள்விகள்: கேள்வி கேட்டலின் சிறந்த முறை இவ்வகைக் கேள்விகள். நிகழ்ச்சிகளின் விவரங்களை மேலும் பெற இவ்வகைக் கேள்விகள் உதவும். எதிரில் உரையாடுபவர் கூறுவதையே சிறிது தொணி  மாற்றிக் கேட்பதே எதிரொலிக் கேள்விகள்.

“ஏற்கெனவே நமக்கும் அவங்களுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு….”
“என்ன தகராறு இருக்கு?”

என்ற வடிவேல் நகைச்சுவை மாதிரி கேட்பதுதான் எதிரொலிக் கேள்விகள்.

உரையாடல் நடத்துபவர் பயன்படுத்திய ஒரு பகுதியைக் குரல் மாற்றம் செய்து, கேள்வியாக மாற்ற வேண்டும். இதை பிரதிபலிப்புக்  கேள்விகள், கிளிப் பேச்சுக் கேள்விகள் என்றும் கூறுவர். கேள்வி கேட்டலின் ஒரு சிறந்த முறை இந்த எதிரொலிக் கேள்விகள்.

நிறுவும் கேள்விகள்: பழைமையான கருத்துகளைக் கொண்டு புதுமையை நோக்கிப் பயணிக்கச் செய்யும் கேள்விகள் நிறுவும் கேள்விகள்.

“நீ ஏன் இவ்வாறு யோசிக்கிறாய்?” இவ்வாறு நாம் கேட்கும் போது அதற்குப் பதில் இருக்காது, ஆனால் அவர்களை அவர்களிடம் உள்ள பழைய கருத்திலிருந்து புதியதை நோக்கிப்  பயணிக்கத் தூண்டும்.

புனைவுக்  கேள்விகள்: தெளிவற்ற தலைப்பைப் பற்றிப் பேசும் போது கேட்கப்படும் கேள்விகள் . நமக்குப் பிடிக்காத தலைப்பைப் பற்றிப்  பேசும் போது தலைப்பை மாற்ற உதவும் கேள்விகள். இப்படியே செய்து கொண்டு போனால் என்ன ஆகும்?
என்னதான் நடக்க போகிறதோ?

கேள்விகளால் நாம் அடைபவை:

கேள்வி கேட்டலால் உரையாடலின் ஆழம் அதிகரிக்கிறது. கட்டுப்பாடு, தகவல் சேகரித்தல், கவனித்தல், பிணைப்பு, ஒருவரை இசையச் செய்தல் போன்றவை நிகழ்கின்றன.

கட்டுப்பாடு: கேள்வி கேட்டல் நமக்கு ஆற்றலைத் தருகிறது. அந்த ஆற்றல் நம்முடைய உரையாடலுக்கு வலுக்கொடுக்கிறது. நாம் கேள்வி கேட்கும் போது நம் எதிரே இருப்பவர் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். நம் கட்டுப்பாட்டில் இருக்கிறார். தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கும் போது உரையாடல் முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டில் வருகிறது. அரசியல்வாதிகள் செய்தியாளரின் குறுக்குக் கேள்விகளை அலட்சியப்படுத்த, அவர்கள் விரும்பியதைச் சொல்வார்கள். (“உண்மையில் இது சுவையான கேள்வி. ஆனால், உண்மை என்வென்றால் …”) மற்றவர்களின் கேள்விகளை அலட்சியப்படுத்துவது ஒரு அதிகார விளையாட்டு. அதாவது, நான் சமுதாய விதிகளை எல்லாம் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நான் மிக மிக முக்கியமானவன். தகவல்கள் பெறுதல்: சரியான கேள்வி கேட்டலின் மூலம் நமக்கு வேண்டிய அனைத்துத் தகவல்களையும் பெற்றுவிட முடியும். தகவல் சேகரித்தல் என்பது ஒரு கடினமான புதிர் போன்றது. இந்தப் புதிரை விடுவிக்க சிறு சிறு கேள்விகள் மூலம் விடுவிக்க முடியும். முன்னர் கூறிய ஆழ்ந்த கேள்விகள் தகவல் சேகரிப்பில் பயன்படுகின்றன.

கவனித்தல்: பேசும் பொழுதைவிட கேள்வி கேட்கும் போது நாம் அதிகம் கவனிக்கிறோம். நமக்குத்  தேவையான செய்தியை நோக்கி நம் கேள்விகளில் பயணம் செய்யலாம். இதனாலேயே பள்ளிகளில் மாணவர் மய்யப் பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. உரைநடைப் பாடங்களைவிட விவாதப் பாடங்கள் மாணவர்களை அதிகம் கவர்கின்றன.

பிணைப்பு: கேள்வி கேட்டலின் மூலம் எதிரில் இருப்பவரை நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும். அவர்களுக்குப் பிடித்தமானவை, பிடிக்காதவை போன்றவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதால் அவர்களுடனான நம் பிணைப்பு அதிகமாகிறது. ஒருவரை இசையச் செய்தல்:

ஒருவரைக் கேள்வி கேட்டலின் மூலம் நாம் நினைக்கும் பதிலைச் சொல்ல வைப்பது, கேள்வி கேட்டலின் ஆதிக்க நிலை இது. பதில் கூறுபவர் கேள்வி கேட்பவரின் முழுக் கட்டுபாட்டில் இருக்க வைக்கும். கேள்விகள் கேட்கும் போது அது எந்த வகை என்பது முக்கியமில்லை, கேள்விகள் நம் தொடர்புகளை மேம்படுத்தத்தானே தவிர தொடர்புகளைத்  துண்டிக்க இல்லை. கேள்விகளால் தொடர்புகளை வளர்த்துக் கொள்வோம்!

கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக் கொள்வோம்! வாருங்கள் கேள்விக் கணையைத் தொடுப்போம்!

உறவுகளை வளர்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *