Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (112)

ஆரியர்கள் படையெடுத்து வந்தவர்களா..?
நேயன்

ஆரியர்கள் இந்தியாவின் மீது படை
யெடுத்து வந்து, தாசர்களையும், தசியுக்களையும் வெற்றி கொண்டு அவர்கள் மீது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள் என்ற கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் ரிக் வேதத்திலுள்ள சில செய்யுட் பகுதிகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். இந்தச் செய்யுள் பத்திகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தச் செய்யுள்களைக் கருத்திற் கொள்ளாமல், வெளியிலிருந்து வந்து இந்தியாவின் மீது ஆரியர்கள் படையெடுத்தார்கள், இங்குள்ள ஆரியரல்லாத சுதேச குலமரபுக் குழுக்களை வெற்றி கொண்டார்கள் என்ற கோட்பாட்டை நிலை நாட்டிட முயல்வது முற்றிலும் பயனற்றதாகும். நான் மேலே குறிப்பிட்ட ரிக் வேதப் பாசுரங்களைக் கீழே தருகிறேன்:
1. ரிக்வேதம், vi: 33.3 – “இந்திரா, எங்களு
டைய இரு பகைவர்களான தாசர்களையும், ஆரியர்களையும் நீ கொன்று விட்டாய்.”
2. ரிக்வேதம், vi: 60.3. – “நன்னெறியையும் நியாயத்தையும் நேர்மையையும் பாதுகாக்கும் ஓ, இந்திரா மற்றும் அக்னி! எங்களுக்குத் தீங்கிழைக்கும் தாசர்களையும் ஆரியர்களையும் அடக்கி ஒடுக்குவீர்களாக.”
3. ரிக் வேதம், vii.81.1. -“சுதாசனின் எதிரிகளான தாசர்களையும் ஆரியர்களையும் இந்திரனும் வருணனும் கொன்று, சுதாசனை அவர்களிடமிருந்து காப்பாற்றினார்கள்!”
4. ரிக் வேதம், X 38.3. -“ஓ, இந்திரா! ஈவுஇரக்கமற்ற கொடியவர்களான ராட்சதர்
களிடமிருந்தும் சிந்து நதி தீரங்களில் வதியும்
ஆரியர்களிடமிருந்தும் எங்களைக் காப்பாற்றி-னாய்; இதேபோன்று தாசர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து எங்களைக் காப்பாற்று-வாயாக.
5. ரிக் வேதம், X. 38.3. -“பெரிதும் பூசித்துப்
போற்றுதற்குரிய ஓ இந்திரா! சமயப் பற்றற்ற-வர்களும், எங்களுடைய பகைவர்களுமான தாசர்களையும் ஆரியர்களையும் நாங்கள் அடக்குவதற்கு அருள்பாலிப்பாயாக. உனது துணையுடன் அவர்களைக் கொன்று தீர்ப்போம்.
6. ரிக் வேதம், X. 86.19.-“ஓ, மாமேயு! உன்னைப் பிரார்த்திப்பவர்களுக்கு எல்லா ஆற்றல்களையும் அருள்வாயாக. உனது உதவியுடன் எங்களுடைய ஆரியப் பகைவர்களையும் தசியு பகைவர்களையும் அழித்தொழிப்போம்.”
இந்தப் பாசுரங்களைப் படித்துவிட்டு, மேலைய கோட்பாட்டைப் பரிசீலித்துப் பார்ப்பவர்கள் நிச்சயம் அதிர்ச்சியடையவே செய்வர். இந்தப் பாசுரங்களை இயற்றியவர்கள் ஆரியர்கள்தான் என்றால், இப்பாசுரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்திலிருந்து இரண்டு வேறுபட்ட ஆரிய வகுப்பினர் இருந்து வந்திருப்பதும், அவர்கள் வேறுபட்டவர்களாக மட்டுமன்றி, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் எதிர்ப்பவர்களாகவும், ஒருவர் மீது ஒருவர் பகைமை கொண்டவர்களாகவும் இருந்து வந்தனர் என்பதும் தெளிவாகிறது. இரு வகையான ஆரியர்கள் இருந்தனர் என்பது வெறும் ஊகமோ அல்லது கற்பனையோ அல்ல. இது நிதர்சன உண்மையாகும். இதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

இத்தகைய முதலாவது சான்று பல்வேறு
வேதங்களின் புனிதத் தன்மையை அங்கீகரிப்-பதில் நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வரும் பாரபட்சமாகும். உண்மையில் இரண்டு வேதங்கள்தான் இருக்கின்றன என்பது வேதங்களைப் பற்றி ஆராய்ந்து வரும் அனைவருக்கும் தெரியும். அவை: (1) ரிக் வேதம், (2) அதர்வ வேதம். சாம வேதமும் யஜூர் வேதமும் ரிக் வேதத்தின் வேறுபட்ட வடிவங்களே அன்றி வேறல்ல. அதர்வ வேதம் ரிக் வேதத்தைப் போன்றே புனிதமானது என்பதை பிராமணர்கள் நீண்டகாலம் வரை அங்கீகரிக்கவில்லை என்பதை வேத ஆராய்ச்சியாளர்கள் நன்கு அறிவர். இந்தப் பாரபட்சம் ஏன்? ரிக் வேதம் மட்டும் ஏன் புனிதமானதாகக் கருதப்பட்டது? அதர்வ வேதம் கீழானது என்று ஏன் எண்ணப்பட்டது? இதற்கு நான் அளிக்கக்கூடிய பதில் இதுதான்: இந்த இரண்டு வேதங்களும் இரு வேறுபட்ட ஆரிய இனத்தவர்களுடையவையாக இருந்தன; இந்த இரு பிரிவினரும் ஒன்றாக ஆனபோதுதான் அதர்வ வேதம் ரிக் வேதத்துக்கு இணையாகக் கருதப்படத் தொடங்கியது.
என் கருத்துக்கு ஆதரவான அசைக்கமுடியாத மூன்றாவது சான்றை இந்திய மக்களின் உடலமைப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு வழங்கியுள்ளது. இத்தகைய ஆய்வு 1901 இல் முதல் முறையாக சர் ஹெர்பர்ட் ரிஸ்லேயால் மேற்கொள்ளப்பட்டது. மண்டை ஓட்டு அமைப்புக் குறியீட்டின் அடிப்படையில் இந்திய மக்கள் பின்கண்ட நான்கு வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவுக்கு அவர் வந்தார்: (1) ஆரியர்கள், (2) திராவிடர்கள், (3) மங்கோலியர்கள், (4) சித்தியர்கள்.

இவர்கள் பெருவாரியாக எங்கு வாழ்கின் றனர் என்பதை நிர்ணயித்துக் கூறுமளவுக்குக்கூட அவர் சென்றார். இந்த ஆய்வு தோராயமானது. அவரது முடிவுகள் எந்த அளவுக்குச் சரியானவை என்பதை 1936 ஆம் ஆண்டில் டாக்டர் குஹா சோதித்துப் பார்த்தார். இந்த விஷயம் குறித்த அவரது அறிக்கை மனித இன ஆராய்ச்சித் துறையில் மிகவும் பெருமதிப்பு வாய்ந்த ஓர் ஆவணமாகத் திகழ்கிறது.
இந்திய மக்கள் அவர்களது மண்டை ஓடுகள் அளவுகளின்படி எங்கெங்கு பரவியிருந்தனர் என்பதைக் காட்டுவதற்கு டாக்டர் குஹா தயாரித்திருந்த தேசப்படம்’ இந்திய மக்களின் இன இயைபு குறித்து ஏராளமான தகவல்களை அளிக்கிறது. இந்திய மக்கள் இரண்டு இன மூலங்களைச் சேர்ந்தவர்கள்; இவர்களில் ஓர் இனத் தினர் நீண்ட தலையை உடையவர்கள்; இவர்கள் இந்தியாவின் உட்புறப் பகுதிகளில் வாழ்கின்றனர்; இன்னொரு இனத்தினர் குறுகிய தலையைக் கொண்டவர்கள்; இவர்கள் எல்லைப்புறப் பகுதிகளில் வாழ்கின்றனர் என்பது டாக்டர் குஹா கண்டுள்ள முடிவுகளாகும்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகள் தரும் சான்று இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. இது குறித்து டாக்டர் குஹா கூறுவதாவது:

“சிந்து நதிப் பள்ளத்தாக்கு தவிர ஏனைய ஆய்விடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சமிச்சங்கள் மூலம் மிகக் குறைந்த தகவல்களே கிடைத்துள்ளன; எனினும் அக்காலத்திய இந்திய இன வரலாறு குறித்த ஒரு பரந்த, தோராயமான படப்பிடிப்பைப் பெறுவது இதன் வாயிலாக சாத்தியமாகி உள்ளது. கி.மு. 4 ஆயிரம் ஆண்டுத் தொடக்கம் முதல் நீண்ட தலையும் குறுகிய எடுப்பான மூக்கும் கொண்ட இனத்தினர் வட மேற்கு இந்தியாவில் வாழ்ந்து வந்தனர் என்று தோன்றுகிறது. அவர்களுடன் கூடவே மிகவும் திடகாத்திரமான மற்றொரு இனத்தினரும் வாழ்ந்ததைப் பார்க்கிறோம். அவர்களும் நீண்ட தலை உடையவர்கள், ஆனால், அவர்களது மண்டை ஓட்டின் கவிகை மோடு தாழ்வானது. அவர்களும் நீண்ட முகமும் குறுகிய நாசியும் கொண்டவர்கள். ஆனால், முந்தியவர்களைப் போல் அவ்வளவு உயரமில்லாதவர்கள்.

அகன்ற தலையுடன் கூடிய மூன்றாவதொரு இனத்தினரும் வாழ்ந்து வந்தனர். இவர்கள்
ஆர்மீனியர்களுடன் இன உறவு கொண்டவர்-களாக இருக்கக்கூடும். ஆனால், இவர்கள் பிற்காலத்தில் வந்திருக்கலாம். இவர்களது மண்டை ஓடுகளில் பெரும்பாலானவை கிடைத்த ஹரப்பா அகழ்வாய்வு இடத்தின் காலத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது இந்த முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.”
மலைவாழ் இனத்தினர் மற்றும் மத்தியதரைக்-கடல் இனத்தினர் என்ற அடிப்படையில் பார்க்கும்போது இந்திய மக்களை இரண்டு இனமரபைச் சேர்ந்தவர்கள் எனக் கூறலாம்: (1) மத்திய தரைக்கடல் இனத்தினர், அல்லது நீண்ட தலை கொண்ட இனத்தினர்; (2) மலைவாழ் இனத்தினர் அல்லது குறுகிய தலை கொண்ட இனத்தினர்.