எண்ணம்

மார்ச் 16-31

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கு பெண்களும் குழந்தைகளும்தான் உள்ளனர். இவர்களில், மிகக்குறைந்த அளவிலேயே படிப்பறிவு உள்ளவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக 75 சதவீத மக்களிடம் சட்ட அறிவு இல்லை.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடந்துகொண்டிருக்கும்போது, சட்டம் குறித்து மக்களுக்கு கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், சட்டத்தின் ஆட்சி என்பதன் அர்த்தம் வெளிப்படும். தங்களுக்கு உள்ள உரிமை குறித்து மக்கள் தெரிந்திருக்க வேண்டும். குழந்தை கருவாக இருக்கும்போதே சட்டத்தின் பிடிக்குள் வந்துவிடுகிறது. எல்லா நிலையிலும் சட்டம் ஊடுருவியுள்ளது. குறிப்பாக, கீழ்தட்டு மக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். – அக்பர் அலி, உயர்நீதிமன்ற நீதிபதி

இந்தியாவில் மதம், மொழி, இனம் சார்ந்த அரசியல் கட்சிகள் இருக்கின்றன. பெண், ஆண், திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு என்று பாலியல் ரீதியான சுய உரிமைகள், தனியான பாலியல் உரிமைகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் அவை மறுக்கப்படுகின்றன.

மதத்தின் பெயரால், சமுதாயத்தின் பெயரால் அது சட்டமாக ஏற்கப்பட்டு தனிமனிதனின் பாலியல் உரிமைகள் பறிக்கப்படுவதுதான் இன்றளவும் இந்தியாவில் நடந்து வருகிறது. – திருநங்கை ரோஸ், இந்திய பாலியல் சுதந்திர கட்சி

நம்மைப் பொறுத்தவரை நிலா ஒரு மைல் கல். இன்றைக்கு கூடங்குளம் மட்டுமல்ல, உலகில் இருக்கும் அத்தனை அணுமின் நிலையங்களும் ஆபத்தானவை. நிலவில் இருக்கும் ஹீலியம் – 3 வாயுவை பூமிக்கு டன் கணக்கில் கொண்டு வந்தால், தடையில்லா மின்சாரம் கிடைக்கும். மின் வெட்டுக்கு டாடா காட்டிவிடலாம். இந்த நிலா இந்தியர்களுக்கானதுதான்.

மயில்சாமி அண்ணாதுரை, விண்வெளி அறிவியலார்

மத்திய அரசு வகுத்த புதிய தொலைத் தொடர்பு கொள்கை யின்படியே 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டுக் கான உரிமங்கள் வழங்கப்பட்டன. ஏல முறை அவசியம் இல்லை என்பதால் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த விஷயத்தில் நான் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி, உச்சநீதிமன்றம் என்னை கண்டித்துள்ளது. ஒருவரைக் கண்டிக்கும் முன் அவரது தரப்பு கருத்தையும் கேட்டு அறிவதுதான் நீதி முறையில் இயற்கையான ஒன்றாகும். அதன்படி இந்த வழக்கில் எனது தரப்பு கருத்துகளையும் கேட்டு அறிய உச்சநீதி மன்றம் எனக்கு வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். ஆனால், எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அப்படி எனது தரப்பு கருத்து எதையும் கேட்காமல் என்னை கண்டித்தது செல்லாது.-  ஆ.ராசா,  நாடாளுமன்ற உறுப்பினர்(தி.மு.க)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *