நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்
தந்தை பெரியார்
தோழர் வீரமணி அவர்களைக் கேட்டுக் கொண்டபோது அவர் சென்னை
யில் வக்கீலாகத் தொழில் நடத்திக் கொண்டு கழக வேலையையும், பத்திரிகை வேலையையும் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார். அது எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. என்றாலும் அந்த அளவுக்கு ஆவது கிடைத்த அனுகூலத்தை விடக்கூடாது என்று கருதி அவரை கழகத் துணைப் பொதுக்காரியதரிசியாக தேர்ந்தெடுக்கச் செய்தேன்.
இந்த நிலையில் தோழர்
நரசிம்மன் அவர்களுக்கு ஒரு சங்கடமான நிலை ஏற்பட்டது. அதாவது அவர் எஸ்டேட்டை. குடும்ப நிர்வாகத்தை, கவனித்து வந்த அவரது மூத்த மகன் _ வயது சுமார் 25 உள்ள சங்கருக்கு உடல் நோய்ப்பட்டதோடு அது ஒரு அளவு மூளைத்தாக்குதலுக்கு ஆளாகிவிட்டதால், குடும்ப நிர்வாகத்திற்கும் எஸ்டேட் கவனிப்புக்கும் சிறிது காலத்திற்-காவது அவர் (நரசிம்மன்) ஆனைமலை¬யில் இருந்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டு
விட்டது. அதன் பயனாக இன்னும் சில நாளைக்கு அவரது முழு நேரத் தொண்
டுக்கு இடமில்லாமல் போய்விட்டது.
இந்த நிலையில் தோழர் வீரமணி அவர்கள். நான்
உள்பட பலர் வேண்டுகோளுக்
கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தோண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும் பிரசாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக்கொண்டு தொண்டாற்ற ஒப்புக்கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்துவிட்டார்.
இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி திரு.வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் 1-க்கு ரூ.200 ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும் மதிப்பும் பெறத்தக்க நிலையை அடைத்துவிட்டார்.
அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர்களும் வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப் பற்றி சொல்லித் தடுத்தும். அதை ஏற்காமல் துணிந்து முழு நேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன் வந்தது குறித்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.
மனைவி, குழந்தை குட்டி இல்லாத வாலிபப் பருவத்தில் பொதுத் தொண்டு உற்சாகம் பலருக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால் மனைவி, குழந்தை, குடும்பப் பொறுப்பு, நல்ல எதிர்காலம், தொழில் ஆதரவு ஆகிய இவை உள்ள நிலையிலும், நாளைக்கும் அவர் (வீரமணி) ஒப்புக்கொள்வதானால் (எம்.ஏ., பி.எல்.,) என்பதனாலும் பரீட்சையில் உயர்ந்த மார்க்கு வாங்கி இருக்கும் தகுதியாலும்) மாதம் 1—_க்கு ரூ.250-க்கு குறையாத சம்பளமுள்ள அரசாங்க அல்லது ஆசிரியர் பதவி அவருக்கு காத்திருந்து ஆசை காட்டிக் கொண்டிருக்கும்போதும். அவைகளைப் பற்றிய கவலையில்லாமல் முழு நேரப் பொதுத் தொண்டில் இறங்குவதென்றால் இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதரிடமும் எளிதில் எதிர்பார்க்க முடியாத விஷயமாகும். உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்.
எனக்கு திருச்சியிலும் தாங்க முடியாத பளு ஏற்பட்டுவிட்டது.
ஆண்கள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியுடன் பெண்கள் பயிற்சிப் பள்ளி; அனாதைப் பெண்கள் பள்ளி; எலிமெண்டரிப் பள்ளி ஆகியவை ஆஸ்ட்டல் உடனும் நடைபெற்று வருவதோடு அனாதைப் பிள்ளைகளுக்குச் சாப்பாடு போட்டு, கைத்தொழில், தச்சு, தையல், அச்சு எழுத்து சேர்த்தல் (கம்போசிங்) வேலையும் ஒரு 100 பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கத் திட்டமிட்டு அதற்காக முன் ஏற்பாடு வேலையும் நடந்து வருகிறது. இந்தப் பெரிய பொறுப்புகளில் பெரும் அளவு திருமதி மணியம்மையார் மேற்போட்டுக் கொண்டு பார்த்துவருவதால் என்னாலும் இந்த அளவுக்கு ஆவது சமாளிக்க முடிகிறது.
கழகத் தொண்டிற்கு ஆதரவளிக்கவும் தொண்டாற்றவும் இன்று பல தோழர்கள் இருந்தாலும், முழு நேரத் தொண்டர்களாக இன்னும் சில பேர் வேண்டி இருக்கிறது. இப்போது தோழர் இமயவரம்பன் (புலவர் பரீட்சை பாஸ் செய்தவர்) மாதம் 150 ரூபாய் வரை சம்பள வருவாயை விட்டு, தனது குடும்ப பெரிய சொத்து நிர்வாகத்தையும் விட்டு, மற்றும் பல பணத்தோடு வரக்கூடிய சவுகரியத்தையும் தள்ளிவிட்டு, வீட்டிலிருந்து பணம் தருவித்து செலவு செய்துகொண்டு கழகத்துக்கு ஒரு வேலை ஆளாக 3, 4 ஆண்டாக தொண்டாற்றி வருகிறார்.
இந்த நாட்டில் சொந்த சுயநலம் கருதாமலும், பொது பயனுள்ளதுமான தொண்டாற்றிவரும் கழகம் திராவிடர் கழகம் ஒன்றுதானே இருந்து வருகிறது? இக்கழகத்தில் இருப்பவர்கள்தான் சுயநலமில்லாமல் பாடுபடுகிறார்கள். மற்ற கழகங்கள், கழகத்தால் சுயநலம் பயன் அடையக்
கருதி பாடுபடுபவை. அதுவும் பயனற்ற உண்மை
யற்ற, காரியத்திற்கு பாடுபடும் கழங்களாகத் தானே இருக்கின்றன? ஆகையால் மற்றும் முழுநேரத் தொண்டர்கள் கிடைத்தால் ஆவலோடு வரவேற்கக் காத்திருக்கின்றேன். ஆண்கள் வந்தாலும் சரி, பெண்கள் வந்தாலும் சரி, உடை, உணவு பெறலாம்.
விடுதலை – 10.8.1962