சிறுகதை: சாரதாவின் முடிவு…

2022 சிறுகதை நவம்பர் 16-30 2022

ஆறு.கலைச்செல்வன்

சிந்தனைச்செல்வன் முப்பத்தைந்து ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெறும்போது அவர் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். ஓய்வு பெறும் நாளன்று கூட, அவர் தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தார். இன்றோடு தனது பணி முடிவடைகிறதே என்ற கவலை அவருக்குச் சிறிதளவும் இல்லை. அவரை ஒத்த தலைமை ஆசிரியர்கள் பலர் எப்போது ஓய்வு பெறுவோம் என்று நாளைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தனர். மாணவர்கள், பெற்றோர்கள் இவர்களைச் சமாளிப்பது ஒரு புறம் இருந்தாலும், தனது உயர் அலுவலர்களைச் சமாளிப்பது அவர்களுக்குப் பெரிய தொல்லையாக இருந்தது. மாணவர்கள் நலனில் அக்கறை காட்ட முடியாமல் அலுவலகப் பணிகளைக் கவனிக்கவே நேரம்
சரியாக இருந்தது அவர்களுக்கு. ஆனால் சிந்தனைச்செல்வன் மட்டும் எதையும் தொல்லை
யாக எடுத்துக் கொள்வதில்லை எந்தச் செயலை
யும் சவாலாக எடுத்துக் கொண்டு திறமையாகச் சமாளிப்பார்.
ஓய்வு பெற்ற மறுநாள்அவர் காலையில் எழுந்து பரபரப்பாக இயங்கஆரம்பித்தார். அவருடைய துணைவியார் மனோன்மணி, அவர் ஓய்வு பெற்றுவிட்டதை நினைவு-படுத்தியபிறகே சற்று பரபரப்பு அடங்கி நாற்காலியில் உட்கார்ந்தார்.
”நேற்றோடு உங்க பணி முடிஞ்சி போச்சு. இனிமே நீங்க பள்ளிக்கூடத்துக்குப் போக வேணாம். உட்கார்ந்து டி.வி. பாருங்க’’ என்றார் மனோன்மணி.

சற்று நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்த அவருக்கு ஒரே எரிச்சலாக இருந்தது.
“ச்சே, என்ன நிகழ்ச்சிகள் இதெல்லாம்! தமிழைக் கொலை பண்றானுங்க. தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசறது ஒரேஅசிங்கமா இருக்கு. அதோடஇல்லாம எப்போ பார்த்தாலும் சாமி, மதம், கோயில்னு பேசிக்கிட்டு இருக்காங்க. மக்களுக்கு நல்ல கருத்துகளையே இந்தத் தொலைக்காட்சி சொல்லலையே என்று எரிச்சலுடன் சொன்னார் சிந்தனைச்செல்வன்.
“நீங்க வேலையில் இருக்கிறப்போ டி.வி.யே பார்க்கிறது இல்லை. கொஞ்ச நேரம் செய்திகளை மட்டும் பார்ப்பீங்க. ஆனா பொழுது போக்கிற்கு வேற எதுவும் இல்லையே”, என்று ஆதங்கத்துடன் கூறினார் மனோன்மணி.
“நீ சொல்றது தப்பு மனோன்மணி; நிறைய புத்தகங்கள் இருக்கு; வாங்கிப் படிக்கலாம். புத்தகங்கள்தாம் நமக்கு உற்றநண்பர்கள்”.
“நீங்களும் நிறைய புத்தகங்கள் படிச்சிக்-கிட்டுதானே இருக்கீங்க-? நானும் சில புத்தகங்-களைப் படிச்சிக்கிட்டுதான் இருக்கேன். ஆனாலும் டி.வி.தான் அதிகம் பார்க்கிறோம்”.

“மனோன்மணி, புத்தகங்கள் நம்முடைய அறிவைப் பெருக்கும்; பகுத்தறிவை வளர்க்கும். நம்முடைய மூளையும் தொடர்ச்சியாக நல்ல செயல்பாட்டில் இருக்கும். அதுமட்டுமல்ல, நமது ஞாபகசக்தியையும் அதிகரிக்கும்.
“நீங்க சொல்றது உண்மைதான். டி.வி. தொடர்களில் மாமியாரைக் கொல்றது, மருமகளைக் கொல்றது, மனைவியைக் கொல்ற-துன்னு எப்பவும் அருவெறுப்பான கதைகளையே போடுறாங்க. அதோட இல்லாம எப்பவும் மூட நம்பிக்கைகளையே பரப்பிக்கிட்டு இருக்காங்க”.
“மக்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டால்தான் இதற்குத் தீர்வு ஏற்படும்”
என்று கூறிப் பேச்சை முடித்தார் சிந்தனைச் செல்வன்.

சில மாதங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் சிந்தனைச்செல்வனின் நண்பர் குமரகுரு என்பவர் அவரைக் காணவந்தார். அவர் ஒரு மேல் நிலைப்பள்ளியை நிருவாகம் செய்து வந்தார். அந்தத் தனியார் பள்ளிக்கு நல்ல நிருவாகம் செய்ய பொறுப்பான ஆசிரியர் ஒருவர் தேவைப்பட்டார். அதுவும் நல்ல. அனுபவமிக்க ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியராகத் தேடினார் குமரகுரு. அவருக்கு சிந்தனைச்செல்வன் நினைவுக்கு வரவே அவரையே நியமிக்கலாம் என எண்ணி அவரிடம் கேட்கவே வந்தார். தான் வந்த விவரத்தை சிந்தனைச் செல்வனிடம் தெரிவித்தார்.
“குமரகுரு, நான் ஏற்கனவே பல ஆண்டுகள் வேலை செஞ்சுட்டேன். இனி மேலும் நான் அந்த வேலையைச் செய்யணுமா? வேறு யாரையாவது பாரேன். இளம் வயதுக்காரனா பார்த்துப் போடு, அதுதான் நல்லது” என்று மறுத்தார் சிந்தனைச்செல்வன்.
ஆனாலும் குமரகுரு விடவில்லை.

“உன்னோடஅனுபவம் என் பள்ளிக்குத் தேவை. அவசியம் நீ என் பள்ளிக்கு வந்து பள்ளியைச் சீரமைச்சு கல்விப்பணி செய்யணும். உனக்கே தெரியும், எனக்குப் பணம் முக்கியம் இல்லை. ஏதோ பள்ளிக்கூடம் நடத்துறேன், சம்பாதிக்கிறேன்னு சில பேரு நெனைக்கலாம். ஆனா என்னோட எண்ணம் நம்ம பகுதிப் பிள்ளைங்க நல்லாப் படிக்கணும், பெரிய வேலைக்குப் போகணும் என்கிறதுதான். ஆனாலும் என் பள்ளியை நிருவாகம் பண்ண நல்ல தலைமை ஆசிரியர் கிடைக்கல. அந்தக் குறையை நீதான் போக்கணும்”, என்று வேண்டுகோள் விடுத்தார் குமரகுரு.
சிந்தனைச்செல்வன் தனது துணைவியார் மனோன்மணியைப் பார்த்தார். அவர் தனது பார்வையால் சம்மதம் தெரிவித்தார்.
“குமரகுரு, உன் பள்ளிக்கு நான் வர்றேன். ஆனா சம்பளம் எதுவும் வாங்க மாட்டேன். நீ உண்மையான கல்விப்பணி செஞ்சிக்கிட்டு இருக்கிறதால நானும் உனக்கு உதவி செய்யிறேன்”, என்று கூறிய சிந்தனைச் செல்வனை நன்றியுடன் பார்த்து விடைபெற்றார் குமரகுரு.
அடுத்த சில நாள்களிலேயே பள்ளிக்கு வந்து பொறுப்பினை ஏற்றார் சிந்தனைச்செல்வன். குமரகுரு ஆசிரியர்கள்அனைவரையும் கூட்டஅறைக்கு வரவழைத்து அவரைஅறிமுகம் செய்து வைத்தார்.

“இன்று முதல் நம் பள்ளிக்கு முதல்வராகப் பணி ஏற்று நிருவாகச் செயல்பாடுகள் அனைத்தையும் செய்வார் எனது நண்பர் சிந்தனைச்செல்வன் அவர்கள். நீங்கள் நல்ல முறையில் பணியாற்றி நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார் குமரகுரு.
ஆசிரியர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டிய நிலையில் இருந்தார் சிந்தனைச்செல்வன்.
எதிரில் இருந்த ஆசிரியர்களை ஏறிட்டு நோக்கினார். பெரும்பாலும் பெண் ஆசிரியை
களே காணப்பட்டனர்.
அனைவரும் நின்று கொண்டே இருந்தனர் அவர்கள் முகத்தில் பய உணர்வு காணப்பட்டதை சிந்தனைச் செல்வன் உணர்ந்தார்.
“எல்லோரும் உட்காருங்கள்” என்றார் அவர். ஆனால் ஆசிரியர்கள் யாரும் உட்காரவில்லை. மீண்டும் சற்று குரலை உயர்த்தி, உட்காருமாறு கூறினார்.

அதன்பிறகே அனைவரும் உட்கார்ந்தனர். அனைவரது கால்களிலும் செருப்புகள் இல்லை. எல்லோரும் தங்கள் செருப்புகளை வெளியே விட்டிருந்தனர். சிந்தனைச்செல்வன் மட்டுமே செருப்பு அணிந்திருந்தார்.
“நாளை முதல் நீங்கள் செருப்பு அணிந்து கொண்டே உள்ளே வரலாம்”, என்று கூறிய அவர் மூத்த ஆசிரியை சாவித்திரியை நோக்கி,
“ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நாளைக்கு எத்தனை பாட வேளைகள் பாடம் எடுக்கின்றனர்”, எனக் கேட்டார்.
“எட்டு பாட வேளைகள்”, என்று அடக்கத்துடன் பதில் அளித்தார் சாவித்திரி.

“அப்படின்னா ஒரு பாட வேளை கூட ஓய்வு இல்லையா? அது சரி, ஆசிரியர்களுக்கு ஓய்வறை உள்ளதா?” என வினவினார்.
“ஓய்வறை எதுவும் இல்லை”, என்றார் சாவித்திரி.அவற்றையெல்லாம் குறித்துக் கொண்டார் சிந்தனைச் செல்வன்.
“ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதோடு நின்றுவிடக் கூடாது. மதிப்பெண் பெறுவது மட்டுமே நமது குறிக்கோள் இல்லை. மாணவ மாணவிகளுக்கு இளம் வயதிலேயே பகுத்தறிவுச் சிந்தனையை வளர்க்க வேண்டும். சகோதர மனப்பான்மை, சமூகநீதி இவைகளைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும். இங்கு ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பெண்களாக இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. பெண்கள் நிறையப் படிக்க வேண்டும். பெரியாரின் சிந்தனைகள் நிறைவேறிக் கொண்டிருப்பது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். உங்களுக்கு ஓய்வுப் பாட வேளைகள் தேவை. கூடுதல் ஆசிரியர்களைப் பணியில் சேர்க்க நான் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் நன்கு படித்தவர்கள். யாருக்கும் அடிமையல்ல. உங்களுக்குள்ள உரிமைகளை நீங்கள் தைரியமாகக் கேட்கலாம். உங்கள் கருத்துகளுக்கு நான் மதிப்பளிப்பேன். நாம் நமது கடமைகளைச் சரிவரச் செய்வோம்.” இவ்வாறு அவர் கூறியதைக் கேட்ட ஆசிரியர்கள் மகிழ்சியடைந்தனர்.
அடுத்த சில நாள்களில் பயந்து பயந்து வேலை செய்து கொண்டிருந்த ஆசிரியர்கள் அதை விடுத்து உண்மையான உற்சாகத்துடனும் பொறுப்புடனும் பணி செய்ய ஆரம்பித்தார்கள்.

சிந்தனைச்செல்வனும் குமரகுருவின் ஒப்புதலுடன் கூடுதல் ஆசிரியர்களைப் பணியில் சேர்க்க நேர்காணல் நடத்தினார்.
அப்போது சாரதா என்ற பெண் நேர் காணலில் கலந்து கொண்டாள். அவள் மேல்நிலைக் கல்வி பயின்று ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தாள். அவளது கையெழுத்து மிகவும் தெளிவாகவும் அழகாகவும் இருந்தது. ஆனால், பட்டப்படிப்பு முடித்திருக்கவில்லை. இருந்தாலும் மழலையர் வகுப்புகளுக்குப் பணி செய்யலாம் என்றநிலையில் அவளுக்கு வாய்ப்பளித்தார் சிந்தனைச் செல்வன்.
சாரதாவும் மிகச் சிறப்பாகப் பணி செய்தாள். குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு பாடங்களை ஆடல் பாடல் மூலம் விளங்க வைத்தாள். பெற்றோர்களின் நன்மதிப்பையும் பெற்றாள்.
ஒருநாள் சாரதாவை அழைத்துப் பேசினார் சிந்தனைச்செல்வன்.
“சாரதா, உன்னோடபணி ரொம்பவும் சிறப்பா இருக்கு. நீ சின்னப்பெண், இருபது வயசுதான் ஆகிறது. நீ ஏன் பட்டப்படிப்பு படிக்கக் கூடாது? என்று கேட்டார்.

“படிக்கணும்தான் சார்”, என்று தயக்கத்துடன் கூறினாள் சாரதா.
“சாரதா, உன் நிலைமை எனக்குப் புரியுது. படிக்க வசதியில்லைன்னு நீ சொல்லலாம். ஆனால், தொலை தூர அஞ்சல் வழிக்கல்வி பயில்வது எளிதானகாரியம்தான். உடனே நீ விண்ணப்பம் அனுப்பு. வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன்”.
இவ்வாறுஅவர் கூறியதும் “சரி” என்று தலையசைத்தாள் சாரதா.
ஆனால், அவளுக்கு அதில் ஆர்வம் இல்லை என்பதை உணர்ந்தார் சிந்தனைச்செல்வன்.
ஓராண்டு கடந்தது. பள்ளிஆசிரியர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வேலை செய்தனர். மாணவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவர்களைப் பல துறைகளிலும் சிறந்து விளங்கச் செய்தனர்.
ஆசிரியர்களுடைய சம்பளத்தையும் உயர்த்திக் கொடுத்தார் சிந்தனைச்செல்வன்
இந்நிலையில் ஒருநாள் சாரதா முதல்வரைப் பார்க்க வந்தாள்.
அவளை நிமிர்ந்து பார்த்த சிந்தனைச்செல்வன், “என்னசாரதா, சொல்” என வினவினார்.
“சார், நான் இந்த மாசத்தோடு வேலையை விட்டுப் போறேன்.” என்றாள்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் சிந்தனைச்செல்வன். அவள் பட்டப் படிப்பு முடித்து உயர் பதவிக்குச் செல்ல வேண்டும் என் அவர் விரும்பியிருந்தார்.

“ஏன்? என்னாச்சு சாரதா”
“நான் திருமணம் செஞ்சுக்கப் போறேன். அதனால் வேலையை விட்டுப் போறேன்”
“சாரதா, ஏன் இந்தத் திடீர் முடிவு? மாப்பிள்ளை யார்?”
“நான் விரும்பிய ஒருவர். காதல் திருமணம். சீக்கிரம் கல்யாணம் முடிக்க அவர் விரும்புகிறார்.”
“சாரதா, நீ படிச்சு பட்டம் வாங்க நான் ஆசைப்பட்டேன் உன் பெற்றோர்களின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும். நீ சாதிக்க வேண்டிய பெண். பெண்கள் கால் கட்டை விரலைப் பார்த்து நடந்த காலமெல்லாம் போய்விட்டது. பெண்கள் இல்லறத்திற்கு அடிமையாக இருப்பது, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது மட்டுமேசரியான செயல் ஆகாது. அது மட்டுமல்ல சாரதா, பெண்கள் ஒரு போதும் ஆண்களைச் சார்ந்திருக்கக் கூடாது. அதற்கு பெண்கள் படிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒரு பெண் கல்வி கற்றால் அது அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் கல்வி கற்றதுக்குச் சமமாகும். புத்திசாலியான உன்னைப் போன்ற பெண்கள் பிள்ளை பெறும் கருவியாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. இன்று பெண்கள் சாதிக்காத துறையே இல்லை. உன் துணையை நீயே தேர்வு செய்ததை நான் ஆதரிக்கிறேன்.

ஆனா முதலில் படி. நல்ல வேலைக்குப்போ. ஆணாதிக்கத்துக்கு இடம் தந்து விடக் கூடாது. உன் பெற்றோர்களும் அதைத்தான் விரும்புவார்கள் என நினைக்-கிறேன். பிறகு உன் விருப்பம். தாலி ஒரு அடிமைச் சின்னம் என்பதை மறவாதே. சீர்திருத்தத் திருமணம் செய்து கொள். அதை உன் சொந்தக் காலில் நிற்கும் போது நீ விரும்பும் துணைவரோட செய்து கொள்”
என்று பேசி முடித்த சிந்தனைச்செல்வன் பெரியாரின் புத்தகங்களையும் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.
“இந்தப் புத்தகங்களையெல்லாம் நன்றாகப் படி. பெற்றோர்களிடம் கலந்து பேசு. நீ விரும்பும் நபரிடமும் பேசு. பிறகு ஒரு முடிவுக்கு வா. உனக்குப் பத்து நாள்கள் சிந்திக்க நேரம் தர்றேன். பிறகு உன் பதவியை ராஜினாமா செய்வதைப்பற்றிச் சொல். உன் விருப்பப்படி நான் செய்கிறேன்”, என்றார்.
பத்து நாள்கள் கழிந்தன. சாரதா முதல்வரின் அறைக்குள் நுழைந்தாள். அவள் கையில் சில விண்ணப்பத்தாள்களை வைத்திருந்தாள்.
சிந்தனைச்செல்வன் அவளை ஏறிட்டு நோக்கினார். அவள் கைகளில் இருந்த விண்ணப்பங்களை வாங்கிப் பார்த்தார். அவை அஞ்சல் வழிக் கல்வியில் பட்டப்படிப்பு பயில்வதற்கான விண்ணப்பங்கள்.
சாரதாவின் முகத்தில் தெளிவு தெரிந்தது.றீ